லங்காரமென்பது ஒரு மனிதனின் வாழ்வில் சாந்தத்தைத் தந்து, பிறரிடம் அன்புசெலுத்தக் கற்றுத்தரும் மிகப்பெரிய சாதனை முறையாகும்.

ஒருவர் கடவுள் வேஷம் தரித்துக்கொண்டு வந்தாலே அவரை தெய்வமாக நினைக் கத் தோன்றுகிறது. அவரை சேவிக்கத் தோன்றுகிறது.

அப்படியிருக்க கடவுளுக்கே அலங்காரம் செய்யும் பொழுது நம் எண்ணங்கள் மாறாதா?

கடவுளின் அருளைப்பெற அலங்காரம் என்பது அழகான சாதனை முறையாகிறது.

Advertisment

அழகான கடவுளின் உருவங்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் முறையே அலங்காரம். அதாவது கருங்கற்களிலான சிலை வடிவங்களையே மூலவர் விக்ரகங்கள் என்று சொல்கிறோம்.

இந்த மூல விக்ரக அலங் காரங்கள் மூலவர் அலங்காரங் கள் என்றும், பஞ்ச உலோகங் களாலான உற்சவர் விக்ரகங் களுக்கு செய்யப்படும் அலங் காரங்கள் உற்சவ அலங்காரங் கள் என்றும் அழைக்கப்படு கின்றன. பொதுவாக அலங் காரங்கள் என்றால் ஒரு வடிவத்தை அழகாகவும், ரசனையுடனும் நாம் விரும்புவதுபோல் செய்வதே யாகும்.

"இடுப்பில் ஒலிக்கும் தங்க ஒட்டியாணமுள்ளவளும், மதயானையின் மஸ்தகம் போன்ற மார்பினால் கொஞ்சம் குனிந்திருப்பவளும், திருஸமான இடுப்புடையவளும், பூர்ண சந்திரன் போன்ற முகமுள்ளவளும், கரும்புவில், பாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை கைகளில் தரிப்பவளும், பரம சிவனின் பாதி நான் என்று சொல்லக்கூடிய அஹம் வடிவான தேவி என் முன்னே தோன்றட்டும்' என்று ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் அம்பாளை வர்ணிக்கிறார்.

Advertisment

ஒரு வடிவத்திற்கு அலங்காரம் செய்தால் தான் அழகு ஏற்படுகிறதா அல்லது அதை தான் அலங்காரம் என்று சொல்கிறார் களா என்ற எண்ணம் தோன்றும். ஆம்; உண்மைதான். சராசரி வடிவங்களுக்கு செய்யப்படும் அழகைப் பார்த்தால் சிறப் பாக உள்ளது என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால் ஒரு தெய்வ வடிவத் தைப் பார்க்கும்பொழுதுதான் அலங்கார மாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆக, அலங்காரம் என்னும் சொல் இறைவனின் அழகுக்கே உருவான சொல்லாகும்.

நம் பக்திமுறையை நெறிப்படுத்தவும், சீரமைக்கவும், இறைவனிடம் தோன்றும் நம் அளவில்லாத ஆசையைப் பூர்த்தி செய்யவும் மிக நேர்த்தியாக பெரியோர் களால் அமைக்கப்பட்டதே உருவ வழி பாடாகும். உலகில் இறைவனின் அருளால் பல இன்பங்கள் படைக்கப்பட்டன.

ஆனால் இவையனைத்திலும் ஓரளவுக்கு மேல் சலிப்பு தோன்றிவிடும். ஆனால் சலிப்பே தோன்றாத இன்பம் எதுவென் றால் அவன் அடியார்களுக்கும் அவனுக் கும் செய்யும் தொண்டேயாகும்.

அலங்காரமென்பது மிகப்பெரிய கடல். அக் கடலின் சில சிறுதுளிகள் பகவானின் அளவற்ற கருணையால் என்மீது விழுந்து, அந்த சிறு துளிகளில் நான் புரிந்துகொண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இறைவனின் அலங்காரத்தைப் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் அல்ல; ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது. அப்படியிருக்க சொற்களால் மட்டும் முடியுமா என்ன? பார்க்கப் பார்க்க இழுக்கும் அழகு, பார்த்தவுடன் மயக்கும் அழகு, பார்ப்பவர்கள் நெஞ்சைக் கவரும் அழகு, பார்த்தவுடன் பக்திப் பரவசத்தில் ஈர்க்கும் அழகு, கொஞ்சத் தோன்றும் அழகு- இதற்கும்மேல் பார்ப்பவர்களின் இதயத்தில் அமைதியையும் சாந்தத்தையும் தரவல்ல அழகு!

அதுதான் இறைவனின் அலங்காரம் எனப்படுகிறது. இறைவனை நேரில் காணும் அனுபவத் தைத் தரவல்லது இந்த அலங்காரம்.

aa

பக்த பிரகலாதர் இதை நவவித பக்தி என்று கூறுகிறார். அவை ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம நிவேதனம் என்பனவாகும்.

ஸ்ரவணம்- பக்திப் பாடல்கள், ஸ்லோகங் களைச் சொல்வது மற்றும் கேட்பது.

கீர்த்தனம்- பகவானைப் பற்றிய பாடல்கள் எழுதுவது மற்றும் பாடுவது.

ஸ்மரணம்- பகவானின் நாமத்தை உச்சரிப்பது.

பாதசேவனம்- பகவானின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்வது.

அர்ச்சனம்- பகவானுக்கு பூக்களால் அர்ச்சனை செய்வது.

வந்தனம்- பகவானைப் பிரார்த்திப்பது.

தாஸ்யம்- பகவானுக்கு தாசனாக இருப்பது.

சக்யம்- பகவானை நம் நண்பனாக நினைப்பது.

ஆத்ம நிவேதனம்- பகவானை முழுமையாக சரணாகதி அடைவது.

இப்படி ஏதேனும் ஒருமுறையில் பகவானை பக்தி செய்யவேண்டும். அதற்கு ஊன்றுகோலாக விளங்குவதே சுவாமி அலங்காரம். இந்த ஒன்பதுவிதமான பக்தி, பகவானின் அலங்காரத்தைப் பார்த்த மாத்திரத்தில் நமக்கு கண்டிப்பாகத் தோன்றும். அதில் ஐயமில்லை.

பகவானுடைய அழகான அலங்காரத்தைப் பார்த்தவுடன், சிலருக்கு அவருடைய பாடல்களைக் கேட்கத் தோன்றும். இதுவே ஸ்ரவணபக்தி. அதேபோல் சிலருக்குப் பாடி மகிழத் தோன்றும். அதுவே கீர்த்தனபக்தி. சிலருக்கு அவர் நாமத்தை உச்சரிக்கத் தோன்றும். இதுவே ஸ்மரண பக்தி.

சில சமயங்களில் அவர் அலங்காரத்தைக் காணும்பொழுது பகவானுக்கு தொண்டு செய்ய மனம் விழையும். இதை பாதசேவன பக்தி என்று கூறுவர். சிலருக்கு பகவான் நாமத்தைச் சொல்லி அர்ச்சனை மற்றும் பூஜைசெய்யத் தோன்றும். இதையே அர்ச்சன பக்தியென்று சொல்கிறார்கள். சிலர் அழகான அலங்காரத்தைக் கண்டவுடன் தன்னையறியாமல் கண்களில் நீர் பெருகி, தன் மக்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள். இதையே வந்தன பக்தி என்பர்.

சிலர் சுவாமிக்கே தாசனாகி, அவரைப் பற்றியே நினைப்பது, எண்ணுவது என்றிருப் பர். அதை தாஸ்ய பக்தியென்று கூறுவர். சிலர் இந்த அலங்காரத்தைக் கண்டவுடன், "இவர் நமது நண்பர், உறவினர்; நமக்குச் சொந்தமானவர்' என்னும் எண்ணம் பிறக் கும். இதுவே சக்ய பக்தியாகும். இவையனைத் துக்கும் மேலாக கண்களில் நீர் பெருகி, அவருக்கு நாம் முழுமையாக ஆட்பட்டவர் என்று எண்ணும்பொழுது அவர் நம் இதயத்தில் வாசம் செய்வார். இதுவே ஆத்ம நிவேதன பக்தியாகும்.

இப்படி அலங்காரத்தைக் காணும் பொழுது பக்தி மட்டுமல்லாமல், அவர்மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும், ஞானமும் பிறக்கிறதென்று பிரகலாதர் கூறியிருக்கிறார்.

ஒரு அறையில் பல ஆண்டுகளாக வெளிச்ச மில்லாமல் இருக்கிறது. ஆனால் ஒருவர் அந்த அறையில் விளக்கை ஏற்றியவுடன், இருளனைத்தும் விலகி ஒளி உண்டாகிறது. ஒரு விளக்கினால் எப்படி அந்த இருள் விலகி பிரகாசம் நிறைந்ததாகிறதோ, அதே போல் நம் மனதிலிருக்கும் துன்பங்கள், சந்தேகங்கள் என்னும் பல தீயவை அழிந்து நல்ல எண்ணங்களானது, அலங்காரம் என்னும் ஒளியை ஏற்றும்பொழுது கிடைக்கிறது.

da

புராணங்களிலும் இதிகாசங்களிலிருந்தும்கூட அலங்காரத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். பழம்பெரும் காவியமான வால்மீகி இராமாயணத்தில், கௌசல்யா தேவி ராமனுக்கு விதவிதமாக அலங்காரங்கள் செய்து அழகு பார்த்ததாக வும், சீதாராம கல்யாணத்தில் சீதைக்கும் ராமருக்கும் மிக அழகாக அலங்காரம் செய்து மகிழ்ந்தார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் சீதையின் புடவை பற்றி, அன்னப்பறவையின் பிம்பம் பொறிக்கப் பட்ட பட்டுப்புடவை என்று குறிப்பிடப்பட் டுள்ளது. ஏனெனில் சீதையின் நடை அன்னப் பறவைக்கு ஒப்பாக இருக்கும் என்பதனால். அதேபோல் ஸ்ரீராமனின் சுருள் கேசத்தில் நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கீரிடம் பொருத்தப்பட்டது; பட்டுப் பீதாம்பரம் அணிவித்து அழகுபார்த்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

தசரதர் தனக்கு நான்கு குழந்தைகள் பிறந்து விட்டார்கள் என்ற செய்தி தெரிந்ததும், அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தவேண்டு மென்று ஆணை பிறப்பித்துள்ளார். வனவாசத்தின்பொழுது சீதைக்கு ராமர், ரிஷிகள் அணியும் காவி உடைபோல் அணிவித்து, அவற்றின்மேல் பூக்கள், மணிகளால் அலங்கரித்துக்கொள்ள கற்றுகொடுத்தார் என்று அத்யாத்ம இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதேபோல், அனுமன் பரதனிடம் இலங்கையில் நடந்தவற்றைக் கூறி, ஸ்ரீராமர் அயோத்தி நோக்கி வந்துகொண்டிருக்கிறார் என்று சொன்னவுடன், பரதன் மிகவும் சந்தோஷத்துடன் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் நடக்கவேண்டுமென்று ஆணை பிறப் பித்தான். ஸ்ரீராம பட்டாபிஷேகத்தில் அனுமன் பிரியமுடன் ஸ்ரீராமருக்கு அலங்காரம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இரண்யகசிபு பல வரங்களைப் பெற்றவுடன் அனைத்து ஆலயங்களிலும் இறைவனின் சிலைகளை அப்புறப்படுத்திவிட்டு, தன் சிலைக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடக்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்துள்ளான். பின்பு பிரகலாதன் பிறந்தவுடன் உண்மையான பக்தியென்றால் என்னவென்பதை அனைவருக்கும் புரியவைத்தான். தன் தந்தை ஸ்ரீவைகுண்டம் சென்றபின் அரசனான பிரகலாதன், தனது தந்தையின் சிலைகளை அப்புறப்படுத்திவிட்டு, முன்புபோல் பகவான் சிலைகளை வைத்து அனைத்து சிறப்பு அலங்காரம், பூஜைகள் நன்கு நடக்கு மாறு அமைத்தான் என்று குறிப்புகள் உள்ளன. தசரதர், பரதன், பிரகலாதன் ஆகியோர் தங்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இறைவனுக்கு அலங்காரம் செய்து மகிழ்ந்துள்ளார்கள். அலங்காரம் இன்று, நேற்றல்லாமல், பல யுகங்களாக செய்யப்பட்டு வருகின்ற பழமையான உயர்ந்த கலை.

ஸ்ரீமத் பாகவதத்தில், யசோதா கண்ணனுக் குப் பலவிதமான அலங்காரம் செய்து ரசித்தாராம். அலங்காரப் பிரியரான நாராய ணன், கண்ணனாக அவதாரம் எடுத்தால் கேட்கவேண்டுமா? அதிலும் யசோதைக்கு பெண் குழந்தையென்றால் மிகவும் பிரியமாம். ஆகையால் கண்ணனுக்கு பெண்ணைப் போலவே புல்லாக்கு, ஜடை, தோடு, நெற்றிச்சுட்டி, ஒட்டியாணம், வளையல், மோதிரம் என்று அலங்கரித்து அழகு பார்த்தாராம்.

இதில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால் யசோதா அழகுபார்த்த புல்லாக்கு மயில் தோகையும், கோபி சந்தனமும் மிக முக்கிய அடையாளங்களாக கண்ணனுக்கு ஆகிவிட்டன. நாமுமகூட வீட்டின் பெண் குழந்தைகளுக்கு ராதா போலவும், ஆண் குழந்தைகளுக்கு கண்ணன் போலவும் அலங் கரிப்பது நமது இறைபக்தியின் வெளிப்பாடா கும். ஆம்; யாரொருவர் பகவானுக்கு உண்மை யாகவும், அன்பாகவும் ஒரு செயல் செய்கிறார் களோ, அதை பகவான் மட்டும் ஏற்றுக் கொள்வதோடு அல்லாமல், உலகனைத் துக்கும் பிரகடனப்படுத்துகிறார். மேலும் இந்த அடையாளங்களை நாம் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கண்டு தரிசிக்கலாம்.

அதேபோல் முருகனுக்கும் பார்வதிதேவி அவர் அழகை ரசித்து பலவிதமான சிறப்பு அலங்காரங்கள் செய்தார் என்றும் குறிப்புகள் உள்ளன. மீனாட்சி திருக்கல்யாணத்தில், சிவபெருமான் புலித்தோலும், ஜடாமுடியும் தரிக்காமல், பட்டுப் பீதாம்பரம் அணிந்து, தலையில் நவரத்தின கிரீடம் தரித்து, சர்வாலங்கார பூஷிதராக வரும்படி பார்வதி கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கிணங்க சிவபெருமானும் அவ்வாறே வந்து திருமணம் செய்துகொண்டார்.

ஸ்ரீநிவாச கல்யாணத்தின்போது சாட்சாத் சிவபெருமானும், பிரம்ம தேவருமே ஸ்ரீநிவாசருக்கு அலங்காரம் செய்தார்கள். அதேபோல் பத்மாவதிக்கு பார்வதிதேவியும், சரஸ்வதியுமே அலங்காரங்கள் செய்ததாகக் கூறுகிறார்கள்.

கோடி சூரியப் பிரகாசமாக விளங்கும் பகவானின் வடிவத்தை தரிசிப்பதென்பது அரிது. அதுவும் அலங்காரத்தோடு காண்பது அரிதினும் அரிது.

பகவானை அலங்காரத்தோடு பார்க்கும் பொழுது நிச்சயமாக அவரை உணரமுடியும். பக்தியுணர்வு மேலோங்கும். ஆசையும் அன்பும் கலந்த பக்தி தோன்றும். பகவானை முழுமையாக உணரும்பொழுது நம் மனம் நிம்மதியடைகிறது. கவலைகள், கஷ்டங்கள் பனிபோல் விலகுகின்றன. ஆக, பகவானின் பலவித அலங்காரங்களைக் கண்டு சகல நலன்களை அடையலாம்.

சந்தேகங்களுக்கு 73584 77073 என்னும் கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

(அலங்காரம் தொடரும்)

தொகுப்பு, படங்கள்: விஜயா கண்ணன்