சுவாமி அலங்காரம் என்பது மூலவர், உற்சவ விக்ரகங்கள், சுதை வடிவங்கள் அல்லது பொம்மை களுக்குச் செய்யப்படுவது.
மூல விக்ரகங்கள் என்று சொல்லப் படும் சிற்பங்கள் கருங்கற்கள் மற்றும் பலவித கற்களால் செய்யப்படுபவை. இந்த சிற்பங்களுக்கு அழகுசேர்த்து பற்பல வடிவங்கள் கொடுப்பதே அலங்காரங்களாகும். உற்சவ விக்ரகங் கள் பஞ்சலோகத்தினால் ஆனவை. தங்கம், வெள்ளி, செப்பு, பித்தளை, ஈயம் என்று ஐந்து வகையான உலோகங்களால் செய்யப்படுவதே பஞ்சலோக விக்ரகங்கள். இவற்றை மேலும் அழகுபடுத்துவதே உற்சவர் அலங்காரங்களாகும். மூன்றாவதாக சொல்லப்படுவது சுதை வடிவங்கள். இவை சுண்ணாம்பு மற்றும் பலவித வண்ணங்களால் செய்யப்படும் பொம்மைகளாகும். இந்த பொம்மை வடிவங்களுக்கு அலங்காரம் செய்வது மிகமிகக் குறைவு.
ஆயகலைகள் 64-ல் அலங்காரக் கலையும் ஒன்று. இது 18-ஆவது கலையாக விளங்குகிறது. இது மூலவர் சிலைகள், உற்சவர் விக்ரகங்கள் மற்றும் சுதை பொம்மைகள் செய்வதைச் சார்ந்தது.
ஸ்ரீமத் பாகவத புராணத்தின்படி பகவான் கிருஷ்னர் 64 கலைகளையும் 64 நாட்களில் கற்றுக் கொண்டாராம். ஆய கலைகள் 64-ல் ஒவ்வொரு கலையின்கீழ் பல கலைகள் அதைச் சார்ந்திருக் கின்றன.
உதாரணமாக இசைக்கலையை எடுத்துக் கொண்டால் அதில் இசைக் கருவிகள் வாசிப்பது ஒரு கலையாகும். அதற்குள் வீணை, யாழ், மிருதங்கம், தவில், நாதஸ்வரம், புல்லாங்குழல் மற்றும் பல இசைக்கருவிகள் உள்ளன. அவற்றுள் வீணையை எடுத்துக்கொண்டால் மோகன வீணை, சரஸ்வதி வீணை, ருத்ர வீணை என்று பல வகைகள் உள்ளன.
அதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
ஒரு இசைக் கலைக்குள் இத்தனை கிளைக் கலைகள் என்றால் 64 கலைகளுக்கு எத்தனை கிளைக் கலைகள் இருக்கும்!
ஒரு வடிவத்தை அமைப்பவரை சிருஷ்டி கர்த்தா என்று கூறுவார்கள். வடிவங்களையோ சிற்பங்களையோ செய்ய முக்கியமாகத் தேவைப்படுவது அளவுகளும், லட்சண பிரம்மாணங்களுமாகும்.
ராஜராஜ சோழன் தஞ்சையில் பல கலைகளை வளர்த்து வந்தார். அவற்றுள் அலங்காரமும் ஒன்றாகும். இப்பொழுது செய்யப்படும் அலங்காரங்கள் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவும், பழைமை மாறாமலும் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இந்த அலங்காரத்தில் பயன்படுத்துவது லட்சண அமைப்புகள்தான். இவை நன்கு தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டே தஞ்சை மன்னரால் பெரியகோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவிலில் செய்யப்பட்டது.
வடிவங்களுக்கும், லட்சணத்திற்கும், அலங்காரத்திற்கும் இத்தகைய முக்கியத் துவம் கொடுக்கக் காரணம், ஜீவகலையை உணரவே. அதனால்தான் நாம் பார்த்த வுடன் பக்திப் பரவசத்தையும், பகவானையும் அனுபவிக்கமுடிகிறது. பகவானை நேரில் காண்பதுபோல் உணரமுடியும். எப்படி மந்திரங்கள் சொல்லும்பொழுது பிழையேற்பட்டால் அதன் பொருள் மாறுகிறதோ, அதேபோல் அலங்காரத்தில் அளவுகளும், லட்சணங்களும் மாறும் பட்சத்தில் ஜீவனில்லாமல் ஆகிவிடுகிறது. நாம் செய்யும் பூஜைகளும் வேண்டுதல் களும் பலிக்காமல் போகிறது.
பிரம்மதேவர் மிகச்சிறிய அணுவினுள் குழந்தையின் அளவுகளை சிருஷ்டிக்கிறார்.
அதே குழந்தை பெரியவர்கள் ஆகும் வரை அவர்களின் அளவுகள் சிருஷ்டிக்கப் படுகின்றன. அதன் முக பாவங்கள், அமைப்பு கள் என்று அனைத்தையும் அதனுள் அடக்கி யுள்ளார். ஆக, அளவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
அலங்காரக் கலையில் ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, அழகுக்கலை போன்றவை அடங்கியுள்ளன.
இவையனைத்தும் ஒன்றுசேரும்பொழுது தான் அலங்காரம் என்னும் கலை உருவாகிறது.
ஓவியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றால் நன்கு அலங்காரம் செய்ய முடியும். ஏனெனில் ஓவியத்தில் வரும் அளவுகள், நளினங்கள், வடிவங்கள், கைவாகு மற்றும் வண்ணங்கள் என அனைத்தும் அலங்காரத்தில் உபயோகப் படுத்தப்படுகின்றன.
சிற்ப சாஸ்திரம் தெரிந்தால் அலங் காரத்தை எளிமையாகச் செய்யலாம். ஏனெனில் சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட அளவுகள், அமைப்புகள், வடிவங்கள் என்ற குறிப்புகள் அலங் காரத்திற்கு முக்கியமானதாக அமை கின்றன. எந்த வடிவங்கள் என்ன அளவுகளில் இருக்கவேண்டும் என்பது இதில் விளக்கமாக இருக்கும். ஆக, சிற்பக்கலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அடுத்ததாக நடனக்கலை. ஓவியக்கலையும் சிற்பக்கலையும் அலங்காரம் சார்ந்தவை.
ஆனால், நடனக்கலை எவ்வாறு அலங்காரத் திற்கு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்ற சந்தேகம் எழலாம். நடனக்கலையில் நாம் பேசும் அனைத்து சொற்களுக்கும் அபிநயம் காட்டமுடியும். முகபாவங்கள் மற்றும் நளினம் பற்றி அறிந்துகொள்ளமுடியும். நடனக் கலையில் முக்கியமாகச் சொல்லப்படும் பரதநாட்டியக் கலை, நமது கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் அற்புதமான கலையாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சிவ பெருமானே நடனத்திற்கு அரசனாக, நடராஜராக விளங்குகிறார். ஆக, முகபாவங்கள் மற்றும் நளினங்களை நடனக்கலை மூலமாக எளிதாகக் கற்கலாம். எனவே, நடனக்கலையும் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உதாரணமாக, பார்வதிதேவி தன் மடியில் விநாயகர் அல்லது முருகரை அணைத்த திருக் கோலத்தில் காட்சிதரும் அலங்காரமென்றால், அந்த அமைப்புக்கு தாயின் பரிவையும், அன்பை யும் காட்டும் முகபாவம் அமையவேண்டும். அதே போல் பெருமாள் மகாலட்சுமியை மடியில் அமரவைத்திருக்கும் அலங்கார அமைப்பைச் செய்யும்பொழுது, ஸ்ருங்கார ரசத்தை திருமுக மண்டலத்தில் காட்டவேண்டும். இதேபோல் லட்சுமி நரசிம்மர் என்றால், சிம்ம முகத்தில் ஸ்ருங்கார ரசத்தைக் காட்டவேண்டும். இதே போன்றுதான் லட்சுமி ஹயக்கிரீவர் மற்றும் லட்சுமி வராஹர்.
துர்க்கை அலங்காரமென்றால் முகத்தில் வீரபாவம் இருக்கவேண்டும். மகிஷாசுரமர்த் தினி அலங்காரத்தில் ருத்ரபாவம் (கோபம்) அமையவேண்டும். அதேபோல் அசுரனின் முகத்தில் பயத்தின் பாவம் அமையப்பெறவேண்டும்.
மகாவிஷ்ணு அலங்காரத்தில் பெருமாள் முகத்தில் கருணாரசம் (கருணை) அமையப்பெற வேண்டும். இதைப்போன்ற முகபாவங்கள், கை அபிநயங்கள் அனைத்தும் பரதநாட்டியக் கலையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் செய்யும் அலங்காரத்தில்தான் ஜீவகலையைக் காணவும் உணரவும் முடியும். இத்தகைய அலங் காரத்தைப் பார்க்கும்பொழுது, பார்ப்பவர் களின் குணம் நற்குணமாக மாறும். வேண்டுதல் கள் பலிதமாகும்.
ஸ்ரீமத் இராமாயண இதிகாசத்தில், இராவணன் போர்க்களத்தில் இராமனைக் கண்டவுடன் பக்திப் பெருக்கினால் கைகளைக் கூப்பிட நினைத்தானாம். கொடியவனான அசுரனுக்கே அப்படிப்பட்ட மனமாற்றம் ஏற்படுகிறதென்றால், நம் மனதில் நிச்சயம் நல்ல எண்ணங்கள் தோன்றுவதில் ஐயமில்லை. அப்படி தோன்றக் காரணம், ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் தேக காந்தி, பிரகாசம், ஜீவன்! அத்தகைய ஜீவகலையை அலங்காரத்திலும் காணலாம்.
இராமாயணத்தில் இன்னுமொரு இடத்தில், இராவணன் சீதையின் மனதை மாற்ற ஸ்ரீராமனாகவே வேடம் தரித்துச் சென்றானாம். ஆனால் ஸ்ரீராமனின் வேடம் தரித்ததால், "நாம் செய்வது தவறு; மாற்றான் மனைவியை பார்க்கக்கூடாது' என்ற எண்ணம் தோன்றியதாம். அதேபோல் அலங்காரத்தைக் கண்டவுடன் நம் மனதில் நல்ல எண்ணங்கள் நிச்சயம் எழும். மனம் அமைதிபெற்று தெளிவான சிந்தனைகள் உருவாகும்.
நமது இந்து மதத்தில் ஆறுவிதமான வழி பாட்டு முறைகள் சொல்லப்படுகின்றன. காணா பத்யம், கௌமாரம், சாக்தம், வைணவம், சைவம் மற்றும் சௌரம் எனப்படும்.
இந்த ஆறுவகையான சமயங்களிலும் மூலவர், உற்சவர் விக்ரகங்களை அலங்காரம் செய்யும் வழக்கம் உள்ளது. இவற்றில் அந்தந்த சமயங்களின் வழங்கங்களுக்கு உட்பட்டு அலங் காரத்தின் முறைகள் மாறுபடுகின்றன.
அலங்கார அளவுகள்
உருவங்கள் அனைத்தும் சரியான அளவுடன் இருக்கவேண்டும். அளவு மாறுபட்டால் அந்த அலங்காரத்தில் ஜீவன் (உயிர்) இல்லாமல் போய்விடும். ஆகவே அளவுகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட கலைநயம் நம் இந்திய நாட்டிற்கு மட்டுமே சொந்தமாகும். ஒரு வார்த்தையோ, சொல்லோ இல்லாமல் அதன் கருத்தையோ, பொருளையோ புரிந்துகொள்ளமுடியாது. ஆகவேதான் இயல், இசை, நடனம், ஓவியம், சிற்பம், அலங்காரம் என்ற கலைகள் பிறந்தன.
இப்போது பொதுவாக ஒரு வடிவம் என்று எடுத்துக்கொண்டால், எவை எந்த அளவுகளில் இருக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
தலை- முகத்தில் இருக்கும் புருவம், கண், இமை, கன்னம், மூக்கு, வாய், உதடு, காது.
கைகள்- விரல்கள், நகங்கள்.
தொடை- முழங்கால், கெண்டைக்கால்.
கால்- விரல்கள், நகங்கள், குதிக்கால்.
கழுத்து, தோள், மார்பு, வயிறு ஆகிய அனைத் தும் எந்த அளவில் இருக்கவேண்டுமென்று தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
தெய்வத் திருவுருவங்களின் அளவு உதாரணத்திற்கு, பத்தடி உயர பெருமாள் அளவை எடுத்துக்கொள்வோம்.
கிரீடம்முதல் முகம்வரை- 3 அடி.
முகத்திலிருந்து அடிவயிறுவரை- 3 அடி.
அடிவயிறுமுதல் பாதம்வரை- 4 அடி.
மொத்தம் 10 அடி.
இப்படி ஒரு வடிவத்தை மூன்று பாகங் களாகப் பிரித்துக்கொண்டு, அதன் அளவு களைத் துல்லியமாக அமைத்திடல் வேண்டும். பெரும்பாலும் அலங்காரத்தில் இறைவனின் முகத்தைப் பொருத்தே அவர் கை, கால் மற்றும் உடல் அளவை வகுக்கமுடியும். முகத்திற்கேற்ப கிரீடம்; பின் அதற்கேற்ப உடல்; பின் உடலுக்கேற்ப பாதம் என அமைத் தல் அலங்காரத்தில் ஜீவனை அளிக்கும்.
புருவங்கள்: புருவங்கள் கண்களின் மேல் இரண்டு அங்குல இடைவெளியில் கனத்தும், முடிவில் சிறுத்தும் அமைவது அழகைத் தரும். மேலும் காதுகளின் மேல்மட்டமும் புருவங்களும் சமமான அளவில் அமைவது அவசியம். பெண் தெய்வத்திற்கு சற்று வட்டமாக- பிறைச் சந்திரனை ஒத்ததாக அமைவது பெண் லட்சணத்தைக் காட்டும்.
கண்கள்: கண்களில் பலவிதமான அமைப்பு கள் உண்டு. கயல்விழி, மலர்விழி, வேல்விழி, மருட்சியுடைய விழி, மீன்விழி எனப்படும். இதில் பெண்களுக்கு மீனைப் போன்றும், ஆண் தெய்வத்திற்கு வேல்விழியாகவும் அமைப்பது ஆண்- பெண் லட்சணங்களை நன்கு காட்டும்.
மூக்கு: மூக்குப்பகுதி மாற்றம் தந்தால் முகம் முழுவதும் மாற்றத்தைக் கொடுக்கும். ஏனெனில் முகத்திற்கு மூக்குதான் எடுப்பான உறுப்பாகும். இதில் ஆண் தெய்வத்திற்கு சிறிது விரிந்தும், பெண் தெய்வத்திற்கு நன்கு வளைந்தும் மூக்கின் இரு துவாரப்பகுதியை அமைப்பது அழகு தரும்.
வாய்: உதடுகள் ஆண் தெய்வத்திற்கு சிறிது தடிமனாகவும், பெண் தெய்வத்திற்கு மெல்லியதாகவும் அமைத்திடல் வேண்டும். பொதுவாக சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணத்தில் அமைத்தால் உதடுகளின் வடிவை தனித்துக் காட்டும்.
காது: முன்பு சொன்னதுபோல் காதுகளும் புருவங்களும் சம அளவில் அமைத்திடல் வேண்டும். சங்குபோன்ற அமைப்பு அழகைத் தரும். மேலும் காதுகளின் பெரிய வித்தியாசங்கள் பெண் மற்றும் ஆண் தெய்வத்தில் கிடையாது. ஆண் தெய்வத்திற்குக் குண்டலமும், பெண் தெய்வத்திற்குத் தோடுகளும், கம்மலும் அணிவித்தல் வித்தியாசங்களைக் காட்டும்.
உடல்: உடலமைப்பில் ஆண் தெய்வத்திற்கு நன்கு கனமாகவும், முரட்டுத்தனமாகவும், காளையின் முக வடிவம்போலவும் அமைப்பது அவசியம். பெண் தெய்வத் திற்கு கனம் குறைந்தும், மிருதுவாகவும், உடுக்கையை ஒத்த அமைப்பில் அமைப்பது நன்று.
கைகளும் விரல்களும் ஆண் தெய்வத்திற்கு சற்று நீண்டும், பெண் தெய்வத்திற்கு சற்று நீளம் குறைந்தும் அமைத்திடல் வேண்டும்.
ஆண் தெய்வத்திற்கு தோள்களே அழகு. ஆகையால் தோள்கள் நன்கு உருண்டு திரட்சியாக அமைத்திடல் வேண்டும். பெண்தெய்வத்தின் தோள்கள் மென்மையானதாக அமைப்பது பெண்மையைக் காட்டும்.
தொடையும் காலும்: தொடை அளவைவிட கால் அளவை சிறிது குறைந்து அமைத்திடல் வேண்டும். சரிசமமாக அமைப்பது தவறாகும். ஆணின் தொடை நன்கு பருமனாகவும் நீண்டும் அமைத்திடல் வேண்டும். காலின் எலும்புகள் நன்கு தெரியும்படி அமைப்பது ஆண் லட்சணத்தைக் காட்டும். பெண் அமைப்பில் சற்று மெல்லியதாகவும், சிறிது குறைவாகவும் நளினத்துடன் அமைப்பது அழகைத் தருவதோடு, பெண்ணின் லட்சணத்தைக் காட்டும்.
(அலங்காரம் தொடரும்)
சந்தேகங்களுக்கு கைபேசி: 73584 77073
தொகுப்பு, படங்கள்: விஜயா கண்ணன்