டவைப் பெண்களுக்குரிய பயிற்சியைப்போலவே ஒற்றர் படையினருக்கு குருமடத்தில் தரும் பயிற்சிகள் மிகக் கடுமையானவையாக இருக்கும்.

சங்ககாலத் தமிழர்களின் முதன்மைச் செல்வம்!

Advertisment

ஒரு போர் மூள்வதற்கு முதல்காரணமாக அமைவது "ஆநிரை' கவர்தல் என்பதாகும். ஆநிரை என்பது சங்ககாலத் தமிழ் மக்கள் தங்களது முதன்மைச் செல்வமாக, தங்கள் உயிரினும் மேலாகக் கருதி வளர்க்கும் பசுக்கள்தான். தங்கள் வீட்டில் பிறந்த மகாலட்சுமியாக, பிறந்த இளங்கன்றிலிருந்தே அதற்குப் பெயர்சூட்டி வளர்ப்பார்கள். அப்பெயரைக் கூறி அழைத்ததும் அக்கன்று அருகில் வருமளவுக்கு அரவணைத்து வளர்ப்பார்கள். ஊரிலுள்ள அனைத்து வீடுகளிலுமுள்ள பசுக்களை ஒன்றுசேர்த்து, மேய்ச்சலுக்கு புள்வெளிப் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, மாலையில் அவற்றை அவரவர் வீடுகளில் ஒப்படைக்கும் செயலை ஒரு குழுவாக சேர்ந்துசெய்வார்கள். அவர்களுக்குக் கீதாரிகள் என்று பெயர். இவர்களுக்கு வாரச் சம்பளமும் வருடச் சம்பளமும் கொடுப்பார்கள்.

hh

ஆநிரை கவர்தலுக்குப் பரிசளிப்பு!

இந்த ஆநிரைகள் மேய்கின்ற இடத்திற்குச் சென்று, மேய்ப்பவரைக் கள்வர்படை தாக்கிவிட்டு, வட்டவடிவில் ஆநிரைகளைச் சுற்றிநின்று, தங்களது இருப்பிடத்திற்குக் கவர்ந்துசென்று, அவற்றை மாற்றரசு மன்னனிடம் ஒப்படைப்பார்கள். வட்டவடிவில் ஆநிரைகளைச் சுற்றிப் போரிடுவதால், இதற்குக் கோட்டப்போர் அல்லது ஆநிரை கவர்தல் என்று பெயர். இச் செயலைச் செய்யும் கள்வர் கூட்டத்தை மழவர் கூட்டம் என்று அழைப்பார் கள். இவர்கள் பகை நாட்டாரிடமிருந்து பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வந்து விட்டால், அதற்குப் பரிசாக விலையுயர்ந்த கள் குவளைகள், மன்னர் சார்பில் பரிசாக அளிக்கப்படும்.

ஆநிரைகளை இழந்தவனின் மனம், தன் உயிரே போனதுபோல் பரிதவிக்கும். தங்கள் ஆநிரைச் செல்வங்களை, தங்களது வீட்டிற்கு அழைத்து வரும்வரை கண்ணுறங்கமாட்டார்கள். இவற்றை மீட்டுத்தருவது மன்னரது கடமையென, தம் மன்னரிடம் சென்று முறையிடுவர். அதன் பொருட்டே போர்மூளும். இத்தறுவாயில், ஆநிரை கவர்தல் ஒரே முறையிலோ, மீண்டும் மீண்டும் பல முறைகளிலோ மழவர் படையினரால் கவரப்படும். ஒவ்வொரு முறையும் கவர்ந்துவரும் பசுக்கள், ஆடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் கள் குடங்கள் பரிசளிக்கப்படும்.

Advertisment

dd

மன்னனோடு மதுவிருந்து!

எதிராளியின் ஆநிரைகள் அனைத்தையும் அதிக அளவில் மழவர் படையினர் கவர்ந்துவரும் வேளையில், மழவர் படையினரை கோட்டைக்குள் அழைத்து, மன்னனே அவர்களோடு சேர்ந்து மதுவிருந்து உண்டு மகிழ்வான். இவ்வாறு மன்னனே தங்களோடு சேர்ந்து கள்ளருந்தி விருந்துண்ணுவதை, தங்களது வாழ்நாளில் கிட்டிய பெரும்பேறெனக் கருதுவார்கள் மழவர்கள். இவ்வாறு மழவர்களைக் கோட்டைக்குள் அழைத்துச் செல்லும்போது, அவர்களின் கண்களைக் கட்டியே அழைத்துச் செல்வார்கள். கோட்டைக்குள் மன்னர் இருக்கும் வழியறிந்தால், மழவர்கள் ஏதேனும் ஒருநாள் கோட்டைக்குள்ளே கண்ணமிட்டுவிடுவர் என்பதால், கண்களை இறுகக் கட்டியபிறகே மன்னரிடம் அழைத்துச் செல்வார்கள். மன்னர் அளித்த விருந்து முடிந்தபின், மீண்டும் கண்களைக் கட்டியபடியே கோட்டை வாசலுக்கு மழவர் படையினர் அழைத்து வரப்படுவர். இந்நிகழ்வு, பெரும்பாலும் இரவு நேரங்களில், மன்னர் வாழும் மாளிகையின் நிலா முற்றத் திலேயே நிகழும். இந்நிகழ்வில் பங்குகொண்ட மழவர் படைத் தலைவனின் பெயர் பெரிதாகப் பேசப்படும். மன்னரிடம் பெற்ற பரிசுப் பொருளை, தன் வாழ்நாள் அடையாளமாக, தன் சந்ததியினருக்கு அவன் விட்டுச்செல்வான்.

இந்த மழவர் படையினர் பெரும்பாலும் விவசாயத்திற்குப் பயன்படாத, முல்லை திரிந்த பாலையாகக் காட்சிதரும் சிறு மலைத்தொடர்களில்தான் குடிசைபோட்டு வசித்து வருவார்கள். பெருவழிப்பாதைகளில் பயணிப்பவர்களிடம் கொள்ளையடிப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருப்பார்கள்.

கள்வர்களைப் பின்தொடரும் ஒற்றர்கள்!

ஒற்றர்களின் ஆரம்பகாலப் பணியென்பது, இம்மழவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, ஒவ்வொரு நாளும் மழவர்களின் திட்டங்களைக் கூர்ந்து கவனித்து, மன்னர் மாளிகைக்கு செய்தி அனுப்புவதாகும். இதற்காக குருமடத்தில் மிகக் கடுமையான பயிற்சி தருவார்கள். மழவர்கள் ஓடுவதைக் காட்டிலும் மிக விரைவாக ஓடுவதற்குக் கற்றுக் கொடுப்பார்கள். கள்வர்கள் பயன்படுத்தும் தந்திர உத்திகளைக் காட்டிலும் மிகச்சிறப் பான உத்திகளைக் கற்றுத்தருவார்கள். உதாரணமாக, இரவு வேளைகளில் வருடந்தோறும் வரும் பருவ மாற்றங் களுக்கேற்ப, மக்கள் உறங்கும் நேரமும் மாறுபடும். இதனைக் கண்டறிய கள்வர்கள் பின்வரும் உத்திகளைக் கையாள்வர்.

Advertisment

கள்வர் கூட்டத்திலுள்ள 16 வயது நிரம்பிய ஆண் பிள்ளைகளை குதிங்காலிட்டு மரத்தில் சாய்ந்தபடி அமரச்செய்வார்கள். இரவு முதல் யாமத்தில், அவர்களின் கைகளில் இரண்டு கூழாங்கற்களைக் கொடுத்து, இரு தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளச் செய்வார்கள். இரவில் அவர்கள் கண்ணயர்ந்தவுடன், அதில் யாராவது ஒருவரின் கைகளிலிருந்து கூழாங்கற்கள் விழும். அந்த நேரத்தில் இந்த உலகமே தூங்கிக் கொண்டிருக்கும் என்பது கள்வர்களின் கணிப்பு.

அந்த நேரத்தில்தான் கள்வர்கள் அனைவரும் நகர்ப்புறங்களை நோக்கி களவுத்தொழிலுக்குப் புறப்படுவார்கள்.

அவர்கள் புறப்பட்ட நேரத்திலிருந்து ஐந்து நாழிகைக்குள் தாங்கள் குறித்த இடத்திற்குச் சென்று திருடி முடிக்கவேண்டும். இல்லையென்றால், ஐந்தாம் நாழிகையில் முதியவர்கள் இரவில் சிறுநீர் கழிக்க எழுந்திருக்கநேரிடும். எனவே, இந்த ஐந்து நாழிகைகள் மட்டுமே களவுக்குரிய நேரமாகும். தற்போதைய நேரத்திற்கு இரண்டரை நாழிகைகள் என்பது ஒரு மணி நேரமாகும். ஆகவே, அவர்கள் திருட வாய்ப்புள்ள நேரம் இரண்டு மணி நேரம்தான். எனவே, கால் மணி நேரத்திற்குள் அவர்கள் திட்டமிட்டிருந்த இடத்தை அடைய வேண்டும். அதற்காக, முன்கூட்டியே காட்டுப்பகுதிக்கு வந்து, கோட்டைச்சுவரைச் சுற்றிக் காத்திருப்பார்கள்.

ff

இத்திட்டங்களை முதல் நாளிலேயே உருவாக்கி அனைவரிடமும் விளக்குவார்கள். இதனை ஒற்றர்கள் கவனித்து, கோட்டை கண்காணிகளிடம் தகவல் அனுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, மறைவாக இருந்து திருடர்களோடு சேர்ந்து அவர்கள் திருடுமிடத்திற்கே வரவேண்டும். கள்வர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளிலி ருந்தே கோட்டைச் சுவரேறி கோட்டைக்குள் நுழைவர். அவர்கள் ஒன்றுகூடி திருடு மிடத்தில் கூடும்போது ஒற்றர்கள் கூக்குர லிட்டு அலறவேண்டும். அலறல் சத்தம் கேட்ட நொடிப்பொழுதில் கோட்டை கண்காணிப் படைகள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து திருடர்களைத் தப்பவிடாமல் பிடித்துவிடுவார்கள்.

தமிழகத்தில் சங்ககாலங்களில் பெரும் பாலான இடங்கள் அடர்ந்த காடுகளாவே இருந்துள்ளன. காடுகளில் ஒற்றர்கள் இரவு நேரங்களில் கள்வர்களுக்கு அருகில் மறைந்து தங்கவேண்டியிருந்ததால், தங்கள் உடம்பு முழுவதும் யானையின் சாணத்தைப் பூசிக்கொள்ளவேண்டும் என குருமடத்தில் கற்பிக்கப்பட்டது. பெரும்பாலும் சங்ககால தமிழக காட்டுப் பகுதிகளில் கழுதைப்புலிகள், காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைகள், யானைகள் போன்றவை காணப்பட்டன. இவை, யானையின் சாணவாடை அடித்தால் அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடும். இதுபோல் பலவகையான உத்திகள் குருமடத்தினரால் கற்பிக்கப்பட்டன.

ஈட்டிகளில் தடவப்படும் விஷம்!

பெரும்பாலும் களவுத் தொழில் புரிபவர்கள் வில்லாலிகள். பாலைநிலக் கள்வர்கள், தங்களது அம்புகளில் பலவித விஷங்களைத் தடவியிருப்பர். அப்பகுதியில் அதிகமாக வளர்ந்து பூப்பூப்பது செங்காந்தள் மலர்கள்தான். அது கொடியாக வளரக் கூடியது. அக்கொடியின் அடிப்பகுதியானது, சுமார் இரண்டடி ஆழத்தில் பூமிக்குள் கிழங்கை வைத்திருக்கும். இது "ட' வடிவில் இருக்கும். அதாவது, உழவுத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பை வடிவத்தில் இருப்பதால், அக்கிழங்கிற்கு கலப்பைக் கிழங்கு என்று பெயர். இதிலிருந்து அம்பு, ஈட்டிகளில் தடவக்கூடிய கடும் விஷத்தை உற்பத்தி செய்வார்கள். சேரநாட்டில் காந்த ளூர் என்ற இடத்தில் ஆரிய நம்பூதிரிகள், தங்களின் வில், அம்பு களுக்கு இக்கிழங்கிலிருந்து விஷம் எடுப்பதில் கெட்டிக்காரர்களாக, பண்டைய நாட்களில் திகழ்ந்துவந்தனர்.

காந்தள் கிழங்கிலிருந்து விஷமெடுத்துக் கையாளும் முறைகளை, போர்ப்பயிற்சி தரும் சாலைகளில் கற்றுக்கொடுத்து வந்தமையால், அப்போர்ப் பயிற்சி சாலைக்கு காந்தள் மலரின் பெயரால் காந்தளூர் சாலை எனப் பெயரிட்டு அழைத்தனர். இவ்வாறு பகைவர்களது அம்புகளில் எவ்வகை விஷம் தடவப்பட்டுக் கையாளப்படுகிறது என்பதை அறியும் உளவுப் பயிற்சிக்கு இரண்டாம் நிலைப் பயிற்சி என்று பெயர். விஷத்தின் தன்மையை ஒற்றர்கள்மூலம் அறிந்து, அவ்விஷத்திற்கான விஷமுறிவு மருந்துகளை குருமடம் கண்டறிந்து தயாரித்துத் தருவார்கள். பாம்பு விஷம், செய்யான் விஷம், அரளிவிஷம், வெள்ளைப்பாசான விஷம் போன்றவை சங்ககாலப் போர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

உளவுப் பிரிவுக்கு பிரத்யேக உடை!

போர்க்களத் தடவாளங்கள் செய்யும் சாலைகளுக்கு உளவு பார்க்கச் செல்பவர் களுக்கு பிரத்தியேக உடைகள் தயாரிக்கப் பட்டன. பதப்படுத்தப்பட்ட மெலிதான ஈரடுக்கு மாட்டுத்தோலுக்கு இடையே, உருக்குத் தகடுகள் இரண்டுக்கு ஒன்று நீள அகலங்களில் நூற்றுக்கு மேற்பட்டவை "ரிவிட்' முறையில் பொருத்தப்பட்டு,

அதன்மேல் கறுஞ்சாயம் தோயப்பட்டு, மேற்சட்டைகளாக உருவாக்கப்பட்டன. இவற்றை கெண்டைக்கால், கெண்டைக்கைப் பகுதிகளில் அழகிய வேலைப்பாட்டுடன் கட்டிக்கொண்டனர். வெடிமருந்துகள் தயாரிப்பதை உளவுபார்க்கச் செல்பவர் களுக்கு, இதே தோலாலான ஈரடுக்குச் சட்டைக்கு நடுவே மருதமரப் பட்டைகள் வைத்து உருவாக்கப் பட்டன. மருதம் பட்டை இடிதாங்கும் இயல்புடையது, எளிதில் தீப்பற்றாத தன்மையுடையது.

மாடமாளிகைகளில் ஏற கயிற்றுப் பயிற்சி!

உளவுப்படையில் மாடமாளிகைகளின் வெளிப்புறமாக ஏறுபவர்களுக்கு, நீள் தொடர் கயிற்றுப் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்மாட உச்சியை ஒரு ஒற்றர் சென்றடையவேண்டுமென்றால், எட்டு நபர்கள் ஒரு மாட உயரத்திற்கு சமமான கயிற்றைத் தன் இடை மற்றும் தோள்களில் குறுக்குப் பட்டையாக, கயிற்றின் ஒரு பக்கத்தைக் கட்டிக்கொள்வார். கயிற்றின் மறுபக்கத்தை அடுத்த ஒற்றருக்குக் கொடுப்பார். இதுபோல் இரண்டாவது கயிறை இடையிலும் தோளிலும் குறுக்காகக் கட்டி, அதன் மறுமுனையை அடுத்த ஒற்றரிடம் கொடுப்பார். இந்த இரு கயிறுகளையும் மறுமுனையை வாங்கியவர், தன் இரு முன்னங் கைகளில் கட்டிக்கொள்வார். இவர்களுக்கு உடும்புப்பிடி பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வெட்டு நபர்களும் மாடமாளிகையின் வெளிப்புறக் கட்டமைப்பைப் பற்றிக் கொண்டு ஏற பயிற்சி பெற்றவர்கள். ஒரே நேரத்தில் எட்டு நபர்களும் மாடத்தில் ஏறுவர். ஒன்றாவது நபர் முதல் மாடத்திலேறி அதன் முற்றப் பகுதியை இறுகப்பற்றி அமர்ந்துகொள்வார். இரண்டாவது ஒற்றர் இரண்டாம் மாடத்திலும், இவ்வாறு எட்டு நபர்களும் எட்டு மாடங்களில் ஏறும்போது யாரேனும் தவறிவிழுந்தால், அவருடைய கைகளில் கட்டியிருக்கும் கயிற்றின் மறுமுனை, தனக்குக்கீழே இருக்கும் ஒற்றர் உடம்பின் இருபுறமும் பிணைத்திருப்பதால், கீழே தரையில் விழாமல், தான் ஏறிய மாடத்திற்குக் கீழே மற்றும் அதற்குக் கீழேயுள்ள மாடத்தின் மட்டத்தில் தொங்கிக் கொண்டிருப்பார். ஏற்கெனவே அம்மாடத்தில் இருப்பவர், பத்திரமாக அவர் இருக்கும் மாடத்தில் கால் ஊன்றச் செய்து காப்பாற்றுவார்.

மன்னன் உயிர்காக்கும் செம்படையினர்!

இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுபவர் கள், இருபது அடி உயரத்திலிருந்து குதிக்கும்போது கால் சேதப்படாமல், நுனிப் பாதங்கள் ஊன்றி மெல்ல தோப்புக்கரணம் போடுவதைப்போல் உட்கார்ந்து எழும் பயிற்சி பெற்றவர்களாக இருப்பர். இவ்வாறு ஒற்றர் படையில் இருப்பவர்களுக்கு அவர் களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து, 16 வகை படிநிலைப் பயிற்சிகள் தரப்பட்டன. 16 படி நிலைகளில் உயர்ந்தவர்கள், செம்படை வீரர்களாக ஆக்கப்படுவர். செம்படைப் பயிற்சி முடித்தவர்கள், மன்னனின் உயிருக்குப் பொறுப்பானவர்கள். இவர்கள், தங்கள் பயிற்சியில் கற்றுத்தேறும்போது, தன் மன்னவனின் உயிர்காக்க என்னுயிரையும் ஈவேன் என உறுதிமொழி ஏற்பார்கள்.

இரு கைகளிலும் அரச சின்னம்!

செம்படை வீரர்கள் உடலளவில் மட்டுமின்றி மனதார மன்னனுக்காகத் தன்னையே ஈந்துவக்கும் நேசம் கொண்டவர் களாக, குருமடத்தினரால் உருவாக்கப்படுவர். இவர்கள் பெரும்பாலும் மன்னவனுக்கு பெண் கொடுத்த குடும்பத்தார்களாகவே இருப்பர். ஏனெனில், மன்னவன் பெற்ற மகவான இளவலுக்கு, தாய்மாமன்களாகவே இருப்பர். தங்கள் மனையில் பேறுகாலம் பார்த்த நாள்முதலே, அவனைத் தூக்கி வளர்த்த ரத்தபந்த பாசமுடையவர்களாக இருப்பர்.

தன் இனப்பெண்வழிப் பேரனாக இருந்தாலும், மன்னவனுக்குக் கொடுக்கும் பக்திகலந்த மரியாதைகொண்ட பாசப் பிணைப்பு உடையவர்களாக இருப்பர். இவர்களுக்கு பிரத்யேகமாக, பலநாட்டுப் மொழிகளைப் பிறநாட்டு வணிகர்களைக் கொண்டு, குருமடத்தார் கற்றுக் கொடுப்பார் கள். இவர்கள், மன்னவன் குடும்பத்திற்குப் பெண் கொடுக்கும் அளவிற்குத் தகுதியுடைய சிற்றரசர்களின் குடும்பத்தார்களாக இருப்பர். இவர்களுக்கு ஆண்பிள்ளைகள் பிறந்தவுடன் இடக்கையில் அவர்களது அரச சின்னத்தையும், காளைப்பருவம் வந்ததும் வலக்கையில் தம் மன்னனின், அதாவது பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துள்ள மன்னவனின் அரச சின்னத்தையும் பச்சை குத்திக்கொள்வார்கள்.

மேலும் அறிவோம்...

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்