துளசிதேவி விநாயகரை மணம்புரிய விரும்பி வெகுகாலம் தவமிருந்தாள். விநாயகரோ, ""நீ திருமாலுக்கு மனைவி யாக வேண்டியவள். மதிகெட்டு என்னை மணம்புரிய விரும்பாதே'' என எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஆனால் துளசிதேவி விநாயகரை மணம் செய்துகொள்வதில் பிடிவாதமாய் இருந்தாள். அதுகண்டு வெகுண்டெழுந்தவர், ""நீ செடி வடிவம் பெறுவாயாக. என்னுடைய தினசரி வழிபாட்டிற்கும், பூஜைக்கும் நீ அருகதையற்றவளாவாய்'' என்று சாபமிட்டார்.

krishnanஅதுபோல சிவனின் வழிபாட்டிற்குத் தாழம்பூ உகந்ததல்ல. இப்படி இறைவன் தனக்கு உகந்தவையல்ல என விலக்கியதை நாம் அந்த தெய்வங்களின் வழிபாட்டிற்கு வாங்கிச் செல்லக்கூடாது.

வழிபாட்டிற்கும், தெய்வத்திற்கும் உகந்தவையுடன் ஆலயம் வந்தபின், நம் கையிலிருந்து அர்ச்சனைத் தட்டை வாங்கியதும் குருக்கள் கேட்கும் முதல் கேள்வி, ""யார் பெயருக்கு அர்ச்சனை?''.

அப்படிக் கேட்டதுமே வீட்டில் உள்ளவர்கள், உறவுக்காரர்கள், குழந்தைகள் என எல்லார் பெயரும் நினைவில் வந்து குழப்ப ஆரம்பித்துவிடும். யார் பெயரைச் சொல்வதென முடிவு செய்யமுடியாமல் ""சாமி பெயருக்கு செய்யுங்கள்'' என சொல்லிவிடுவோம். ஜீவாத்மாவாகிய நமக்குதான் நோய்கள், தோஷங்கள், தொல்லைகள் என உண்டு. அதன் பொருட்டே துன்பக்கடலில் அடிக்கடி சிக்கிக் கொள்கிறோம். அதிலிருந்து காக்க வேண்டியே பரமாத்வாகிய இறைவனை நாடி ஆலயம் வருகிறோம். அப்படி இருக்க தெய்வத்தின் பெயரில் அர்ச்சனை செய்வது சரிதானா? இறைவனுக்காக இறைவனிடமே கேட்பது முறையா? பலவீனமான ஜீவாத்மாவாகிய நமக்குத்தான் பலமான பரமாத்மாவின் ஆசியும் அருளும் வேண்டும். இதை நமக்கு சூசகமாய் சொல்வதற்காகவே "யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்' என ஆலயங்களில் கேட்கிறார்கள்.

Advertisment

வழிபாட்டை முடித்துக்கொண்டு ஆலய வலம் வரும்போது, பிராகார தளத்தில் கோபுரம், கொடிமரத்தின் நிழல் விழுந்திருந்தால், நிழலின் முனைப் பகுதியிலிருந்து அதன் அடிப்பாகம் வரையிலான நீளத்தை தோராயமாக ஐந்து பங்காக்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு முனைப்பகுதியில் இருந்து இரண்டு பங்கு அளவிலேயே நடந்துவர வேண்டும். அப்படி நடந்து வருவதைக்கூட எதிரும் புதிருமாய் அதாவது அப்பிரதட்சணமாக வலம் வரக்கூடாது. குழப்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே அப்படி வலம் வருவார்கள். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட விஷாக்கினியிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு சிவபெருமானிடம் ஓடி வந்தனர். அவர்கள் வந்த பாதையில் விஷப்புகையானது சூழ்ந்துகொண்டதால், அவர்கள் எதிர் திசையில் ஓடிச்சென்று சிவனைச் சந்தித்து முறையிட்டனர். தேவர்களைப்போல நமக்கு குழப்பமோ பயமோ இல்லை. நம்முடைய அமைதிக்காகவும், ஆத்ம சுத்திக்காகவும் மட்டுமே ஆலயத்தை வலம்வருகிறோம்.

வழிபடுகிறோம். எனவே பிரதோஷ வழிபாடு வேளைதவிர மற்ற சமயங்களில் அப் பிரதட்சணமாக வலம்வரக்கூடாது. வலம்வரும் சமயத்தில் அவசர வேலையாகச் செல்பவர்களைப்போல வேகவேகமாக ஓடவும் கூடாது.

விழுந்து வணங்குதல் நம் தமிழ்மரபோடு ஆலய மரபாகவும் தொன்றுதொட்டுப் பின்பற்றப்படுகிறது. ஆலயத்தை வலம்வந்தபிறகு மும்மூர்த்திகளின் அடையாளமாய் விளங்கும் கொடிமரத்தின் பக்கத்தில் மட்டுமே விழுந்து வணங்குதல் வேண்டும். வேறு எந்த சந்நிதியிலும், எவர் காலிலும் ஆலய வளாகத்திற்குள் விழுந்து வணங்குதல் கூடாது. பெண்கள் முழு உடம்பும் பூமியில் படும்படியாக விழுந்து வணங்கக்கூடாது. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் "ஆள்பாதி; ஆடை பாதி' என்பதன் அர்த்தமே மாறிவிட்ட நிலையில், எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒருமித்து தெய்வ சிந்தனையிலேயே இருக்கவேண்டும் என்பதாலயே பெண்கள் ஆலயத்தில் அஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் கூடாது என்றனர். அவ்வாறே இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கியும், தோப்புக் கரணம் போட்டும் ஆலயத்தில் பெண்கள் தெய்வங்களை வழிபடக்கூடாது. "ஆணில் பாதி பெண்' என உலகிற்கே காட்டிய இறைவனின் சந்நிதியில் வழிபட பெண்களுக்கு இத்தனைக் கட்டுப்பாடா? இதெல்லாம் பெண்களுக்கு எதிரான ஆணின் அடக்குமுறையில்லையா என கேள்விகள் எழலாம். ஆனால், காரணமின்றி நம் முன்னோர்கள் காரியங்களை மட்டுமல்ல; கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை.

Advertisment

"பெண்களின் ஸ்தனங்களையும், தொப்புள் பிரதேசங்களையும் பார்த்து மதி மயங்கி காம விகாரமடையாதே. இது வெறும் மாமிசப் பிண்டம். சதை, கொழுப்பு ஆகியவற்றின் மாறுபட்ட விகாரங்களே அவை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத் திக் கொள்' என்று ஆதிசங்கரர் நமக்குச் சொன்ன ஸ்தோத்திரம், "கூடாது' என்பதற்கான காரணத்தைத் தெளிவு படுத்தும்.

அவ்வாறே குளித்து முடித்து தண்ணீர் சொட்டும் ஈரத்தலையுடனோ, தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டோ, வெற்றிலை போட்டுக் கொண்டோ, வெறும் கையை வீசிக்கொண்டோ ஆலயங்களுக் குள் வரக்கூடாது என்பது இரு பாலருக்கும் பொருந்தும். அவரவர் வரைமுறை மீறாது இறைவனை வணங்கும்போது, ஆத்மா லயிக்கும் இடமாக ஆலயம் மாறும். அங்கிருந்து திரும்பும்போது மனம் தூய்மை பெற்றுத் திகழும்.

(தொடரும்)