கும்பம் என்பது காலபுருஷனின் 11-ஆவது ராசி. இதன் அதிபதி சனி ஆவார். இங்கு எந்த கிரகமும் உச்சம், நீசம் பெறுவதில்லை.

குடும்ப விவரம்

இந்த ராசியின் உருவம் கும்பமாகும். இவர்கள் எதையும் வெளிக்காட்டாமல், மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வர். ஏன், இவர்கள் குடும்பத்தினரால்கூட இவர்களை முழுமை யாகப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் குடும்பத்தினர் இனிமையான சொற்களும், தெய்வ பக்தியும் நிரம்பியவர்கள். இளைய சகோதரர் முன்கோபியாக இருப்பார். தாய் அழகான கண்களுடன், அழகு மிக்கவராக இருப்பார். இவருடைய பரம்பரை, சற்று அறிவுப் பூர்வம் கொண்டது. இவர்களுக்கு அலைச்சலான, பயணம், நீர் சம்பந்தமான வேலை அமையும். வாழ்க்கைத்துணை, அரசு சம்பந்தம் கொண்டவராக அமைவார். இவர்களுடைய எதிர்மறையான புத்திசாலித்தனமே அவமானத்துக்குக் காரணமாகும். தந்தை நல்ல மனிதத் தன்மையுடன் இருப்பார். இவர்களுடைய தொழிலில் நெருப்பு, மின்சாரம், செம்பு, மண் போன்றவை கலந்திருக்கும். மூத்த சகோதரர் அமைதியும் ஆன்மிகமும் உடையவர். இவர்களுக்கு தூங்குவது மிகவும் பிடிக்கும். பயண விஷயங்களில் சோம்பேறியாக இருப்பர். பிறந்த ஜாதகத்தைப் பொருத்து பலன்கள் முன்னே பின்னே இருக்கும்.

குரு இருக்குமிடம் பலன்

Advertisment

இதுவரையில் கும்ப ராசிக்கு 12-ல் விரயத்தில் அமர்ந்த குரு, இப்போது ராசியிலேயே அமர்ந்துள்ளார். குரு உங்களுக்கு லாப- தனாதிபதி ஆவார். உங்களின் கும்ப ராசியில் குரு அமர்ந்துள்ளார். இது சனியின் வீடு. குரு கும்ப ராசிக்கு 2, 11-ன் அதிபதி. 2-ஆமிடம் எனும் தனாதிபதி ராசியில் சஞ்சரிக்கும்போது, உங்கள் வாக்குவண்மை பலம்பெறும். நீங்கள் ஒருமுறை சொன்னால் அது நூறுமுறை சொன்ன "எஃபெக்ட்' இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சியில் தன, லாபாதிபதி உங்கள் ராசியில் ஓடுவதால், பணவரவு செழிக்கும். எதிர்பார்த்த இனங்களிலிருந்து, தனப் ப்ராப்தி கிடைக்கும். குடும்பம் மேன்மையடையும். அசையும் சொத்துகள் வாங்குவீர்கள். அதிக அளவு "ஃபிக்ஸட் டெபாசிட்' செய்வீர்கள்.

பல அரசியல்வாதிகள் தங்களின் பிறந்த இடத்தில் மேன்மை பெறுவர். மேலும், உங்கள் ஊரில் நடைபெறும் தேர்தல், போட்டி, பந்தயம் போன்றவற்றில் பங்குபெற்று முதலிடம் பிடித்துவிடுவீர்கள்.

Advertisment

சட்டத்துறையில் முதன்மை இடம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொலைக்காட்சி, பத்திரிகை, செய்தித்துறை, ஊடகங்களில் பணியாற்றுவோர் மிக உன்னதம் பெறுவர். ரியல் எஸ்டேட், வீட்டுத் தரகு, ஒப்பந்த வேலை தொழில்புரிவோர் வேகமாக வளர்ச்சி பெறுவர்.

சரங்கத் தொழில், மண் தோண்டுவது, பாதாள சாக்கடை, சலவை செய்யும் தொழில், துப்பரவு ஒப்பந்தத் தொழில், கிராமத்தில் கழிவறை கட்டும் ஒப்பந்தம், கிணறு தோண்டும் தொழில், தோல் பதனிடுதல், இரும்புக் கிடங்குகள், சலூன் கடை வைத்திருப்போர் என இவர்கள் அனைவரும். தொழிலில் ஏற்றமும் வளர்ச்சியும் பெறுவர்.

அரசுப் பதவியில் இருப்போருக்கு ஏற்றமும், மாற்றமும் சேர்ந்துவரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கல்வி, வேலை சம்பந்தமாக தேர்வெழுதினால், அதில் முதன்மை பெறுவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சிக் காலத்தில் வரவேண்டிய பணம் வருதலும், எண்ணிய எண்ணம் நிறைவேறுதலும், குடும்ப முன்னேற்ற சிந்தனைகளும், அரசியல் முன்னெடுப்பாக்கான முயற்சிகளும், எதிர்காலத் தேவைக்கு பணத்தைப் பத்திரப்படுத்தலும் என உங்களின் அனைத்து அபிலாஷைகளும் அருமையாக நிறைவேறும்.

5-ஆம் பார்வைப் பலன்

கும்ப ராசியிலுள்ள குரு தனது 5-ஆம் பார்வையால் ராசியின் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். குரு 5-ஆமிடத்துக்குக் காரகர். ஒரு காரக கிரகம் தனக்குரிய காரக வீட்டைப் பார்ப்பது விசேஷம். இதனால் இவ்வளவு நாளும் வாரிசு ஏக்கம் கொண்டிருந்தவர்களுக்கு புத்திர யோகம் கிட்டும். உங்களது சில வாரிசுகள், ஏதேனும் தீய பழக்கத்தில் சிக்கிக்கொண்டிருப்பின், அதிலிருந்து மீண்டுவிடுவர்.

வாரிசுகளின் படிப்பறிவு சற்று மட்டுப்பட்டிருந்தால், இந்த குரு பார்வை அவர்களின் முளையை கூர்மைப்படுத்தும்; புத்திசாலியாக மிளர்வர். வாரிசுகள் போட்டி பந்தயத்தில் கலந்துகொண்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவர். உங்களில் சிலர் பங்கு வர்த்தகத்தில் பலன் மிகப்பெறுவீர்கள். சிலருக்கு காதல் துளிர்க்கும். அது உண்மைத் தன்மை நிறைந்ததாக இருக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்கள் நன்மை கிடைக்கப் பெறுவர். அதிலும் குறிப்பாக கதை எழுதுதல், கவிதை எழுதுவது, திரைப்படம், தொலைக்காட்சி எடுக்கும் கணக்கு வழக்கை எழுதுவது, கலை சம்பந்த பயணச்சீட்டு எடுப்பது, வாகன ஏற்பாடு, நடிப்பவர்களின் ஒப்பந்தங்களை உண்டாக்குவது, படப்பிடிப்பு நடத்தும் வீடுகளைக் குத்தகைக்கு எடுப்பது என இன்னபிற திரைப்படம் சம்பந்தமான தொழில்புரிவோர் முன்னேற்றம் காண்பர்.

சிலர் எதிர்மறை இன- மத ஆட்களோடு காதல் புரியநேரிடும். ஒரு சிலருக்கு, குழந்தைகள் கல்வி சம்பந்தமான மந்திரி பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துகளை விற்கமுடியாமல் தடைபட்டுக்கொண்டே இருப்பின், தற்போது அவை விற்று நல்ல லாபம் கிடைக்கும். குலதெய்வத்திடம் நேர்ந்து கொண்ட நீண்டநாள் பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றுவீர்கள்.

7-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 7-ஆம் பார்வையால் உங்களின் ஏழாம் வீட்டை எட்டிப் பார்க்கிறார். 7-ஆம் வீடு என்பது களஸ்திர ஸ்தானம். குரு பார்வை பட்ட களஸ்திர ஸ்தானம், உடனே வேலை செய்யும். ஆம்; திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்- பெண்களுக்கு உடனடியாக கெட்டிமேளச் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். வரும் வரன் அரசு சம்பந்தம் கொண்டவராக இருப்பார். வரன் பெயரில் சொந்த வீடு இருக்கும் தாய்- தந்தையர் நல்லவிதமாக இருப்பர்.

வீடு வாங்க இயலும். அது அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கும். உங்களின் வியாபாரம், வணிகம் மேன்மை பெறும். சிலருக்கு பங்குதாரர் கிடைப்பார். வேறு சிலருக்கு இருக்கும் பங்குதாரர் பிரிந்துவிடுவார். எது நடந்தாலும் நன்மைக்கே என இருக்கவேண்டும்.

வணிகம், அரசு ஆதரவு பெறும். அரசின் சில சட்டங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். பெற்றோ ரின் தொழிலை, வியாபாரத்தை நீங்கள் எடுத்து நடத்துவீர்கள். பெரிய மனிதர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கலைத்துறையினர் என இவர்களது நட்பு கிடைத்து, அறிமுகப் படலம் விரிவடையும். இது உங்கள் தொழிலின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்தால், வரும் வரன் சற்று தோரணையாக, அதிகாரம் மிக்கவராக அமைவார். அதிர்ஷ்டத்தின் சாயல் அதிகம் படிந்தவராக இருப்பார். சிலர் விவசாய வயல், பண்ணை, தோட்டம் ஆகியவற்றை வாங்கும் யோகம் பெறுவீர்கள். சிலர் கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்வீர்கள். வெளிநாட்டு வாகனம் வாங்கக்கூடும். திருமண வாழ்வு அதிர்ஷ்டத்தை அழைத்துவரும்.

9-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 9-ஆம் பார்வையால் கும்ப ராசியின் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார்.

9-ஆமிடம் என்பது அதிர்ஷ்ட யோக ஸ்தானம். இதனை, பெருக்கும் தன்மையுள்ள குரு பார்க்கும்போது பலனின் வீச்சு அதிகமாக இருக்கும்.

கும்ப ராசியினர் தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். நல்ல தலைமைப் பதவிகள் தேடிவரும். உங்கள் தொழிலுக்கு இலவச விளம்பரம் கிடைக்கும். இதனால் உங்கள் வியாபாரம், தொழில் மக்களின் பேசு பொருளாகி, வணிகம் வீறுநடை போடும். வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூரிலுள்ள வீட்டை விற்றுவிட்டு, நீங்கள் இருக்கும் ஊரில் வீடு வாங்குவீர்கள். உங்களிடம் இருக்கும் அதீத பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வீர்கள். நகைக்கடைக்காரர்கள் முன்னேற்றம் காண்பர். ஆபரண விஷயத்தில் கண்டிப்பாக கள்ளக்கணக்கு எழுத வேண்டிவரும். பரபரப்பாக வியாபாரம் நடக்கும் வீதியில், நல்ல பார்வையான இடத்தில் கடை, வணிக வளாகம் கிடைக்கும் யோகமுண்டு.

வங்கி சார்ந்த ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும். காவல் துறையினர், நல்ல அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். கலைத்துறையினர் பட்டம் பெறுவர். நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். முனைவர் பட்டம் பெறும் முயற்சி பலிதமாகும். வீடுகளிலும், வணிக இடங்களிலும் யாக பூஜை நடத்துவீர்கள். மூத்த சகோதரர் ஒரு அதிர்ஷ்ட நிகழ்வை சந்திப்பார். நிறைய மனைகள் வாங்கும் நிலை ஏற்படும். பொறியியல் கல்வி, கெமிஸ்ட்ரி, ஆன்மிகம் சார்ந்த கல்வி, கலை சார்ந்த கல்வி, மின்சாரம் சார்ந்த கல்வி என உயர்கல்வி கிடைக்கும். பிறமொழிக் கல்வி சிறக்கும். பிறமொழி கதை, இலக்கியங்களைத் தாய்மொழியில் மொழிபெயர்ப்பர். குருவின் பார்வை பெற்ற 9-ஆமிடம், நிறைய நிறைய அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொண்டு வரும்.

பொதுப் பலன்கள்

கும்ப ராசியில் குரு அமர்ந்திருக்கிறார். அவர் தன் அருமையான பார்வையால் புத்திர பூர்வீக ஸ்தானம், களஸ்திர ஸ்தானம், அதிர்ஷ்ட ஸ்தானம் என இவற்றைப் பார்த்து, அதனை செழிக்கச் செய்கிறார். ஒரு மனிதருக்கு எது தேவையோ அதனை நிறைவாக கும்ப ராசிக்கு வழங்குகிறார்.

அதனால் இந்த குருப்பெயர்ச்சி கும்ப ராசியாருக்கு 90 சதவிகித நற்பலனைத் தரப்போகிறது.

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் தொழில், வேலை, வியாபார விஷயங்களில் மனவுறுதி ஏற்படும். இதனை இவன்கண் கொடுத்து, வேலையை முடிக்கச் செய்வதில் திறமை பெறுவீர்கள். இந்த மனத்தெளிவு, எந்த குத்தகைக்கு மெனக்கெடலாம்- எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்- எதனை நிராகரிக்கலாம் எனும் தீர்க்கமான முடிவை எடுக்கச் சொல்லும். இந்த முடிவுகளால் பிறர் உங்கள் ஆலோசனையை நாடிவருவர். இதன்மூலம் தொழிலில் மட்டுமல்ல; வீட்டிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏறும். உங்களின் ஒரு யோசனைக்கு அனேகர் காத்திருப்பர். அதுபோன்ற ஒரு நல்ல சூழ்நிலையை குருபகவான் வழங்குவார். சித்தர்கள் நிறுவிய கோவில்களில் உள்ள முருகரை வணங்கவும்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

எப்போதும் ராகு என்பவர் இருள் கிரகம். அவர் சாரம் வாங்கிய சதய நட்சத்திரத்தாரர் இன்னும் அழுத்தமானவர்கள். அதிலும் கும்ப ராசி, ராகு சார நட்சத்திரத்தாரின் நிலை எப்படியிருக்குமென தனியாகச் சொல்லவேண்டியதில்லை. எதிலும் ஒரு ரகசியம்தான். வெளிப்படைத் தன்மையே பெரும்பாலும் இருக்காது. நாவில் அமிர்தம் கொண்டு பேசினாலும் உண்மைத்தன்மை குறைவுபடும். இந்த குருப்பெயர்ச்சியில் இவர்களின் நட்சத்திரத்தின் வழியே போகும்போது, இவர்களின் குணநிலை சற்று மேம்பட வாய்ப்புள்ளது. குணக்கேடுகள் சற்றே மறையும். இதனால் இவர்களிடம் பழகுகிறவர்கள், "சாருக்கு கொஞ்சம் நல்ல புத்தியாட்டம் இருக்கு. பரவாயில்லை மனுசன்' என அவர்கள் ஆசுவாசப் படுத்திக்கொள்வர். ஒரு விநோதம் என்னவென்றால், ராசியில், நட்சத்திரத்தில் குரு செல்லும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலை மேன்மை, புகழ் அடையும். இந்த சதய நட்சத்திரம் மட்டும், மற்றவர்கள் நிம்மதியடையும் விதமாக உள்ளது. வியப்புதான்!

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

குருபகவான் தன் சொந்த நட்சத்திரக் காலின் வழியே பயணப்படுகிறார்.

கையில் வந்தது அதுவே வாயில் விழுந்த கதையாக, எதுவும் எளிதாக நடக்கும். நீங்கள் நினைக்கும்- எண்ணும் செயல்கள் உடனடியாக நடந்தேறும்; இழுத்தடிக்காது. ஒரு மனிதருக்கு நினைத்தது உடனே நடப்பதென்பது எவ்வளவு பெரும் பேறு! குடும்பத்தினரின் அனுசரணையும் அபரிமிதமாக அமையும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் கையில் பணம் வெள்ளமாக இருக்கும்போது, குடும்பத்தார் மட்டும் என்ன... தெரிந்தவர் தெரியாதவர் என அவ்வளவு பேரின் அனுசரணையும் கிடைக்கும்தான். வாழ்க்கையில் வேறென்ன வேண்டும். உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிக யோகமான காலகட்டமாக அமையும்.

பரிகாரங்கள்

சிவபெருமானை வணங்கவும். தர்மசாஸ்தாவையும், சனீஸ்வர பகவானையும், ஆஞ்சனேயரையும் வணங்கவும். உங்கள் ராசியைப் பொருத்தவரை இந்த குருப்பெயர்ச்சி மிக யோகமான பலன் தருகிறது. எனவே உங்களைச் சுற்றி இருப்போருக்கு அவர்கள் தேவையறிந்து உதவுங்கள்.

"ஆறேறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி' எனத் தொடங்கும் பஞ்சபுராணப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.