முற்காலத்தில் நாட்டையாண்ட மன்னர்கள் தம் மந்திரியிடம் நாட்டு நடப்பைப் பற்றி விசாரிக்கும்போது "மாதம் மும்மாரி பொழிகிறதா?' எனக் கேட்பார்களாம்! அங்ஙனம் மழை பெய்துவிட்டால் மன்னர் நிம்மதி அடைவார். நாட்டில் விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் அப்போதுதான் சிறக்கும். இதைத்தான் திருவள்ளுவர்-"நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு'எனக் கூறுகிறார்.

நாடும் வீடும் வளம் பெறக் காரணமாக இருக்கும் மழையை இளங்கோவடிகள்-

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலியுலகிற்கு அவன் அனிபோல்

Advertisment

மேல்நின்று தான் சுரத்த லான்'

என்றும்; மாணிக்க வாசகர்-

"முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய்

Advertisment

மழையேலோர்'

என்றும்; நக்கீரர்-

"நீள்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை'

எனவும்- இப்படி சங்கப்புலவர்கள், தேவார நால்வர்கள் என பலரும் மழையை வாழ்த்திப் பாடியுள்ளனர். கோடையின் வெப்பத்தைத் தணிக்கவும், மழை பொழியவும், நீர்வளம் சிறக்கவும் மழைக் கடவுளான வருணனை (சுக்கிர கிரகம்) வணங்கினால் நிச்சயம் பயன் கிட்டுமென்பது காலந்தொட்டு வரும் நம்பிக்கை. தமிழர்கள் ஐவகை நிலத்தில் நெய்தல் நிலத்திற்கு வருணனை தெய்வமாக வணங்கினார்கள். யாகத்தில் (ஹோமம்) அக்னியில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஹோம திரவியங்கள், ஆஹுதிப் பொருட்களை அதற்குரிய தேவர்களிடம் சேர்ப்பிப்பவர் அக்னி தேவர். ரிக் வேதத்தில் "அக்னிம் ஈனே புரோஹிதம் யக்ஞஸ்ய' எனத் துவங்கும் சூக்தத்தில் இது கூறப்பட்டுள்ளது. அக்னி தான் யாகத்தின் புரோகிதர். அந்த அக்னிக்கு ஆற்றலையளிப்பது பிராணன். ஆஹுதிப் பொருட்களாக இருப்பதும் பிராணன். உலகின் இயக்கத்திற்கான பிராண சக்தியை அளிப்பவர் சூரிய பகவான். சௌன மகரிஷி கருத்துப்படி புவி அக்னி, பர அக்னி, நடு அக்னி என்று மூன்றுவகையான அக்னி உண்டு. இதில் புவி அக்னியால்தான் நாம் மழையைப் பெறமுடியும். பிரச்ன உபநிடதத்தில், "யதா த்வமபிவர்ஷஸ்யதேமேப்ராண தே ப்ரஜாஆனந்தரூபாஸ்திஷ்ட்டந்திகாமாயான்னம் பவிஷ்யதீதி' (10)"பிராணனே மழையாகப் பொழியும்போது எல்லா உயிரினங்களும் இனி தமக்கு உணவு கிடைக்குமென்கிற நம்பிக்கையில் மகிழ்ச்சியடைகின்றன' எனும் பொருளில் மழையைப் பற்றிய ஒரு சுலோகம் வருகிறது.

வாழ்க்கைக்கு ஆதாரமான நீரை நிலத்துக்குத் தந்து மழைதான் வளம்சேர்க்கிறது. மழையின் நுண் நீர்த்துளிகள் தூறலாகவும், மழை நீராகவும், அதுவே உறைந்த நிலையில் பனியாகவும், சில இடங்களில் பனிக்கட்டிகளாகவும் நிலப் பரப்புக்கு வருகிறது. மழையால் தாவரங்கள், விலங்கினங்கள், புழு பூச்சிகள் முதலியன பயன்பெறுகின்றன. மழையைக் கடவுளாகவும் வள்ளலாகவும் மனிதன் மதித்தான். மழையே மண்ணிற்குத் தாய்ப்பால் போன்றது.

சங்க காலத்தில் மலைவாழ் விவசாயிகள் தம் நிலத்தில் விளைச்சல் பெருக தேவைக்கேற்ப போதிய அளவு பொழியவும், பெரும் மழையால் விவசாயம் பாதிக்காமல் இருக்கவும் கடவுளை வேண்டுவார்களாம். இதுபற்றி-

"மலைவான் கொள்கென உயிர்பலி தூஉய்

மாரியான்று மழைமேக் குயர்கென

கடவுட் பேணிய குறவர் மாக்கள்

பொய்கண் மாறி உவகையர் சாரற்

புனத்தினை அயிலும் நாட'

என ஒரு பாடல் புறநானூற்றில் வருகிறது.

மழை பருவகாலத்தில் சரியாகப் பெய்யாததற்கு இன்றைக்கு அதிகளவு பேசப்படும் சொல் "பருவநிலை மாற்றம்' அல்லது "தட்பவெப்ப நிலை மாறுதல்' என்பதே. கலியுகமான இன்றைய காலத்தில்தான் குறிப்பிட்ட காலத்தில் மழை பெய்யவில்லை என எண்ண வேண்டாம். கிருதயுகத்தில் உரோமபதன் ஆண்ட அங்கநாட்டில் மழை யில்லாமல் பஞ்சம் ஏற்பட, அதை எங்ஙனம் சீர்செய்வது என உரோமபதன் ரிஷிகளையும் முனிவர்களையும் அழைத்து ஆலோசனை செய்தான்.

guru

அவர்கள் "சிறந்த தவசீலர் ஒருவரின் காலடி நம் நாட்டில் பட்டால் மழைபெய்ய வாய்ப்புண்டு' எனக்கூற, "அத்தகைய தவசீலர் யார்?' என அரசன் வினவ, "விபாண்டக மகரிஷியின் தவப்புதல்வனான கலைக்கோட்டு முனிவர்' எனக் கூறினார்கள். இந்த நிகழ்வைப் பற்றி கம்பர்-

"அன்னவன் தான் புரந்தளிக்கும் திருநாட்டில்

நெடுங்காலம் அளவு அதுவாக

மின்னி எழும் முகிலின்றி வெந்துயரம்

பெருகுதலும் வேந்தன் நல்நூல்

மன்னும் முனிவரை அழைத்து மாதானம்

கொடுக்கினும் வான் வழங்காது ஆகப்

பின்னும் முனிவரர்க் கேட்பக் கலைக்கோட்டு

முனிவரின் வான் பிலிற்றும் என்றார்' (216)

என கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் பாடியுள்ளார். குற்றமில்லாத அருங்குணம் கொண்ட சிறந்த தவயோகியான இவரை தமிழில் கலைக்கோட்டு முனிவர் என்றும், வடமொழியில் ருஷ்யசிருங்க (ரிஷ்ய) மகரிஷி என்றும் அழைப்பர். இவர் தவம்புரிந்த ஆசிரமம் இருந்த இடம் இன்றைய சிருங்கேரி மலைப்பகுதியாகும். ரிஷ்ய சிருங்கர் திவ்ய தேஜஸில் கலந்த இடத்தில் சிருங்கேச்வராலயம் உள்ளது. ரிஷ்யசிருங்கர் வாழ்ந்த இடம் என்பதே காலப்போக்கில் சிருங்கேரி என மாறியது. கலைக்கோட்டு முனிவர் அங்க நாட்டின் எல்லையில் கால் பதித்ததும் மழை பெய்யத் தொடங்கியது என்பதை கம்பர் "வளநகர் முனிவரன் வருமுன்' எனப் புகழ்ந்து பாடுகிறார்.

கோசல நாட்டு ஆண்கள் தம் மனைவியர் தவிர வேறு பெண்கள்பால் மனம் செலுத்த வில்லை.

அதேபோன்று பெண்கள் தத்தம் கணவரைத் தவிர பிற ஆண்களிடம் மனம் செலுத்தாத கற்புடைய காரிகையராக இருந்தனர். இதுவே அந்த நாட்டின் மழை வளத்திற்குக் காரணம்.

".....மாதரார்

அற்பில் நின்றன அறங்கள் அன்னவர்

கற்பில் நின்றது காலமாரியே'

என நாட்டுப் படலத்தில் ஒரு பாடல் வருகிறது. இப்படி சான்றோர், கற்புடைய பெண்கள் வாழ்வதால் மழை பொழிகிறது என்று சமூகக் காரணங்களைக் கூறலாம். இதை விவேக சிந்தாமணியும்,

"வேதமோதிய வேதியர்க் கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக் கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க் கோர் மழை

மாத மூன்று மழையெனப் பெய்யுமே'

என்று எடுத்துக்காட்டுகிறது.

அறிவியல்ரீதியாக, நீர் சுழற்சியால்தான் பூமிக்கு மழை வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

"பவ்வமீமிசைப் பகற்கதிர் பரப்பிஎல்லை தருநன் பல்கதிர் பரப்பி அருவி வானம் கடற்கோள் மறப்பவும்'

என்னும் பொருநராற்றுப்படை (பத்துப்பாட்டில் இரண்டாம் பாட்டு) பாடலின் வரியில், கடல்நீர்மீது சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி நீரை மெல்ல விண்ணி டத்தே எடுத்துச்செல்கிறது என்று உவமையில் வருகிறது. பத்துப்பாட்டினுள் ஏழாவது பாடலான நெடுநல் வாடை, "பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென' என்னும் வரியில் "பொய்க்காத வானம் புத்தம் புதிய மழையாகத் தருகிறது' என்று கூறுகிறது. மேலும் "புதுப்பெயல்' என்பது கடல்நீரின் உப்புத்தன்மை நீங்கப்பெற்று நல்ல நீராகக் கிடைக்கிறது என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம் சூரிய வெப்பத்தால் கடல்நீரானது ஆவியாகிறது. மறுபுறம் மரங்களின்மூலம் நீர் ஆவியாகிறது. நிலத்தடி நீரை மரங்கள் வேர்களின்மூலம் உறிஞ்சி, தேவையான நீரை எடுத்துக்கொண்டு மீதியை இலைகள் மூலமாக நீராவியாக வானத்துக்குச் செல்ல உதவுகிறது. இதன்மூலம் நமக்கு நல்ல ஆக்சிஜன் கிடைக்கிறது.

பூமியிலிருந்து வான்நோக்கி சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம்வரை படர்ந்திருக்கும் ஓசோன் வாயுப் படலம் (03 ), சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் புறஊதாக்கதிர்களை (மய) தடுத்து நிறுத்துகிறது. இந்த புறஊதாக் கதிர்கள் பூமியின்மேல் விழுந்தால் மனிதன் மட்டுமின்றி மரம், செடி, விலங்கினங்கள் பெருமளவுக்கு பாதிக்கும். அதிலிருந்து பூமியைப் பாதுகாக்கும் கவசமாக ஓசோன் படலம் செயல்படுகிறது. பூமி வெப்பமயமாவதாலும், வேறுசில வேதிப்பொருட்களின் வாயுக்களாலும் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஓசோன் படலத்தில் ஓட்டை உண்டாகி, ஒருபுறம் புறஊதாக்கதிர்களின் தாக்கமும் மறுபுறம் மழையின்மையும் ஏற்படுகிறது. எங்கும் பசுமை நிலவவும், மழை மேகங்கள் நல்ல மழையைப் பொழியவும் மரங்கள் அவசியம் என சமூக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பருவமழை குறித்த காலத்தில் பெய்யாமைக்கு இதுவே அடிப்படைக் காரணமாக சொல்லப்படுகிறது.

நம் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்கிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடமேற்குப் பருவ மழையும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை குளிர்கால மழையும், மார்ச் முதல் மே வரை கோடைக்கால மழையும் பெய்யும் என்பது தொன்றுத்தொட்டு வரும் பருவநிலையாகும். தற்சமயம் பருவ நிலை மாற்றத்தால் மழையின் அளவு குறைந்து வருகிறது. அறிவியில்ரீதியாக பெய்ய நாம் முயற்சி எடுத்தாலும், அதற்கு இறைவனின் அருள் இருந்தால்தான் நிச்சயம் நல்ல பலன் கிட்டும்.

நீர் வளத்தை ஏற்படுத்தும் வருண பகவான், மேற்கு திசைக்கு தெய்வமாவார். இவர் முதலையை வாகனமாகக் கொண்டவர். இவரை போற்றும்

"ஓம் ஜலபிம்பாய வித்மஹே

நீல் புருஷாய தீமஹி

தந்நோ வருணப் ப்ரசோதயாத்'

என்னும் வருண காயத்திரி மந்திரத்தின் மூலமும், ரிக், யஜுர் வேதத்தில் சொல்லப் பட்ட வருண ஜெப மந்திரத்தையும் துதித் தால் நல்ல மழைபெய்யுமென்பது நம்பிக்கை.

வியாச பகவான் எழுதிய மகாபாரதத் தில் உள்ள "விராட பர்வத்தை' பாராய ணம் செய்யும்போது, அதிலுள்ள மந்திராட் சரங்கள் பௌதிக பிரபஞ்சத்தை மாற்றும் சக்தியுடையது. அதேபோன்று விராட பர்வத்தைப் பாராயணம் செய்தால் வியாதிகள் குணமடையும்; பயம் விலகும்; கவலைகள் பறந்தோடும் என்பது ஐதீகம். பஞ்சபாண்ட வர்கள் இதனால் பலன் பெற்றார்கள்.

இதேபோன்று திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையில் மழையை வேண்டிப் பாடிய மழைப் பதிகங்களை (ஏழு பதிகங்கள்) மேகராகக்குறிஞ்சி ராகத்தில் பாடினாலும், திருப்பாவையில் ஆண்டாள் பாடிய "ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கை கரவேல்' என்னும் பாடலைப் பாடினாலும் வருணபகவானின் அருள் நிச்சயம் உண்டு.

அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் ருத்ர மந்திரத்தில் "நமோ வர்ஷ்யாய ச அவர்ஷ்யாயச' (மழையாக இருப்பவன்), "நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச' (மேகமாகவும் மின்னலாகவும் இருப்பவன்), "நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச' (காற்றுடன்கூடிய மழையாக இருப்பவன்) என வருவதால், மழையை வேண்டி ருத்ர பாராயணம்,

ஜெபம், ஹோமம் செய்தால் சிவபெருமானின் அருளால், வருண பகவான் நமக்கு நல்ல மழையைத் தருவார்.

மழைநீரை வெறும் நீராகப் பார்க்காமல், இறைவனின் அம்சமாகக் கருதி மழைநீரை வீணாக்காமல் பாதுகாத்தல் இன்றைய சூழ்நிலைக்கு மிக அவசியம்.