நக்கீரர் கூற்றுப்படி-
திருப்பரங்குன்றம்- முதல் படை வீடு.
திருச்செந்தூர்- இரண்டாம் படை வீடு.
பழனி (திருஆவினன்குடி)- மூன்றாம் படை வீடு.
திருவேரகம் (சுவாமி மலை)- நான்காம் படை வீடு.
திருத்தணிகை (குன்றுதோறாடல்)- ஐந்தாம் படை வீடு.
பழமுதிர்ச்சோலை- ஆறாம் படை வீடு.
குன்றுதோறாடலில் பல தலங்கள் உள்ளன. பிரத்யேக முருகன் கோவிலோ அல்லது சிவன் கோவிலிலுள்ள முருகன் சந்நிதியோ இருக்கும். 206 தலங்களில் கிடைத்துள்ள 1,349 திருப்புகழ் பாடல்களில் முருகன் எழிலை, லீலைகளைப் பாடியுள்ளார் அருண கிரிநாதர். 33 தலங்கள் மலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று ஞானமலை. இந்த தலம் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில், 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மங்கலம் என்னும் ஊரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் அருகிலுள்ள கோவிந்தச்சேரி எனும் கிராமத்தில் உள்ளது. இத்தல விவரம் 1998-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு, ஞானாஸ்ரமம் அறக்கட்டளைமூலம் கோவில் நன்றாக சீரமைக்கப்பட்டது. அன்றாட பூஜைகளும் நடக்கின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan_16.jpg)
அருணகிரிநாதருக்கு முருகன் இங்கு மீண்டும் தன் பாதக்காட்சித் தந்த இடம்.
மலையடிவாரத்தில் ஞானகணபதி தரிசனம் தருகிறார். 150 படிகள் ஏறினால் ஆலமரத்தடியில் ஞான தட்சிணாமூர்த்தியைக் காணலாம். மலை உச்சியில் வள்ளி, தேவசேனையுடன் முருகன் அருள்பாலிக்கிறார்.
அருணகிரியாருக்குக் காட்சிதந்த "குறமகள் தழுவிய குமர'னின் அற்புதமான பஞ்சலோக விக்ரகத்தை இங்கு காணலாம்.
வள்ளிமலையில் கரம் பற்றிய கந்தன், திருத்தணிகைக்குப் போகும்வழியில் இந்த ஞானமலையில் வந்து தங்கினார். முருகன் நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் அருளுகிறார். முன்வலக்கரம் அபயகரம். இடக்கரம் இடுப்பில். பின் வலக்கரம் ஜப மாலை ஏந்த, இடக்கரம் கமண்டலத்துடன் திகழ்கிறது. இந்த உருவத்திற்கு "பிரம்மசாஸ்தா' என்று பெயர்.
தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள், முற்காலச்சோழர்கள் காலத்துக் கோவில்களில் பிரம்மசாஸ்தா வடிவமே காணப்படுகிறது. பிரணவப்பொருள் கூறாத பிரம்மனை சிறையிலடைத்து தானே படைக்கும் தொழிலைச் செய்யும் கோலம். 1,300 வருடங்களுக்கு முன்னரே இந்தக் கோவில் இருந்துள்ளது. மண்கொண்ட சம்புவராயப்பழரையா மகன் காளிங்கராயன் ஞானமலைக் கோவிலுக்குப் படிகள் அமைத்தான் என்று கல்வெட்டில் உள்ளது. அதன் மூலமே 1998-ல் இந்தக் கோவில் பற்றிய விவரம் தெரியவந்தது.
தற்போது ஞானாஸ்ரமம் ட்ரஸ்ட் முயற்சியால் அன்பர்கள், நன்கொடை யாளர்கள் உதவியுடன் ஆலயம் விரிவாக்கப் பட்டு, கும்பாபிஷேக விழா 29-6-2018 அன்று தொடங்கி, 1-7-2018 அன்று காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
கந்தரலங்காரத்தில் அருணகிரியார் இவ்வாறு கூறுவார்.
ஒளியில் விளைந்த ஞானபூதரத்து உச்சியின்மேல் பனியில் விளைந்ததோர் ஆனந்தத்தேனை அனாதியிலே வெளியில் விளைந்த வெறும் பாழைப்பெற்ற பெறுந்தளியைத் தெளிய விளம்பியவா முகம் ஆறுடைத் தேசிகனே. 8 பொருள் என்ன? (ஞான பூதர- ஞானம் எனும் மலை).
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan1_4.jpg)
அருட்பெருஞ்ஜோதியில் உயர்ந்த ஞானமாகிய மலை முடியில், தனிப்பெருங்கருணையால் உண்டாகிய சிறந்த சிவானந்தத் தேனை, அடியேன் தெளிவுடன் உணர்ந்து உய்யுமாறு ஆறுமுக ஞானதேசிகக் கந்தபிரான் உபதேசித்தானே என்று நெஞ்சுருக நினைத்து நெகிழ்கிறார்.
அவர் பாத வழிபாடு அலங்காரமும் சிந்திப்போமே!
விழிக்குத்துணைத் திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றாமொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்தபழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
(விரிவுரை தேவையில்லையே).
கிடைத்த திருப்புகழ் பாக்களில் மூன்று ஞானமலைக்கு உரியதாயுள்ளது. அதனில் ஒருசில வரிகள்...
அடியறு நினைத்து நாளும் உடல்உயிர் விடுத்தபோது
அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே.
இமையவர் துதிப்பஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே.
நாதர் இடமேவு மாது சிவகாமி
நாரி அபிராமி அருள்பாலா.
நாரணசாமி ஈறு மகளோடு
ஞானமலைமேவு பெருமாளே.
(மகாவிஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீரிலிருந்து உதித்தவர்கள் அமிர்தவல்லி, சுந்தரவல்லி. "நீங்கள் சண்முகனை வழிபட்டு அவனையே கணவனாக அடைவீர்கள்' என்றார் மகாவிஷ்ணு. அவர்கள் கந்தனை நாடி ஷடாட்சர உபதேசம் பெற்று ஜெபித்து, "தங்களை நாங்கள் மணக்க வேண்டும்' என்றனர். "இப்போது நான் உங்களுக்கு தீக்ஷா குரு. மறுபிறவியில் உங்களை மணப்பேன்' என்றார் முருகன். அமிர்தவல்லியே இந்திரன் மகளான தேவசேனா. சுந்தரவல்லியே நம்பிராஜன் மகளான வள்ளி.)
ஞானவெளிச் சித்தர்
"யோகத்தைச் சேருமாறு மெய்ஞானத்தை போதியாய்' என்று திருச்சி முருகனிடம் அருணகிரியார் வேண்டியதால், ஞானமலையில் ஞானஸ்கந்தன் தன் திருவடிக் காட்சிதந்து யோகானுபூதி அருளினார்.
அருணகிரியாரை பரமகுருவாகக்கொண்டு திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் ஞானவெளிச்சித்தர். இவரை பாலைச்சித்தர் என்றும் அழைத்தனர். அவர் இந்த புனிதத் தலம் வந்து பல்லாண்டுகள் ஞானஸ்கந்தரை எண்ணித் தவம் செய்தார். அந்த சித்த சக்தியால் மக்களது குறைகளை நீக்கி குக ஞானத்தை போதித்தார்.
அவர் கார்த்திகை மூலத்தில் கந்தனில் கலந்தார். முருகன் கோவிலின் மேற்புறம் அவர் சமாதி ஞானகிரீஸ்வரர் பெருமான் என்ற லிங்கவடிவில் உள்ளது.
ஞானமலையைச் சுற்றி ஏரி, வயல்கள் என்று ரம்யமாக உள்ளன. மலையில் வெப் பாலை எனப்படும் குடசப்படலை மூலிகை மரங்கள் உள்ளன. சரும நோய், மூட்டு வலி, ஆகியவற்றுக்கு இவற்றிற்கு உகந்த பச்சிலை. வள்ளிமலை, ஞானமலை, தணிகை மலை மூன்றும் முக்கோண வடிவில் அமைந்துள்ளன.
மலைமேல் வாகனங்கள் செல்ல சாலை யும் உள்ளது.
முருகனுக்குகந்த எல்லா நாட்களிலும் விசேட அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன. படிவிழாக்களும் நடக்கின்றன. மலைவலம் வந்து திருப்புகழ் பாடுகின்றனர்.
கும்பாபிஷேக விழாவில் கந்த பக்தர்கள் கலந்துகொண்டு மகிழலாமே! ஞானமலை ஞானஸ்கந்தன் பாதம் பணிந்து ஞானானந்தம் பெறுவோமே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/murugan-t.jpg)