முருகனருளால் மழை போன்று அவன் புகழைப் பாடியவர்கள் பலர். நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், முத்துசாமி தீட்சிதர், பாம்பன் சுவாமிகள் என்று பலரை உதாரணமாகக் கூறலாம். அந்தவரிசையில் ஆண்டவன் பிச்சை என்ற பெண்மணியும் ஒருவர். பத்து வயதுவரை ஜடமாயிருந்த- எட்டு வயதிலேயே திருமணமான "மரகதம்' என்ற பெண் எவ்வாறு முருகனருளால் ஆட்கொள்ளப்பட்டு பலவிதப் பாடல்கள் பாடி காஞ்சி மகாபெரியவரால் "ஆண்டவன் பிச்சை' என்று அழைக்கப்பட்டார் என்பதை யும், இவருடைய அதி உன்னத சரிதத்தையும் சிந்திப்போமா?
பாலாற்றங்கரையிலுள்ள காத்தஞ்சேரியில் பிறந்தவர் சங்கர நாராயண சாஸ்திரி. படித்த மேதை; வழக்கறிஞர் பணிசெய்தவர். தமிழ், ஆங்கில மொழிகளில் ஆழ்ந்த ஆன்மிக விஷயங்களை எழுதியவர். மனைவியின் பெயர் சீதாலட்சுமி. இந்த தம்பதிக்கு 6-9-1899-ல் மரகதம் என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மூன்றாவது வயதில் தாயார் இறக்க, சங்கர நாராயணர் மறுமணம் செய்துகொண்டார். மரகதம் விளையாட்டு, படிப்பு, பாட்டு, கதைகள் என்று எதனிலும் ஈடுபடாது ஜடமாக இருந்தாள். எட்டு வயதாகும்போது, உறவினர் குருசாமி சாஸ்திரிகளின் இருபது வயது மகன் நரசிம்மனுக்கு மரகதத்தை கன்னிகாதானம் செய்துகொடுத்தனர். சென்னை மயிலாப்பூ ரில் வசித்தனர்.
புகுந்த வீட்டிலும் அதேநிலை. பத்து வயதில் தன் பாட்டி சுந்தரியம்மாளைக் காணவந்தாள் மரகதம். பாட்டி ஒரு முருக பக்தை. பேத்தியைப் பார்த்தது பாட்டிக்கு மகிழ்வைத் தந்தாலும், அவள் எதிலும் ஈடுபாடின்றி ஜடமாய் இருப்பது கண்டு அழுகை பொங்கியது. "தாயில்லாப் பெண். புகுந்தவீட்டில் மனிதர்களுடன் பழகி நல்ல பெயர் எடுக்க வேண்டாமா? தானும் மற்றவர்களும் ஆனந்தமாயிருக்க வேண்டாமா? முருகா, நீதான் இவளைக் காப்பாற்றவேண்டும்' என்று அவளைப் பாசத்துடன் கட்டிக்கொண்டு முருகனிடம் அழுது வேண்டினாள். படத்தில் ஒய்யாரமாக இருந்தான் தணிகேசன். மரகதமும் தணிகேசனை ஆழ்ந்து பார்த்தாள். பாட்டியைப்போல் தானும் "முருகா முருகா' என்றாள். பாட்டி, "ஆமாம், அவன் நாமத்தை விரும்பிச்சொல். அவன் அருள்வது நிச்சயம்' என்று ஆசிர்வதித்து உச்சி முகர்ந்தாள்.
நவராத்திரி சமயம். பாட்டியின் அருகில் மரகதம் உறங்கிக்கொண்டிருந்தாள். பாட்டியின் ஆழ்ந்த முருக பக்தியின் வேண்டுகோளா அல்லது தணிகேசன் தானே வலியவந்து அருள நினைத் தானோ அல்லது மரகதத்தின் முற்பிறவிப்பயனோ, யார் அறிவார்? மரகதத்தின் கனவில் மயில், வேலுடன் கந்தன் தோன்றினான்! "நாக்கை நீட்டு' என்றான். வேலினால் நாக்கில் பிரணவம் எழுதினான். "பாடு' என்றான்.
பேசாதவள், படிக்காதவள் பாடினாள்-
"அருள் அமுதத்தை வேல்கொண்டு நாவில் எழுதிய
பரமகுரு தணிகேசன் பதமலர் போற்றி'
என்று தொடங்கி சில அடிகள்...
"இனி நன்கு பேசுவாய்; பாடுவாய்' என்று தலையில் கைவைத்து ஸ்பரிச தீட்சையருளி, "ஓம் சரவணபவ' என்ற ஷடாக்ஷரமும் ஈந்து, "எப்போதும் ஜபி' என்றுகூறி மறைந்தான் கந்தன். கனவு கலைந்தது; பொழுது விடிந்தது.
இரவு கனவில் கண்டதைப் பாட்டிக்குக் கூறினாள் மரகதம். பாட்டி பரவசமடைந்தாள். "தணிகேசா! "உன் அருளப்பா! குழந்தையைக் கை விடாதே' என்று வணங்கினாள். மெய்சிலிர்த்தாள். மரகதம் காதில் சரவணபவ ஷடாக்ஷரம் ஓதி, ""இதனை எப்போதும் ஜபி. சரணாகத ரட்சகன் கைவிடமாட்டான். அப்பாவிடம்போய் நடந்ததைச் சொல்'' என்றாள்.
காலையில் தந்தை சங்கர நாரயணர் தன் அறையில் மும்முரமாய்ப் படித்துக் கொண்டிருந்தார். மரகதம் உள்ளே சென்று தந்தை அருகே நின்றாள். அவருக்கு ஆச்சரியம்! எவரிடமும் பேசாமல் தனித்து மௌனமாய் இருப்பவள் தன்னருகே நிற்கிறாளே என்று. ""என்னம்மா மரகதம்? உன் புக்ககத்திலே உன்னை வைதார்களா? இங்கே வா'' என்று அணைக்க, மரகதம் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் கனவைச் சொல்லி அழுது பாட ஆரம்பித்தாள். பாட்டில் பரப்பிரம்ம தத்துவம் தொனித்தது. ஒன்றுமறியாப் பேதை பாடும் பாடலா அது! துருவிக் கேட்கும் சுபாவம் கொண்ட வழக்கறிஞர் அல்லவா தந்தை! ""உன் அப்பா, அம்மாவைப் பாடு'' என்றார். மரகதம் பாடினாள்-
"முன்னறி தெய்வமென்ற முதுமொழிக்கு ஒப்பலானும்
பொன்னுமே மாலும் போலும் புனிதமாம் நாமம் பூண்டு
நன்னெறிக் கலைகள் ஆய்ந்த நற்குண சீலராய்
அன்னையும் பிதாவையும் அடி படிந்து ஏத்துவனே.'
ஆனந்தம், ஆச்சரியமடைந்த தந்தை, ""திருமணமானபிறகு கணவன்தானே தெய்வம். அவரைப் பற்றிப் பாடுவாயோ?'' என்று கேட்க-
"கற்புடை மாதருக்குக் கணவனன்றி வேறு
தற்பரமான தெய்வம் தரணியில் இல்லையன்றோ
நற்புகழ்க்கல்வி கொண்டு நரஹரியாய் விளங்கும்
சிற்பரமான நாதர் திருவடி போற்று வேனே!'
(கணவன் பெயர் நரசிம்மன். அந்நாட்களில் கணவன் பெயரை மனைவி கூறமாட்டாள். ஆக நரஹரி என்றாள். என்னே தத்துவம்!)
"இவள் நிச்சயம் முருகனருள் பெற்று விட்டாள். ஜடமாயிருக்கிறாளே என்று மனதில் பொருமுவேன். சிவகுருநாதன், சுவாமிநாதன், ஞானஸ்கந்தனானவன், சிவ- பார்வதி ஞானப்பாலூட்டி ஞானசம்பந்தனாக்கியதுபோல, மரகதத்தை ஞானாம்பாளாக்கிவிட்டானே' என்று நெஞ்சம் கனிந்து, குதூகலத்துடன் தன் அண்ணன் வேங்கட சுப்பய்யரிடம் குழந்தையை அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார்.
அண்ணனின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இவர்கள் பேசுவதைக் கண்ட சுந்தரி பாட்டி மெய் சிலிர்த்து மனம் கசிந்தாள்.
24 வருடம் பாட முட்டுக்கட்டை நாட்கள் சுழன்றன. 13-ஆவது வயதில் மரகதத்திற்கு முதல் குழந்தை பிறந்து இறந்தது. கணவர் நரசிம்மன் படித்துப் பட்டம்பெற்று பெரிய வழக்கறிஞ ரானார். 1917, 1919, 1921, 1923, 1924, 1926, 1928, 1929, 1936-ஆம் ஆண்டு என ஒன்பது குழந்தை கள் பிறந்தன. (இக்காலங்களில் "நாம் இருவர், நமக்கு இருவர்' என்பது, நமக்கு ஒருவராகி, சமீபகாலங்களில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்குப்போவதால், குழந்தையே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது).
மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன. 1924-ல் சேஷாத்ரி என்ற ஐந்தாவது குழந்தை பிறந்தது. அச்சமயம் ஒரு திருப்பம்.
குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் மரகதத்திற்கு ஜுரம் தீவிரமானது. பாட்டி அளித்த ஷடாக்ஷர மந்திர ஜபத்தையே வழக்கம்போல தீவிரமாகச் செய்தாள். முருகன் சலங்கை சத்தத்துடன் தோன்றினான்.
"என்னைத் தூக்கிக்கொள்' என்றான். அவள் கைகளை நீட்டி வாரி அணைத்தாள். அவனோ வாயில் முத்தமிட்டு தன் அமுதம் ஊட்டி, "பிள்ளைத்தமிழ் பாடு' என்றான்.
தனக்கு உதவிப்பெண்ணாக இருந்தவளை நோட்டு, பேனா எடுத்துவரச்சொல்லி பாடத்தொடங்கினாள். அந்தாதி, வெண்பா, அகவல், விருத்தம் என பலவிதங்களில் 200 துதிகள்! பிரசவித்த உடல்நிலை எப்படி இருக்கும்? இது சாத்தியமா என சந்தேகம் வருவது இயல்பே. ஆண்டவன் அருளால் எதுவும் நடக்கும்.
மாமியார் என்ன பாட்டுக்குரல் கேட்கி றதே என்று வந்து பார்க்க, பிரசவ மாகி ஜுரத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மருமகள் பாட, உதவிப்பெண் எழுதுவதைக் கண்டு கோபமுற்று, ""உன் ஜுர வேதனையால் நாங்கள் கவலை யில் இருக்கிறோம். நீயோ பாடிக் கொண்டிருக்கிறாய். பிரசவத் தீட்டின்போது பாடலாமா? இனிமேல் பாடமாட்டேன் என்று உன் கணவன்மீது சத்தியம் செய்'' என்று சொல்லி சத்தியப் பிரம்மாணம் வாங்கிக்கொண்டு, பாட்டு நோட்டைத் தன் பெட்டி யில் வைத்து பூட்டுப் போட்டாள்.
மரகதமோ இதுவும் முருகன் விளையாட்டே என்றெண்ணினாள். முருகனை மனதில் தியா னம் செய்வதைத் தடுக்க முடியாதே! 1930-ல் மாமியார் காவேரியம்மாள் மறைந்தாள். ஆயினும் கணவன்மீது பாடக்கூடாதென்ற சத்தியம் செய்தது மறையுமா? மனசாட்சி என்று ஒன்றுள்ளதே. 1924 முதல் 1948 வரை 24 வருடங்கள் பாடமுடியாத நிலை! இதன்காரணமும் நமக்குப் புரியாது. வசுதேவர்- தேவகியின் முதல் ஆறு குழந்தைகளை கம்சன் கொல்லாமல் விட்டாலும், "எட்டு என்பது எங்கிருந்து தொடங்குகிறது? ஒன்றிலிருந்தல்லவா?' என்று சொல்லி ஆறு குழந்தைகளையும் கொல்ல வைத்தவர் நாரதர். ஏன்? அதுதான் விதி. "விதித்தபடி நடக்கும்- எவராலேயும் மாற்றமுடியாது' என்பர். மரகதம் 24 வருடங்கள் மௌனமாக இருந்தது ஏனென்றால், அவள் உள்ளத்தில் முருகன் குஹனாக இருந்து, மாங்காய் கனிந்து பழமாவதுபோல அவளை ஞானப் பழமாக்க 24 வருடம் எடுத்துக்கொண்டான் போலும்!
ஆன்மிக நாட்டமுடைய மனம், அதில் மேன்மேலும் அமிழத் தூண்டுமேயல்லாது, இதுபோன்ற சம்பவங்களால் வெறுத்து நாத்திகம் நாடாது. பத்து வயதில் பாட்டி வேண்ட அருளியவன், 25 வயதில் ஏன் மாமியார்மூலம் முடக்கினான்? தங்கத்தை உருக்க உருக்க, வைரத்தைத் தீட்டத் தீட்ட மிளிரும் என்பர். அந்த நிலையே எனலாம்.
திருப்புகழ்மணி ஈடுபாடு மற்றும் ஒரு திருப்பம்! பாலாம்பிகை என்ற உறவுக்காரப் பெண் மரகதத்தைப் பார்த்து, ""நீங்கள் முருகன் அருளால் பாடுவீர்களே. எங்கள் ஆன்மிகப் பத்திரிகையில் போட எழுதித் தாருங்கள்'' என்றாள். அவளோ, ""24 ஆண்டு கள் என்னைப் பாடாமல் வைத்துவிட்டானே முருகன்'' என்று சொல்லி, தன் மாமியா ரின் பெட்டியைத் திறந்தாள். அதிலிருந்த மாமியாரின் பணநோட்டுகள், ஆவணங் கள் முதலியவற்றை கரையான் அரித்து விட்டிருந்தது. மரகதம் பாடி எழுதிய பாட்டுப் புத்தகம் செம்மையாக இருந்தது. ""இது எனக் கெதற்கு'' என்று அந்தப் பாடல் நோட்டை பாலாம்பிகையிடம் கொடுத்துவிட்டாள்.
டி.எம். கிருஷ்ண ஸ்வாமி ஐயர் (ப.ங.ஃ.) என்ற வழக்கறிஞர் ஒரு ஆன்மிக மலரில் ஆசிரியராக இருந்தார். அவரிடம் இந்தப் பாட்டு நோட்டு சேர, பாட்டுகளின் தரம், நயம், மகிமை, உருக்கம் உணர்த்து, மெய் சிலிர்த்து பத்திரிகையில் பிரசுரித்தார். டி.எம்.கே. ஒரு முருக பக்தர். பாடமாட்டார்; துதிப் பார். ஒருசமயம் அவர் வீட்டில் வள்ளிமலை ஸ்வாமிகளின் திருப்புகழ் பஜனை நடக்க, அவர் எட்ட அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்வாமிகள் அவரை அருகே அழைத்து தனது ஜாலரா (தாளம்) கொடுத்துப் "பாடு' என, அவரும் வியந்து பாட ஆரம்பித்தார். குரு கிருபை, முருகன் கிருபை சேர, திருப்புகழில் ஆழ்ந்து பாடுதல், கதாகாலட்சேபமும் செய்ய ஆரம்பித்தார். (அவர் பாடிட நான் கதாகாலட்சேபமும் கேட்டுள்ளேன். எங்கள் அகத்திலும் பாடியுள்ளார்.) ஒருசமயம் அவர் காஞ்சி மகா பெரியவர் முன் திருப்புகழ் பாட, அவர் ""ப.ங. என்றால் என்ன தெரியுமோ... திருப்புகழ் மணி'' என்றார்.
அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது.
மரகதம் ஆண்டவன் பிச்சையாகுதல் 21-1-1949 அன்று விடியல்... வீட்டுவாசலில் பால்காரன் வரவை எதிர்பார்த்திருந்தாள். தியானித்தாள். நடைசத்தம் கேட்டுக் கண் விழித்துப் பார்க்க, விபூதி, ருத்ராட்சம், வேலுடன் சிறுவன் முருகன் வந்தான். மெய் சிலிர்த்துப் பாதம் பணிந்தாள். ""நான் யார் தெரியுமா?'' என்றான். ""என் இதய குஹேசன், தணிகேசனாயிற்றே'' என்றாள். ""பாட்டுகள் எல்லாம் கொடுத்துவிட்டாயே? எனக்கு வேண்டாமா? எனக்கு தங்க, நவரத்தினமாலைகள், மலர்மாலைகளைவிட, பக்தர் களின் பாமாலைதான் மிகப்ரியம். எனவே நீ பாடு'' என்றான்.
மரகதமோ, ""நான் பாடக்கூடாது என்று என் மாமியார் சத்தியம் வாங்கிக்கொண்டாரே, பாடுவது நானில்லையே. நான் யாதும் அறியாப் பேதையாயிற்றே. என் உள்ளத்தில் நீ நிறைந்துள்ளாய். அதுபோதுமே'' என்றாள். முருகனோ, ""உன் சத்தியத்தை மெச்சுகிறேன். உன்மூலம் நான் பாடவைக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டாய். எனவே உள் நோக்கி, உள்ளுணர்வாலேயே பாடு'' என்று "அருணோதய பிம்பம்' என்று அடியெடுத்துக் கொடுத்து மறைந்தான். அவள் மூர்ச்சித்து விழுந்தாள். பால்காரன் வர, மற்றவர்கள் அவள் மூர்ச்சை தெளிவித்தனர். "அருணோதய சூர்ய பிம்பமதுபோல்' என்று தொடங்கும் "ஆத்மபோதத் தொகுப்பாக 108 பாடல்கள் எழுதினார். ஆக, மரகதத்தின் இரண்டாம் பாடல் வாழ்க்கை துவங்கியது. (ஆதிசங்கரர் வடமொழியில் ஆத்மபோதம் என 69 துதிகள் செய்துள்ளார்.)
பாட்டின்மூலம் திருப்புகழ்மணி பரிச்சயம்போல, காஞ்சி பரமாச்சார்யாரை மரகதம் தரிசித்து தனது சில பாடல்களைப் பாட, பரமாச்சாரியார் நெகிழ்ந்து, "ஆண்டவன் பிச்சை' என்றழைத்தார். அப் பெயரே நிலைத்தது. ஏன், ஆண்டவன் முருகன் அருளிய பிச்சையால்தானே யாதும் அறியாப் பேதை பாட ஆரம்பித்தாள்!
தொடர்ச்சி அடுத்த இதழில்...