மும்பை ராமகிருஷ்ணன்

கந்த சஷ்டி- 2-11-2019

முருகனைத்தான் தமிழ்க்கடவுள் என்பர்.

ஆழ்வார்கள் தீந்தமிழில் மகா விஷ்ணுவைப் பாடினர். தீந்தமிழில் சிவனை ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சிலர் தேவாரம், திருவாசகம் எனப் பாடினர். தமிழ்ச்சங்கம் மதுரையில் தான் இருந்தது. ஆயினும் முருகனைத் தான் தமிழ்க்கடவுள் என்பர்.

Advertisment

தென்னிந்திய- மேற்காசிய நாடுகளில் நிகழ்த்தப்பெற்ற அகழாய்வு கள் கி.மு. 4,000 ஆண்டுக்கும் முன்பே முருக வழிபாடு இருந்ததைக் கூறுகின் றன. திருநெல்வேலி- ஆதிச்சநல்லூர் அருகே பழந்தமிழ் நாட்டின் துறைமுகமான கொற்கை அருகே கி.மு. 1,000 ஆண்டைச்சார்ந்த ஈமத்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் காவடி, வேல், சேவல் போன்ற முருக வழிபாட்டுச் சின்னங்கள் உள்ளன.

இறந்த மனிதர் பயன்படுத்திய பொருட் களைப் புதைப்பதே ஈமத்தாழிகள். வழிபட்டவை புதைக்கப்பட்டுள்ளன.

கி.மு. 400-ஐச் சேர்ந்ததாகக் கருதப் படும் தொல்காப்பியம் "வேலன் வெறியாடல்' பற்றிக் குறிப்பிடுகிறது. முருகன்போல் வேடம் பூண்டு கையில் வேலேந்தி ஆடும் மலைநாட்டுப் பூசாரி யாகிய வேலன், களம் அமைத்துப் பூசை யிட்டு ஆடிப்பாடி வழிபாடு செய்தலே வெறியாட்டம்.

Advertisment

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல் களில் கிடைக்கும் குறிப்புகளால் முருகனின் கொடி, ஆயுதம், ஊர்தி மற்றும் புராணங் கள், தத்துவம் போன்றவற்றை அறியமுடி கிறது. பரிபாடலில் எட்டுப்பாடலும், திரு முருகாற்றுப்படையும் முருகவழிபாட்டை மொழிகின்றன.

முருகு, செருமிகுசேய், கடம்பமர் செவ்வேள், ஆல்கெழு கடவுள் புதல்வன், ஆல மர்ச்செல்வன், குறிஞ்சிக்கிழவன், செவ்வேள், கொற்றவைச் சிறுவன், வானோர் தானைத் தலைவன் என்ற பெயர்களால் முருகன் சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்படுகி றான். புறநானூறு (55), அகநானூறு (266) ஆகிய பாடல்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டு வணிகர்களாலேயே முருகன் வழிபாடு மேற்காசிய நாடுகளில் பரவியது. தமிழகத்துக்கும் அந்நாடுகளுக்கும் இடையேயான வணிகத்தொடர்பு கி.மு. 4,000 ஆண்டுகளுக்குமுன்பே இருந்ததாக அகழாய்வுகள் குறிப்பிடுகின்றன. முருக வழிபாட்டின் சின்னங்கள் அந்நாடுகளிலும் கிடைத்துள்ளன.

முருகனை தொல்காப்பியர் "கந்தழி' (கந்து+அழி) என்கிறார். கந்து என்றால் பற்றுக்கோடு. இதன் தத்துவம் என்ன? உனக்குப் பற்றுக்கோடு முருகனே. மற்ற பற்றுகளை நாடாதே; அழித்துவிடு!

போரில் வல்லவனானதால் சிறந்த பறவை யான சேவலைக் கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் கொண்டானாம்.

குறிஞ்சி நிலக்கடவுள் முருகன். அருவி வளம், மலைவளம் மிகுந்தது குறிஞ்சி நிலம். ஆக, சேக்கிழார் "ஞாலமலிந்த மேன்மைத்தமிழ்' என்று குறித்தார்.

நற்றிணைமுதல் புறநானூறு ஈறாக எட்டு நூல்களில் "முருகன்' என்ற சொல் உள்ளதால் முருகன் தமிழ்க்கடவுளே! திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் சங்க காலத்திலேயே இருந்ததாலேயே, நமக்கு நக்கீரர்மூலம் திருமுருகாற்றுப்படை, அவதார லீலைகள், இடங்கள் கிடைத்தன. "மகப்பேறு பெற முருகன் வழிபாடு' என்று 3,000 ஆண்டுகளுக்குமுன்பே "ஐங்குறுநூறு' கூறுகிறது.

mm

கந்தன் உதித்தது வைகாசி விசாகம். கார்த்திகைப் பெண்கள் பாலூட்டினர். முருகன் அவதாரம் நிகழக் காரணம் சிவவரம் பெற்ற சூரபத்மாதியரை அழிக்கவே. அது நடந்த தினம் தீபாவளிக்கு அடுத்துவரும் வளர்பிறை சஷ்டி. எனவே அவன் சஷ்டி விரதப்ரியன். மாத விசாகம், கார்த்திகை, வளர்பிறை சஷ்டி ஆகிய தினங்கள் விரதம் அனுஷ்டித்து வேண்டுவன பெறும் நாள். "சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்பது பழமொழி. அதாவது "சுக்ல சஷ்டி விரதமிருந்து கந்தனைத் துதித்தால் கருப்பையில் சிசு வளரும்' என்பது பொருள்.

"ஸ்காந்தம்' கந்தன் அவதார லீலைகளைக் கூறும். முருகனே அடியெடுத்துக் கொடுக்க, காஞ்சி குமரக்கோட்ட கச்சியப்ப சிவாச்சார் யார் தமிழில் கந்த புராணம் (10,345 துதிகள்) எழுதியுள்ளார். காளிதாசர் வடமொழியில் "குமார சம்பவம்' இயற்றியுள்ளார். வால்மீகி இராமாயணத்தில் விஸ்வாமித்திரர், ராம- லட்சுமணர்களுக்கு கந்தனின் வீரம் செப்பி யுள்ளார்.

ஊமை குமரகுருபரர் செந்திலாண்டவன் அருளால் 122 வரிகளில் "கந்தர் கலிவெண்பா' என்று குட்டி கந்தபுராணம் பாடியுள்ளார்.

தருமபுர ஆதீன மடாலயத்தைச் சேர்ந்த சம்பந்த சரணாலயர் வடமொழி, தென்மொழி, புராணம், இதிகாசம், வேதம், உபநிடதம் எல்லாவற்றையும் ஆழ்ந்து கற்றவர். மைசூரை ஆண்ட மன்னன் கன்னடம், தமிழ், வடமொழி என ஆழ்ந்து அறிந்தவன். புராண இதிகாசக் கவிதைகளில் ஈடுபாடு கொண்டவன். அவன் ஒருசமயம் தனது சந்தேகங் களைக் களைய தருமபுரம் ஆதீனம் வந்தான். அங்கு சம்பந்த சரணாலயரின் ஆழ்ந்த அறிவை வியந்தான். அவன் சம்பந்தரை தனது அரண்மனைக்கு அழைத்துச்சென்று உரையாடி மகிழ்ந்தான். சம்பந்தரோ அரச போகம் விரும்பாமல் மதுகரி (பிச்சை) எடுத்தே உண்டார். அரசன் கச்சியப்பரின் கந்தபுராணத்தை தத்துவம், லீலைகள் குறையாமல் சுருக்கித்தர வேண்ட, "கந்தபுராண சுருக்கம்' என்று 1,049 துதிகளில் செய்தார். அது திருச்செந்தூர் கந்தன் சந்நிதியிலேயே அரங்கேற்றம் செய்யப்பட்டது. கச்சியப்பரின் 10,339-ஆவது வாழ்த்துப்பாடல் என்ன?

"ஆறிருதடந் தோள் வாழ்க

அறுமுகம் வாழ்கவெற்பைக்

கூறுசெய் தனிவேல் வாழ்க

குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞை வாழ்க

யானைதன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க

வாழ்க சீரடியாரெலாம்."

சம்பந்தரின் 1,049-ஆவது வாழ்த்துத் துதி சிந்திப்போமா...

"துய்ய தாமரை களாலும் துதித்திட அரியதான

செய்ய வேள் அடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க

வெய்ய சூர் மார்பு நீண்ட வேற்படை வாழ்க அன்னாள்

பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்க இம்புவன மெலாம்.'

(கந்த புராணச் சுருக்கப் புத்தகம் தருமபுர ஆதீன மடத்தில் கிடைக்கிறது.)

இப்போது கந்தன் சிவகுருவா- சிவசீடனா என்ற வினோதத்திற்கு வருவோம். இரண்டு மானவன் அவன்? சிவகுரு

பிரம்மன் சிவதரிசனத்திற்கு கயிலாயம் வந்தார். வழியே சிறுவன் கந்தன் விளையாடிக் கொண்டிருந்தான். பெரியவர் சிறுவனைப் பார்த்து "நலமா' என ஆசிகூறவேண்டாமா? இல்லை. திரும்பிவரும் சமயமாவது செய்யவேண்டுமல்லவா? இல்லை. ஆக குமரன் கேட்டான்: ""நீவீர் யார், என்ன செய்கிறீர்?'' பெரியவர், சிறுவன் ஏதோ கேட்கிறானே என்று பவ்யமாகக் கூறக்கூடாதா? "என்னைப்போய் இவ்வாறெல் லாம் நீ கேட்கலாமா' என்கிற தோரணையில், ""நான் பிரம்மன், படைப்பிக்கிறேன்'' என்றார். கந்தன், ""எதனை ஆதாரமாகக் கொண்டு?'' என்று கேட்டான்.

""வேதத்தை...''

""அதைச் சொல்லும்.'' "

பிரம்மன் இவன் என்ன என்னை இவ்வாறு கேட்கலாம் என்கிற தோரணையில், "ஓம்' என ஆரம்பித்தார்.

உடனே கந்தன், ""ஓம் என்றீரே, அதன் பொருளென்ன?'' என்றான்.

""பொருளா...'' என்று திகைத்து நின்றார்.

""பொருள் உணராமல் படைக்கிறீர்; படைப்புகள் கேவலம் போலும்'' என்று பிரம்மனை சிறையிலடைத்தான். கந்தன் படைத்தல் தொழிலைத் தானே ஏற்றான்.

இதனையறிந்த சிவபெருமான், நந்தி கேஸ்வரரை அனுப்பி பிரம்மனை விடுவிக் கச் சொன்னார். அது நடக்காததால் சிவ பெருமானே வந்தார். கந்தனிடம், ""பிரம் மனிடம் "ஓம்' எனும் பிரணவத்துக்குப் பொருள் கேட்டாயே. நீ அறிவாயா?'' என்றார்.

கந்தனோ, ""கேட்கவேண்டிய முறைப்படி கேட்டால் சொல்வேன்'' என்றான்.

ஆக, சிவன் கீழே அமர்ந்து கைகட்டிட, (சிவன் தன் கைகளில் ஏந்தினார் என்றும் கூறுவர்) கந்தன் ரகசியமாக சிவன் காதில் பிரணவப்பொருள் கூற, சிவன் மகிழ்ந்தாராம். ஆக கந்தன் பெயர் சுவாமிநாதன், சிவகுரு நாதன், ஞானகுரு, ஞானஸ்கந்தன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் ஆயிற்று! அந்த தலமே திருவேரகம் எனப்படும் நான்காம் படைவீடான சுவாமிமலை. கும்பகோணம் அருகே உள்ளது.

திருத்தணியிலும் சிவன் முருகனை தியானித்து உபதேசம் பெற்றாராம். கதையை மீண்டும் ரசிக்கலாமா...

சிவபெருமான், ""நான் உனக்குப் பிரணவப் பொருள் போதிக்கவில்லையே. நீ எவ்வாறு அறிந்தாய்?'' என்று கேட்டாராம்.

""நீவீர் எனது அம்மைக்கு போதித்தீர்.

அம்மை மயில் அழகில் லயித்தாள். போதனை என் காதில் விழுந்தது. உணர்ந்தேன்'' என்றான்.

""ரகசிய உபதேசங்களை அவ்வாறு கேட்கக் கூடாதே? எனவே நீ மீண்டும் பிறந்து என்னைத் துதித்துப் பாடவேண்டும். அச்சமயம் நாமே உனக்கு ஞானமூட்டுவோம்'' என்றார் சிவன்.

அதற்குக் கந்தன், ""நான் ஒன்றும் திருட்டுத் தனமாகக் கேட்கவில்லையே. காதில் விழுந்தது; கேட்டேன். இதுதான் உங்களது சாபமென்றால், நீவீரும் மீண்டும் பிறந்து என்னைத் துதித்துப்பாட வேண்டும். நாமே உமக்கு ஞானமூட்டுவோம்'' என்றான்.

ஆகவே, கந்தன் ஞானசம்பந்தனாகப் பிறக்க, சிவ- பார்வதி ஞானப்பாலூட்ட, சிவனை தலம் தலமாகப் பாடினார்.

சிவனே அருணகிரியாக உதிக்க, கந்தன் அருணாசலத்தில் "முத்தைத்தரு பத்தி' என்று ஞானமூட்ட, தலம் தலமாக அருணகிரியார் கந்தனைத் திருப்புகழ் என்று பாடினார். சிவ உன்னதத் தலம் திருவண்ணாமலையை நாடினார். திருப்புகழ் பாக்களில் ஞானசம்பந்தரை முருகனாகவும் போற்றுவார்.

ஆக சிவன்- கந்தன் ஆகியோரில் யார் குரு? யார் சீடன்?

கந்தனது சிவபூஜை

(சூரசம்ஹாரத்துக்கு முன்)

கந்தபுராணம் கூறும்- தாரக சம்ஹாரம் நடந்தபிறகு கந்தன் பல சிவத் தலங்களை தரிசித்தான்; பூஜித்தான் என்று; அவை யாவை? (ஸம்பவ காண்டம்- 48-ஆம் அத்தியா யம்). கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காள ஹஸ்தி, வேங்கடாசலம் (திருப்பதி), திருவாலங் காடு, காஞ்சி ஏகாம்பரநாதர், குமரக் கோட்டம், திருவண்ணாமலை, திரு வெண்ணெய்நல்லூர், விருத்தாசலம், சிதம்பரம், மாயூரம், குமாரபுரம் எனும் சேய்- நல்லூர் எனும் சேங்கனூர் (சண்டேஸ்வரர் அவதரித்த தலம்), காஷாபுரம் எனும் சீர்காழி (இரவு தங்கல்), காலை ஆழ்ந்த சிவபூஜை செய்தான். சிவன் "சாங்கராஸ்த்ரம்' தந்தார். மேலும் திருப்பரங்குன்றம், பின்பு திருச்செந்தில் வந்தடைந்தார். பிரமனை தண்டித்த தோஷம் போக்க முருகன் தீர்த்தம் உண்டாக்கி சேங்கனூர் சிவனை வணங்கி தோஷம் விலகினார். (மேலும் சூரபத்மனை வதைக்க ருத்ரபாசுபத படையைப் பெற்றார்).

கந்தனது சிவபூஜை

(சூரசம்ஹாரத்துக்குப் பின்)

சூரபத்மாதியர் பரமசிவ பக்தர்கள். அவர்களைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க முருகன் மலர், ருத்ராட்ச மாலை சகிதமாக சிவபூஜை செய்ததே திருச்செந்திலாண்டவன் திருக்கோலம். முருகன் பூஜித்த ஐந்து சிவலிங்கங்களை கருவறைக்குப் பின்னுள்ள குகையில் காணலாம்.

திருச்செந்திலில் பூஜித்தும் சூர சம்ஹார தோஷம் முற்றும் தீராததால் திருமுருகன்பூண்டித் தலம் வந்து, மீண்டும் திருச்செந்தில் முருகன் போன்ற உருவத்திலேயே நின்ற கோலத்தில் சிவபூஜை செய்கிறார். தலப்பெயர் கந்தமாபுரி, முல்லை வளம், மாதவிவனம். சிவன் பெயர்: திருமுருக நாதேஸ்வரர், முருகாவுடையார். அம்பாள்:

முயங்கு பூண்முலை வல்லியம்மை; ஆவுடை நாயகி.

மேலும் அமர்நாத்தில் (பனிலிங்கம்) சிவன் உமைக்கு பிரம்மவித்யை உபதேசித்துக் கொண்டிருந்தாராம். (திருவெண்காடு தேவி பெயர் பிரம்மவித்யாம்பிகை). முதலில் கந்தன் கேட்க, "நீ அதையறியத் தகுதியில்லை' என்றா ராம். முருகன் பிரம்மவித்யை அறியாமல் என்ன பயனென்று ஒரு புறா வடிவமெடுத்து மேலே விசனத்துடன் சென்றாராம். சிவன் தன் மைந்தன்மீது கருணைகாட்ட, மேலே சென்ற புறா கீழே இறங்கிவந்து உபதேசம் கேட்டதாம். சிவன் உமைக்கு உபதேசிக்கும் பிரம்மவித்யையைக் கேட்கும் புறாவை, அத்தகைய பனிப்பிரதேசத்தில் இன்றும் காணலாம்.

ஆக, இதன்மூலம் கந்தன் சிவகுருவாகவும், சிவபூஜை செய்பவனாக வும் இருந்தான் என்று உணர முடிகிறதல்லவா! கந்தன் சிவனது மறுவுருவமே!