ழ்ந்த பக்தர்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இருந்தனர்; இருக்கின்றனர்.

ஆழ்வார்களுள் ஆண்டாள் தன் பக்தியால் அரங்கனையே மணந்து ஐக்கியமானாளே! நாயன்மார்களுள் காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் உளரே! சிவபக்தை திலகவதி யார் இல்லையென்றால், ஜைன மதம் தழுவிய தருமசேனர் திருநாவுக்கரசர் ஆகியிருக்க முடியுமா?

மணமான ராஜஸ்தான் ராணி மீராபாய் கண்ணனையே கணவ னாக வழிபட்டு, துவாரகாதீசனுள் லயித்துவிட்டாளே! மராட்டிய பக்தர்களிலும் சக்குபாய், ஜனா பாய், முக்தாபாய் போன்றவர்கள் இருந்தனரே.

mahadevi

Advertisment

ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா தேவியார், அரவிந்தர்- அன்னை, அம்ருதானந்த மயி, ஆண்டவன் பிச்சை, ஜானகி மாதா போன்றவர்களும் ஆழ்ந்த பக்தைகள்.

அத்தகையவர்களுள் அக்க மகாதேவியும் ஒருவர். பன்னிரண்டாம் நூற்றாண்டில், முப்பது வயதே வாழ்ந்த சிவபக்தை. இவரைப் பற்றி சற்று சிந்திப்போமா?

கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில், உடுத்தடி என்ற கிராமத்தில் நிர்மலா ஷெட்டி- சுமதி தம்பதிக்கு 1130-ஆம் ஆண்டு (மாதம், திதி, நட்சத்திரம் தெரியவில்லை) உதித்தவள் மகாதேவி. பெற்றோர் சிவபக்தர்கள்; நல்ல வசதி படைத்தவர்கள். நெடுநாட்களாகக் குழந்தைப் பேறில்லாமல், பின்னர் இறையருளால் பிறந்த குழந்தையென்பதால், அன்புடனும் செல்லமாகவும் வளர்த்தனர்.

Advertisment

மகாதேவி சிறுவயதிலிருந்தே எதன்மீதும் பற்றில்லாமல் இருந்தாள். உடை, நகை என எதிலும் நாட்டமில்லை. அதிகம் பேசுவதில்லை. தாய்- தந்தையிடம்கூட குறைவாகவே பேசினாள். சக பெண்களுடன் சேர்ந்து விளையாட வேண்டு மென்ற விருப்பமும் இல்லை. "விட்டகுறை தொட்டகுறை ' என்பார்களே, அத்தகைய பிறவி தான் என்றெண்ண வேண்டும். சிவபெருமான்மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தாள்.

யார் எது சொன்னாலும், "அப்படியா?' என்று ஏற்றுக்கொள்ளமாட்டாள். துருவித்துருவி கேள்விகள் கேட்டு, மனம் ஏற்றுக்கொண்டால்தான் சம்மதிப்பாள்.

கன்னடம், சமஸ்கிருதம், சாத்திரங்கள் கற்றுத் தேர்ந்தாள். பருவ வயதையடைந்து அழகு மங்கையாகத் திகழ்ந்தாள். அவளுக்குத் திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் விரும்பினர். ஆனால், இயல்புக்கு மாறான குணம்கொண்டிருந்த மகாதேவியை யார் மணந்துகொள்வார் என்று பெற்றோர் கவலைகொண்டனர்.

அவளைக் கேட்டாலோ, "என் மணாளன் ஸ்ரீசைல மல்லிகார்ஜுனரே' என்பாள். மல்லிகார்ஜுனர்- ஆந்திராவிலுள்ள ஒரு ஜோதிர் லிங்கம். 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. கர்நாடகத்திலேயே பல கோவில்கள் உள்ளன. இராவணன் கயிலையிலிருந்து கொணர்ந்த கோகர்ணம் ஆத்மலிங்கமும் உள்ளது. ஏன் ஆந்திர மல்லிகார்ஜுனர் அவள் மனம் கவர்ந்தார்? விநோதமே!

பெற்றோர், ""சிவனை நீ வழிபடலாம்;

ஆனால், எவ்வாறு மணந்துகொள்ள முடியும்? உனக்குப் பிடித்தமானவரை மணந்துகொள்'' என்றனர். அவளோ, ""அன்னம் பெரிய குளங்களில்தான் நீந்தும்; சிறிய குட்டைகளில் அல்ல. புலி அடர்ந்த காடுகளில்தான் வாழும்; எலிபோன்று வளைக்குள் அல்ல. மணமற்ற மலர்களை வண்டுகள் நாடாது'' என்றாள். அவளது உயர்ந்த மனப்பக்குவ நிலையைப் பெற்றோ ரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒருசமயம் கௌசிகன் என்ற அரசன் (ஜைன மதத்தைத் தழுவியவன்; அந் நாட்டை ஆண்டுகொண்டிருந்தவன்) வேட்டைக்குச் செல்லும்பொழுது, வீட்டு மாடியில் நின்றிருந்த மகாதேவியைக் கண்டு, அவளது எழிலில் மனதைப் பறிகொடுத்தான். அவளைப் பெண்கேட்டு தன் அமைச்சரை அனுப்பிவைத்தான். பெற்றோர் மகாதேவியைக் கேட்க, ""அரச ரையே வரச்சொல்லுங்கள். நான் அவரிடம் பேசவேண்டும்'' என்றாள்.

அதன்படியே அரசன் வந்தான். அவனி டம் மகாதேவி, ""எனது நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் சிவபக்தியில்தான் ஆழ்வேன். சிவபக்தர் களுடன் பழகுவேன், பேசுவேன். சிவபக்தி யில் மேலும் ஆழ்ந்திடும் செயல்களைச் செய்வேன். உங்களது உடல் வேட்கைக்கு இணங்கமாட்டேன். என்னை மணந்து கொண்டபின், இந்த ஒப்பந்தங்களை மீறி னால் வெளியேறிவிடுவேன்'' என்றாள்.

அரசன் "சரி' என்றான். மணமும் நடந்தது.

ஆனால், அரசன் தனது உடல் இச் சைக்கு இணங்கும்படி கேட்க, அவள் வெளியேறிவிட்டாளாம். இதனை வேறுவித மாகவும் கூறுகிறார்கள்.

அவளது முதல் கட்டளை அரசன் சைவசமயம் ஏற்கவேண்டும்; சிவபக்தி செய்யவேண்டும் என்பது. அரசன் ஒப்புக் கொள்ளாததால் திருமணம் நடக்கவில்லை. பெற்றோர் மேலும் தன்னைக் கட்டாயப் படுத்துவார்களே என்று ஊரைவிட்டே வெளியேறிவிட்டாள் என்பர்.

அச்சமயம் அவள் வயது பதினாறே. என்ன விநோதம் என்றால், இடையில் ஒரு சின்ன கம்பளி ஆடைதான். அடர்ந்த தன் கூந்தலாலே தன் உடலை மறைத்தாள். சதாசிவப் பிரம்மேந்திரர் அவதூதர் (ஆடையணியார்) என்பர். கோவில்களில் பைரவர் விக்ரகமும் அவதூத நிலையே. ஜைன முனிகளில் ஒருவகை அவதூத நிலையுண்டு. இதனை எழுதவே நமது மனம் சிலிர்க்கிறது. ஆயின், அவள் மனோநிலையை நாம் சிந்தித்து, வந்திக்கவேண்டும்.

மக்கள் அவளிடம், ""என்ன இவ்வாறு செய்கிறாயே?'' என்றனர். அவள், ""அடர்ந்த காட்டில் வீட்டைக் கட்டிவிட்டு, துஷ்ட மிருகம் வருமென கவலைப்படலாமா? கடலலை தீண்டுமிடத்தில் வீட்டைக் கட்டி விட்டு, கடல் கொந்தளிப்புக்கு பயப்பட லாமா?'' என்றாளாம்.

கூட்டிலிருந்து விடுபட்ட கிளிபோல, தன் கணவன் சிவசைலநாதனை அடைய வழிதேடிப் புறப்பட்டாள்.

வீரசைவர்களான அல்லமா பிரபு, பஸவண்ணா (பஸவேஸ்வரர்) வாழ்ந்த கல்யாணி நகரை நடந்தே அடைந்தாள். பசி, தாகம், வெட்கம், உறவினர் என அனைத் தையும் துறந்த நிலை.

பஸவண்ணா அங்கு "அனுபவ மண்டபம்' (தெய்வீக அனுபவ இடம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். அதன் பிரதமத் தலைவர் அல்லமா பிரபு. அங்கு நாடெங்கிலுமுள்ள சிறந்த தெய்வீக சிந்தனையாளர்கள்கூடி பக்தி, தத்துவம், நாட்டுநலம் ஆகியவற்றைப் பற்றி விவாதிப்பார்கள். நாட்டு மக்களுக்கு "வசனங் கள்' (திருக்குறள் போன்று) தந்தனர். அதனில் தத்துவம் இருக்கும்; முறைகள் இருக்கும்.

முதலில் அவர்கள் மகாதேவியை ஏற்க வில்லை. அவளது மனம், திடம், நம்பிக்கை, ஆழ்ந்த அறிவு, சிவபக்தி, மல்லிகார்ஜுனரே கணவன் என்பதையெல்லாம் ஏற்றுக்கொண் டாலும், சிறிய கம்பளி உடுத்தி, கூந்தலால் உடலை மறைத்திருக்கும் கன்னிப் பெண் என்பதால் தயங்கினர். அவள் மனநிலை உணர நிறைய விவாதங்கள் நடந்தன.

ஆண்- பெண் உடல் குறித்து கேள்வி கேட்ட பொழுது, ""சிவன் ஒருவனே ஆண்; கணவன். இவ்வுலக ஆண்- பெண் யாவரும் பெண்களே. பாம்பிலிருந்து விஷத்தை எடுத்துவிட்டால், அந்தப் பாம்பிடம் எவருக்காவது அச்சம் வருமா?

காம குரோத லோப மோக மத மாத்சர்யம் எனும் அவகுணங்களை அறவே ஒழித்துவிட்டால், ஆண்- பெண் என்ற வித்தியாசமேது? அனைவரும் ஜீவாத்மாக்களே- பரமனை அடையவேண்டியவர்களே! ஜீவாத்மாவுக்கு பரமாத்மா ஒன்றே உறவு; மற்றவை அல்ல. இனம், மதம், ஆண்- பெண், பணக்காரன்- ஏழை போன்ற பேதங்கள் ஜீவாத்மாவுக்குக் கிடையாதே'' என்றாள்.

மகாதேவியின் சொற்கள் அனுபவ மண்ட பத் தலைவர், உறுப்பினர்களின் மனதை ஈர்த்தன.

அவள் அக்க மகாதேவி ஆனாள். அங்கு சிலகாலம் தங்கி தனது சிவபக்தியைப் பரந்து ஆழ்ந்திடச் செய்தாள். அவள் குருபக்தியை ஒரு பாடலில் சொல்கிறாள்...

"எனக்குள்ள பக்தி பஸவண்ணர் அருளால் கிடைத்தது. அறிவு அல்லம்மாவின் கருணையால் கிடைத்தது. ஆனந்தம் சென்ன பசவரது அன்பால் நிறைந்தது. இவை மூன்றையும் ஸ்ரீசைல மல்லிகார்ஜுனருக்கு அர்ப்பணிக்கிறேன்.'

அல்லமா பிரபு கூற, அக்க மகாதேவி ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரைத் தேடிச் சென்றாள். அதுவோ ஒரு மலைப்பிரதேசம். உருவமற்ற சிவனை ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் உருவத்தில் கண்டு வழிபட்டாள். பின்பு அங்கு இளமைப்பருவத்திலேயே 1160-ல் (30 வயது) சிவனோடு கலந்தாள்.

அல்லமாவும் சிவசைலம் வந்து, கோரக்க நாதரின் அருளும் பெற்று, சிவனை தரிசித்து அங்கு கதலிவனம் என்ற இடத்தில் சிவனுடன் ஐக்கியமானாராம். திருமந்திரம் (2617) இதனை இவ்வாறு கூறும்:

"சீவன் எனச் சிவனார் என வேறில்லை

சீவனார் சிவனாரை அறிகிலர்

சீவனை சிவனார் அறிந்தபின்

சீவனார் சிவன் ஆயிடிட்டிருப்பரே.'

கன்னட இலக்கிய வசனங்கள் தமிழ் வசனக் கவிதை போன்றவை. அக்க மகாதேவியின் 357 வசனங்கள் கிடைத்துள்ளன. மேலும், அவர் "யோகாங்காத்ரி வீதி', "மந்த்ர கோப்யா', "மதுர பக்தி' முதலியனவும் புனைந்துள்ளார். எனினும், ஆயிரம் வசனங்களே வீரசைவ விளக்கமாக உள்ளன என்பர். சில சிந்திப்போம்...

"உலக இன்பம் வேண்டுமென ஒரு கணவன் என்றும்

நிலைத்த ஆன்ம நலனுக்கு வேறொரு கணவன் என்றும்

சிந்திப்பது முறையா- மல்லிகார்ஜுன சிவா

சிந்தைக்குகந்த மணவாளன் நீயன்றி வேறுண்டோ?'

"பசியே ஒதுங்கி நில், தாகமே ஓடிப்போ

உறக்கமே மறந்துபோ, காலமே காணாது போ

கோபமே தணிந்துவிடு, ஏமாற்றமே எழுந்தோடு

ஆசையே அவிந்துவிடு, இறுமாப்பே ஒழிந்துபோ

பொறாமையே போய்விடு, சராசரமே வழிவிடு

சென்ன மல்லிகார்ஜுனா என்னை ஆட்கொள்!'

"உடுத்திய ஆடை கீழேவிழ ஆண்- பெண் வெட்கிப்பர்

உலகமே ஆடையானால் வெட்கம் எதற்கு?

மல்லிகார்ஜுனரே அருள் பிரகாசம் அடைந்த உடலுக்கு

மானம் காக்க உடுக்க ஆடை தேவையா?'

"சிவபக்தியானது ஜீவனை சிவனுடன் இரண்டறக் கலக்கச் செய்யும்' என்ற அத் வைதக் கொள்கையை- பக்தி முக்தியை அளிக்கும் என உணர்த்துகிறது அக்கமாவின் உன்னத சரிதம். 30 வயதே வாழ்ந்த அக்க மகாதேவியை நினைத்து மல்லிகார்ஜுனரில் லயிப்போம்.