காபாரதம் என்னும் இதிகாசத்தில் மானுடத் தத்துவங்கள் அனைத்தும் புதைந்து கிடக்கின்றன. அது துவாபர யுக முடிவில், கொடுமையான கலிகாலம் தொடங்கவிருந்த நிலையில் நடந்த கதையல்லவா? அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திர மும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒருவர்போல் இன்னொருவர் இல்லவே இல்லையென்பது அந்த இதிகாசத்தின் தனிப்பெருஞ்சிறப்பு. அதுபோல மனித குணத்தின் அத்தனை பரிமாணங்களையும்- கருணை, அன்பு, வஞ்சனை, சூது, சதி, களவு, கொள்ளை, பெண்ணடிமை என அத்தனையையும் அதில் காணலாம்.

அத்தகைய மகத்தான இதிகாசத்தில் முக்கியமான ஒருவர் விதுரர். இவர் திருதராஷ்டிரன் சபையில் அமைச்சர் பொறுப்பை வகித்ததால் பெரிதாக கவனிக்கப்படாதவர். பாரதப்போரில் இவர் பங்கேற்கவில்லை. ஒருவேளை இவர் போரில் ஈடுபட்டிருந்தால் முடிவு வேறுவிதமாக மாறியிருக்கக்கூடும் எனவும் கூறுவர்.

விதுரரின் பிறப்பு வித்தியாசமானது. குரு வம்சத்திற்கு வாரிசுகளைத் தராமல் சாந்தனுவின் மகன் விசித்திரவீரியன் இறந்து போனான். அவனது மனைவிகள் அம்பிகா, அம்பாலிகா இருந்தனர். சாந்தனுவின் மனைவி சத்தியவதி வியாசரிடம், பீஷ்மன் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டுவிட்டான். குரு வம்சம் தழைக்க நீ மட்டுமே கதி என்று முறையிட்டாள். அதற்கு வியாசர், என் நயன திருஷ்டியால் குலம்தழைக்கச் செய்கிறேன். உன் மருமகள்கள் இருவரையும் ஒவ்வொருவராக என்னை காண ஆடையின்றி அனுப்பு என்றார்.

முதலில் வந்த அம்பிகா நாணத்தால் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

Advertisment

dd

அடுத்து வந்த அம்பாலிகா பயத்தினால் வெளிறிப் போய்விட்டாள். இதையடுத்து வியாசர் சத்தியவதியிடம், அம்பிகாவுக்குப் பிறக்கும் மகன் பார்வையற்றவனாக இருப்பான்; அம்பாலிகாவுக்குப் பிறக்கும் மகன் வெளிறிப்போய்க் காணப்படுவான் என்று சொல்லிச் சென்றார். அதன்படி பிறந்த வர்களே திருதராஷ்டிரனும் பாண்டுவும் ஆவர்.

Advertisment

இதனால் மனக் கலக்கம் அடைந்த சத்தியவதி அம்பிகாவிடம், நீ மீண்டும் வியாசரிடம் சென்று மகிழ்வுடன் சிறந்த புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கேள் என்றாள்.

ஆனால் அம்பிகாவுக்கோ வியாசரைப் பார்க்க விருப்பமில்லை. எனவே தனது பணிப் பெண்ணை அனுப்பினாள். அவள் மனநிறைவோடு வியாசர் முன் நின்றாள். வியாசரின் கருணைப் பார்வையால் அவளுக்குப் பிறந்த வரே விதுரர்.

சகோதரர்கள் மூவரும் வளர்ந்து உரிய பருவமடைந்தனர். அரசகுமாரிகளுக்குப் பிறந்த திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும், அவர்களது அந்தஸ்துக்கேற்ற மணப் பெண்ணைத் தேர்வு செய்து மணம்முடித்து வைத்தார் பீஷ்மர். வேலைக்காரி வயிற்றில் பிறந்த விதுரருக்கு ஒரு வேலைக்காரியின் மகளையே மணமகளாகத் தேர்வு செய்தார். அந்த குணவதியுடன் இல்லறத்தை நல்லறமாக நடத்திவந்தார் விதுரர்.

எதற்கும் ஆசைப்படாமல், தன் இருப்பை வெளிப்படுத்தாமல், அதேசமயம் தன் கடமையை சரியாக செய்துவந்தார் விதுரர்.

மன்னர் திருதராஷ்டிரனுக்கு ஆலோசனை சொல்லும் முக்கியப்பணி மட்டுமின்றி, அமைச்சுப் பணியையும் அவரே மேற் கொண்டார்.

ஆனால் சூழ்நிலை மாறியது. விதுரரின் அறிவுரையை மீறி, திருதராஷ்டிரரின் அனுமதி யுடன் துரியோதனன் பாண்டவர்களை சூதுக்கு அழைத்தான். அதில் வெற்றியும் பெற்றான். பாண்டவர்களை அடிமை களாக்கியதன்றி, அவர்களது மனைவி திரௌபதியையும் அடிமையாக்கினான். சித்தப்பாவான துரோணரிடமே, அவள் நம் அரண்மனையில் வேலைக்காரியாக இருக்கட்டும்; அழைத்து வாருங்கள் என்று சொன்னான்.

இவ்வளவு காலம் அமைதியின் வடிவாக இருந்த விதுரருக்கு அப்போதுதான் கோபம் பீறிட்டது.

மூடனே, யாரைப் பற்றி நீ இவ்வாறு பேசுகிறாய்? வேள்விக் குண்டத்திலிருந்து வெளிவந்த அந்த ஆதிபரமேஸ்வரி அல்லவா துரோபதை? நீ பாம்பைத் தீண்டுகிறாய். கட்டாயம் நீ எமபுரிக்குச் செல்வாய். ஒருபோதும் துரோபதை உனக்கு வேலைக்காரி யாக மாட்டாள். சூதாட்டத்தில் தோற்ற தருமனுக்கு அவளைப் பணயம் வைக்க உரிமையில்லை. துரோபதைபற்றி தகாத வார்த்தை பேசியதால் நீ உன் புண்ணியத்தை இழந்து விட்டாய் என்று ஆவேசமாய்ப் பேசினார். ஆனால் அவர் குரல் அங்கு எதிரொலிக்கவில்லை.

பாரதப்போர் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. கண்ணன் தூது வந்தும் பயனில்லை. அந்த சமயத்தில், போர் வேண்டாம் என்று விதுரர் சொன்ன அறிவுரையைக்கேட்டுக் கோபமுற்ற துரியோதனன், உடன்பிறந்த சித்தப்பா என்றால் உனக்கு இந்த புத்தி வருமா? வேலைக்காரி வயிற்றில் பிறந்த வன்தானே நீ? என்று பேசிவிட்டான்.

அப்போதுதான் கோபத்தின் உச்சிக்குச் சென்ற விதுரர், தன் கையிலிருந்த விஷ்ணுவின் ஆயுதமான வில்லை உடைத்து அவையில் வீசியெறிந்தார். மூர்க்கனே, இனி இது உனக்கு உபயோகப் படக்கூடாது என்று கூறி ஆவேசத்துடன் வெளியேறினார். பாரதப் போரில் அந்த வீரவில் பயனற்றுப் போனது.

பிறப்பு குறித்தான இகழ்வு கர்ணனுக்கு இருந்ததுபோல் விதுரருக்கும் இருந்தது.

ஆனால் விதுரர் யார்?

அதற்கொரு முன் வரலாறு உண்டு. மாண்டவ்யர் என்னும் மகரிஷி பேசாநோன்பு பூண்டவர். ஒருசமயம் அரச சேவகர்கள் மாண்டவ்யரை கள்வன் எனக்கருதி அரசன் முன் நிறுத்தினர். அரசன் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை. எனவே மற்றவர் களுடன் சேர்த்து அவரையும் கழுவிலேற்றும் படி அரசன் கட்டளையிட்டான். மாண்டவ் யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனால் அந்த கழுவின் நுனி அவரது உடலைப் பிளக்க வில்லை. எனவே அவர் மரணமடையாமல் வேதனையோடு கழுவிலேயே இருந்தார். இந்த செய்தி மன்னனுக்குத் தெரியவர, அவர் கள்வரல்ல என்றுணர்ந்து அவரை விடுவித்தான்.

இதையடுத்து எமதர்மனை சந்தித்தார் மாண்டவ்யர். நான் என்ன பாவம் செய்ததற்காக இத்தகைய தண்டனையை அனுபவிக்க நேர்ந்ததென்று கேட்டார். நீங்கள் சிறுவயதில் பட்டாம்பூச்சியை ஊசியால் குத்தித் துன்புறுத்தி விளையாடினார் கள். அதற்கான தண்டனையை இது என்றார் எமதர்மன்.

பாவபுண்ணியம் அறியா சிறுவயதில் செய்த செயலுக்கு இத்தனை பெரிய தண்டனையா? எனவே உன்னை சபிக்கிறேன். நீ மானிடப் பிறப்பெடுத்து மண்ணுலகில் நூறாண்டு காலம் வாழ்வாயாக என்றார். எமதர்மன் மகிழ்வுடன் இசைந்தார். அவரே விதுரராக அவதரித்தார்.

தர்மதேவதையின் பிறப்பே வேலைக்காரி யின் வயிற்றில்தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

-எம்