ழம்பெருமைவாய்ந்த நம் திராவிட தேசத்தில் புகழ்பெற்ற திருத்தலங்கள் எண்ணற்றவை. அவற்றுள் கிளிமுகம்கொண்ட சுகபிரம்ம மகரிஷி வழிபட்ட சிறப்புவாய்ந்தத் தலமே தீர்க்காசலம். தமிழில் இப்பதியை நெடுங்குன்றம் என்று கூறுவர். தற்போது இந்த ஊர் நெடுங்குணம் என்று அழைக்கப்படுகிறது. தேவலோக மங்கையர்களான 12 அப்சரஸ்களில் ஒருவள் கிருதாசி. இவள் கிளி உருவம்கொண்டு வியாச மகரிஷியுடன் இணைந்தபோது, கிளி முகத்துடன் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை சுகப்பிரம்மரிஷி ளசுகம்=கிளின ஆவார். இவரை சுகர் என்றும் அழைப்பர். பிறவியிலேயே சிறந்த ஞானியாக திகழ்ந்தார் சுகர்.

ss

ஒருசமயம் இவர் திருவண்ணாமலைக்கு வடகிழக்கில் திகழும் தீர்க்காசலம் என்னும் நெடுங்குன்றத்தை அடைந்தார். சிவனே நெடுமலை யாகத் திகழ்வதை உணர்ந்த சுகர், அங்கே ஆசிரமம் அமைத்து, நெடுமலையின் உச்சியில் அமர்ந்து ஈசனை எண்ணி கடுந்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த ஈசன், சுகப்பிரம்ம ரிஷிக்கு காட்சிதந்து, வேண்டும் வரத்தினைக் கேட்டார்? சுகரோ தனக்கு முக்திபேறு வேண்டும் என விரும்பி நின்றார்.

அவரின் வேண்டு கோளை ஏற்ற எம்பெருமான், "அக்கிரமங்களை அழிக்க அவதரித்த ஸ்ரீ இராமபிரான், இராவ ணனை அழித்து, சீதையை மீட்டு, தம்பி லட்சுமணரோடு இந்த தீர்க்காசலம் வழியாக வருவார். அவ்வாறு வருகையில் மலை வடிவாக இருக்கும் என்னை தரிசிப்பார்கள். அப்போது நான் உனக்கு தரும் வேத சுவடியை ஸ்ரீ இராமரிடம் சேர்க்கவேண்டும். பின் ஜனக மகரிஷியிடம் சென்று ஞான உபதேசம் பெற்று, நிறைவாக சூரிய மண்டலத்தை அடைந்து, முக்தி அடைவாய்'' என திருவாய் மொழிந்து, வேத சுவடியை சுகப்பிரம்மரிடம் தந்தருளினார்.

Advertisment

ஈசனின் திருமலரடி பணிந்து, சுவடியை பெற்றார் சுகர். மேலும் ஈசன்.... "நீ தங்கி, தவம் புரிந்த இந்த (நெடுங்குன்றம்) தீர்க்காசலம் சுகரிஷி பர்வதம் (கிளிமலை)என்று அழைக் கப்படும் என திருவாய் மலர்ந்தார்.

நெகிழ்ந்த சுகமகரிஷி, தாங்கள் இங்கு தீர்க்காசலேஸ்வரராக கோவில் கொண்டெ ழுந்து, வழிபடும் பக்தர்களுக்கு அவர்களது வாழ்வில் எல்லா நலன்களும் செழித்திட அருள்செய்ய வேண்டுமெனப் பணிந்தார். அதன்படியே திருவருள்புரிந்து மறைந் தார் மகாதேவவர். ஸ்ரீ இராமச்சந்திரரின் வருகையை எதிர்நோக்கி, மீண்டும் தவத்தில் மூழ்கினார் தபோரிஷி.

சில காலம் நகர்ந்தது. பின்னொரு நாள் இராவணனை அழித்து, இலங்கையில் இருந்து தம்பி லட்சுமணன் மற்றும் சீதா பிராட்டியுடன் அயோத்தியா திரும்பினார் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்திகள். அப்போது இங்கு நெடுங்குன்றம் வழியாக வருகையில் பர்வத மாகத் திகழும் பரமேஸ்வரரை வணங்கினார்.

Advertisment

ss

ஸ்ரீ இராமரின் வரவினை எதிர்பார்த்து தவத்தில் ஆழ்ந்திருந்த சுகபிரம்மரிஷியின் ஆசிரமம் அடைந்து, அவரது திருவடிகளை வணங்கி நின்றார் ஸ்ரீ ஜானகிராமர். ஆசி வழங்கிய சுகர், ஈசன் தனக்களித்த வேதச் சுவடியை இராமபிரானிடம் அளித்தார். அதைப் பணிந்து பெற்றார் ஸ்ரீதசரத புத்திரர்.

சுகப்பிரம்மரிஷி.... "ஸ்ரீராமா, சிவபெருமான் இங்கு எழுந்தருளியிருப்பதுபோல, தாங்களும் இங்கு எழுந்தருளி, மக்கள் நலமுடன் வாழ வேதத்தினை வாசிக்க வேண்டினார்.

நறுமணம் வீசும் துளசி மார்பும், திரண்டத் தோள்களும், சிவந்த மாணிக்கம் போன்ற கழுத்தும், பவளமென மிளிரும் செவ்விதழும், பாரிஜாத மலர் போன்று மலர்ந்தத் திருமுகமும், ஒளிப் பிழம்பாய் திகழும் திருமேனி கொண்டவ ராக பத்மாசனத்தில் அமர்ந்து, இடது கரம் இடப் பக்க முழங்கால்மேல் படிய, வலக்கரம் ஞான முத்திரை காட்டி மார்மீது வைத்தவண்ணம், தம்பி லட்சுமணனை தனக்கு வலப் பக்கம் இருக்கச் செய்தார். வில்லைத் தோளில் தாங்கியபடி இளவளும் இருக்க, அன்னை சீதாபிராட்டியை இடதுபுறம் அமரச் செய்தார்.

இந்நிலையில் மகேசர் அளித்த வேதச்சுவடியை அனுமனிடம் தந்து படிக்கச் சொன்னார். அதை பயபக்தியோடு இருகரம் நீட்டிப் பெற்ற ஆஞ்சனேயர், பத்மாசனமிட்டு அமர்ந்த நிலையில்.... இராமபிரான் - சீதாபிராட்டியை வணங்கியபின், படிக்க ஆரம்பித்தார். அந்த அற்புத வேதத்தின் உட்பொருளை விளக்கிக் கூறி தெளிவு செய்தார் ஸ்ரீ கோதண்ட ராமர்.

பின் அனுமனின் படிப்பாற்றலை பாராட்டி, "முக்திகோபநிஷத்' என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார்.

சுகரின் வேண்டுகோளுக்கு இணங்கிய ஸ்ரீ இராமச்சந்திர பிரபு தனது அற்புத இந்தக் கோலத்தை அடியார்களுக்கு அருளியதோடு, சுகரின் முக்திக்கும் வழியளித்தார்.

இராமபிரான் இங்கு வந்ததன் சாட்சியாக நெடுமலையின் வலது புறமுள்ள சிவமலையின் உச்சியில் ஸ்ரீஇராமரின் திருவடிகள் காணப்படுகின்றது. இந்த இடத்தை "பெருமாள் பாறை' என்று இன்றும் மக்கள் வழங்கிவருகின்றனர்.

11-ஆம் திருமுறையில் பட்டினத்தடிகள் தனது திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் 59-ஆவது பாடலாக...

"இறைத்தார் புறமெய்த வல்லிமை

நல்லிம வான்மகட்கு.''

மறைத்தார் கருங்குன்றம், வெண்குன்றம், செங்குன்ற மன்னற்குன்றம் நிறைந்தார் நெடுங்குன்றம் நீள் கழுக்குன்றம் என் தீவினைகள் குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே'' எனப் பாடிப் பரவியுள்ளார். மேல் குறிப்பிட்ட மலைகளில் கச்சி ஏகம்பரே வீற்றிருந்து அருளுகின்றார் எனப் போற்றுகின்றார் பட்டினத்துப் பிள்ளையார்.

"சுகபிரம்ம பர்வதம்' எனப்படும் இக்கிளிமலையில் இருந்து உற்பத்தியாகும் சிற்றாறு கிளியாறு என்று அழைக்கப்படுகின்றது. இந்த சிற்றாறு கிளிமலையில் இருந்து புறப்பட்டு, வந்தவாசி, மதுராந்தகம் வழியாக படாளத்தை அடைந்து, பாலாற்றில் கலக்கிறது.

பேருந்து சாலையின் மேல்புறம் மிகப் பிரம் மாண்டமாக ஆறு நிலை இராஜகோபுரத்துடன் திகழ்கிறது ஸ்ரீ யோகராமர் ஆலயம்.

கீழ்ப்புறமாக சிவாலயம் கிழக்கு பார்த்தவண்ணம் சுகபிரம்மரிஷி பர்வதம் என்னும் கிளிமலையின் அடிவாரத்தில் அற்புதமாக அமையப் பெற்றுள்ளது.

கிழக்கு பார்த்தவாறு ஆலயம் அமைந் துள்ளது. உள்ளே வலப்புறம் கணபதி சந்நிதி யும், இடப்புறம் கந்தன் சந்நிதியும் அமைந் துள்ளது.

நேராக நந்தி, பலிபீடம், முன்மண்டபம் கடந்து அர்த்தமண்டபம் மற்றும் கருவறை உள்ளது. கருவறையுள் கருணை மூர்த்தமாக அருள்புரிகின்றார் ஸ்ரீதீர்க்காசலேஸ்வரர். லிங்கத்தின் கீழ்பாகமான பிரம்மபாகம் தாமரை வடிவில் அமைக்கப்பெற்றுள்ளது சிறப்பு. இங்கு அர்த்தமண்டபத்தில் தென் புறம் 25 அடி நீளமும், 5 1/2 அடி அகலமும், 6 அடி ஆழமும்கொண்ட நிலவறை ஒன்று காணப்படுகின்றது.

ஐயனின் அற்புத தரிசனம் பெற்று முடித்து, ஆலய வலம் வருகின்றோம்.

வலம்வருகையில் தென் பிராகாரத்தில் பிரம் மாண்டமான கோலத்திலுள்ள சப்த மாதர் களின் அதியற்புத சிலாத் திருமேனிகளைக் கண்ணுறுகின்றோம். பருவம் தவறி, மழை பொய்க்கும் காலத்தில் விவசாயிகள் இந்த சப்த மாதர்களுக்கு அபிஷேக -ஆராதனைகள் செய்து வழிபட நன்கு மழை பொழிந்து விளைச்சல் பெருகும் என்பது தொன்று தொட்டுவரும் வழக்கமாகும்.

உடன் இங்கு ஆதி சாஸ்தாவின் அதி உன்னத புடைப்புச் சிற்பத்தையும் காண்கிறோம்.

கோஷ்ட மாடங்களில் முறையான தெய்வ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தட்சிணாமூர்த்தி யோக நிலையில் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியாக அருள்புரிகின்றார்.

சுவாமி சந்நிதிக்கு வாம பாகத்தில் (இடப் புறம்) அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பிகையாக ஸ்ரீ பாலாம்பிகை நின்றவண்ணம் அற்புதமாக அருள்பாலிக்கின்றாள்.

இங்கு பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி ஒன்று உள்ளது. முனிவர்களும், ஞானிகளும் வழிபட்ட இந்த பாதாள லிங்கமூர்த்தியை வழிபட தீராத நோய்களும் தீரும். மேலும் ஸ்ரீ சுப்பிரமணியரின் திருமேனியையும், பிராகாரத்திலுள்ள அஷ்டலிங்கங்களையும் தரிசிக்க எல்லா நலன்களும் வந்துசேரும் என்பது ஐதீகம்.

திருபுவனச் சக்கரவர்த்தி, சுந்தர பாண்டியன், அச்சுதப்ப நாயக்கர், கிருஷ்ண தேவராயர், வீரவெங்கடபதி ஆகிய அரசர் களால் இவ்வாலயத்தில் பல்வேறு திருப் பணிகள் செய்துள்ளனர்.

இவ்வாலய கல்வெட்டில் இறைவன் "நெடுங்குன்றம் நாயனார்' எனக் குறிப்பிடப் பட்டுள்ளார்.

அனைத்து சிவாலய விசேஷங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. பங்குனி உத்திரம் மற்றும் ஆடிக் கிருத்திகை யில் தெப்போற்சவம், உடன் திருக்கல்யாண வைபவம் சிறப்புற நடைபெறும் திருவிழாக் களாகும்.

இராமச்சந்திரர் ஆலயத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் விழாவில் தீர்க்காசலேஸ்வரர் இந்திர விமானத்தில் எழுந்தருளி, திருமாலும்லி ஈசனுமாக திருவீதி யுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பிலும் சிறப்பு.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயத் தில் தினசரி இரண்டுகால பூஜைகள் நடை பெறுகின்றன. தினமும் காலை 6.00 மணி முதல் 10.00 மணிவரையும்; மாலை 5.00 மணி முதல் 8.00 மணிவரையும் ஆலயம் திறந் திருக்கும்.

தீராத துன்பங்களிலிருந்து விடுவிக்கும் ஸ்ரீ தீர்க்காசலேஸ்வரரை வணங்கி நலம் பெறுவோம்.