"இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுணர விரிந்துரையா தார்.'
தான் கற்றதை பிறர் மனங் கொள்ள விளக்கிச் சொல்லும் ஆற்றலற்றவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவரா வர் என்கிறார் திருவள்ளுவர்.
மன்னர் ஒருவருக்கு தேவதை போல அழகான மகள் இருந் தாள். அவள் கல்வி கேள்வி களில் சிறந்து விளங்கினாள்.
தனக்கு வரப்போகும் கணவர் கொத்தாக மலர்ந்தும் மணம் கமழாத மலரைப் போன்றவராக இல்லாமல், சமயோசிதம் மிக்கவராக இருக்கவேண்டு மென விரும்பினாள்.
பலநாட்டு இளவரசர்கள் அவளை மணம் முடிக்க ஆவலாக வந்தனர். அவர் களுக்கு ஒரு பரீட்சை வைத்தாள் ராஜகுமாரி.
அதாவது இளவரசிபோல அவளது தோழிகளும் அலங்கரித்தபடி நின்றனர். அனைத்து பெண்களும் நடை, உடை, அலங்காரங்களில் ஒன்றாகவே தெரிந்தனர்.
அதனால் இளவரசியை அடையாளம் காண இயலவில்லை. இளவரசர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
மன்னரின் படையில் அழகும், வீரமும், புத்திசாலித்தனமும் நிரம்பிய போர்வீரன் ஒருவன் இருந்தான். இளவரசி நடத்தும் தேர்வில் வெல்ல விரும்பினான். அவளை அடையாளம் காண விரும்பி குருவிடம் வழிகாட்ட வேண்டினான். அவரும் வழி கூறினார்.
மறுநாள், தோழியருடன் இளவரசி இருந்த பேரவைக்குச் சென்றான் வீரன். கையில் பொற்காசுகள் அடங்கிய பை ஒன்றை வைத்திருந்தான்.
"மதிப்புமிக்க இளவரசிக்கு வணக்கங்கள்'' என்று கூறியபடி, பையில் இருந்த தங்கக்காசுகளை நழுவவிட்டான் வீரன். அவை, தரையில் விழுந்து சிதறியோடின.
தோழியர். "அடடா... தங்க நாணயங்கள்!'' என ஆச்சரியத்து டன் தேடிப் பொறுக்கலாயினர்.
ஆனால், எந்தவித சலனமும் அடையாமல் நின்றிருந்தாள் இளவரசி. அவளை அடையாளம் கண்டு கொண்டான் வீரன். யுக்தி யுடன் கண்டுபிடித்த வீரனை மணக்க சம்மதித்தாள் இளவரசி.
சமயோசித அறிவால் இளவரசியை மணந்து மன்னனானான் வீரன்.
ஒருமுறை எமதர்மன் பூலோகத்திற்கு வந்து ஒருவரிடம், "மனிதா, இன்றுடன் உனது ஆயுட்காலம் முடியப் போகிறது. உனது உயிரை எடுக்கப் போகி றேன். அந்த வரிசையில் முதல் உன் பெயர்தான் உள்ளது'' என்று சொன்னார். "நீர் எவரிடமும் சொல்லாமல் உங்களது பணிகளைச் செய்து கொண்டிருப்பீர்கள். என்னிடத்தில் தகவல் சொன்னதற்கு நன்றி. இறுதியாக எனது ஆசையை நிறைவேற்றவேண்டும்'' என்று கேட்டான் மனிதன். "என்ன?'' என்று எமதர்மன் கேட்க, "என் வீட்டில் ஒரு காபி சாப்பிட்டுவிட்டுச் செல்வோமே'' என்றான்.
"இவ்வளவுதானா...'' என்று சம்மதித்தார் எமதர்மன். கணநேரத்தில் தூக்க மாத்திரைகளை காபியில் கலந்து எமதர்மனுக்குக் கொடுத்தான். அதைக் குடித்துவிட்டு எமதர்மன் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.
அந்த நேரத்தில் முதலிலிருந்த அவனது பெயரை எடுத்து கடைசியில் எழுதி விட்டான் மனிதன்.
உறக்கம் கலைந்து எழுந்த எமன், "மனிதா, இதுபோன்ற காபியைக் குடித்ததே இல்லை. என்ன சுகம்! இதற்கு கைம்மாறாக நான் ஏதாவது செய்ய வேண்டுமே... மனிதா, மேல் வரிசையில் இருந்து உயிர்களை எடுப்பதற்கு பதிலாக, கீழ்வரிசையில் இருந்து எடுக்கிறேன்'' என்று சொல்லி அவரது பணியைச் செய்துவிட்டார்.
ஆக, எது நடக்குமோ அது நடந்தே தீரும். எல்லாம் முன்கூட்டியே விதிக்கப்பட்டதுதான். தான்தான் அறிவாளி யென்று செயல்பட்டால் அழிவுதான் நம்மைத் தேடி வரும். "நடப்பவை எல்லாம் நமச்சிவாயன் செயலே' என்று இறைசிந்தனையோடு இருந்து, நல்லதை நினைத்து சமயோசிதமாக படைவீரனைப்போல் செயல்பட்டால், எங்கும் எதிலும் வெற்றிதான் கிட்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்றதொரு அற்புதமான திருத்தலம்தான் கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஆரண்யசுந்தரேஸ்வரர், காட்டழகர்.
இறைவி: அகிலாண்ட நாயகியம்மை.
விநாயகர்: நண்டு பூஜித்த விநாயகர்.
விசேஷ மூர்த்தி: ராஜயோக தட்சிணா மூர்த்தி, இரட்டைலிங்கம்.
புராணப் பெயர்: ஆரண்யஸ்தலம்.
ஊர்: கீழைத் திருக்காட்டுப்பள்ளி.
தலவிருட்சம்: பன்னீர் மரம்.
தீர்த்தம்: பொய்கைத் தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 12லிஆவது தலமாகத் திகழ்வதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்பு களைப் பெற்றதொரு திருத்தலம்தான் கீழைத் திருக்காட்டுப்பள்ளி.
"தோலுடையான் வண்ணப் பேர்வையினான்
சுண்ண வெண்ணீறு துதைந்தியர்க்கு
நூலுடையானிமை யோர் பெருமான்
நுண்ணறிவால் வழிபாடு செய்யுங்
காலுடையான் கரிதாய கண்டன்
காதலிக்கப்படுங் காட்டுப் பள்ளி
மேலுடையானி மையாத முக்கண்
மின்னிடையா ளொடும் வேண்டினானே.'
-திருஞானசம்பந்தர்
நவகிரகத் தலங்களில் புதன் தலமான சுவேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு திருத்தலத்திற்குத் தொடர்புடையது இந்தத் தலம். ஆரண்ய முனிவர் சிவனை வழிபட்டுப் பேறு பெற்றதால் ஆரண்யேஸ்வரம், காட்டழகர் குடிகொண்ட ஆரண்யத்தலம் என்றெல் லாம் அழைக்கப்பட்டு, தற்போது கீழைத் திருக்காட்டுப்பள்ளி என்றே நடைமுறையில் உள்ளது.
தல வரலாறு
இந்திரன் ஒருமுறை தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் அசுர குலத்தைச் சேர்ந்த விசுவரூபன் என்பவனைத் தனது குருவாகத் தேர்வுசெய்து, அவனை வைத்து வேள்வியைச் செய்தான். ஆனால் விசுவரூபன் அசுரர்களுக்கு சாதகமாகவும், தேவர்களுக்குப் பாதகமாகவும் வேள்வி செய்தான். இதையறிந்த இந்திரன் விசுவரூபனைக் கொன்றான். விசுரூபனின் தந்தை துவஷ்டா தனது மகனின் இறப்பையறிந்து வேதனைகொண்டு, இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார். அதிலிருந்து விருத்திரா சுரன் என்னும் அரக்கன் தோன்றினான்.
அவன் பல வரங்களைப் பெற்று தேவர்களைத் துன்புறுத்தினான். இந்திரனை வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.
உலகத்திலுள்ள எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால் அவனை அழிக்க அதுவரை இருந்த ஆயுதங்களைத் தவிர்த்து புதியதொரு ஆயுதம் தேவைப்பட்டது. இதற்காக ததீசி என்ற முனிவரின் முதுகுத் தண்டுவடத்திலிருந்து ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக்கொண்டு விருத்திராசுரனைக் கொன்றான் இந்திரன். போர் தர்மப்படி நேரில் நின்று செய்யாமல் வஞ்சகமாகக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனால் இந்திர பதவியை இழக்கவேண்டியநிலை உண்டானது.
இழந்த பதவியை மீண்டும் பெற தேவகுரு வாகிய பிரகஸ்பதியிடம் ஆலோசனை செய்தான். அவரது கூற்றுக்கிணங்கி, பிரம்மா விடம் சென்று நடந்த நிகழ்வுகளையும், அதனால் தனக்குண்டான தோஷ நிலையையும் முறை யிட்டான்.
அதைக்கேட்ட பிரம்மா, "தேவந்திரா. ஒரு செயலைச் செய்கின்றபோது தவிர்க்க முடியாத கெட்ட நிகழ்வுகளும் சில நேரங்களில் ஏற்படுவதுண்டு. தேவர்களைக் காக்க நீ வஞ்சக மாக விருத்திராசுரனைக் கொல்லவேண்டிய நிலை. நீ செய்தது பாவமாக இருந்தாலும், அதனால் விளைந்த நன்மை காரணமாக விமோசனம் உண்டு. பூலோகம் சென்று அனுதினமும் சிவபூஜை செய்துவந்தால் சிவனருளால் உனது தோஷம் நீங்கப்பெற்று இழந்த இந்திரப் பதவியை மீண்டும் பெறுவாய்'' என அருளினார்.
இந்திரனும் பூலோகம் வந்த டைந்து ஒவ்வொரு சிவத்தல மாகச் சென்று சிவபூஜை செய்து வந்தான். அவ்வாறு அடர்ந்த காட்டுப் பகுதியான கீழைத் திருக்காட்டுப் பள்ளிக்கு வந்தான். அங்கு ஓரிடத் தில் சுயம்புவான சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். அங்கு தான் இதுவரை அனுபவித்திரா வண்ணம் சூழல் இருப்பதைக்கண்டு ஆனந்தம் கொண்டு, கசிந்து கண்ணீர் மல்கி சிவபிரானுக்கு "ஆரண்யசுந்தரர்' எனப் பெயரிட்டு பூஜைசெய்து வந்தான். இந்திரனுக்கு "ஆரண்யசுந்தரர்' காட்சிதந்து, அவனது பாவத்திற்கு விமோசனமளித்து, "இழந்த இந்திர பதவியை மீண்டும் அடைந்து இன்பமுடன் ஆட்சி செய்க'' என திருவாய் மலர்ந்தருளினார்.
சிறப்பம்சங்கள்
= மேற்குநோக்கிய இவ்வாலயத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
= சாபத்தால் நண்டு வடிவம்பெற்ற கந்தர்வன் ஒருவன் இத்தல விநாயகரை வழிபட்டுப் பேறு பெற்றான். அதனால் இத்தல விநாயகருக்கு நண்டு பூஜித்த விநாயகர் என்று பெயர் ஏற்பட் டது. விநாயகரின் பீடத்தில் நண்டு வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நண்டு வடிவம் கடக ராசியின் சின்னம். ஆதலால் "கற்கடக கணபதி' என்ற சிறப்புப் பெயருமுண்டு. கடக ராசிக்காரர்கள் வழிபட, தோஷம் விலகி கூடுதல் பலனைத் தருவதாக ஐதீகம்.
= இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் மற்றும் பிரம்மா, விஷ்ணுவுடன் இருப்பது சிறப்பம்சம். இவருக்கு ராஜயோக தட்சிணாமூர்த்தி என்ற சிறப்புப்பெயர் உண்டு. சிறப்பான கல்வி, கலை மேம்பாட்டிற்கு இங்குவந்து வழிபட்டுப் பலனடைந்தவர்கள் ஏராளம் என்கிறார்கள் கிராமவாசிகள்.
= ஆரண்யமுனி இத்தல இறைவனை வணங்கிப் பேறு பெற்றுள்ளார். அவர் தம் பூஜை முடியும்வரை மகாகாளரைத் தம் காவலராக இருக்குமாறு கேட்டுக்கொண்டதால், அவ்வாறே மகாகாளர் அவர் அருகிலிருந்து அரக்கர்களாலும் விலங்குகளாலும் எந்தவித இடையூறுகளும் வராமல் காத்தருளினார் என்று தலபுராணம் சொல்கிறது. ஆரண்யமுனி மகாகாளரை வணங்குவதுபோலவும், மகாகாள முனி சங்கூதுவது போலவும் கற்சிற்பம் ஆலயத் தில் உள்ளது.
= சனியின் தந்தையான சூரியன், ஆசானான பைரவர், சனிபகவான் ஆகிய மூவரும் சேர்ந்தாற் போல் ஈசான்ய திக்கில் மேற்குநோக்கி அருள் பாலிப்பது விசேஷம். ஒருவரது ஜாதகத்தில் சூரியன், சனி சேர்ந்திருந்தாலோ ஒருவரை யொருவர் பார்த்தாலோ தந்தைக்கும் பிள்ளைக் கும் ஆகாது என்கிறது ஜோதிடம். அத்தகைய அமைப்புள்ள ஜாதகர்கள் இத்தல அம்மையப் பனை வணங்கினால் சேர்ந்துவாழ்வதோடு உறவு முறை நீடித்து நிலைக்கும்.
= தல தீர்த்தமான பொய்கைத் தீர்த்தம் சிறப்பான ஒன்று. இத்தீர்த்தத்தைத் தலையில் தெளித்தால் சித்தம் தெளிந்து நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.
="புதன் பரிகாரத்தலமான திருவெண் காட்டுக்கு ஏராளமானோர் சுற்றுலாபோல் வந்துசெல்வதுண்டு. ஆனால் அதன் அருகே யுள்ள இத்தல இறைவனை தரிசிக்க ஜாதகத் தில் பூர்வபுண்ணிய பலம் இருந்தால் மட்டுமே வரமுடியும். இத்தல மூலவரான ஆரண்ய சுந்தரேஸ்வரருக்கு யாகம் செய்து, இத்தலத்தி லுள்ள அனைத்து சிவலிங்கத் திருமேனிகளுக் கும் புத்தாடை சாற்றி அபிஷேக வழிபாடுகள் மேற்கொண்டால் நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் பரம்பரை ஆலய அர்ச்சகரான பி. சுவாமிநாதசிவம்.
= பதவி உயர்வு பெறவும், இழந்த பதவியை மீண்டும் பெறவும் பலர் வந்து வழிபட்டுப் பலன் பெறுவது கண்கூடு.
=மகாசிவராத்திரி, ஆருத்ரா, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், ஆடிவெள்ளி, நவராத்திரி, பௌர்ணமி நாட்களும்; தேய்பிறை அஷ்டமியில் பைரவர்க்கும், வியாழக்கிழமை களில் ராஜயோக தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு வழிபாடுகள் கட்டளைதாரர்கள் அடிப்படை யில் நடைபெறும்.
= மோட்சமளிக்கும் இரட்டைலிங்கத் திற்கு அபிஷேக வழிபாடு செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிட்டும்.
= சிவபெருமான் பலாசவனம், மதங்காஸ் ரமம் என்று வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார். இந்த 12 ஆலய இறைவனும் ஏக காலத்தில் வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஒன்றுசேர்வார் கள். இவர்கள் அனைவரும் திருநாங்கூரில் அமைந் துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாணக் கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும் இத்தல இறைவனும் இறைவியும் கலந்துகொண்டு பக்தர் களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான சம்பவங் களில் ஒன்று. சிவாலயங்களுக்குரிய அனைத்து சந்நிதிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
இழந்ததை மீட்டுத் தந்து இன்ப வாழ்வு வாழ வழிசெய்யும் தலமாம் கீழைத் திருக்காட்டுப் பள்ளி அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத ஆரண்ய சுந்தரேஸ்வரர் பொற்பாதம் பணிவோம்; பொலிவுடன் வாழ்வோம்.
காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: பி. சுவாமிநாதசிவம், அலைபேசி: 98425 93244, 94439 85770.
ஸ்ரீ ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோவில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு (அஞ்சல்), மயிலாடுதுறை மாவட்டம். சீர்காழி வட்டம். பின்கோடு: 609 114.
அமைவிடம்: புதன் பரிகாரத் தலத்தின் மேற்கு கோபுரத்திலிருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி. திருவெண்காட்டிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா