மகேஸ்வரனுக்கு மண்ணுலகில் அற்புதத் தலங்கள் நிறையவுண்டு. சின்னஞ்சிறு கிராமங்களில் கூட புராணகாலத் தொடர்புடைய கோவில்கள் பலவுண்டு. அவற்றை நாம் தேடிக் கண்டுபிடித்து தெரிந்துகொள்ளவேண்டும்.
அப்படி ஒரு தலம்தான் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்திலுள்ள மாதானம். இதன் புராணப் பெயர் மாகாளம் என்பதாகும். பெரிய நாயகி உடனுறை பசுபதீஸ்வரர் இங்கு கோவில் கொண்டுள்ளார்.
சூரபத்மன் மகன் பானுகோபான், இந்திராணியை எப்படியாவது அடைந்துவிட வேண்டுமென்ற நோக்கில் படைகளுடன் வரும்போது, இந்திரன், இந்திராணியை சிவகணங்களுள் ஒருவரான மாகாளரிடம் ஒப்படைத்துப் பாதுகாக்குமாறு கூறினார். மாகாளர் காழியம்பதியில் (சீர்காழி) உள்ள ஒரு நந்தவனத்தில் இருந்த அய்யனார் கோவிலில் அடைக்கலம் கொடுத்து தங்கவைத்தார்.
இந்திராணியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவந்த பானுகோபன் அவளது கையைப் பிடித்திழுத்தபோது, கோபம்கொண்ட மாகாளர் அவனது கையை வெட்டி வீசியெறிந்தார். அந்தக் கை விழுந்த இடம்தான் தற்போதுள்ள விழுந்தான்சேரி. (கைவிலாஞ்சேரி).
பானுகோபன் தன் படைகளுடன் பின்வாங்கினான். மாகாளர் இந்திராணியை இந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு தன் இருப்பிடமான மாகாளம் வந்தடைந்தார்.
பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை மகாவிஷ்ணு மோகினி வடிவில் தேவர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தபோது, அரக்கன் சுவர்பானு தேவர்களுடன் அமர்ந்து அமிர்தம் வாங்கி உண்டுவிட்டான். இதனைக்கண்ட மோகினி (விஷ்ணு) கரண்டியால் அரக்கனின் தலையை வெட்ட, தலை வேறு; உடல் வேறாகியது. அமிர்தம் உண்டதால் இறக்க வில்லை. அவர்களே ராகுவும் கேதுவும் ஆவார்கள். அவர்கள் இருவரும் திருமாலிடம் மன்னிப்பு கேட்க, திருமால் சிவனை வேண்டும்படி கூறினார்.
மாகாளரை வேண்ட, மாகாளர் அவர்களை காழியம்பதி செல்லுமாறு பணித்தார். ராகுவுக்கு பாம்பின் உடலையும், கேதுவுக்கு பாம்பின் தலையையும் அருளினார். பாம்பின் உடலைப் பெற்று ராகு காழியம்பதியில் ஆதி ராகுவாக தவம்செய்து நற்கதியடைந்தான். பாம்பின் தலையைப் பெற்ற கேது செம்பாம்பன்குடியில் தவமிருந்து நற்கதியடைந்தான்.
ராகு- கேதுவுக்கு சிவனருளால் உடலும் தலையும் பொருத்தப்பட்ட இடம்தான் மாகாளத்திலுள்ள பசுபதீஸ்வரர் ஆலயம்.
அப்பர் சுவாமிகள், "உஞ்சேனை மாகாளம்' எனத் தொடங்கும் பாடலில், "மஞ்சார் பொதிகையின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரவத்தும்' என்று வரும் வரியில், தேவார வைப்புத் தலமாகக் காட்டுகிறார்.
அருணகிரிநாதர் இத்தல முருகனைத் திருப்புகழில், "மாடேறும் ஈசர்தமக் கினியோனே- மாதானை ஆறுமுகப் பெருமானே...' என்று பாடியுள்ளார்.
இவ்வாலயம் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் கிடையாது.
ஆனால் முகலாயர் படையெடுப்பின்போது முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், இங்கிருந்த மூர்த்தங்களை இவ்வூரில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து மக்கள் பாதுகாத்து வைத்திருந்ததாகவும், பிற்காலத்தில் நூதன ஆலயம் கட்டி தற்சமயம் வழிபட்டுக் கொண்டிருப்பதாக வும் கூறுகிறார்கள்.
கோவிலின் முன்னால் முன்மண்டபம், அதில் பிரதோஷ நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் மேலே ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் ஆகியோர் அழகிய சிற்பங்களாய்க் காட்சிதருகின்ற னர். மகாமண்டபத்தின் உள்ளே பைரவர் சூரியன், சந்திரன், அகோர வீரபத்திரர், நால்வர் சந்நிதி அமைந்திருக்க, இடப்பக்கம் பெரியநாயகி அம்மன் தெற்குப் பார்த்து நான்கு திருக் கரங்களோடு காட்சிதருகிறாள். அர்த்தமண்டபத்தில் பிரதோஷ நாயகர் உற்சவர் சிலை உள்ளது.
கருவறையில் கிழக்கு நோக்கி வட்ட பீடத்தில் பானலிங்கமாய் அற்புத மாய்க் காட்சிதருகிறார் பசுபதீஸ்வரர். மேலே ஐந்து நிலைகளிளான அற்புத மான விமானம். அதில் சுவாமிகளின் சுதைச் சிற்பங்கள் அழகுற காட்சி தருகின்றன.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலை யார், பிரம்மா, சிவதுர்க்கை சந்நிதி கள் உள்ளன. வெளிப் பிராகாரத்தின் வலப் பக்கம் சிவஞானவொளி சித்தரின் அதிஷ்டானம் லிங்க வடிவில் அமைந் துள்ளது. அதன் முன்னால் பலிபீடம், நந்தி உள்ளது.
விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரக சந்நிதிகள் தனித்தனியே அமைந்துள் ளன.
இக்கோவிலின் முக்கிய திருவிழா தைப்பூசமும், சிவராத்திரியும் ஆகும். தைப்பூசத்தன்றும், பங்குனி உத்திரத்தன்றும் இவ்வாலயத்தில் இருக்கும் வள்ளி, தெய்வானையுடனான முருகன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சிதருவார்.
பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பால்காவடி, பழக்காவடி, மயில் காவடி என பல்வேறு காவடிகளை சுமந்துவந்தும், பால்குடம் எடுத்து வந்தும் நிறைவேற்றிக்கொள்கிறார் கள்.
தைப்பூசத்தன்று இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் பசுபதீஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சிதருவர். அன்னதான நிகழ்வும் நடைபெறுகிறது.
மகாசிவராத்திரியன்று நான்குகால பூஜை நடைபெறுகிறது, விடியவிடிய கோவில் நடை திறக்கப் பட்டு இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளையல் சாற்றும் வைபவம் நடை பெறும். இதில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள் அம்பாளுக்கு வளையல்சாற்றி வழி பட்டால் மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமையும். நிறைய பக்தர்களுக்கு அப்படி அமைந்திருப்ப தாகவும் இங்குவரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
ஆண்- பெண் இருபாலருக்கும் திருமணத்தடை என்பது மிகப்பெரிய கவலையான விஷயம். வாழ்க்கையில் திருமணமென்பது ஒரு முக்கியமான பந்தம். அது ஏதோ ஒருசில காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். இவ்வாலய பசுபதீஸ்வரருக்கு தேனாபிஷேகம் செய்து, செவ்வரளிப் பூக்கள் மற்றும் நாகலிங்கப் பூக்கள் சாற்றி வழிபாடு செய்தால் கிரகதோஷம் மற்றும் பிற காரணங்களால் தடைப்பட்டிருக்கும் திருமணங்கள் உடனடியாக நடப்பதாக இங்குவரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
செல்வங்களில் பெருஞ்செல்வம் குழந்தைகள்தான். குழந்தை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ தம்பதியினர் தவித்துவருகின்றனர். அம்பாள் பெரியநாயகி இருக்கி றாள்; வாருங்கள். அவளிடம் உங்கள் குறைகளைக் கூறி பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். அப்படி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் 16 நாட்கள் கழித்து சடங்குகள் முடிந்து இவ்வாலயத்திற்கு குழந்தையைக் கொண்டுவந்து பெயர் சூட்டும் வைபவத்தை ஆலயத்திலேயே நடத்துகிறார்கள். அதையே பிரார்த்தனையின் நேர்த்திக்கடனாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற வாசலை மிதிக்கக்கூடாதென்று நாம் அனைவருமே ஆசைப்படுகி றோம். ஆனால் சில காரணங்களால் நீதிமன்றத்துக்கும் காவல்நிலையத்திற்கும் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அத்தகையவர்கள் இவ்வாலயத்திற்கு வந்து மகேஸ்வரனை மனதார வேண்டினால் நமக்கு நியாயமான தீர்ப்பைப் பெற்றுத் தருவார். இங்கு பிரார்த்தனை செய்து எத்தனையோ வழக்குகள் நல்ல தீர்ப்பைப் பெற்றுள்ளன. இந்த ஆலயம்கூட நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் கட்டப்பட்டது என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
நாம் வேண்டுவதை உடனே அளிக்கும் மகேஸ்வரனைக் காண ஒருமுறை மாதானம் வரலாமே.... அவனருளைப் பெறலாமே!
காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரையிலும்; மாலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். பிரதோஷ தினங்களில் நேரம் மாறுபடும்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், பழையார் செல்லும் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகிலேயே கோவில் உள்ளது.