ம் விருப்பத்திற்கேற்ப இறைவனுக்கு விதவிதமாக அலங்காரம் செய்யலாம். குறிப்பாக இருபது வகை யான அலங்காரங்கள் வழக்கத்தில் உள்ளன.

சந்தனக் காப்பு

பெரும்பாலும் மூலவர் விக்ரகங்களுக்குச் செய்வது வழக்கம். உற்சவர் விக்ரகங்களுக்கும் செய்வதுண்டு. ஆனால் இப்பொழுது நடைமுறையில் பிரசித்தமில்லை. சந்தனக் காப்பு செய்வதன் நோக்கமே நாம் நோயில்லா வாழ்க்கை வாழ்வதற்கும், மன அமைதி பெறுவதற்கும்தான். இந்த அலங்காரம் செய்வதற்கு நாம் எந்தவிதமான வடிவத்தைக் காட்டவேண்டுமென்று கற்பனை செய்து கொள்ளவேண்டும்.

உதாரணமாக, விநாயகரின் கல் விக்ரகம் அமர்ந்தபடி இருக்கிறதென்றால், அதை நாம் நின்றநிலையில் அலங்காரம் செய்யப் போகிறோம் என்று கற்பனை செய்து கொள்ளல்வேண்டும். பிறகு அந்த விக்ரக அளவுக்கேற்ப கால், கைகளைத் தயார்செய்ய வேண்டும்.

Advertisment

கார்ட்டன் துணியில் சந்தனத்தை சுற்றி, அதன் பின்பகுதியில் சிறு கட்டையை வைத்து (கை அளவுக்கேற்ப) தயார்செய்யவேண்டும். அதை விக்ரகத்துடன் கவசம் இணைப்பது போல் இணைக்கவேண்டும். பிறகு அதில் சந்தனத்தை சாற்றவேண்டும். நாம் முன்பே சொன்னதுபோல் சந்தனம் மிகவும் நெகிழ்வாகவோ அல்லது மிகவும் கெட்டியாகவோ இருப்பது கூடாது.

சந்தனம் மஞ்சள் நிறமாக இல்லாமல் வெண்மையாக இருத்தல் அழகு கொடுக்கும். பிறகு சந்தனம் சாற்றிய இடங்களில் மேடு பள்ளங் களை சரிசெய்து வழவழப்பை உண்டாக்க வேண்டும். பிறகு வஸ்திரத்திற்குத் தேவையான வண்ணங்களைக் கொடுக்கவேண்டும். (பிரஷ் மூலமாக). பிறகு அதில் பலவித வண்ணக் காகிதங் களை ஒட்டியும், திருவாபரணங்களை சாற்றியும் அழகுபடுத்தவேண்டும். கண்களுக்கு கருப்பு நூல் ஒட்டுவது தெளிவான அழகைக் கொடுக்கும். தேவைப்படும் இடங்களில் ஜிகினா பவுடர்கள் பயன் படுத்தி, பூக்களால் அழகு செய்து அலங்காரத்தை நிறைவு செய்யவும். முறையான அளவுகளை மேற்கொண்டு செய்யும்பொழுது முழு ஜீவனையும் அதில் காணலாம்.

வெண்ணெய்க் காப்பு

Advertisment

இந்த அலங்காரத்தை அனைத்து தெய்வங்களுக்கும் செய்யலாம். தற்பொழுது இது மிகவும் பிரசித்தமாக இருப்பது அனுமனுக்குதான். பகவானுக்கு உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தருவதற்காக இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. அத்துடன் நமது தோல் வியாதி, உடல்நலக் கோளாறுகள் நீங்கவும், நினைத்த காரியங்கள் கைகூடவும் செய்யப்படுகிறது. ஒரு அடி விக்ரகத்திற்கு ஒன்றரை கிலோ வெண்ணெய் சாற்றுவது அழகை மேலும் அழகாக்கும். வெண்ணெய்யை நன்கு கனமாக சாற்றவேண்டும். பிறகு அதில் பழங்கள், பருப்புகள் வைத்து அலங்கரிக்கலாம். பெரும்பாலும் வெண்ணெய்யில் முகம் அமைப்பது குறைவு. முகத்தைத்தவிர மற்ற இடங்களுக்கு சாற்றுவதே பல ஆலயங்களில் வழக்கமாகும். நீங்கள் தோற்றத்தை மாற்ற விரும்பினால் சந்தனக் காப்பைபோல கை, கால்களைத் துணியால் மட்டும் தயார்செய்து, அதை கவசம்போல் பிம்பத்துடன் இணைத்துச் செய்வது நன்று.

குங்குமக் காப்பு

இந்த அலங்காரம் அம்பிகைக்குரியதாகும். அம்பிகைக்கு மிகவும் பிரியமான வண்ணம் சிவப்பு. குங்குமத்தால் அர்ச்சனை செய்வதால் அம்பிகை மிகவும் சந்தோஷமடைகி றாள். குங்குமதால் அலங்காரம் செய் தால் வேண்டிய வரங்கள் அனைத் தையும் தருகிறாளாம். ரத்தத்திலுள்ள நோய்கள் குணமாகும் என்றும் சொல்கிறார்கள். இந்த அலங்காரத்திற்கு உகந்தது தாழம்பூ குங்குமமாகும். அது "மெரூன்' வண்ணத்தில் இருத்தல் அவசியம். குங்கும அலங் காரம், சந்தனத்தை மூலமாக வைத்து செய்யக்கூடியதாகும். ஏனெனில், சந்தனத்தில்தான் குங்கும் ஒட்டும். முதலில் சந்தனத்தை அம்பிகையின் உடல் முழுவதும் சாற்றி, அதன்பிறகு எங்கு வண்ணக் காகிதங்கள் வேண்டுமோ அங்கெல்லாம் வெறும் காகிதத்தை வைத்து, பிறகு குங்குமத்தை முழுவதும் சாற்றி, அதன்பிறகு வெறும் காகிதத்தை நீக்கிவிட்டு வண்ணக் காகித்தை வைக்கவேண்டும். பலவண்ண ஜிகினா பொடியை(Glitter Powder) தேவையான இடங்களில் வைத்து, பூக்கள்வைத்து அலங்காரத்தை நிறைவு செய்யவேண்டும். இதில் திருமுக மண்டலம் சந்தனத்தால் செய்வது மேலும் அழகைக் கொடுக்கும்.

mm

மஞ்சள் காப்பு

இந்த அலங்காரமும் பெரும்பாலும் பெண் தெய்வங்களுக்கு செய்யப்படுவது வழக்கம். துர்க்கை, மாரியம்மனுக்கு செய்யப் படுகின்றன. இது முழுவதும் மஞ்சளால் செய்யப்படுவது. ஆனால், ஒருநாள் மட்டுமே காணலாம். மறுநாள் மஞ்சள் உதிர்ந்துவிடும். மஞ்சளை சந்தனம் பிசையும் பக்குவத்திற்குப் பிசையவேண்டும். இந்தப் பக்குவம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. மஞ்சளில் முகம் அமைப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில் சந்தனத்தைப் போன்ற மென்மையைத் தராது. சந்தனத்திலேயே திருமுக மண்டலம் அமைத்திடல் வேண்டும்.

நகை

இது அனைத்து தெய்வங்களுக்கும் செய்யப்படும் அலங்காரமாகும். மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் செய்யப் படுகிறது. இந்த நகை அலங்காரம் முழுவதும் திருவாபரணங்களால் செய்யப்படுவதாகும். பகவானின் திருமுடி முதல் திருவடிவரை அனைத்து அங்கங்களுக்கும் ஆபரணங்கள் அணிவிப்பதே திருவாபரண அலங்கார மாகும். சேலம்போன்ற ஊர்களில் வெகு விமர்சையாக செய்யப்படுகிறது. இந்த அலங்காரம் அட்சய திரிதியை, வருடப் பிறப்பு போன்ற சிறப்பு நாட்களில் செய்யப்படுகிறது. இதற்கென்று திருவாபரணங்கள் பிரத்யேகமாக அமைப்பது அவசியமாகும். இந்த அலங்காரம் செய்வதன் நோக்கம், அம்பிகை சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சிதந்து, பக்தர்கள் வேண்டிய வரத்தையும், செல்வச் செழிப்பையும், அஷ்ட லட்சுமி கடாட்சத்தையும் தந்தருளவே!

அரிசிமாவு

இந்த அலங்காரம் பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் பிரசித்தமாக இருக்கிறது. பெருமாளின் திருமேனியில் சேரும் பிசுக்குகளை அகற்றி பொலிவுபெறச் செய்ய வருடத்திற்கு ஒருமுறை அரிசிமாவால் அலங்காரம் செய்யப்படுகிறது. சில வைணவ ஆலயங்களில் திருமுக மண்டலத்திற்கு அரிசிமாவு சாற்றும் வழக்கம் மிகவும் குறைவு. ஆக, நாம் அந்தந்த ஆலயங்களின் வழக்கத்தைப் பின்பற்றி செய்வது நன்மை தரும். அரிசிமாவும் மஞ்சளின் தன்மை கொண்டது. இந்த அலங்காரத்தையும் ஒருநாள் மட்டுமே தரிசிக்கமுடியும். மறுநாள் உதிர்ந்துவிடும். பெருமாள் திருமேனியில் அரிசிமாவை சாற்றி, வண்ணக் காகிதத்தை ஒட்டி, வண்ணங்களைத் தீட்டி, திருவாபரணங்களை சாற்றி அழகுபடுத்தலாம். முன்னர் வெறும் அரிசிமாவை மட்டும் சாற்றுவதுதான் வழக்கம். தற்காலத்தில், பார்ப்பதற்கு அழகையும் பக்தி உணர்வையும் கொடுப்பதற்கு இதுபோன்று செய்யப்படுகிறது.

பழம்

இது அனைத்து தெய்வங்களுக்கும் செய்யப்படும் அலங்காரமாகும். மூலவர் மற்றும் உற்சவர்களுக்குச் செய்யலாம். ஆனால், மூலவர் விக்ரகங்களுக்குச் செய்வதே பிரசித்தம். இதில் இரண்டுவிதமான அலங்காரங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, அனைத்துவித பழங்களையும் கோர்த்து மாலையாகச் சாற்றுவது; மற்றொன்று வெண்ணெய்யை மூலமாகக்கொண்டு, ஒவ்வொரு பாகத்திற்கு ஒவ்வொரு பழங்களாக வைப்பது. இதில் இரண்டாவது வகை மிகவும் அழகைத் தரும். ஏனெனில் பகவானின் திருமேனியில் பழத்தினால் செய்த கவசம் போன்ற அமைப்பைத் தரும். நினைத்த காரியம் நிறைவேறவும், மன அமைதி ஏற்படவும் இவ்வாறு அமைக்கப்படுகிறது. இந்த அலங்காரத்தில் பகவானின் திருமேனி பாகங்களைத் தனிதனியே காட்டுவதற்கு தொய்நூல் பயன்படுத்துவது மேலும் அழகைத் தரும்.

ஸ்வர்ணம்

ஸ்வர்ண அலங்காரம் என்பது காசு, ரூபாய் நோட்டுகளால் செய்யப்படுவதாகும். இந்த அலங்காரம் அனைத்து தெய்வங்களுக்கும் செய்வது சிறப்பாகும். ஆனால், பெரும்பாலும் லட்சுமிதேவிக்கே செய்யப்படுகிறது. அதிலும் மூலவர் விக்ரகங்களுக்குச் செய்வது மிகவும் பிரசித்தமாகும். காசுகளால் அலங்கரிக்கப் போகிறீர்கள் எனில் காசுகளை மட்டும் பயன்படுத்தவேண்டும். ரூபாய் நோட்டுகள் எனில் அதைமட்டும் பயன்படுத்துவது அழகைத் தரும். காசுகளால் செய்யும்பொழுது சந்தனத்தை மூலமாகக்கொண்டு செய்திடல் வேண்டும். ரூபாய் நோட்டுகள் எனில், அதைக் கோர்த்து பகவானின் திருமேனியில் அமைப்பது அழகைக் கொடுக்கும். வீடுகளில் எப்பொழுதும் செல்வச்செழிப்பு ஏற்படவே இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. தங்கத்தினாலான காசுகள் அல்லது திருவாபரணங்களை (நகை) சாற்றுவதும் ஸ்வர்ண அலங்காரமாகும்.

லட்டு

லட்டு அலங்காரம் அனைத்து தெய்வங் களுக்கும் செய்யப்படுகிறது. பொதுவாக மூலவர் விக்ரகங்களுக்குச் செய்வதே சிறப் பாகும். விசாகப்பட்டினத்திலுள்ள சம்பத் விநாயகர் திருக்கோவிலில் இந்த அலங்காரம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. லட்டுகளால் அர்ச்சனை செய்யும் வழக்கங்களும் உள்ளன. இந்த அலங்காரத்தில், விதவிதமான உணவு வண்ணங்களைக்கொண்டு பிரத்யேகமாக லட்டுக்களைச் செய்து அலங்காரம் செய்வர். இது வெண்ணெய்யை மூலமாகக்கொண்டு செய்யப்படுகிறது. வாழ்க்கையில் பக்தர்களுக்கு மேன்மையை அளிக்க மற்றும் கஷ்டங்கள் தீர செய்யப்படும் அலங்காரமாகும்.

தாம்பூலம்

முழுவதும் வெற்றிலையால் பகவானை அலங்கரிப்பதாகும். அத்துடன் பாக்கு, பூக்கள் சேர்ப்பது அழகைத் தரும். இது அனைத்து தெய்வங்களுக்கும் செய்யப் படுகிறது. குறிப்பாக அனுமனுக்கும், தேவிக்கும் செய்வது மிகவும் விசேஷமாகும். இந்த அலங்காரமும் வெண்ணெய்யை அடிப்படையாக வைத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் வீடுகளில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கும், சீக்கிரத்தில் திருமண மாவதற்கும் இது செய்யப்படுகிறது.

இனிப்பு

இதில் அனைத்துவிதமான இனிப்புகளும் பயன்படுத்தலாம். நம் கற்பனைக்கேற்றாற் போல ஒவ்வொரு இனிப்பையும் கலை நயத்துடன் சேர்த்துவைப்பது அழகைத் தரும். உதாரணத்திற்கு, அம்பிகையின் வடிவை எடுத்துக்கொள்வோம். ஜாங்கிரியால் புடவையின் கரைகளை வைத்து, கேக்குகளால் திருக்கரங்கள், திருக்கால்களை அமைத்து, பாதுஷாவை கிரீடங்களுக்கு அலங்கரித்து, லட்டால் டாலரை அமைத்து, பால்கோவாவில் அம்பிகையின் கைகளை அமைத்து, குலோப்ஜாமுனால் கிரீடங்களின் விளிம்புகளை அமைத்து, வேறுசில வண்ண கேக்குகளை அம்பிகையின் திருமேனியில் சாற்றி, அதன்பிறகு மேடுபள்ளங்களை சரிசெய்து, திருமுக மண்டலத்தை சந்தனத் தால் அலங்காரம் செய்து பார்க்கும்போது, அனைத்து இன்பங்களின் வடிவாக அம்பிகை விளக்குவதைக் காணலாம். அனைத்து சுகபோகங்களும் பெற இனிப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

வடை

வடை அலங்காரம் என்பது மூலவர் விக்ரகங்களுக்கு- குறிப்பாக ஆஞ்சனேயர் மூலவர் விக்ரகங்களுக்குச் செய்வது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வடையை மாலையாகக் கோர்த்து அனுமனுக்கு அணிவிப்பது ஒருவித அலங்காரம். மற்றொன்று, அனுமன் திருமேனியில் வெண்ணெய் சாற்றி, அதன்மேல் உணவு வண்ணங்களால் செய்யப்பட்ட வேறு வடைகளைக் கொண்டு ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒவ்வொரு வகையாக அலங்கரிப்பது. நாம் நினைத்த காரியம் கைகூடவும், கஷ்டங்கள் நிவர்த்தியாகி தோஷங்கள் அகலவும் இது செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாகப் பார்த்தோமேயானால் உளுந்து உடலுக்கு வலுவைத்தரும். அனுமனுக்கு வடையால் அலங்காரம் செய்து அதைப் பிரசாதமாக உண்ணும்பொழுது நம் உடலுக்கு வலுவைத் தருகிறது.

(அலங்காரம் தொடரும்)

சந்தேகங்களுக்கு கைபேசி: 73584 77073

தொகுப்பு, படங்கள்: விஜயா கண்ணன்