Advertisment

மாதவனின் மணக்குறை தீர்த்த மகேசன்! - பழங்காமூர் மோ கணேஷ்

/idhalgal/om/mahesan-solved-madhavans-marriage-problem-palangamur-mo-ganesh

"இந்த மண்ணுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலைநிமிர்கின்றதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன்' என்கின்றார் கிருஷ்ண பரமாத்மா. அப்படி பரந்தாமனாகிய திருமால் எடுத்த அவதாரங்களில் முதன்மையானது மச்சாவதாரம். அதாவது மீன் அவதாரம். இந்த அவதாரத்தின் நிகழ்வுகள் பற்றிய உண்மைகளை விவரிப்பதே 18 புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம்.

Advertisment

மச்ச புராணப்படி இரண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் ஸ்ரீமன் நாராயணர். ஒன்று சத்யவிரதன்மூலமாக பிரளயத்திலிருந்து உயிர்களைக் காத்தது. மற்றொன்று, பிரம்மனால் தவறவிடப்பட்ட வேதங்களை மீட்டது.

dd

மச்ச அவதாரம்

ஸ்ரீஹரிமீது பேரன்பு கொண்டவன் சத்யவிரதன் என்னும் திராவிட தேசத்து மன்னன். தண்ணீரை மட்டுமே பருகி, ஸ்ரீ வேங்கடேசரை நினைத்து கடும் விரத மிருந்தான். நீருக்குரிய நாராயணர் இம்மன்னன்மீது கருணை கொண்டு திருவருள் புரிந்திட திருவுளம் கொண்டார்.

சிறிய மீனாக ஆற்றில் நீந்தினார். அப்போது நித்திய கடன்களை முடித்திட ஆற்றுக்கு வந்த சத்தியவிரதன் தனது கைகளால் ஆற்று நீரை எடுத்தார். அதில் மீனுருவில் உலவினார் மத்ஸ்ய நாராயணர். தன்னை மீண்டும் நீரில் விட வேண்டாம் என்றும், அப்படிவிட்டால் பெரிய மீன்கள் தன்னை தின்றுவிடுமென்றும் கோரிக்கை வைத்தது.

அந்த மீனைத் தனது கமண்டலத்தில் விட்டுக்கொண்டு அரண்மனைக்குச் சென்றான் மன்னன். அதற்குள் அம்மீன் கமண்டலத்தையே நிறைத்துவிட்டது. அதன் வளர்ச்சியைக் கண்டு திகைத்த மன்னன், அதை பெரியதொரு பாத்திரத்தில் இட்டான். மீண்டும் பெரிதாக வளர்ந்தது. குளத்தில் விட்டான். குலமும் நிரம்பி யது. தனது வீரர்கள்மூலமாக கடைசியாக கட

"இந்த மண்ணுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலைநிமிர்கின்றதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன்' என்கின்றார் கிருஷ்ண பரமாத்மா. அப்படி பரந்தாமனாகிய திருமால் எடுத்த அவதாரங்களில் முதன்மையானது மச்சாவதாரம். அதாவது மீன் அவதாரம். இந்த அவதாரத்தின் நிகழ்வுகள் பற்றிய உண்மைகளை விவரிப்பதே 18 புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம்.

Advertisment

மச்ச புராணப்படி இரண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் ஸ்ரீமன் நாராயணர். ஒன்று சத்யவிரதன்மூலமாக பிரளயத்திலிருந்து உயிர்களைக் காத்தது. மற்றொன்று, பிரம்மனால் தவறவிடப்பட்ட வேதங்களை மீட்டது.

dd

மச்ச அவதாரம்

ஸ்ரீஹரிமீது பேரன்பு கொண்டவன் சத்யவிரதன் என்னும் திராவிட தேசத்து மன்னன். தண்ணீரை மட்டுமே பருகி, ஸ்ரீ வேங்கடேசரை நினைத்து கடும் விரத மிருந்தான். நீருக்குரிய நாராயணர் இம்மன்னன்மீது கருணை கொண்டு திருவருள் புரிந்திட திருவுளம் கொண்டார்.

சிறிய மீனாக ஆற்றில் நீந்தினார். அப்போது நித்திய கடன்களை முடித்திட ஆற்றுக்கு வந்த சத்தியவிரதன் தனது கைகளால் ஆற்று நீரை எடுத்தார். அதில் மீனுருவில் உலவினார் மத்ஸ்ய நாராயணர். தன்னை மீண்டும் நீரில் விட வேண்டாம் என்றும், அப்படிவிட்டால் பெரிய மீன்கள் தன்னை தின்றுவிடுமென்றும் கோரிக்கை வைத்தது.

அந்த மீனைத் தனது கமண்டலத்தில் விட்டுக்கொண்டு அரண்மனைக்குச் சென்றான் மன்னன். அதற்குள் அம்மீன் கமண்டலத்தையே நிறைத்துவிட்டது. அதன் வளர்ச்சியைக் கண்டு திகைத்த மன்னன், அதை பெரியதொரு பாத்திரத்தில் இட்டான். மீண்டும் பெரிதாக வளர்ந்தது. குளத்தில் விட்டான். குலமும் நிரம்பி யது. தனது வீரர்கள்மூலமாக கடைசியாக கடலில் விட்டான். கடலும் போதவில்லை. கடலே காலளவு நீராகிப்போனது. அந்த அளவிற் குப் பெரிதானது அம்மீன்.

இது உலகத்தைக் காத்து ரட்சிக்கும் உலகளந் தானின் திருவிளையாடல்தான் என்னும் உண்மையை உணர்ந்தான் சத்தியவிரதன்.

அப்போது அங்கே அசரீரி ஒலித்தது. பிரள யத்தை எச்சரிக்கவே மீனுருவில் வந்ததாக வாக்குரைத்தார் வாசுதேவர். "சத்யவிரதா... பிரளயம் ஏற்படப்போகிறது. அதில் உலகம் அழியும். அப்போது எல்லா உயிர்களையும் ஓர் பெரிய கப்பலில் ஏற்றி, கடலில் விட்டு விடு. அக்கப்பலை நான் இந்த மீனாகத் தாங்கி உயிர்களைக் காப்பேன்'' என்று அருள் மொழிந்தார்.

மன்னன் சத்யவிரதனும் அவ்விதமே செய்தான். அவ்வாறே பிரளயமும் வந்தது. மன்னனும் ஓர் பெரிய கப்பலில் மனிதர்களோடு மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களை யும் ஏற்றி நீரில் நகர்ந்தான். பிரளயப் பெருவெள்ளத்தில அக்கப்பல் முழுகாதவாறு பரந்தாமனே மீனாய் இருந்து தாங்கினார்.

பிரளயம் முடிந்ததும், எல்லாரையும் நிலத்தில் விட்டு எல்லா உயிர்களையும் காத்தருளினார் ஏழுமலைவாசன்.

வேதங்களை மீட்டது பிரளயம் ஓய்ந்தது. மீண்டும் படைக்கும் கடமையை ஆரம்பித்தார் பிரம்மா. அப்போது சோர்வு மிகுதியால் சற்றே கண்ணுறங்கினார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட கோமுகாசுரன் படைப்பிற்கு மூலாதாரமான நான்கு வேதங்களைக் கவர்ந்து கடலுக்கு அடியில் சென்று பதுங்கிக்கொண்டான்.

இதனால் பிரம்மனின் படைப்புத் தொழில் முடங்கியது. உலகமும் ஓய ஆரம்பித்தது. பயந்த பிரம்மா திருமாலை சரணடைந்தார். அப்போது மச்சமூர்த்தியாய் கடலுள் வசித்த ஸ்ரீஹரி, கோமுகாசுரனை அழித்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார். காக்கும் கடவுளுக்கு நன்றி கூறிய பிரம்மன் மீண்டும் தனது படைப்புகளைத் திறம்பட படைக்கத் தொடங்கினார்.

Advertisment

ff

ஆனால் நாராயணருக்கோ கோமுகா சுரனைக் கொன்ற தோஷம் சூழ்ந்தது. மீண்டும் பரமபதமடைய முடியாமல் தவித்தார். இதிலிருந்து விடுபட குடமுருட்டி ஆற்றின் தென்பால் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

மீனுருவில் வழி பட்டதால் இப்பதி மச்சபுரி என்றும், சேலூர் (சேலலி கெண்டை மீன்) என்றும் இருந்தது. தற்போது கோவில் தேவராயன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. இப்பதி ஈசர் ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் என்று அழைக் கப்படுகின்றார்.

"மண்ணும் அக்கோவயில்சேர் மான்மறிக் கையர்தம் பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதேந்து இன்னிசைத் தமிழ்புனைந் திறைவர் சேலூருடன் பன்னுபா லைத்துறைப் பதிபணிந்தேகினார்.'

திருஞானசம்பந்தர் இந்தப் பதியில் தேவாரம் பாடி சிறப்பித்துள்ளதை இவ்வாறு சேக்கிழார் தனது பெரிய புராணத்தின் 2262-ஆம் பாடலில் சான்று கூறியுள்ளார்.

ஆனால் சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் நமக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

காவிரியின் தென்கரைத்தலங்களுள் ஒன்றான இந்த தேவராயன்பேட்டை சோழர் காலத்தில் "நித்த வினோதன நல்லூர் நாட்டு பிரம்மதேசம்' என்று வழங்கப்பட்டுள்ளது.

முற்கால சோழ மரபினர்களுக்குப் பிறகு எட்டாம் நூற்றாண்டில் மீண்டும் தஞ்சை யில் புலிக்கொடி ஏற்றி பறக்கவிட்ட வெற்றிச் சோழன் என்னும் விஜயாலய சோழனின் மகனான முதலாம் ஆதித்த சோழனே (கி.பி. 871 - 907) இங்கு மச்சபுரீசர் ஆலயத்தை செங்கல் தளியாக (செங்கல் கட்டுமானம்) நிர்மாணித்தான்.

பின்னர் முதலாம் ஆதித்த சோழனது மகனான முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி. 907 - கி.பி. 955) இக்கோவிலை கற்றளியாக (கல் கோவிலாக) மாற்றியமைத்தான். பராந்தக சோழனின் வழிவந்த இராஜராஜ சோழனது சகோதரியான குந்தவை பிராட்டியார் இத்தல மீனீசரை வழிபட்டு, தானங்கள் பல வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேருந்து சாலைக்கு உட்புறமாக அமைந்துள்ளது ஆலயம். முதலில் சிறிய வாயில். அதனுள்ளே விசாலமான இடம். வலது- இடது புறங்களில் நந்தவனம் காட்சிதர, நேராக முகப்பு கணபதியும், அவருக்குப் பின்னே பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியெம்பெருமான்.

முதல் வாயிலுள் நுழைகிறோம். இங்கு ராஜகோபுரம் காணப்படவில்லை. மண்டபத்திற்குள் நுழையும்முன் புடைப்புச் சிற்பமாக மீன் பூஜிப்பது போன்று வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. கிழக்கு பார்த்த ஸ்நபன மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம், மூலஸ்தானம் ஆகிய அமைப்பில் ஸ்வாமி சந்நிதியும், ஸ்நபன மண்டபத்தில் தென்முகமாக அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

மூலஸ்தானத்தில் சிறிய திருமேனியராக காட்சி தந்தருள்கிறார் ஸ்ரீ மச்சபுரீஸ்வரர். இவரது திருமுடிமீது மீன் பூஜிக்கும் கவசம் சாற்றப்படுகிறது. அம்பிகையாக ஸ்ரீ சுகந்த குந்தளாம்பாள் தென்முகமாக நின்றவண்ணம் கையில் ருத்ராட்ச மாலையும், நீலோற்பல மலரும் ஏந்தி அழகே வடிவாய் அருள் மழை பொழிகின்றாள்.

பிராகார வலம்வருகையில் தென்புறத்தில் வடக்கு திசை நோக்கும் ஸ்ரீ துர்க்காதேவி பெரியதொரு திருமேனியளாக அருள் பாலிக்கிறாள். உடன் சப்தமாதர்களும், நால்வர் திருமேனிகளும் உள்ளன.

பொதுவான கோஷ்ட மூர்த்தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. மேற்குத் திருமாளிகை பத்தியில் தல கணபதி, விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், வள்ளி- தெய்வானை உடனுறை ஷண்முகர், ஸ்ரீதேவி- பூதேவி உடனுறை ஸ்ரீ வரதராஜர், ஐயப்பன், சரஸ்வதி, ஆஞ்சனேயர் மற்றும் ஸ்ரீ கஜலட்சுமி சந்நிதிகள் வரிசையாக அமைந்துள்ளன.

கிழக்குப் புறத்தில் சூரியன், சனிபகவான் கால பைரவர் மற்றும் யோக பைரவர் வீற்றுள்ளனர்.

தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. தல தீர்த்தமாக மச்ச தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தில் சோழர் கால கல்வெட்டுகள் சுமார் 55 உள்ளன. கல்வெட்டில் இவ்வூர் சேயலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு ராஜகேசரிநல்லூர் என்றும் பிரம்ம தேசம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. கோவிலில் தினமும் திருமுறை ஓதிட ஓதுவார் களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு ராஜராஜ சோழனது சகோதரியான குந்தவைப் பிராட்டியார் தஞ்சை வைத்திய சாலை பராமரிப்புக்கு இவ்வூரில் நிலங்கள் கொடுத்துள்ளார்.

நான்கு கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் திறந் திருக்கும்.

1928 மற்றும் 2010-ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அனைத்து சிவாலய விசேடங் களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன.

மீன ராசிக்காரர்களுக்குப் பரிகாரத்தலமாகத் திகழ்கிறது.

ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை சமேத ஸ்ரீ மச்சபுரீஸ்வரரை வணங்கி வினைகள் யாவும் களைந்திடுவோம்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ள இவ்வூர், பாபநாசம்- தஞ்சாவூர் சாலையிலுள்ள பண்டாரவாடையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஆலய தொடர்புக்கு: கண்ணன் குருக்கள், அலைபேசி: 97901 16821

om010523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe