ராமபிரான், சீதை மற்றும் லட்சுமணனு டன் வனவாசம் சென்றபோது, யாசகன் வேடத்தில் வந்த இராவணன், சீதையைக் கடத்திச் சென்றுவிட்டான்.
சீதையைத் தேடிவந்த ராமபிரான் தமிழகக் கடற்கரையோரமாக "ஏதாவது தடயங்கள் கிடைக்குமா?' என்று லட்சுமண னுடன் தேடியலைந்தார். இராவணன்தான் சீதையைக் கடத்தினான் என்பதை அறிந்திருந்ததால், இலங்கை சென்று போர் புரியத் தீர்மானித்து, அந்த ஏற்பாடுகளுக்காக முகாமிட தகுந்த இடம் தமிழகத்தில் எங்குள்ளது என்பதையும் ராமர் பரிசீலித்தார்.
இராமபிரான் கடற்கரையோரம் வந்ததன் நினைவாக அவரது பாதங்கள் பட்ட சில இடங்கள் இன்றும் போற்றப் படுகின்றன. அவற்றுள் ராமேஸ்வரமும் கோடியக்கரையும் குறிப்பிடத்தக்க இரு பகுதிகள். அங்கே ராமர் பாதங்களை நிறுவி, கோவில்கட்டி வழிபடுகிறார்கள். விஸ்வாமித்திரரை யாகம் செய்யவிடாமல் இடையூறு செய்த அரக்கி தாடகையை வதம்செய்ய, தசரதனிடம் அனுமதிபெற்று சிறுவர்களான ராம- லட்சுமணரை யாகம் நடத்தும் இடத்திற்கு அழைத்து வந்தார் விஸ்வாமித்திரர். அந்த இடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் அமைந்துள்ள தாடகை மலையாகும். இந்த மலையில்தான் தாடகை வாழ்ந்துவந்தாள்.
சிறுவனான ராமன் தாடகையை வதம்செய்த இடம் திருச்சரம்கோப்பு என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஆதாரமாக இவ்வூரில் யாக குண்டங்களின் தடயங்களும் ராமரின் பாதச்சுவடுகளும் உள்ளன. மேலும் இவ்வூரில்தான் தாடகையை வதம்செய்த பாவம் நீங்க ராமர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் கூறப்படுகிறது. ராமபிரான் முதன்முதலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த இடம் இதுவென்று போற்றப்படுகிறது.
இலங்கைக்குச் செல்ல தகுந்தவழி தேடினார் ராமர். அப்போது தமிழ்நாட்டின் தென்கோடி யில், மேற்கிலுள்ள அரபிக்கடல், கிழக்கிலுள்ள வங்காள விரிகுடா, தெற்கிலுள்ள இந்து மகா சமுத்திரம் ஆகிய மூன்றும் கலக்கின்ற கன்னியாகுமரி முனையிலிருந்து இலங்கைக்குச் செல்ல வசதிப்படுமா என்று, அங்குசென்று பார்வையிட்டிருக்கிறார். அதனால், முக்கடல் கூடும் அந்த இடத்தை "ஆதிசேது' என்றும் போற்றுவர். குமரிமுனை வந்த ராமர், அன்னை பகவதியின் அருள்பெற்றதாக வரலாறு. ஆனால் அங்கு ராமர் வந்ததன் நினைவாக ராமர் பாதம் நிறுவப்படவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramar_6.jpg)
அதற்குப்பின், தஞ்சை மாவட்டத்தின் தென்கோடியில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள வேதாரண்யத்திற்கு ராமர் வந்திருக்கிறார். அங்கிருந்து இலங்கைக்கு கடல் வழியாகச் செல்ல சுமார் 35 கிலோமீட்டர் தூரம்தான். வேதாரண்யத்தில் "சேது ரஸ்தா' என்று ஒரு தெருவுக்குப் பெயர் உண்டு. அந்த வீதியின் வழியாகச்சென்று ஒரு சிறிய மணல்மேட்டில் ஏறி இலங்கையைப் பார்த்திருக்கிறார் ராமபிரான். இராவணனின் அரண்மனையும் தெரிந்திருக்கிறது. ஆனால், அந்த அரண் மனையின் பின்பகுதி (கொல்லைப்புறம்) தெரிந்ததால், அவ்வழியாகச் சென்று இராவணனை வீழ்த்துவது வீரணுக்கு அழகல்ல என்ற காரணத்தால் அந்த திட்டத்தைக் கைவிட்டார். ராமபிரான் அங்கு வந்ததன் நினைவாகக் கோடியக்கரைக்குச் செல்லும் வழியில் "ராமர் பாதம்' என்றொரு இடம் இருக்கிறது. அங்கு ராமருக்கு வழிகாட்டிய விநாயகர் கோவிலும் இருக்கிறது. அந்த விநாயகரை "இலக்கு அறிவித்த விநாயகர்' என்று போற்றுகின்றனர்.
இன்றும் பக்தர்களால் வழிபடப்படும் தலம்.
அடுத்து ராமநாதபுரம் பகுதியை நோக்கி ராமபிரான் வந்த போது, தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருப்புனவாயிலை அடைந்தார். அங்கு கடலில் நீராடி, திருப்புனவாயிலில் அருள்புரியும் பழம்பதிநாதரை வழிபட்டு சிவனருள் பெற்றார். ராமர் இங்கு வந்ததன் அடையாளமாக பாதங்கள் வைக்கப் பட்டுள்ளன.
அதன்பின் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியிலுள்ள "கந்தமாதன பர்வதம்' என்ற சிறுமலைமீது ராமபிரான் ஏறி இலங்கையைப் பார்த்தார். அங்கிருந்து பார்த்தபொழுது இராவணன் அரண்மனை யின் முன்பகுதி தெரிந்ததால், அந்த இடமே சிறந்த இடமென்று முடிவுசெய்தார்.
ராமர் கந்தமாதன பர்வதத்தில் ஏறி நின்ற இடத்தில் ராமர்பாதம் நிறுவி கோவில்கட்டி வழிபடப்படுகிறது. இந்த இடம் இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து பார்த்தால் ராமேஸ்வரம் தீவும் நாற்புறமும் அதைச் சுற்றிக் கடலும் மிக அழகாகக் காட்சியளிக்கும். இந்த இடம்தான் (ராமர்பாதம் உள்ள இடம்) ராமேஸ்வரம் பகுதியிலேயே மிக உயரமான இடம். தற்போது ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் இந்த மலைமீதேறி, ராமர்பாதம் கோவிலையும், சுற்றியுள்ள கடலின் அழகையும் கண்டு மகிழ்கிறார்கள். அங்கிருந்துதான் ராமபிரான் இலங்கைக்குப் பாலம் அமைக்க முயன்று வெற்றிபெற்றார்.
அவருக்கு உறுதுணையாக அனுமன், சுக்ரீவனுடன் வானரசேனைகள் இருந்ததால், இலங்கைக்குச் சென்று இராவணனைக் கொன்று சீதாபிராட்டியை மீட்டுவந்தார் என்பது புராண வரலாறு.
ராமபிரான் தன் வனவாசத்தின்போது தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார்.
அங்கெல்லாம், அவர் வந்துசென்றதன் அடையாளமாக ராமர்பாதம் நிறுவி பக்தர்கள் வழிபடுகி றார்கள்.
சில வைணவத் திருக்கோவில்களில் ராமர் பாதம் தனிச் சந்நிதியில் நிறுவப்பட் டுள்ளது. தஞ்சை புன்னைநல்லூர் கோதண்டராமர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் (மூலவர் சந்நிதிக்குப் பின்புறம்), துறையூர் (மலை மேலுள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்குச் செல்லும் வழியில்) மலையடி வாரத்தில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோவில் போன்ற புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ராமர்பாதம் நிறுவப்பட்டு வழிபடப்படுகிறது. ஆனாலும் இராமேஸ்வரம் கந்தமாதன பர்வதத்திலுள்ள ராமர்பாதம் கோவில்தான் அவற்றுள் புகழ்பெற்றுத் திகழ்கிறது.
இந்த ராமர் பாதத்தை வழிபடுவோர் பாதகம் எதுவும் நெருங்காது வாழ்வார்கள் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான நம்பிக்கை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/ramar-t.jpg)