மகரம் என்பது காலபுருஷனின் 10-ஆவது ராசி. இதன் அதிபதி சனி. மகர ராசியில் செவ்வாய் உச்சமும், குரு நீசமும் அடைவார்கள்.
குடும்ப விவரம்
மகர ராசியின் அதிபதி சனி என்பதால், மகர ராசியினர் எவ்வளவு படித்திருந்தாலும், சற்று மந்தமானவர்களாக இருப்பார்கள். பலரது குடும்பம் சற்று மூடுமந்திரமாக- எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத குடும்பமாக இருக்கும். இவர்களுடைய இளைய சகோதரர் படிப்பாளியாக, அலைச்சலில் விருப்பமுடையவராக இருப்பார். சிலரது தாய் சற்று கோப குணம் கொண்டவராக இருப்பார். இவர்களுடைய பரம்பரை அழகுணர்ச்சி உடையது. இவர்களுடைய வேலை புத்தியை அடிப்படையாகக் கொண்டது. வாழ்க்கைத்துணை வெகு சுறுசுறுப்பாக- பரபரப்பாக- எப்போதும் அலைந்துகொண்டே இருப்பார். இவர்களுக்கு ஏற்படும் அவமானம், தந்தை அல்லது அரசு, அரசியல் சார்ந்து இருக்கும். தந்தையின் நிலை மிக மேன்மையானதாக இருக்கும். இவர்களுடைய தொழில் கலை, கட்டடம், பயணம் சார்ந்ததாக அமையும். சிலரது மூத்த சகோதரர் சற்று தீயகுணம் கொண்டவராக- ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதவராக இருப்பார். இவர்களுக்கு ஆன்மிகப் பயணம் மிகவும் பிடிக்கும். இவை பொதுவான பலன்கள். அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொருத்து சற்று வேறுபடும்.
குரு இருக்குமிடப் பலன்
இதுவரையில் குரு மகர ராசியில் அமர்ந்திருந்தார். இப்போது இரண்டாமிடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு, மகர ராசிக்கு 12, 3-ன் அதிபதி. இரண்டாமிடம் என்பது தன, வாக்கு, குடும்ப ஸ்தானம்.
எனவே இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசியினரின் வருமானம் பெருகப்போகிறது. வாக்கில் தெளிவுண்டாகும். வாக்கில் தெளிவு எனில் மனமும் புத்தியும் ஒரு நிலைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தமாகிறது. குடும்பம் மேன்மையடையும்.
வாகனத் தொழில் கொண்டோர் நல்ல லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர், பணப்புழக்கம் அதிகரிக்கக் காண்பர். மறுமணம் வேண்டுவோர் நல்லவிதமாக நடக்கக் காண்பர். பள்ளிக் குழந்தைகள், கல்வி விஷயமாக நினைத்த விதத்தில் நினைத்தபடியே நன்மை பெறுவர்.
அசையும்- அசையா சொத்துகளின் இருப்பு அதிகரிக்கும். உங்கள் வீட்டை ஏதோவொரு விதத்தில், நீங்கள் எண்ணியபடி மாற்றுவீர்கள். நீங்கள் குடியிருக்குமிடம், உங்களுக்குத் தோதாக மாறும். சிலருக்கு வெளிநாட்டுப் பணப்புழக்கம் கிடைக்கும். வேறுசிலருக்கு கறுப்புப்பணம், லஞ்சப்பணம் வரும் வாய்ப்புண்டு. கலைத்தொழில், பங்கு வர்த்தகம், பொழுதுபோக்கு சார்ந்து கணக்கில் வராத பணப்புழக்கம் உண்டாகும். சிலரின் வாரிசுகள்மூலம் கணக்கில் வராத பணம் கைக்கு வந்துசேரும்.
இந்த குருப்பெயர்ச்சிக் காலகட்டத்தில், எவ்வளவு பணம் வந்தாலும் அத்தனையும் செலவழிந்து விடும். வீடு மாறுவது விஷயமாக செலவுண்டு. சிறிய, பெரிய பயணங்கள் செலவைத் தரும். சில முதலீடுகள் உண்டு. கைபேசி மாற்ற வேண்டிவரும். இளைய சகோதரம் சம்பந்தமான செலவுண்டு. சில ஒப்பந்த, குத்தகைக்கு வைப்புத்தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த காலத்தில், "பணம்தான் வருதே- நன்றாக செலவழித்து சுகமாக, சௌக்கியமாக இருப்போம்' என்ற மனநிலை உண்டாகும். நல்ல தங்க நகைகள் வாங்குவீர்கள். சிலர் உங்கள் எழுத்தைப் புத்தகமாக அச்சிடுவார்கள். உங்களில் சிலர் பத்திரிகை ஆரம்பித்து விடுவீர்கள். அல்லது பத்திரிகையின் பகுதி நிருபர், விநியோகஸ்தராகி விடுவீர்கள்.
5-ஆம் பார்வைப் பலன்
மகர ராசிக்கு இரண்டாமிடத்தில் அமர்ந்த குரு தனது 5-ஆம் பார்வையால் 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். 6-ஆமிடம் என்பது கடன், நோய், எதிரி ஸ்தானம். குரு பார்வைக்கு பார்த்த இடத்தைப் பெருக்கும் குணமுண்டு. எனில் இந்த பார்வையால் கடனை அதிகரிப்பாரா? நோயைப் பெருக்குவரா? எதிரிகளை எகிறச் செய்வரா? அதிக வேலைச்சுமையைத் தருவாரா எனக் கேட்கின், "ஆம்' என்பதே பதில். குருவின் பார்வைக்கு சுபத்தன்மை உண்டு. முதலில் வீடு வாங்க கடன் வாங்கச் செய்வார். சிலர் வீட்டின் புனரமைப்புக்குக் கடன் வாங்குவீர்கள். ஒரு வாகனத்தைக் கொடுத்து, வேறு வசதியான புது வாகனம் வாங்குவீர்கள்.
வாங்கிப் போட்ட பூமியில் வீடு கட்ட கடன் வரும். பக்கத்து வயலை வாங்கும்போது கடன் ஏற்படும். அரசியல் சேவையில் கொஞ்சம் செலவுண்டு. அரசுப் பதவி பிடிக்கவும், பதவி உயர்வு விஷயத்துக்கும், பசையுள்ள நாற்காலியில் அமரவும் கண்டிப்பாக செலவு அதிகம் ஏற்படும். இதன் பொருட்டு சற்று கைமாற்றாகப் பணம் வாங்கி, பின் உடனே செலுத்திவிடுவர்.
6-ஆமிடம் நோய் ஸ்தானம். இதனை 12-ஆமிட குரு பார்க்கும்போது, சற்று மருத்துவச் செலவுகளைக் கொடுப்பார். எனினும் பயப்படும்படியாக இல்லாமல், நோயின் ஆரம்பத்தின்போதே மருந்து எடுத்துக்கொள்வதால், தீவிரமாக நோய் இருக்காது. இருப்பினும் உங்களின் பயம் மருத்துவரையும் மருந்தகத்தையும் செழிப்பாக்கும்.
6-ஆமிடம் வேலைக்குரியது. நீங்கள அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் பெயர் "குட் புக்'கில் இடம்பிடிக்கும். இதன் பின்னும் எதிரிகள் பெருக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். பொறாமை மிகுதியால் எதிரிகள் அதிகரிப்பர். இந்தவகையில் சற்று கவனமாக நடந்துகொள்ளல் அவசியம்.
7-ஆம் பார்வைப் பலன்
மகர ராசியின் 2-ஆமிடத்தில் அமர்ந்த குரு, தனது 7-ஆம் பார்வையால் 8-ஆமிடத்தை நோக்குகிறார். 8-ஆமிடம் என்பது நஷ்டம், அவமானம், அபகீர்த்தி ஸ்தானம். இத்தகைய அசுபத் தன்மைகொண்ட ஸ்தானத்தை குரு பார்வையால் அளவிடுகிறார். குருவின் பார்வை சுபமானது; பாதுகாப்பைத் தருவது; காப்பாற்றுவது. குரு பார்க்க கோடி நன்மையல்லவா?
மகர ராசியினர் சிலருக்கு, இந்த குரு கும்பத்துக்கு வரும் வரையில், ஒருவித உயிர்பயம் இருக்கும். ஏதாவது ஆகிவிடுமா? நம் குடும்பத்தின் கதி என்ன? யார் பார்த்துக்கொள்வார்கள் என எப்போதும் குழம்பிய வண்ணம் பயந்துகொண்டே இருப்பர். இந்த குருப்பெயர்ச்சி நடந்தவுடன் இவர்களையுமறியாமல் மன தைரியம் வந்துவிடும். இறைவன்மீதும் வாழ்வின்மீதும் பெரும் நம்பிக்கை ஏற்பட, முகம் பிரகாசமாகும்.
நிறைய மகர ராசியாருக்கு வேலை பறிபோய்விடுமோ- தொழில் நசித்து, மஞ்சள் கடிதம் கொடுக்கவேண்டி வருமோ என ஒரு பெரும் தவிப்பு மனதில் குடிகொள்ளும்.
முக்கியமாக கலைத்துறையின் அனைத்து தள கலைஞர்களும், "நமது நிலை கீழிறிங்கிவிடுமா- ஒருவரும் நமக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன செய்வது! எடுத்த படம் தோல்வியடைந்துவிடுமா? கலைத்துறையில் "ரெட் கார்டு போட்டு, தள்ளிவைத்து விடுவார்களா' என பெரிய பெரிய யோசனைகள் வந்து மனத்தவிப்பு ஏற்படும். கட்டடம் கட்டும் ரியல் எஸ்டேட் துறையினர், பயணம் சம்பந்தம், அழகு சார்ந்தவர்கள், நகைக் கடைக்காரர்கள், வாகன விற்பனையாளர்கள். குளிர்பானக் கடைக்காரர்கள், வங்கிப் பணியாளர் போன்றவர்கள் மனதில் சற்று பயத்துடனே இருப்பர்.
இதற்குக் காரணம், 8-ஆமிடத்தை குரு பார்ப்பதால் அதன் சம்பந்த காரகத்தைப் பெருக்குகிறார். ஆனால் என்றைக்குமே குருபார்வை பெறின், எந்த தோஷமும் நீங்குமென்பது ஜோதிடவிதி. இதனால் மகர ராசியாரின் அத்தனை பயங்களும் அர்த்தமற்றதாக மாறிவிடும். தூசுபோல பறந்து விடும். இதற்குப் போய் இத்தனை வருத்தப்பட்டோமே என நீங்களே சிரித்துக்கொள்வீர்கள்.
அரசு சம்பந்த வரி, வட்டி, கிஸ்தி என எல்லாவற்றையும் பாக்கியில்லாமல் கட்டிவிடுங்கள். இதனால் அரசுமூலம் ஏற்படும் அவமானத்திலிருந்து தப்பிக்கலாம். குரு பார்வை பெற்ற 8-ஆமிடம் ஆயுள் விருத்தியைக் குறிக்குமென்பது ஜோதிடவிதி. இந்த விதியின்மூலம் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவை தவிர்க்கப்படும் என்று அறிக.
9-ஆம் பார்வைப் பலன்
மகர ராசிக்கு 2-ஆமிடத்தில் அமர்ந்த குரு தனது 9-ஆம் பார்வையால் 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். இந்தவொரு பார்வைதான் நல்ல இடத்தில் பதிகிறது. பெருக்கத்துக்குரிய குரு 10-ஆமிடமான தொழில் ஸ்தானத் தைப் பார்க்கும்போது, தொழில் வளம் பெருகும். தொழில் செய்யுமிடம் விஸ்தீரண மாகும்; கொழிக்கும்.
தொழிலில் நீங்கள் கொண்டிருந்த லட்சியங்கள், எதிர்பார்த்த கௌரவம், கனாக்கண்ட பட்டங்கள், வெளிநாட்டுத் தொடர்புகள். அதீத முதலீடுகள், எதிர்கொண்டழைக்கும் விசேஷ அழைப்புகள், ஏகப்பட்ட மரியாதைகள், புகழ், நிறைவேறும் பேராசை, நீங்கள் சார்ந்த சபையில் தலைமைப் பதவி என எதைத்தான் குரு பகவான் தரமாட்டார்? அனைத்தையும் அபிரிமிதமாகத் தருவார். உங்கள் வாரிசுகளும் தொழிலில் மின்னுவர். தொழில் நம்பிக்கை பெருகும்.
நீங்கள் செய்யும் செயல், சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும். இதன்மூலம் அரசாங்க சன்மானம், பதவி, பட்டமும் தேடிவரும். சமையல் போட்டியில் பங்குபெறும் மகர ராசியார் வெற்றிபெற வாய்ப்புண்டு, அது அசைவ சமையல்மூலம் கிடைக்கும். தொழிலில் வெளிநாட்டுப் பயணங்கள் அமையும்.
நீங்கள் பிறந்த பூர்வீக இடம் உங்கள் செயலால் கௌரவமடையும்.
பொதுப் பலன்கள்
மகர ராசியினருக்கு 2-ஆமிடம் தனஸ்தானத்தில் குரு அமர்வது ஒரு நல்ல பாயின்ட். அவர் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பது ஒரு நல்ல மாற்றம் தான். ஆனாலும் குரு 6, 8-ஆமிடத்தைப் பார்த்து, ஒருவித பதட்டம், டென்ஷனை உண்டாக்கி, பிறகு சரிப்படுத்துவது சற்று பின்னடைவுதான். குரு பாதுகாப்பாகக் காப்பாற்றுவார் என்றாலும், முதலில் மனதில் ஏற்படும் பய நெருடலை ஜாதகர்தானே அனுபவிக்க வேண்டும்! பின் சரியாகிவிடும் தான். இதனால் மகர ராசியாருக்கு குருப்பெயர்ச்சி 50 சதவிகிதப் பலன் தரும்.
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மாறிமாறிப்பலன் தரும். உங்கள் தந்தையின் நிலைமை சற்று. சீர்கேடடையும். மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, தேற்றிக் கொண்டுவந்துவிடுவீர்கள். சிலருக்கு அரசு தண்டனை கிடைப்பதுபோல் இருந்து பின் சரியாகும். வீண்செலவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். ஒருசிலருக்கு மாங்கல்யம் காணாமல்போய், திரும்பக் கிடைத்துவிடும். சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் கடுமையான அவமானத்தை சந்தித்து, பின் அந்த நெருக்கடியிலிருந்து மீளக்கூடும். சில மருத்துவர்கள் கடும் பழிக்கு ஆளாகி, பின் தெளிவடைவர். சில விவசாயிகளுக்கு வைக்கோல் எரிந்து வீணாக நேரிடும். தேக்கு, சந்தனமரம் சட்ட விரோதமாக வெட்டிய வழக்கு பதிவாகக் கூடும். எனவே உத்திராட நட்சத்திரத்தார் வெகு கவனமாக இருத்தல் வேண்டும். குரு பார்வை காப்பாற்றும் எனும் அலட்சியம் கூடாது. அணைக்கட்டு அல்லது கடல் அருகிலுள்ள சிவனை வணங்கவும்.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
திருமணம் கூடிவரும். அதேநேரத்தில் மிகுந்த செலவும் ஏற்படும்.
அதன் பொருட்டு குடும்பத்தில் சில சஞ்சலம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர், சொன்ன பணத்தைக் கொடுக்காமல் சற்று காலம் தாழ்த்துவார். நீங்கள் சந்திக்கும்- பழகும் நபர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவர். வீடு விற்றபணம் கையில் வந்தவுடன், தயவுசெய்து ஏதாவது நல்ல வங்கி, தபால் துறையில் முதலீடு செய்துவிடவும். இல்லையெனில் வந்த பணம் மொத்தமாக குடும்பத்தில் செலவழிந்துவிடும். பின் வருத்தப்பட்டு பிரயோசனமில்லை. வாழ்க்கைத் துணை, ஏனோ நிறைய செலவு செய்வார். இதன் பொருட்டு வார்த்தை விரயம் ஏற்படும். நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தால், அது இழுத்துக்கொண்டே போகும். உங்கள் சொற்களிலுள்ள உண்மைத்தனம் உங்களுக்கு கஷ்டம் கொடுக்கும்; கவனம் தேவை. கடல், நீர்நிலைகள் அருகிலுள்ள அம்பாளை வணங்கவும்.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சியில் உங்களுக்கு வேலை, உழைப்பு, தொழில் பரபரப்பு என தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதுவொரு அலுப்பைத் தந்தாலும், மகிழ்ச்சியும் இருக்கும். தாய்மாமனின் உதவி இருக்கும். உங்களில் சிலருக்கு வீரதீரமாக கடன் வசூலிக்கும் திறமை ஏற்படுவதால், உங்கள் கடனை மட்டுமல்லாது, நிதி நிறுவனங்களின் கடனையும் கட்டாயமாக வசூலித்து திறமை காட்டுவீர்கள். இதில் சிலர் நிறைய சட்டப்புறம்பான செயல்களை பெரு விருப்பமுடன் செய்வீர்கள். இதே திறமையோடு உங்களைப் பெற்ற தாயிடமும் பேசி, வாங்கவேண்டியதை வாங்கிவிடுவீர்கள். சிலபல தொடர்புகள் உண்டாகக்கூடும். சிலர் வீட்டை நவீனமயமாக்கக் கூடும். அரசியல்வாதிகள் பணத்தை சரியாக எண்ணிப்பார்த்த பின்தான் தங்கள் திருவாயைத் திறந்து பதில் சொல்வார்கள். எந்த சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை பொங்கிப் பிரவகிக்கும். குகை போன்ற இடத்திலுள்ள சுப்பிரமணியரை வணங்குங்கள்.
பரிகாரங்கள்
தர்ம சாஸ்தாவை வணங்கவும். மகர ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால் சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்றுவது நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு நன்று. மருந்து மாத்திரைகள் தானம் நன்று. வயதான, கண் குறைபாடுடைய பெரியவருக்கு தேவையறிந்து உதவுங்கள். விபத்து, மரணம் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்த குடும்பத்தினருக்கு சரீர உதவி, பண உதவி செய்யவும். (குரு, உங்களின் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் இவ்விதம் கூறப்பட்டது).
"ஆறேறு சென்னி முடியாய் போற்றி' எனத் தொடங்கும் பஞ்ச புராணப் பாடல் பாராயணம் நன்று.