னித சமூகம் இதுவரை கண்டிராத- அனுபவத்திராத இன்னல் களையெல்லாம் இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஏன்? கூட்டுக்குடும்பம் சிதைந்தது, உறவுகளின் தொடர்பு அறுந்தது! குடும்பம் என்பது ஒரு சின்னக் கூடுபோலாகிவிட்டது. கூட்டுக்குடும்பத்தில் மாமா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, அண்ணன், அண்ணி, குழந்தைகள், தாத்தா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப்பாட்டி என்று, தேர்தலுக்குத் தேவையான ஒரு வாக்காளர் பட்டியலே ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது.

இவ்வாறாக இருந்த குடும்பங்களில் ஒருவர் அன்பாக இருப்பார்; ஒருவர் கண்டிப்புடன் இருப்பார்; ஒருவர் கருணையுடன் இருப்பார். குடும்பத்தில் உள்ள எந்தக் குழந்தையாவது ஒரு சிறுதவறு செய்துவிட்டால்கூட, அந்தக் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் அந்தக் குழந்தையிடம் "கண்ணு.... இப்படி செய்யக் கூடாது சாமி. நம்ம மீசைக்கார மாமாவுக்குத் தெரிஞ்சா வைக்கமாட்டான்' என்று சொல்லி− தவறைத் திருத்த உதவி செய்வார்கள். அது மட்டுமல்ல; "மாமா ரொம்பக் கோபக்காரன். தப்பு பண்ணுனா சும்மா விடமாட்டான்' என்று பலவாறு சொல்லி− குழந்தைகளை ஒரு நேரான, சரியான பாதையில் பயணிக்க வழிவகுத்துக் கொடுத்த காலமென்று ஒன்று இருந்தது. இன்று அது இருக்கிறதா? எனது மகளைக் கல்லூரியில் விடுவதற் காக பைக்கில் அழைத்துச்சென்று கொண்டி ருந்தேன். வழியில் ஒரு சிக்னலி−ல் நிற்கவேண்டி யிருந்தது. எத்தனைவிதமான வண்டிகள். அதில் எத்தனை விதமான மனிதர்கள்! இளைய சமுதாயம் வேலைக்காக ஓடுகிறது. பலர் வேலைதேடி ஓடுகிறார் கள். சிலர் தங்கள் குழந்தை களைப் பள்ளியில் விடு வதற்குச் செல்கின்றனர்.

இதுபோன்று காலை ஏழு மணியிலி−ருந்து ஒவ்வொருவரையும் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ஒருவித இறுக்கத்தோடு ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

நான் என் மகளிடம் சொன்னேன். "இங்கு ஒருவர் முகத்திலாவது மகிழ்ச்சி இருக்கிறதா? ஒரு சின்ன சிரிப்பாவது தெரிகிறதா? எல்லா ரும் ஒரு கடுமையான மன அழுத்தத்து டன் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனந்தத் தையும் மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டு இவர்கள் எதற்காக இப்படி ஓடிக்கொண்டி ருக்கின்றனர்?' இதைக்கேட்ட என் மகள் சிரித்தாள். இது சிரிக்கவேண்டிய விஷயமல்ல. நானும் சிரித்தவாறே என் மகளைக் கல்லூரியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

Advertisment

s

இன்றைய சூழல் இப்படித்தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? ஒரு குடும்பத்தில் இரண்டு பேர்தான் இருக்கிறார் கள். மிகச்சிலரே கூட்டுக் குடும்பத்தில் இருக் கின்றனர். ஆனாலும் வீட்டிற்குள் ஒருவருக் கொருவர் பேசிக்கொள்வதில்லை.

ஏனென்றால், ஒவ்வொரு குடும்பத்திலும் இன்று பேய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் "பேய் பிடிச்சி ருக்கு' என்று சொல்வார்கள். ஆனால், இப்போ தெல்லாம் ஒவ்வொருவரும் வலுக்கட்டாய மாகப் பேயைப் பிடித்துக்கொண்டிருக்கி றார்கள். ஆம்; ஒவ்வொருவரும் ஆண்ட்ராய்டு எனும் பேயைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியைத் தொலைத்துக்கொண்டிருக் கின்றனர்.

Advertisment

ஒவ்வொருவரும் தனித்தனியே பேயோடு... இதனால் மகிழ்ச்சி தொலைந்தது; மனம் சிதைந்தது; பதட்டம் நுழைந்தது. இதனால் உடல் எனும் கூடு நசிந்தது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? நம்மிடம் இறைபக்தி குறைந்ததே காரணம். அந்தக் காலத்தில் "தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும்' என்று சொல்லி− ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருந்தனர். (நல்ல விஷயத்திற்காக).

இன்று பலரிடம் பக்தி தொலைந்தது... பயமும் தொலைந்தது. வன்முறை தலை விரித்தாடுகிறது. பக்தி குறைய எது காரணம்? பாசம் எனும் சுயம்நலம் மட்டுமே காரணம். பக்தி குறைய பாசம் காரணமா? பாசம், அன்பு, கருணை- இதில் எது முக்கியம்? பாசம் என்பது எது? ஒரு தாய் தன் மகனிடம் காட்டுவது; ஒரு அக்கா தன் தம்பியிடம் காட்டுவது; பாட்டி பேரனிடம் காட்டுவது; தாத்தா பேத்தியிடம் காட்டும் பாசம்- இப்படி பாசம் செயல்படும் விதத்தை சொல்லி−க் கொண்டே போகலாம்.

ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டுள்ள பாசத்தைப்போல் மற்ற பிள்ளைகளிடம் அது இருக்காது. ஏனென்றால் பாசம் ஒரு குறுகிய வட்டத்திற்குட்பட்டது. ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையிடம் கொண்டுள்ள பாசத்தைப்போல் வேறு பிள்ளையிடம் பாசம் கொண்டிருக்கமாட்டாள். ஆனால் அன்பு அப்படிப்பட்டதல்ல.

தன் பிள்ளையிடம் பாசத்தைக் காண்பிக்கும் தாய், ஒரு நாயிடத்திலோ, பூனையிடத்திலோ அல்லது பிற விலங்கு களிடமோ தனது பாசத்தை வெளிப்படுத்தும் போது அது அன்பாக மாறுகிறது. அதாவது பொதுநலமாக மாறுகிறது. நாயானது தன் எஜமானனின் பாசத்திற்குக் கட்டுப்படுகிறது. அதுமட்டுமல்ல; எஜமானனை நம்பி விசுவாசம் காட்டுகிறது. எஜமானனிடம் அன்பை வெளிப்படுத்துகிறது. அன்பானது இவ்வாறு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

அன்பைப் பற்றி அறிவியல்ஞானி, வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர்-

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு'

என்கிறார். அதாவது, எவன் ஒருவன் அன்பில்லாதவனாக இருக்கிறானோ அவன் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துபவனாக இருப்பான். ஆனால், பிறிதொரு உயிர்மேலும் அன்பு செலுத்துபவர் தனது உயிரையும், உடம்பையும் பிறருக்காகப் பயன்படுத்துவார் என்கிறார்.

அன்பின் அடுத்த நிலையே கருணை. கருணைக்கு அளவீடு இல்லை. எல்லை யும் இல்லை. கருணையென்பது பரந்து விரிந்து செயல்படக்கூடிய ஒன்றாகும். எப்படி? பாசமானது குறிப்பிட்ட நபரின் மீதும், குறிப்பிட்ட குடும்பத்தின்மீதும் இருப்பதாகும்.

அது அன்பாக மாறும்போது சக மனிதனிடமும், சக விலங்குகளிடமும் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கும். அன்பின் உச்சமான கருணை என்பது முற்றிலும் மாறுபட்டதாகும். கருணை தனிப்பட்ட நபரிடமோ, குறிப்பிட்ட விலங்குகளிடமோ என்றில்லாமல், பிரபஞ்சத்திலுள்ள மரம், செடி, கொடி என்று எல்லா உயிர்களிடமும் பரிவு காட்டுவதே கருணையின் அடிப்படைத் தத்துவமாகும். கருணைக்கு பேதம் என்பதே கிடையாது.

இதைப் பற்றி திருவள்ளுவர்-

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'

என்கிறார். அதாவது, கிடைத்த உணவின் அளவைப் பார்க்காமல், அவ்வாறு கிடைத்த உணவினைப் பகிர்ந்து, பல உயிர்களுக்கும் கொடுத்து தானும் உண்ணும்போது பல உயிர்களும் பாதுகாக்கப்படுகின்றன. இத்தகைய உயர்ந்த நிலை அறநூலார் தொகுத்தளித்த அறங்கள் எல்லாவற்றையும்விட முதன்மையானதாகும்.

பாசம் என்பது சுயநல வலை. அதன் பொதுநல வெளிப்பாடே உயரிய அன்பு.

அதுவே பிரபஞ்சத்துக்கும் பொதுவாகும் போது அளப்பரிய கருணை. எல்லையில்லா பேதமற்ற கருணையாளன்- பிரபஞ்சத்தில் பரம்பொருளாக வீற்றிருப்பவன்- அன்பே சிவமாக அருள்மழையைப் பொழிந்து கொண்டிருக்கும் சர்வேஸ்வரனே அன்பாக வும், சிவமாகவும் வெளிப்படுகிறார். அன்பின் திருவுருவமாகத் திகழும் சதாசிவத்தைப் பற்றி திருமூலரின் திருக்கூற்றைப் பார்ப்போம்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ(து) ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே."

"அன்பு வேறு, சிவம் வேறு; இரண்டும் ஒன்றல்ல. தனித்தனியானவை' என்று சொல்பவர்கள் அறிவில்லாத மூடர்கள்.

அன்பே சிவம் என்பதைப் பலரும் அறியாதி ருக்கிறார்கள். அன்புதான் சிவம் என்பதை எல்லாரும் அறிந்துவிட்டால், பிறகு அவர்களே அன்பே உருவான சிவமாய் அமர்ந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். (இங்கு திருமூலர் குறிப்பிடும் அன்பு எல்லை யற்ற கருணையே.)

எனவே "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போற்றுவோம். அருட்பெருஞ்சோதியாய், தனிப்பெருங் கருணையாய் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மகா இயக்குனரான, மகாதேவனான மகாலி−ங்கத்தை வணங்கு வோம். அன்பில் இணைவோம். ஆரோக் கியமெனும் ஆனந்தத்தில் திளைப்போம்.