பட்டினத்தார் குரு பூஜை 27-7-2018
"பக்தர்களால் உமக்கு ஏதேனும் பலன் உண்டா?' என சிவபெருமானிடம், "பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு' எனத் தொடங்கும் பாடலின் மூலம் கேள்வி கேட்கிறார் பட்டினத்தார். இறைவனைத் தொழுவதால் பக்தர்களுக்குதான் நன்மை. அந்த இறைவனுக்கு பக்தர்களால் ஏதேனும் நன்மையுண்டா என்பதே அவரது கேள்வி.
செல்வத்திற்கு அதிபதியான குபேரனே பட்டினத்தார் வடிவில் காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றினார். இவர் இயற்றிய சுமார் 200 பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. பதினொன்றாம் திருமுறை பாடிய திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், நக்கீரதேவர், நம்பியாண்டார் நம்பி போன்றவர்களின் வரிசையில் பட்டினத்தாரும் ஒருவர். பன்னிரு திருமுறைகளில் சிவபெருமான், விநாயகர், முருகன் ஆகிய மூன்று தெய்வங்களை ஒருங்கே போற்றிப்பாடியது பதினொன்றாம் திருமுறையில் மட்டுமே.
திருவெண்காடர், பட்டினத்துப் பிள்ளை யார், பட்டினத்தடிகள் என அழைக்கப்படும் பட்டினத்தார், திருமுறையில் "கோவில் நான்மணி மாலை', "திருவிடைமருதூர் மும்மணிக்கோவை' முதலான ஐந்து பிரபந்தங்களை செந்தமிழில் அருளினார். இவரது காலம் ஏறத்தாழ கி.பி. பத்தாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.
அளகாபுரி எனும் செல்வச்செழிப்புடைய நாட்டின் வேந்தனும், நிதிக்கு அதிபதியுமான குபேரன் ஒருநாள் திருக்கயிலாய மலையில் உமையம்மையுடன் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது, பூலோகத்திலிருக்கும் சிவத்தலங்களை வழிபட வேண்டும் என்னும் தனது ஆவலை இறைவனிடம் தெரிவித்து அருள் வேண்டி நின்றான். மற்ற தேவர்களுக்கு இல்லாத சிறப்பு குபேரனுக்கு மட்டும் உண்டு. அதாவது மதுரைக்கு அரசியான மீனாட்சியைத் திருமணம் புரிய சிவபெருமான் வந்தபோது, அவரைத் தொட்டு அரச அலங்காரத் தைச் செய்த பெருமை குபேரனுக்கு உண்டு.
சிவபெருமானின் அருளோடு பூலோகத்தில் சிவத்தலங்களை தரிசிப்பதற்காக, சோழ வளநாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) வாணிபத்தொழில் செய்யும் நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்) குலத்தில் சிவநேசர், ஞானகலாம்பிகை தம்பதிக்கு இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தான். திருவெண்காடு சிவபெருமானின் அருளால் ஞானக்குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் திருவெண்காடர் எனப் பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்தனர்.
திருவெண்காடர் தமது ஐந்து வயதில் தந்தையை இழந்ததால் தாயாரின் அர வணைப்பில் வளர்ந்தார். இளம்வயதில் கல்வியைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார். இளம்வயதிலேயே இறையுணர்வோடு வளர்ந்த திருவெண்காடர் சிவனடியார்களுக்கு வேண்டும் உதவிகளையும், திருப்பணிகளையும் செய்து வந்தார். உரிய பருவத்தை அடைந்த வேளையில் சிவகலை என்னும் பெண்ணை மணந்து, இல்லறத்தையும் வாணிபத்தையும் இனிதே நடத்தி வந்தார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த திருவெண்காடர் தனக்கு திருஞானத்தை உபதேசம் செய்ய தகுந்த ஞானாசிரியர் இல்லையே என ஏங்கியிருக்கும் வேளையில், வயதான ஒரு வேதியர் திருவெண்காடர் முன்பு எதிர்ப்பட்டு, அவரிடம் சிவபெருமானின் ஆணைப்படி ஒரு சம்புடத்தை (பூஜைக்கு உதவும் சிறிய பேழை) கொடுத்து, சிவதீட்சை தந்து உபதேசம் செய்தார். அந்த சம்புடத்தில் முற்பிறவியில் குபேரனாக இருந்தபோது தினமும் பூஜித்த சிவலிங்கம் இருந்தது.
திருவெண்காடர்- சிவகலை தம்பதி நீண்ட நாட்களாக மகப்பேறு இன்மையால் மிகுந்த கவலையுற்றிருந்தனர்.
இந்நிலையில் திருவிடை மருதூரில் சிவசருமன்- சுசீலை தம்பதியர் வறுமையில் வாடினர். தங்களின் வறுமை யைப் போக்குமாறு திரு விடைமருதூர் மகாலிங்க சிவபெருமானை வேண்டினர்.
சிவசருமனின் கனவில் சிவபெருமான் தோன்றி, "நாளை தீர்த்தக்கரைக்கு அருகேயுள்ள வில்வ மரத்தடியில் ஒரு குழந்தை இருக்கும். அக்குழந்தையை திருவெண்காட்டில் மகப்பேறின்றி வாழும் திருவெண்காடரிடம் கொடுத்து, எடைக்கு எடை தங்கம் பெற்று உன் வறுமையைப் போக்கிக் கொள்' என அருளினார். திருவெண்காடர் கனவிலும் தோன்றிய சிவபெருமான், சிவசருமன் தரும் குழந்தையைப் பெற்றுக்கொண்டு பொருளுதவி செய்யுமாறு கூறி மறைந்தார்.
மறுநாள் அவ்வணமே எல்லாம் நடந்தது.
சிவசருமர்- சுசீலை தம்பதியர் பெருஞ் செல்வம் பெற்று மகிழ்ந்தனர். இறைவனின் திருவருளால் கிடைத்த குழந்தைக்கு திருவெண்காடர்- சிவகலை தம்பதியர் மருதப்பிரான் (மருதவாணர்) எனப் பெயரிட்டு வளர்ந்து வந்தனர். இளம்வயதிலேயே மருதவாணர் சிவபக்தியின் சிறந்தவராய்த் திகழ்ந்தார். மருதவாணருக்குப் பதினாறு வயதானபோது அவரிடம் தந்தை திருவெண்காடர், "திரைகடலோடி திரவியம் தேடு என்பதற்கேற்ப, நீ கடல்கடந்து சென்று பொருளீட்டி வருவாய்' எனப் பணித்தார்.
கப்பலேறி வெளிநாடு சென்று வாணிபம் செய்ய, அதே பகுதியில் வாழ்ந்த வணிகர்களு டன் சென்றார் மருதவாணர். சில மாதங்கள் கழித்து அனைவரும் தாங்கள் ஈட்டிய பொருட்களுடன் ஊர் திரும்பினர். மருத வாணரோ எருமுட்டை (வரட்டி), நெல்பொரி, தவிடு போன்றவற்றை மூட்டை மூட்டையாக வாங்கிக்கொண்டு தாயகம் திரும்பினார். இதை ஏனைய வியாபாரிகள் திருவெண்காடரிடம் சொல்லி ஏளனம் செய்தனர். இதனால் சினந்த திருவெண்காடர், வெளிநாட்டிலிருந்து பொன், பொருளைச் சேர்க்காமல் எருமுட்டையும் தவிட்டையும் வாங்கி வந்த மகனைப் பலவாறு கடிந்துகொண்டார். கோபத்தில் மூட்டையைப் பிரித்து வீச, எருமுட்டைக்குள் மாணிக்கக் கற்களும், தவிட்டு மூட்டைகளில் தங்கக்காசுகளும் இருந்தன. கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற இவ்வாறு மறைத்துக்கொண்டுவந்த மருதவாணரின் வாணிபத் திறமையைக் கண்டு திருவெண்காடர் மகிழ்ந்தார்.
அரிய செயலைச் செய்த மகனைப் பாராட்டுவதற்காகத் தேடிய வேளையில், மருதவாணர் கொடுத்ததாக ஒரு பெட்டியை திருவெண் காடரின் மனைவி சிவகலை கணவரிடம் கொடுத்தார். திருவெண்காடர் பெருத்த ஆவலுடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் காதற்ற (துளையில்லாத) ஓர் ஊசியும், ஓலையும் இருந்தன. அந்த ஓலையில், "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே' என எழுதியிருந்தது. காது இல்லாத ஊசி எப்படிப் பயன்படாதோ அதே போன்று நிலையில்லாத இவ்வுலக வாழ்வில் பொன்னும் பொருளும் எந்தப் பயனும் தராது என்பதை உணர்த்தும் வண்ணம் மருதவாணர் பெட்டியைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார்.
ஓலையிலிருந்த வாசகத்தைப் படித்த திருவெண்காடர் மெய்ஞ்ஞானம் பெற்றார். தம் வளர்ப்பு மகன் மருதவாணன் சிவபெருமானின் வடிவமே என்பதை உணர்ந்தார். தக்க சமயத்தில் தம்மை தடுத்தாட்கொண்ட சிவ பெருமானை நன்றியுடன் வணங்கினார். தன் குபேர செல்வத்தை அந்த நொடியே துறந்து, பட்டாடை, தங்க, வைர ஆபரணங்களைக் களைந்து, இடுப்பில் ஒரே ஒரு துணியை அணிந்துகொண்டு துறவு பூண்டார். தன் தாயார், மனைவி ஆகியோருக்குத் தக்க ஆறுதலைச் சொல்லிவிட்டு, கணக்குப் பிள்ளையான நாகூர் சேந்தனாரை அழைத்து, "எல்லா செல்வங்களையும் ஏழை எளியோருக்கு வழங்கு' எனக் கூறினார். (இதேபோன்றுதான் உலகின் பல பகுதிகளை ஆண்ட மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 323-ல் இறக்கும் தறுவாயில் எல்லா செல்வங்களையும் ஏழை எளியோருக்கு தானம் செய்யுமாறு உத்தரவிட்டான்.)
சில ஆண்டுகளுக்குப் பின்பு மரணமடைந்த தாயாருக்கு பச்சை வாழைமட்டைகளைக் கொண்டு தகனக்கிரியை செய்தார். அந்த சமயத்தில், "ஐயிரண்டு திங்களாய் அங்க மெலாம்' எனத் தொடங்கும் பாடலில்,
"முன்னையிட்ட தீ முப்புரத்திலேபின்னையிட்ட தீ தென்னிலங்கையில்லே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலேயானுமிட்ட தீ மூள்கமூள்கவே' (153)
என்று பாட, பச்சை வாழைமட்டையில் தீயிடாமலே தீயுண்டாகி தாயாரின் பூதவுடலை எரித்தது. தாயாருக்கு வேண்டிய ஈமச்சடங்குகளைச் செய்தபின்னர் பல சிவத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் போற்றிப் பதிகங்கள் பாடினார்.
வடநாட்டிலுள்ள சிவத்தலங்களை தரிசனம் செய்யச் சென்றபோது, உஜ்ஜயினிக்கு அருகே இருந்த காட்டில் விநாயகர் கோவிலில் இரவு தங்கி மெய்ம்மறந்து தியானம் செய்துகொண்டி ருந்தார்.
அந்த சமயத்தில் அப்பகுதியை ஆண்ட சிற்றரசனின் அரண்மனையில் கொள்ளை யடித்த திருடர்கள், விலையுயர்ந்த நவரத்தினமாலையை விநாயகர் சிலைமீது வீச, அது தவறி தியானத்திலிருந்த பட்டினத்தார் கழுத் தில் விழுந்தது. மறுநாள் அரண்மனையில் களவு நடந்ததையறிந்த அரசன் திருடனைப் பிடித்து வருமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் நவரத்தினமாலையுடன் அமர்ந்திருந்த பட்டினத்தாரை திருடன் என நினைத்து அரசனிடம் சொல்ல, அவனும் தீர விசாரிக்காமல் பட்டினத் தாரைக் கழுமரமேற்றிக் கொல்லுமாறு ஆணையிட்டான். கழுமரத்தில் நிறுத்திய வேளையில்தான் பட்டினத்தார் தியானத்திலிருந்து இயல்பு நிலைக்கு வந்தார். பின்னர் நடந்தவற்றை அறிந்தார்.
அந்த சமயத்தில்-
"என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன்செயல் என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த
பின்செய்த வினை யாதொன்றும் இல்லை பிறப் பதற்கு
முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே' (105)
என்று பட்டினத்தார் இறைவனை நோக்கிப் பாட, கழுமரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை கேள்விப்பட்ட அரசன் ஓடிவந்து பட்டினத்தார் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
தமக்குத் தகுந்த குருநாதர் கிடைத்துவிட்டார் என்கிற மகிழ்ச்சியில் உடனே தன் அரசப் பதவியைத் துறந்து பட்டினத்தாரின் சீடராகி துறவறம் மேற்கொண்டான். அந்த மன்னனே பத்ரகிரியார். இந்த நிகழ்ச்சியைத் தாயுமானவ சுவாமிகள்-
"ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வப்
பட்டினத்தார் பத்ரகிரியார் பண்புணர்வது எந்நாளோ?'
என இருவரையையும் புகழ்ந்து பாடுகிறார்.
பத்ரகிரியாரை திருவிடைமருதூருக்குச் செல்லுமாறு கூறிய பட்டினத்தார், சில சிவத்தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்துவிட்டு இறுதியில் இடைமருதூர் எனப்படும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலுக்கு வந்தார்.
மகாலிங்க சுவாமி அருளால் பத்ரகிரியார் இறைவனின் ஜோதியில் கலந்துவிட்டார். தம் சீடர் முக்திபெற்றுவிட, தமக்கு எப்பொழுது முக்தி என சிவபெருமானிடம் வினவ, "கரும்பு தித்திக்கும் இடமே முக்தி சித்திக்கும்' என அசரீரி எழுந்தது. பின்னர் பட்டினத்தார் பல இடங்களுக்குச் சென்று பாடல்களைப் பாடியபடியே சென்னை திருவொற்றியூருக்கு வந்தார். அவ்வூரே அவருக்கு ஒரு சிவலோகம்போல் தோன்றியது.
"வாவியெலாந் தீர்த்தம் மணலெலாம் வெண்ணீறு
காவணங்க ளெல்லாங் கணநாதர்- பூவுலகில்
ஈதுசிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதுந் திருவொற்றியூர்' (160)
என்று பட்டினத்தார் போற்றுகிறார்.
திருவொற்றியூர் வந்தபோதுதான் அவர் கைலிலிருந்த கரும்பு இனித்தது. தனக்கு முக்தி தரும் இடம் இதுவே என்றெண்ணி பக்திப்பரவசத்துடன் பாடினார்.
திருவொற்றியூர் வங்கக்கடற்கரை மணலில் விளையாடிக்கொண்டியிருந்த சிறுவர்களுடன் தாமும் சேர்ந்து விளையாடினார். சிறுவர்களை மணலில் பள்ளம்தோண்டச் செய்து, அதில் அமர்ந்து மூடச்சொன்னார். அவர்கள் மூடியதும் வேறொரு இடத்தில் தோன்றினார்.
மறுபடியும் மூடச்சொன்னார். இப்படியே விளையாடி அவர் மீண்டும் தோன்றவில்லை. கடைசியாக அவரை மூடிய இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. இதைக்கேட்டு ஊர் மக்கள் வியப்படைந்து சிவலிங்கத்தை பக்தியுடன் தொழுதனர். இப்படியாக ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். பட்டினத்தார் ஆலயம் திருவொற்றியூர் குப்பம் சாலையில் அமைந்துள்ளது.
பரம்பொருளான இறைவனை எப்படி அடையமுடியும் என்கிற தத்துவ சித்தாந்தத்தை பாமர மக்களிடையே நன்கு புரியும் வண்ணம் எளிய நடையில் தம்முடைய பாடல்கள்மூலம் விளக்கினார் பட்டினத்தார்.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை களைத் துறந்து இறைவனின் திருவடிகளிலேயே பற்று வைக்கவேண்டும் என்பதை-
"வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தான்
ஆதித்தன் சந்திரன்போலே வெளிச்சம தாம் பொழுது
காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே'
எனப்பாடி, அவரவர் செய்த புண்ணிய, பாவங்களின் விளைவுகள் மட்டுமே உடன் வரும் என்னும் தத்துவத்தை உபதேசித்தார்.