றைவன் இவ்வுடலைப் படைத்தான். பெற்றவள் அன்னைதான் என்றாலும், இறைவனின் அருளால்தான் நமக்கு இந்த அரிய மானுடப் பிறப்பு அமைகிறது. சனாதன தர்மத்தில் "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்னும் வாக்கியம் வழக்கில் உள்ளது. தாயானவள் தந்தையையும், தந்தை குருவையும், குரு தெய்வத்தையும் காட்டுகின்றனர். நமக்கு உத்தமமான ஆன்மிக வழிகாட்டியாக இருப்பவர் குருதான்.

Advertisment

மகான்கள் தங்களது அருளாற்றலால், மிகவும் இழிநிலையை அடைந்த மனங்களைத் திருத்தி ஆன்மிக மேன்மையை அடையும்படி செய்கிறார்கள். ஒரு மனிதனுக்கு குரு, ஈஸ்வரன் மற்றும் சாஸ்திர விஷயங்களில் சிரத்தையும் பக்தியும் அவசியம் இருக்கவேண்டும். காரணம், நம் பாரத நாடு "ஞானத்திலே பர மோனத்திலே' என பாரதி சொன்னதுபோல ஆன்மிகத்தில் சிறந்த நாடு. நமக்கு வழிகாட்டும் குருமார்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யமுடியும்? இதைத்தான் வேதாந்த தேசிகர்-

"ஏற்றி மனத்தெழில் ஞான

ss

விளக்கை இருளனைத்தும்

மாற்றினவர்க்கொரு கைம்மாறு

மாயவனும் காணகில்லான்

போற்றி யுகப்பதும் புந்தியிற்

கொள்வதும் பொற்குபுகழ்

சாற்றி வளர்ப்பதும் கற்றல்லவோ

முன்னம் பெற்றதற்கே'

என அழகாகப் பாடியுள்ளார்.

இறைவனின் திருவுளப்படி சமயக் குரவர்கள் நால்வர், பன்னிரு ஆழ்வார்கள், ஆதிசங்கரர், இராமானுஜர் போன்ற அருளாளர்கள் தோன்றி சைவ, வைணவ நெறியை வளர்த்தனர். தமிழகத்தில் பழங்காலந் தொட்டே வைணவ நெறி இருந்துள்ளது. சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கண நூலாக மட்டுமின்றி வரலாற்றுச் செய்திகளையும், பண்டைய மக்களின் நாகரீக வாழ்க்கை முறைகளைப் பறைசாற்றும் பெட்டகமாகவும் திகழ்கிறது. "மாயோன் மேய காடுறை யுலகம்' என திருமாலை மாயோன் எனக் குறிப்பிட்டுள்ளது. திருமால் வழிபாடும் தமிழர்களின் தொன்மையான- தொன்றுதொட்டுவரும் வழிபாட்டு முறையே! வைணவம் ஒரு முதன்மை சமயமாக இருந்ததென்பதற்கு சங்க காலப் பரிபாடலில் "திருமாற் கிரு நான்கு' என எட்டுப் பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Advertisment

இல்லறத்தில் சிறந்த பக்திமான்களை "அடியார்' என்றும், துறவறத்தில் சிறந்த பக்திமான்களை "பகவர்' என்றும் முன்பு அழைத்தனர். "மேவித்தொழும் அடியாரும் பகவரும் மிக்க துலகே' என திருவாய்மொழி நூல் போற்றுகிறது. தொல்காப்பிய மரபியலில்-

"நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய...'

என கூறப்பட்ட முக்கோல் (திரிதண்டம்) என்பது வைணவ சந்நியாசிகளுக்குரியது என சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு.

"காரேய் கருணை இராமானுச...' என இராமனுச நூற்றந்தாதி வைணவத்தின் விடிவெள்ளியான இராமானுஜரைக் கொண்டாடிப் போற்றுகிறது. திருமாலின் (பெருமாள்) தொடக்கமான குருபரம்பரையில் உடையவருக்குப் (இராமானுஜர்) பிறகு பல ஆச்சார்ய குருபரம்பரைப் பிரிவுகள் தோன்றின. அவற்றுள் ஒன்றாக வைணவ நெறியை வளர்த்துவரும் மரபில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் பெரியாச்ரமம் ஈடுபட்டுள்ளது. ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம சம்பிரதாயத்துக்கு முதல் கூடஸ்தர் (வைணவத்தின் தலைவர்) நாதமுனி; இரண்டாவது கூடஸ்தர் இராமானுஜர்; மூன்றாவது கூடஸ்தர் வேதாந்த தேசிகர்; 1700-ஆம் ஆண்டு, சோழ வளநாட்டில் திருக்கண்டியூர் கிராமத்தில் அவதரித்த திருக்குடந்தை தேசிகன் நான்காவது கூடஸ்தர் ஆவார்.

Advertisment

இந்த ஆண்டவன் ஆசிரம சம்பிரதாயப்படி, இல்லறத் தில் இருப்பவர், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயப்படி வேத, சாஸ்திரங்களை நன்கு கற்றவர், ஒழுக்க சீலராக இருப்பவர், பரம்பொருள் தத்துவத்தில் நிலைபெற்றவர் போன்ற தகுதியுடைவர்கள், தமது குருவின் எண்ணப்படி இல்லறத்தைத் துறந்து சந்நியாசம் பெற்று, ஆசிரமத்தின் பீடாதிபதியாக வருவது வழக்கம்.

இப்படியாக வளர்ந்துவந்த சுத்த உபய வேதாந்த சம்பிரதாயம் (முநித்ரய சித்தாந்தம்), திருக்குடந்தை தேசிகனுக்குப் பின்பு 1743-ஆம் ஆண்டு திருக்குடந்தைக்கு அருகேயுள்ள வழுத்தூர் கிராமத்தில் பிறந்த ஸ்ரீவேதாந்த இராமானுஜ மகாதேசிகன் என்கிற பீடாதிபதியால் ஆண்டவன் ஆசிரம சம்பிரதாயம் பிரபலம் அடைந்தது. தம் குருவின் உத்தரவின் பேரில் வைணவ நெறியைப் பரப்பும் பணியிலிருந்த வழுத்தூர் ஸ்ரீ வேதாந்த இராமானுஜ மகாதேசிகன் ஸ்வாமிகள், ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டுகள் தங்கி சேவை செய்த தால் இவரை "ஸ்ரீரங்கம் ஸ்வாமி' என்றும் அழைத்தனர்.

ass

ஒருமுறை திருக்குடந்தை தேசிகன், "நீரே எம்மை ஆண்டவன்'

எனத் தம் சிஷ்யரான வழுத்தூர் வேதாந்த இராமானுஜ மகா தேசிகரைப் புகழ, பின்னாளில் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) மங்களாசாஸனத் தின்போது "ஆண்டவனே வாரும்' என அசரீரி அழைக்க, "ஆண்டவன்' என்னும் பெயர் வழுத்தூர் வேதாந்த இராமானுஜ மகாதேசிகன் ஸ்வாமிகளுக்கு ஏற்பட்டது. இந்த குரு பரம் பரைக்கு "ஆண்டவன் பரம்பரை' என்னும் பெயரும் பின்னாளில் வந்தது.

இந்த குருபரம்பரையில் வந்த பெரியாண்டவர் என்னும் ஸ்ரீ ஸ்ரீனிவாச மகாதேசிகன் (1801-1884) காலத்தில் ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் கிராமத்தில் காவேரிக்கரையோரம் நிலம் வாங்கி அங்கு ஆசிரமம் கட்டப் பட்டது. இதை இன்றும் ஸ்ரீரங்கம் பெரியாச்ரமம் என அழைப்பார்கள்.

இப்படி வாழையடி வாழையாக வந்த குருபரம்பரையில் 11-ஆவது பீடாதிபதியாக ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ ரங்கராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள் தனது இல்லற வாழ்க்கையைத் துறந்து, 1989-ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டார்.

1935-ஆம் ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீநிவாசாசார்யர் என்பவருக்கு இரண்டா வது மகனாக வைகாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். ஆரம்ப காலத்தில் ஸ்ரீமுஷ்ணம் வேதபாடசாலையில் வேதத்தை நன்கு கற்றார். ஸ்ரீ பெரும்புதூர் சமஸ்கிருதக் கல்லூரியில் "சிரோமணி' படிப்பைப் படித்தார். 1960-ல் இவருக் குத் திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீமத் திருக் குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள் எழுதிய சாசனம் படி, 1989-ஆம் ஆண்டு துற வறம் பூண்டு, பீடாதிபதி பொறுப்பை ஏற்றார். இவரை "சதுஷ் ஷஷ்டி கலா' என்று அழைப்பதுண்டு. அதாவது 64 கலைகளிலும் சிறந்தவர். ஒவ்வொரு கலையிலும் அபார திறமையைக் கொண்டி ருந்தார். குறிப்பாக சங்கீதம், ஜ்யௌதிஷம் (ஜோதிடம்), மருத்துவம், யோகம், சித்திரம், சிற்பம் போன்ற கலைகளைக் கசடறக் கற்றவர். 2018-ல் இவர் திருநாடு அலங்கரித்தார். (சித்தியடைந்தார்).

ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் தற்போதைய பீடாதிபதியாக வீற்றிருப்பவர் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராஹ மகாதேசிகன் ஸ்வாமிகள். இவர் 12-ஆம் பீடாதி பதி ஆவார். 1968-ஆம் ஆண்டு பிறந்த இவர் வேதாந்த, சாஸ்திர விஷயங்களி லும், தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளிலும் அபார திறமை யுடையவர். குறிப்பாக நியாய, தர்க்க சாஸ்திரத்தை நன்கறிந்தவர். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். பூர்வா சிரமத்தில் இவருக்கு யமுனாச்சாரியார் என்னும் பெயர் இருந்தது. 2018-ல் துறவறத்தை ஏற்றபின்னர் ஸ்ரீமத் வராஹ மகாதேசிகர் ஸ்வாமிகள் என்னும் யோகப் பட்டப் பெயர் வழங்கப்பட்டது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் நல்மொழிக்கிணங்க, தம் போதனைகளால் (உபதேசம்) மக்களை நல்வழிப்படுத்தி வருகிறார். ஆலோசனை வேண்டி தம்மை நாடிவரும் பக்தர்கள், சீடர்களுக்குத் தகுந்த வண்ணம் சாஸ்திரங்களிலும், இராமாய ணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றிலும் கூறப்பட்டிருக்கும் தர்மநெறிகளை மேற்கோள்காட்டி, எளிமையாக விளக்கி யருளி வருகிறார்.

ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் வைணவ நெறியைப் பரப்பும் ஆன்மிக அமைப்பாக மட்டுமல்லாமல் சமூக, சமுதாய நலப்பணி களைத் திறம்பட செய்துவரும் நல்ல அமைப்பாகவும் திகழ்கிறது. ஸ்ரீரங்கம் நகரில் 1996-ல் அன்றைய பாரத குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவால், ஆண்டவன் ஆசிரமம் சார்பில் கட்டப்பட்ட கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரியில் சாதி, சமயப்பிரிவு வேறு பாடின்றி வருடந்தோறும் 1,600 மாணவர் கள் சேர்க்கப்படுகின்றனர். ஏழை மாணவர் களுக்கு எந்தவித பாகுபாடுமின்றி கல்வி உதவித் தொகை, ஏழை எளியவர்களுக்கு திருமணத் திற்கு நலஉதவிகள், வேதம் பயின்றவர்களை ஊக்குவிக்கும்விதமாக விசேஷ விருதுகள், சம்பாவணை (உதவித்தொகை) போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஆசிரமம் சார்பில் ஒன்பது இடங்களில் வேத பாடசாலை நடத்தப் பட்டுவருகிறது. நித்ய அன்னதான திட்டப்படி புண்ணியத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவந்திபுரம், காஞ்சிபுரம் போன்ற இடங்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிரம வளாகத்தில் தினமும் உணவு வழங்கப்பட்டுவருகிறது. "கோ ஸம்ரக்ஷணம்' திட்டம்படி பல இடங்களில் கோசாலைகள் ஏற்படுத்தப்பட்டு பசுக்கள் காக்கப்படுகின்றன. பல வைணவக் கோவில்களைப் புதுப்பித்து, தொடர்ந்து நித்ய பூஜைகள் நடக்கவும், உரிய காலத்தில் கும்பாபிஷேகம் நடக்கவும் ஆண்டவன் ஆசிரமம் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுவருகிறது.

தம்மை நாடிவரும் பக்தர்கள் அனைவருக்கும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறார் வராஹ தேசிகன் ஸ்வாமிகள். அவரது குருவருளுடன், எம்பெருமாளின் திருவரு ளைப் பெறுவோமாக.