வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு!
3
கோபி சரபோஜி
நமது உடம்பு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இதில் ஆகாயம் தவிர்த்து மற்ற நான்கும் நிலத்திலிருந்தே தோன்றுகின்றன. இன்னும் சொல்லப்போனால் தொலைவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பதுபோலவே நமக்குத் தெரிகிறது. நாம் நிலைத்துநிற்க உதவும் நிலத்திலிருந்தே எல்லாம் தோன்று கின்றன என்பதாலேயே, பரம்பொருளின் அடையாளத்தையும் நிலத்தின் ஒரு கூறாக இறுகிப்போயிருக்கும் கற்களில் வடித்தனர்.
சில ஆலயங்களில் செம்பில் விக்ரகங்களை வடிவமைத்துப் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். செம்பு எளிதில் மின்சாரத்தைக் கடத்த வல்லது. அந்த மின்கடத்தியில் விக்ரகத்தை அமைத்து அதை இறைநிலைக்கு மாற்றம் செய்யும்போது, அந்த சக்தியானது இறைவனிடமிருந்து நமக்கும் எளிதில் கடத்தப்படுகிறது.
கல்லோ, செம்போ- அது இறைநிலையை அடைவதற்கு கும்பாபிஷேகம் என்னும் பெருஞ்சாந்திச் சடங்கு அவசியம்.
அதனால்தான் "கும்பாபிஷேகம் காண்பது புண்ணியம்' என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர். கும்பாபிஷேகத்தில் கும்பம் மிகவும் முக்கியம். கும்பத்தின்மேல் வைக்கப்படும் தேங்காயைத் தலையாகவும், மாவிலையைக் கையாகவும், அதைச்சுற்றிக் கட்டப்படும் துணியைத் தோலாகவும், கும்பத்தின்மேல் பூசப்படும் செம்மண்ணை ரத்தமாக வும், கும்பத்தினுள் வைக்கப்படும் தீர்த்தத்தை (நீரை) சதைப்பகுதியாகவும், தர்ப்பைப் புல்லை எலும்பாகவும், கும்பத்தைச் சுற்றிக்கட்டப்படும் நூலை நரம்பாகவும், கும்பத்தின் அடியில் பரப்பப்படும் நவதானியங்களை ஆசனமாகவும் பாவித்து, உருவ வடிவில் இறைவனாய் இருக்கின்ற பிம்பத்தை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். இதற்கு "ஆவாஹனம்' என்று பெயர்.
கருவுற்றிருக்கும் பெண்ணை பிரசவ நேரத்தில் பொது வார்டில் இருந்து பிரசவ வார்டிற்கு மாற்று வதைப்போல, ஆவாஹனம் செய்யப்பட்ட கும்பத்தை இறைத்தன்மை பெற வைப்பதற்காக யாகசாலைக்குக் கொண்டு வருவார்கள். வாழை, மாவிலைத் தோரணங்கள், ஒலி மற்றும் ஒளிமூலம் திருமண வீட்டை அடையாளம் காட்டு வதைப்போல, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இறைவன் இறங்கிவந்து அருள்புரிய வேண்டி அடையாளம் காட்டு வதற்காக, வேதவிற்பன்னர்கள் யாகசாலையைத் தனியே அமைத்து அக்னி புகையுடன் வேத ஒலி, சிவகாம ஒலி, தமிழ்மறை ஒலி முதலியவற்றை முழங்குகின்றனர்.
திருமண வீட்டிற்கு வருகின்றவர்களை பன்னீர் தெளித்து வரவேற்பதைப்போல, யாக சாலைக்குள் வருகின்ற இறைவனை வரவேற்கும் நிகழ்வு யாகம். "வழி படுதல்' என்ற பொருள் கொண்ட "யஜ்' என்ற சொல்லிருந்து வந்த "யக்ஞம்' என்பதே யாகம் என்று அழைக்கப்படுகிறது. இதை வேள்வி, ஹோமம் என்றும் அழைப்பர். மற்ற மதங்கள் உருவங்களை வைத்து வழிபட்டபோதும், அந்த மதங்களில் எல்லாம் இல்லாத வழி பாட்டு முறையான யாகம் இந்து மதத்தில் மட்டுமே இருப்பது சிறப்பு.
நீக்கமற நிறைந்து எங்கும் வியாபித்திருக்கின்ற பரம்பொரு ளான இறைவன் யாகசாலையில் வேத விற்பன்னர்களால் உச்சரிக்கப்படும் வேதமந்திரங்களில் காற்றுவழியாக இறங்குகிறான் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு உரமிடும் வகையில் யாகசாலையில் வேதங் களை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்கள் கூடி உரக்க சப்தமிட்டு வேதமந்திரங்களை முழங்குகின்றனர்.
காற்றில் இறங்கிய இறைவன் அங்கிருந்து யாக குண்டங்களில் வளர்க்கப்படும் அக்னியில் இறங்குகிறான். யாகத்தில் அக்னிதான் பிரதானம். ஏனெனில், தன்னிடம் தரப்படுகின்ற கடிதங்களை சரியானமுறையில் கொண்டுபோய்ச் சேர்க்கின்ற தபால் ஊழியரைப் போல, ஒவ்வொரு தெய்வத்துக் கும் உரிய மந்திரங்களைச் சொல்லித் தன்னுள் இடப்படுகின்ற அவிர்பாகத்தை உரிய தேவர்களிடம் அக்னிதான் கொண்டுபோய் சேர்க்கிறான். அதனால்தான் 36 தத்துவ வடிவமாகிய யாக சாலையில் முக்கோணம், நாற்கோணம், அரைச்சந்திர வடிவம் போன்ற ஒன்பது வடிவங்களில் யாக குண்டங்களை அமைத்து, ஒன்பது அக்னியை வளர்க்கின்றனர்.
மரக்குச்சிகளில் உள்ள அக்னி ஹோமகுண்ட அக்னியுடன் கலந்து விடுவதைப்போல, நம் உடலை இயங்கச் செய்கின்ற ஆத்மா பரம்பொருளுடன் சேரும் நிலையை அடையவேண்டும் என்பதன் அடையாளமாக, யாக குண்டங்களைச் சுற்றிலும் பசுந்தர்ப்பைகளைப் பரப்பி ஆல், அரசு முதலிய விறகின் சுள்ளிகளை இடுகின்றனர்.
பாலைத் தயிராகவும், தயிரை வெண்ணெய்யாகவும் மாற்றாமல் பாலில் மறைந்திருக்கும் நெய்யைப் பெறமுடியாது. அதுபோல நம்மில் ஊறிப்போய் நிற்கின்ற அஞ்ஞானங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே நமக்குள் மறைந்து வாழ்கின்ற சத்தியத்தைக் காணமுடியும் என்பதன் அடையாளமாக, சத்தியத்தின் உருவகப் பொருளான நெய்யை யாக குண்டத்தில் இடுகின்றனர்.
பின்னர் ஸ்ருத் (சுருக்கு), ஸ்வரம் (சுருவம்) என்றழைக்கப்படும் ஹோமக் கரண்டிகளின்மேல் ஹோமத் திரவியங்களை ஒரு தட்டில் வைத்து மனதாலும், சொல்லாலும், செயலாலும், கைகளாலும், கால்களாலும், வயிற்றினாலும், மற்ற புலன்களாலும் நினைத்த, செய்த, சொன்ன எல்லாவற்றையும் "தானே பேசிய பேச்சு' என்னும் பொருளில் "ஸ்வாஹா' என்று சொல்லி, அக்னியில் இறங்கிய இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, மாவிலை, தர்ப்பையின் உதவியால் இறையருளை கும்பத்திலுள்ள நீருக்கு மாற்றுவார்கள்.
இறையருள் ஏறிய கும்பத்தில் எந்த இறைவனைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமோ அந்த தெய்வத்திற்குரிய ஆவாஹன மந்திரங் களால் சக்தியூட்டப்பட்ட நீர் இருக்கும். நீர் வடிவமற்றது. எதில் அதை வைக்கிறோமோ அந்த வடிவில் மாறும் இயல்புடையது. வடிவமற்ற நீரைப்போன்ற பரம்பொருளுக்கு வடிவத்தைத் தருவதற்காகத்தான் கும்பத்தில் நீரை வைக்கின்றனர். தொடர்ந்து கும்பத்திற்குப் பூஜைகள் செய்தும் வேத மந்திரங்களால் உருவேற்றியும் அதை தெய்வீக சக்தி நிரம்பியதாக்குகின்றனர்.
கும்பத்தில் உள்ள இறையருளை மீண்டும் ஆலயத்திலுள்ள பிம்பத்திற்கு தர்ப்பைக் கயிற்றின்மூலம் செலுத்தி கும்பத்திலுள்ள நீரினால் பிம்பத்திலும், கோபுரக் கலசங்களிலும் அபிஷேகம் செய்வார்கள். இதுவே கும்பாபிஷேகம் என்றழைக்கப்படும். இப்படி இறைசக்தியைப்பெறும் கர்ப்பகிரகத்துக் கல்லை, இறைவன் விசேஷமாக இருக்கும் இடம் என்ற பொருளில் "விக்ரகம்' என்று அழைத்து வணங்கி வழிபடுகிறோம். விக்ரகத்தில் இருக்கும் இறைசக்தியை நாம் நம்முடைய கைகளில் இருக்கும் காந்தசக்திமூலம் ஈர்த்துக்கொள்ள முடியும் என்பதாலயே, "ஆலயம் தொழுதல் சாலவும் நன்று' என்றனர். மூத்தோர் மொழிகளின் நிதர்சனத்தை உணர்ந்தவர்கள் இறையருளை எளிதில் பெறுகின்றனர். மாறாக மூத்தோர் மொழிகளை புறந்தள்ளிப் போகிறவர்கள் இறைவனிடமிருந்தும் விலகியே நிற்கிறார்கள்.
(தொடரும்)