"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.'

-திருவள்ளுவர்

அறத்தின் இயல்பொடு கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள், மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

Advertisment

"ஆமை புகுந்த வீடு உருப் படாது' என்பர். கல்லாமை, இயலாமை, முயலாமை போன்ற குணங்களுள்ள வீட்டில் இல்லாமை என்ற ஏழ்மை புகுந்துவிடும் என்பதையே நம் மக்கள் "ஆமை என்ற ஊர்வன ஜந்து வாக இருக்குமோ' என நினைத்துக் கொண்டனர். உண்மையில் அற்புத மான ஜந்து ஆமை. ஓட்டுக்குள் தன்னை அடக்கி அமைதியாக நகர்ந்து செல்லும்.

ஆமை யாருக்கும் துன்பம் செய்யாது. இதனால்தான் இந்த ஜந்துவை தன் அவதாரத்துக்காக திருமால் தேர்ந் தெடுத்தார். ஆசைகளை ஆமைபோல் நிதானத்துடன் அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதைதான் கூர்மாவதாரம் நமக்கு உணர்த்துகிறது.

Advertisment

dd

ஆனால் எல்லா இடங்களிலும் அவசரம் கொடிகட்டிப் பறக்கிறது. விதையை நட்டவுடன் அது பலன்தரவேண்டுமென்ற எண்ணம். விளைவு..., விளைந்து பயன் தர வேண்டியவை பயனின்றிப் போய் விடுகின்றன. நிதானம் ஒருபோதும் கை விடாது. பலவிதமான துன்பங்களிலிருந்தும் நம்மைக் காக்கும்.

கௌதம முனிவருக்கு சிரகாரி எனும் மகன் இருந்தான். வேதங்களில் கரைகண்டவன். எந்தவொரு செயலையும் நிதானமாகத்தான் செய்வான். அவசரம் என்பதே தெரியாது. அதன்காரணமாக அவனை சோம்பேறி என கேலி பேசினர் பலர். ஆனால் சிரகாரியோ அவர்களின் ஏச்சுப்பேச்சுகளை லட்சியம் செய்யவில்லை.

ஒருசமயம் கௌதமர் தன் மனைவிமீது கொண்ட கோபத்தின் காரணமாக மகனை அழைத்து, "சிரகாரி, உன் அம்மா வின் நட வடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அவளைக் கொன்றுவிடு'' என்று உத்தரவிட்டுவிட்டு வெளியேறிவிட்டார்.

சிரகாரிக்கோ, என்ன செய்வதென்று தெரியவில்லை.. "அப்பா சொன்னபடி கேட்பதென்றால் அம்மாவைக் கொன்றாகவேண்டும். அம்மாவைக் கொல்லவில்லையென்றால் அப்பா சொல்லை மீறிய பாவம் வரும். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். இந்த இரண்டில் எதைச் செய்தாலும் தவறாகிவிடுமே' என்னும் ஆலோசனையில் இருந்தான்.

அதேசமயம் வெளியேபோன கௌதம முனிவர், "எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டேன். கோபத்தை நீக்காத நான் எப்படி முனிவனாவேன். விநாடி நேரத்தில் கோபப்பட்டு அம்மாவைக்கொல் என்று பிள்ளைக்கு உத்தரவு போட்டுவிட்டேனே. நான் சொன்னபடி அவன் கொலை செய்திருந்தால் என்ன செய்வது' என பதறியடித்து தன் ஆசிரமம் திரும்பினார்.

dd

அப்பாவைப் பார்த்ததும் ஓடிவந்து அவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான் சிரகாரி. அவனைப் பார்த்த கௌதமர் அவனருகில் உயிருடனிருந்த தன் மனைவி யையும் பார்த்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அவருக்கு.

மகனைப் பலவிதங்களிலும் புகழ்ந்து நீண்டநேரம் உச்சிமுகர்ந்து கட்டித்தழுவி, "நீ நீண்டகாலம் வாழ்வாய்...'' என்று வாழ்த்தவும் செய்தார். இதன்பிறகு தாமதமாகச் செய்ய வேண்டிய செயல்களை யும் அதன் பலன்களையும் உணர்ந்தார் கௌதமர்.

சோழநாட்டில் எரவாஞ்சேரி என்ற சிற்றூரில் ரவீந்திரன் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். அவர் தன் இறுதிக்காலத்தில் சொத்துகளை இரண்டு பேருக்கும் சமமாக எழுதிவைத்து சிறிது காலம் வாழ்ந்து மறைந்தார்.

இளையமகன் இறை நம்பிக்கையோடு தனக்குக் கிடைத்த சொத்தை தொழில் மூலம் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கினான்.

அதில்வரும் லாபத்தை வைத்து முதியோருக்கு உதவுவது, ஏழை மாணவர் களின் கல்விச் செலவை ஏற்பது போன்ற தர்மச் செயல்களைச் செய்தான். மூத்தவன் இவனுக்கு நேரெதிர். அவனுக்குக் கிடைத்த பணத்தால் உலகத்திலுள்ள அனைத்து கெட்ட பழக்கங்களும் அவனை ஆட்கொண்டன. அவனிடமிருந்த பணத்தை அனுபவிக்க நண்பர்கள் பலரும் வட்டமடித்தனர். அறிவே இல்லாத அவனை, "உன்னிலும் சிறந்த அறிவாளி இல்லை' என்று புகழ்ந்தனர்.

ff

காலப்போக்கில் சொத்தும் கரைந்தது. சுற்றிலுமிருந்த கூட்டமும் அவனை இகழ ஆரம்பித்தது.

"அடேய்! உன்தம்பி உன்னைவிட எட்டு வயது இளையவன். உன் அப்பா கொடுத்த சொத்தைப் பலமடங்கு பெருக்கிவிட்டான். அன்பான மனைவி, குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்கிறான். அது மட்டு மல்லாமல் நம் ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டி ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். நீயும் இருக்கிறாயே! உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? இப்படி சொத்தையிழந்து நடுத்தெருவுக்கு வந்திருப் பாயா?'' என்று உறவினர்கள் அவனைக் கடிந்துகொண்டனர். இதையெல்லாம் கேட்ட அவன், "அவசர உணர்வுடன் தவறு செய்துவிட்டோமே!' என்று வருந்தினான்.

கெட்ட பழக்கங்களால் அவனை நோயும் துரத்தியது. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டான். அப்போது தம்பி பார்க்கச் சென்றான்.

"அண்ணா! இனிமேலும் தீயவர்களுடன் சேர்ந்து அழியாதே. அப்பா கொடுத்த சொத்தைப்போல பத்துமடங்கு வைத்திருக்கி றேன். அதில் ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்.

இனியாவது திருந்தி வாழ்வதற்கு வழியைப் பார். மருத்துவமனை செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். நடந்ததை யெண்ணி கவலைப் படாதே'' என ஆறுதல் கூறினான்.

இப்படி இளையவனைப்போல ஆசை களை ஆமைபோல் அடக்கி, கௌதமரின் பிள்ளைபோல நிதானமும், பொறுமையும், தாமதமும் விளைவிக்கும் நன்மைகள் என்ன என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து, அன்பைப் பெருக்கி பிறருக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்தால் நமக்கும் வளமான வாழ்வு அமைவதோடு, வாழ்க்கை மங்களகரமாய்த் திகழும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு திருத்தலம்தான் சிறுகுடி மங்களநாதர் திருக்கோவில்.

இறைவன்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்.

இறைவி: மங்களநாயகி, மங்களாம்பாள்.

விநாயகர்: மங்களவிநாயகர்.

விஷேமூர்த்தி: அங்காரக பகவான்.

புராணப் பெயர்: திருச்சிறுகுடி.

ஊர்: செருகுடி.

தலவிருட்சம்: வில்வமரம்.

தீர்த்தம்: மங்கள தீர்த்தம்.

தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இவ்வாலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில் 123-ஆவது தலமாகவும்; காவிரி தென்கரைத் தலங்களில் 60-ஆவது தலமாகவும் திகழும் திருத்தலம். சம்பந்தர், சேக்கிழார், விசுவாமித்திரர், சூரியன், கந்தர் வர்கள் மற்றும் அங்காரகன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தமென முப்பெரும் சிறப்புகளோடு இன்னும் பல்வேறு சிறப்புகளையும் பெற்றதொரு திருத்தலம்தான் சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோவில்.

"திசையவர் தொழுதெழ சிறுகுடி மேவிய

தசமுக னுரநெரித் தீரே

தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்

வசையறு மதுவழி பாடே.'

-திருஞானசம்பந்தர்

எல்லா திக்குகளிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள் கின்றவரும், இராவணனின் வலிமை அடங் கும்படி கயிலைமலையின்கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுகிறவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும். அது உம்மை வழிபட்டதன் பலனாகும்!

"கராக்ரேண ஸ்ப்ருஷ்டம்

துஹிநகிரிணா வத்ஸவதயா

கிரீசேன உதஸ்தம் முஹூ

அதரபாநாகுலதயா.'

-சௌந்தர்யலஹரி

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் விரும்பிய அனைத்தையும் அடைந்து வந்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த வழிகளில் அவை வரவில்லையென்றா லும், நமக்கு வசதியான அமைப்பில் ஒவ்வொன்றும் நடந்துவந்திருக்கிறது.

கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்தோமேயா னால் அந்த சக்தியின் அருளால் நம் ஓட்டுமொத்த வாழ்க்கையும் நலமாக இருப்பதை கவனிக்க லாம்.

"அன்னையே, நீயே என் பாதையானாய்;

பாதையின் ஒளியானாய்; பதியும் காலடித்தடங்களே உன்னுடையதாய் கரம் பற்றிச் செல்கிறாய்' என்கிறார் ஓர் அம்பிகை உபாசகர்.

"காரிய காரண நிர்முக்தா' என்கிறது லலிதாசஹஸ்ர நாமம். எல்லா உயிர்களிலும் ஒன்றியும், அனைத்திலிருந்தும் விடுபட்டும், அனைத்திற்கும் மேலான பரப்பிரம்மமாக விளங்குகிறாள் அம்பிகை. காமனின் எதிரியான காமேஸ்வரரின் காதல் நாயகி. அவளின் பெருமையைக் கூற யாருக்கு திறமையுண்டு. இறைவன் நினைவிலேயே ஆழ்ந்திருப்பவள் அம்பிகை.

ff

அவர்களின் நாடகம்கூட தங்கள் பக்தர்களின நலனுக்காகவே இருக்கும். அந்த வகையில் திருச்சிறுகுடி என்று வழங்கப்படும் சிறுகுடி, தம்பதிகளின் இடையே விட்டுக் கொடுத்தலும், புரிந்துகொள்ளும் தன்மை வேண்டும் என்றும் விளக்கும் தலமாக விளங்குகிறது.

ஒருமுறை கயிலையில் சிவபெருமானும் அம்பாளும் சொக்கட்டான் விளையாடினர்.

அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில் திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டிலிருந்து காணாமல் போனார். ஈசனைத் தேடியலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால் காவிரியின் தென்கரையில் வில்வமரங்கள் அடர்ந்த அமைதியான சூழலுள்ள குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்துவைத்து வழிபட்டாள். காணாமல்போன சிவ பெருமான் அந்த இடத்தில் தோன்றினார்.

மனைவியின் மகிழ்ச்சிக்காக விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாக வும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாய் இருப்பதற்காகவும் மனைவிமட்டுமல்ல; கணவனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் என்றும் ஈசன் கூறினார். இதை உணர்த்தும் விதமாக இங்கு தான் குடிகொள்ளவே இந்த விளையாடல் என்று அருள்பாலிக்கிறார்.

அம்பிகை சிறுபிடியளவு மண்ணெடுத்து லிங்கம் உண்டாக்கி வழிபட்டதால் சிறுபிடி என்றழைக்கப்பட்டு, அது மருவி' "சிறுகுடி' என்று தற்போது அழைக்கப்படுகிறது.

மங்களங்களை அள்ளி வழங்குவதால் அம்பிகை மங்களாம்பிகை என்று பெயர்பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை மங்கள தீர்த்தம் ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது.

சிறப்பம்சங்கள்

* இறைவன் மங்களநாதர் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்தலத்திற்கு "சூட்சுமபுரி' என்றும், இறைவன் சூட்சுமபுரீஸ்வரர், சிறுகுடியீசர் என்றும் அழைப்பதுண்டு. குறைவான உயரத்துடன் மூலவர் சுயம்புத் திருமேனியாக அருட்பிரவாகமாகக் காட்சிதருகிறார்.

* இறைவி மங்களாம்பாள் தெற்கு நோக்கிய அபயவரத ஹஸ்தத்துடன் நின்ற திருக்கோலத்துடன் அழகுற காட்சிதருகிறாள்.

அம்பாளுக்குதான் அபிஷேகம் நடைபெறுமாம்; சுவாமிக்கு இல்லையாம். காரணம் இறைவன் மணலாலானா சுயம்புத் திருமேனி.

* அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கியமையால் இக்கோவிலிலுள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை, தம்பதிகள் பிரிவு, ஆரோக்கியக்குறைவு மற்றும் நோய்கள் தீர்ந்து குடும்பத்தில் சுபமங்களம் உண்டாகும். ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12-ஆமிடத்தில் உள்ளவர்களும், கடகத்தில் நீசம் பெற்றவர்களும் இங்குவந்து மங்கள தீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனை தரிசனம் செய்து அங்காரகனுக்குப் பரிகாரப் பூஜை செய்தால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்று ஆலய பிரதான அர்ச்சகர் கூறுகிறார்.

வில்வ இலை, மங்கள நீர் (குளத்துநீர்), மஞ்சள்கயிறு ஆகியவைகொண்டு செவ்வாய் தோஷப் பரிகாரம் செய்யப்படுகிறது. பரிகாரம் முடிந்தபின் மஞ்சள்கயிறை தலவிருட்சமான வில்வமரத்தில் கட்டி வழிபடுவது விஷேசம். செவ்வாய்க்கு "மங்களன்' என்ற சிறப்புப் பட்டப்பெயர் கிடைத்ததும் இத்தலத்தில்தான். செவ்வாய் தோஷ ஜாதகர்கள் இங்கு ஏராளமானோர் வந்து வழிபட்டுப் பயன்பெறுகின்றனர்.

* பகை கிரகங்களான சூரியன், சனி அருகருகே இருந்து அருள்வது சிறப்பு. சூரியன், சனி ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் தந்தைக்கும் பிள்ளைக்கும் ஆகாது என்பர். அப்படிப்பட்ட தோஷம் விலகும்.

* இக்கோவிலின் நவகிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவகிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார்.

மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன்பாண்டியனை காப்பாற்றச் சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர், "நாளும் கோளும் சரியில்லை; இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்து' என சொல்லித் தடுத்தார். அப்போது சம்பந்தர், "சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது' எனக்கூறி பாடியதே கோளறு பதிகம்.

அன்றுமுதல் கிரகக் கோளாறு உள்ளவர்கள் கோளறு பதிகம் பாடிவருகின்றனர். இதைக் குறிக்கும்வகையில், இங்கே நவகிரகங்களின் நண்பராக திருஞானசம்பந்தர் நின்றுள்ளார். இவரை தரிசித்தால் எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகுமென்பது ஐதீகம்.

* உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்புடையதாகும்.

அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில், அவள் தோள்மீது ஈசன் கைபோட்டுக்கொண்டு காட்சிதருவது பக்திப் பாங்குடன் பார்க்கவேண்டிய அழகாகும்.

* திருஞானசம்பந்தர் பாடியுள்ள இத்தலத்திற்கான பதிகத்தின் முதல் பாடலில், சிறுகுடி இறைவனை வழிபடுபவர்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார். பதிகத்தின் 11-ஆவது பாடலில், "தேன் வண்டுகள் விரும்பும் பொழில் சூழ்ந்த சிறுகுடி' என்று பாடியுள்ளார். இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போன்று இவ்வாலயத்தின் மண்டபத்தில் தேன்கூடு இருப்பதை என்றும் பார்க்கலாம்.

* சங்க இலக்கியத்தில் புகழப்படும் பண்ணன் என்னும் கொடைவள்ளல் சோழவேந்தன் வாழ்ந்த ஊர் சிறுகுடி. "தனக் கென வாழா பிறர்க்குரியன்' என்று அவனைப் புலவர் கொற்றங்கொற்றனார் பாராட்டுகிறார்.

* அங்காரகனை வழிபட மாசிமாதம் செவ்வாய்க்கிழமை ஏற்றது. மாசி மாத அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப் புப் பூஜைகள் உண்டு.

* இத்தல மங்கள விநாயகருக்கு வளர்பிறை சதுர்த்தி திதியில் உதயாதி நேரத்திலும், தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தியில் அந்திசாயும் நேரத்திலும் (மாலை 6.00 மணி) அபிஷேக வழிபாடு செய்தால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

* குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிக் காலத்தில் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வேள்விபூஜைகள் முறையாக நடக்கும்.

* செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் இத்தல துர்க்கைக்கும் அங்காரகனுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் நோய் நிவர்த்தியாகி ஆரோக்கியம் விருத்திபெறும்.

* ஏமாற்றி சொத்துகளை அபகரித்த வர்களை அழிப்பவர் பைரவர். நம்பிக்கை துரோகிகளிடமிருந்து காப்பவர். உடல் ஆரோக்கியத்தைத் தருபவர். சொல்லால் காயப்படுத்தியவர்களையும், வாக்குறுதி கொடுத்து காயப்படுத்தியவர்களையும், அவச்சொல் கூறி காயப்படுத்தியவர்களையும், வீடு, வாசல், சொத்துகளை ஏமாற்றி அபகரித்தவர்களையும் இத்தல பைரவர் அழித்தொழிப்பார் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது நன்று.

"திக்கற்றவருக்கு தெய்வமே துணை' என்பார்கள். அப்படியொரு தெய்வமாக- வாழ்க்கையை மாற்றித்தரும் வள்ளலாக- அஷ்டசித்தியும் தரும் தெய்வசக்தியாகத் திகழ்கிறார்.

செவ்வாய் தோஷத்தினால் காலா காலத்தில் நடக்கவேண்டிய திருமணம் தள்ளிப்போகிறதா? சிலருக்கு விதிவசத் தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கவேண்டிய சூழ்நிலையா? விபத்தினால் உயிர்ச் சேதம் ஏற்பட்டு கணவனை இழந்த வரா? நோய் நொடியால் பாதிக்கப்பட்டு மனைவியைப் பறிகொடுத்தவரா? கருத்து வேறுபாடால் கணவன்- மனைவி பிரிந்து வாழ்கிறாரா? குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறதா? பூமி, வீடு சம்பந்தமாக பலகாலம் பிரச்சினை உள்ளதா? திருமணமாகி பல ஆண்டுகளாகியும் மழலைப்பேறு இல்லையா? இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வைத் தருபவர்தான் இந்த சிறுகுடி ஈசன்.

அம்பிகைக்கு காட்சிதந்த மாசிமாதம் செவ்வாய்க்கிழமை நாள் அல்லது ஏதாவதொரு செவ்வாய்க்கிழமை நாள், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை நட்சத்திரம் வருகிற நாள், தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு, நவராத்திரி காலம், பிரதோஷ காலம் இவற்றில் ஏதாவது ஒருநாளில் மங்கள தீர்த்தத்தில் நீராடி, பரிகார பூஜை வழிபாடுகளை மேற்கொண்டால், அம்பிகைக்கு சூட்சுமமாய் அருளிய ஈசன், நம் வாழ்வில் காலதாமதமாகால் சரியான நேரத்தில் அருள்புரிவார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகர் மு. கார்த்திகேய சிவாச்சார்யார்.

அங்காரக தோஷம், மாங்கல்ய தோஷமகற்றி ஆனந்த நிலையுடன் மங்கள வாழ்வருளும் சிறுகுடி மங்களநாதர், மங்களாம்பாளை மங்கள வாரத்தில் வலம்வந்து வழிபடுவோம். மகிழ்வுடன் செல்வவளம் பெறுவோம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையில் ஆலயம் திறந்திருக் கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக் கோவில், செவ்வாய் தோஷப் பரிகாரத்தலம், சிறுகுடி, சரபோஜிராஜபுரம் அஞ்சல், பூந்தோட்டம் (வழி), குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்- 609 503.

பூஜை விவரங்களுக்கு: மு. கார்த்திகேய சிவாச்சாரியார், செல்: 93810 44986.

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து பேரளம் செல்லும் சாலையில் கற்கத்தி (கொல்லுமாங்குடிக்கு முன்புறம்) பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோமூலம் திருப்பாம்புரம் வழியாக நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிறுகுடியை அடையலாம். பேருந்து வசதி இல்லை. மற்றொரு வழி- கும்பகோணம்- நாச்சியார் கோவில்- கூந்தலூர்- பூந்தோட்டம் சாலையில், கூந்தலூர் கடந்து கடகம்பாடியிலிருந்து ஆட்டோமூலம் அரசலாற்றின் வடகரையைக் கடந்து சிறுகுடி செல்லலாம்.

படங்கள்: போட்டோ கருணா