செய்யுள்-30
"செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்த (அ)துதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.'
பொருள்: சூரியன் உதயமாகும் அல்லது அஸ்தமிக்கும் நேரங்களில் இருக்கும் செம்மை நிறமான வானத்தைப்போல திருமேனி கொண்டு பிரகாசிக்கும் வேலவனே, தாங்கள் உணரச்செய்த பரப்பிரம்ம அனுபவத்தை எவ்வாறு நான் ஒருவருக்குச் சொல்வது? இவ்வனுபவம் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே உணர்ந்தாலன்றி இதை சொற்களால் எவ்வாறு விவரிக்க முடியும்?
சாதகன் இவ்வளவு நாட்களாக தன் ஆன்மிக முயற்சியில் பல்வேறு படிகளைக் கடந்துவந்திருக்கிறான். முதலில் நாம ஜெபத்தின் மகிமையுணர்ந்து, பின் இறைவனின் புகழ்பாடி, குருவையடைந்து மெய்ப் பொருள் உபதேசம் பெற்று, பின் தீட்சை பெற்று, தியானம் செய்யும் வழிமுறைகளை அறிகிறான். பின்பு மிகுந்த முயற்சிகள் செய்து தியானம் முதலிய பயிற்சிகளை செய்யும்பொழுது, முதலில் ஸ்தூலமாக அவனுடைய கர்மவினைகள் அவன் இறைவனையடைய தடைகளை ஏற்படுத்துகிறது. அவற்றைக் கடந்தால் பின்பு சூட்சுமமாக தடைகள் வருகின்றன. சாதகன் அதையும் கடக்க மிகுந்த பாடுபடுகிறான். இறையரு ளால் அவனுக்கு சிறிதுநேரம் சமாதிநிலை வாய்க்க, சாதகனுக்கு இறைவனின் அனுபவம் கிடைக்கிறது.
சூரியன் உதயமாகும் நேரம் தோன்றும் சிவப்பு நிறமானது, காண்பவர் மனதை கவரச்செய்வது அதன் அழகால் மட்டுமல்ல; அந்த சிவப்பு நிறமானது கருணையின் நிறமாகவும் இருப்பதால்தான். அந்தக் கருணையின் வெளிப்பாடாகவே இறைவன் இருப்பதால்தான் இதற்கு முந்தைய செய்யுள்களில் "கையோ அயிலோ கழலோ எல்லாம் சிவந்தமயமாக இருக்கும் வேலவனே' என்று அருணகிரிநாதர் வியந்து கூறுகிறார்.
இங்கும் அந்த அழகிய வேலனின் உருவ வர்ணனையே மீண்டும் வியக்கப்படுகிறது. "செவ்வான் உருவில் திகழ் வேலவன்' என்னும் பதம் இதையே குறிக்கிறது.
இங்கு வானை இறைவனோடு ஒப்பிடு வதற்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். ஐம்பூதங் களில் மற்றைய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய அனைத்தும் வானில்- அதாவது ஆகாயத்தில் அடக்கம்.
ஆகாயம் மட்டும் எல்லாவற்றையும் தனக்குள் ளேயே வைத்து, தாமும் எல்லாவற்றிலும் இருக்கிறது. கம்பன் கூறும் "உலகம் யாவை யும் தாமுளவாக்கலும்' என்னும் பதம் இங்கு ஆகாயத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இவ்வாறான ஆகயாத் தத்துவத்தை மட்டுமே பரப்பிரம்மத்தின் ஒரு குணமாக நம்மால் ஒப்பிட்டுக் கொள்ளமுடியும். ஏனென்றால் ஆகாயம் மட்டுமே பரப்பிரம்மத் தைப் போல் ஆரம்பமும் முடிவும் இல்லாதது. பரப்பிரம்மத்தின் சகுன வடிவுகளே அவர் எடுக் கும் பல்வேறு உருவங் கள். அவை சிவன், விஷ்ணு, முருகன், அம்பாள் முதலிய அணைத்து வடிவங் களையும் தன்னுடன் உள்ளடக் கிக்கொள்வதுபோல, ஆகாய மும் உலகிலுள்ள அணைத்து உருவம்- அருவம் மற்றும் அரு வுருவங்களைத் தன்னுள் அடக்கிக்கொள்கிறது. எல்லா வற்றையும் தன்னுள் அடக்கி, எல்லாவற்றிலும் தானும் இருந்து, எங்கும் நிறைந்த ஒரு பொருளாக ஆகாயம் மட்டுமே இருப்பதால்தான் இங்கு அருண கிரிநாதர் செவ்வான் உருவை முருகனின் பரப்பிரம்ம வியாபகத் தோடு ஒப்பீடு கொள்ள எடுத்துக் கொள்கிறார்.
எவ்வாறு ஒருவர் வானத்தை அளக்கமுடியாதோ, அவ்வாறே ஒருவரால் இறைவனின் அனு பவத்தை வார்த்தைகளில் அளக் கவோ- அடைக்கவோ முடியாது.
தாம் கண்டதை இன்னொரு வர் கேட்டாலும் சொல்ல முடியாது. இந்த அளவிடமுடியா அனுபவத்தை எவ்வாறு சொல்வதென்று சமாதிநிலை வாய்த்த ஒரு சாதகன் எண்ணு வதே இந்தப் பாடலின் உட்கருத்து.
குருவை அடைந்த சீடன், இறையனுபவத்தைக் கேட்டா லும் குருவால் அதை விவரிக்க இயலாது. ஆனால் இறையனு பவம் பெற்ற குருவால், அந்த அனுபவத்தை சீடனும் பெறு வதற்கு வழிகாட்ட முடியும். சீடன் தன் முயற்சியால் மட்டுமே இறையனுபவத்தைப் பெறமுடியும், ஒரு நல்ல குருவானவர் அதற்கான வழிமுறைகளை சீடனின் கர்மவினைகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தி, சீக்கிரத்தில் இறையனுபவம் அடையும் மார்கத்தைக் காட்டுவார்.
லலிதையின் சஹஸ்ரநாமத்திலும் இந்த செவ்வண்ணம் மிகுந்த இடங்களில் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக சஹஸ்ர நாமத்தின் தியான ஸ்லோகம் ஆரம்பிப்பதே "அருணமாம் கருணாம்' என்று சிவப்பைப் பிரதானப்படுத்தி, "செவ்வண்ணமே கருணை யின் வண்ணம்; லலிதையே கருணையின் உருவம்' என்றுதான்.
அதேபோல், "உதயத் பானு சஹஸ்ராபா' என்று, உதிக்கின்ற சூரியனின் கிரணங்களைப் போல் பிரகாசமுடையவள் என்று, அனுபூதி யில் கையாண்டுள்ள இதே உவமைதான் லலிதையின் வெளிப்பாடாக வாக்தேவிகள் கூறுகின்றனர்.
"அருண அருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீ தடீ' என்ற நாமத்தில், "செவ்வண்ண மாக இருக்கும் லலிதை செவ்வண்ணப் பட்டை இடுப்பில் அணிதிருக்கிறாள்' என்று கூறப்படுகிறது. இதேயே அருணகிரிநாதர் கூறும்போது முருகனை, "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்' என்கிறார். "சர்வ அருணா' என்ற நாமம், அனுபூதிக்கு மெருகேற்றுவதுபோல் லலிதையை முழுவதும் சிவப்பானவள் என்று கூறும்.
குண்டலினி தியானத்தில் பராசக்தியானவள் ஒரு சிவந்த மின்னலைப்போல் தோன்றி மறைவாள் என்று லலிதையின் நாமங்களில் பல இடங்களில் மறைபொருளாக யோக மார்கத்தைப் பேசும். இந்தப் பாடலில் அருண கிரிநாதர் கூறும் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்' என்னும் பதமும், சாதகனுக்கு சமாதிநிலை சிறிது நேரம் வாய்க்கப்பெற்ற விதமும், அவனுடைய குண்டலினி சக்தி யானது சஹஸ்ராரம் சென்று அவனுக்கு பரப் பிரம்ம அனுபவத்தைத் தந்ததைத்தான் குறிக்கிறது.
தியானம் கைவரப்பெற்ற சாதகன் படிப்படியாக முன்னேறி, குண்டலினி சக்தி விழிப்படைந்து சஹஸ்ராரம் அடைந்து, சமாதிநிலை கைவரப்பெற்று, மீண்டும் மூலாதாரம் சென்றுவிடுகிறது. மூலாதாரம் சென்றபின்பு சாதகன் தன்னுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்புகிறான். இந்தப் பாடல் சாதகனின் இறையனுபவத்தைப் பற்றிதான் பேசுகிறதே தவிர, அவன் இறையனுபவத்தில் நிலைத்துவிட்டான் என்று கொள்ளமுடியாது. அடுத்த பாடலில் இதற்கான காரணத்தைக் காண்போம்.
செய்யுள்-31
"பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தனதாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே.'
பொருள்: அழிந்துவிடும் மாயையாக இருக்கும் இந்தப் பாழ்படும் வாழ்க்கையில் என்னை வீழ்த்திவிட்டாயே முருகா! நான் செய்த கீழ்த்தரமான வினைகள் இன்னும் நிறைய உள்ளதோ? என்னை மீண்டும் இந்த மாயையில் தள்ளியதும் உன் கருணையால் தான். ஆதலால் நீ வாழ்வாய் மயில்மீது வரும் பெருமானே!
இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் முருகனை சாதகன் திட்டுவது போல் இருக்கும். சமஸ்கிருதத்தில் "நிந்தா ஸ்துதி' என்று கூறுவர். அதாவது இறைவனை துதி செய்வதுகூட அவரை வைவதுபோல் அமைந்திருக்கும். இந்தப் பாடலிலும் அவ்வாறே இருப்பதுபோல் தெரியலாம். சாதகன் தான் இறையனுபவம் பெற்று, மீண்டும் தன்னுடைய கர்மவினை சூழ்ந்த சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புகிறான். முந்தைய பாடலில் சமாதி நிலையில்பெற்ற அனுபவத்தை தம்மால் விவரிக்க இயல வில்லை என்று சொன்ன சாதகன், இப்போது மானுட வாழ்வில் படும் துன்பங்களை மாயை என்று தீர்க்கமுற அறிந்துகொண்டு தெளிவதுபோல் உள்ளது இந்தப் பாடல்.
சாதகன் ஆன்ம அனுபவம் பெற்று, அதில் சிலநேரம் நிலைத்திருக்கிறான். பின்பு தன் கர்மவினை சூழ்ந்த வாழ்க்கையை நோக்கி வரும்போது இறைவனின் கருணையைதான் இங்கு வியந்து அவரை வாழ்த்துகிறான். இறைநிலையில் அல்லது சமாதிநிலையில் செல்வதற்குமுன், ஆக்ஞா என்று சொல்லப் படும் நெற்றிக்கண் அல்லது மூன்றாவது கண் இருக்கும் சக்கரத்தை குண்டலினி சக்தி அடையும்போது, சாதகனின் கர்மவினைகள் முழுவதும், அவனுடைய இன்ப- துன்பத்திற்கான காரணங்கள் முழுவதும் அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. அந்தநிலையில் அவனுடைய நிலையை எண்ணி அவனை ஒதுக்கிவிடாமல், அவன் மேல் கருணைகொண்டு, அவனையும் மதித்து இறையனுபவத்தை நல்கியதால் இறைவனை "வாழ்வாய் இனி நீ' என்று போற்றுகிறான்.
இந்தப் பாடலில் "படு மாயை' என்று சொல்லப்படுவது, அழியக்கூடிய மாயை யான இந்த உலகம் மற்றும் உலகியல் வாழ்க்கையை. இது அழிந்துவிடுமென்று தெரிந்தும், அதன்பால் தாம் விழுவதுகண்டு தன்னைத் தானே நொந்து, அதற்கான காரணமும் அறிந்துகொண்டு தெளிவதே முதலிரண்டு வரிகளில் அருணகிரிநாதர் நமக்கு உரைக்கும் உண்மை. கர்மவினைகள் முடியாமல் உலகைவிட்டு நீங்கவும் முடியாது.
நெடுநேரம் இறையனுபவத்திலும் இருக்க முடியாது. கர்மவினையை அனுபவித்தே அழிக்கவேண்டும். இங்கு அவர் கூறும் கர்மவினை "ப்ராரப்தம்' என்னும் வகையைச் சார்ந்தது.
வினையானது சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று மூன்று வகைப்படுகிறது. சஞ்சிதம் என்பது பலஜென்ம வினைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு. பிராரப்தம் என்பது தற்போது எடுத்துள்ள பிறவியில், சஞ்சித வினையில் ஒரு சிறுபகுதியை நீக்குவதற்கு எடுத்துவந்தது. இந்த பிராரப்த வினை நம்மைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள், எதிரிகள் என அத்துணைப் பேருடனும் நம்மை இணைக்கும் ஒரு கயிறுபோல் இருக்கும். சாதகன் என்னதான் இறைவனை உணர்ந்தாலும், மற்ற, நம்முடன் அல்லது நம் பிராரப்த வினையுடன் தொடர்பு கொண்டவர்களும் உணர்ந்தால்தான் இந்த வினை மறையும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
ஆகையால் சாதகன் தன் பிராரப்த வினையை, தன்னைச் சார்ந்தோருடன் அனு பவித்துதான் கழிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இறையனுபவம் பெற்றபடியாலும், வினையின் காரணம் தெரிந்ததாலும் சாதகன் இந்த அனுபவங்களை ஒரு பாரமாகவோ வலியாகவோ கருதுவதில்லை. மாறாக வினைதீர்வது அவனின் இறைநிலையை நிலைக்கச் செய்யுமாதலால், அவன் சீக்கிரம் மாயை நீங்கி, இறைநிலையில் என்றும் நிலைத்திருக்கவே விரும்புகிறான். இந்த பிராரப்த கர்மா நீங்குவதற்காகவே இறைவன், இறைநிலையிலிருந்து மீண்டும் தன்னை மாயையில் வீழ்த்திய கருணைகண்டு வாழ்த்துவதாகதான் இந்தப் பாடல் அமைந் துள்ளது.
லலிதையின் நாமங்களில் "மித்2யாஜக3த3தி4ஷ்டா2னா'- உலகின் மாயத்தோற்றத் திற்கு காரணமென்றும்; அவளே முக்திதர வல்லவள், முக்திரூபமாக இருப்பவள் என்று "முக்திதா,' 'முக்தி ரூபிணி' என்னும் நாமங்கள், இந்தப் பாடலிலுள்ள பொருளில் வரும். "ப4வரோக3க்4னீ'- பிறவியால் வரும் துன்பத்திற்கு நெருப்பாக இருப்பவள்; "ப4வசக்ரப்ரவர்தினீ'- பிறவிச் சக்ரத்தை நடத்துபவள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் எவ்வாறு முருகப் பெருமான் சாதகனை அவனுடைய மாயவாழ்விற்கு மீண்டும் அனுப்பி, அவனுடைய கர்மவினையை அழிக்கிறாரோ, அதேபோல் பிறவிச் சக்கரத்தை நடத்தி லலிதையும் சாதகனின் கர்மத்தைத் தீர்க்கிறாள்.
இந்தப் பாடலில் சாதகன் தியானம் செய்வதன்மூலம்தான் வினையை அழிக்கி றான்; இறைவனை அடைகிறான். அதே போல் லலிதா சஹஸ்ரநாமத்திலும், "அந்தர் முக சமாராத்யா' என்னும் நாமத்தில், உள்முகமாக- அதாவது தியானத்தின்மூலம் தான் அவளை அடையமுடியும் என்பதும், கவனத்தை வெளிப்புறத்தில் அல்லது உலக வாழ்வில் செலுத்துவதால் அவளை அடைவது கடினமென்று "பஹிர்முக சுதுர்லபா' என்னும் நாமத்திலும் அறிய முடிகிறது.
ஒரே இறைவனைப் பல்வேறு மொழிகளில் பல்வேறு வடிவங்களில், அவனுடைய குணங் களைப் போற்றி வழிபட்டாலும், தியானம் செய்து அவனை அடைவதே ஒரேவழி என்று கந்தர் அனுபூதி மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் ஆகிய இரு நூல்களும் சாதகனுக்கு சுட்டிக் காட்டுகின்றன.
(அனுபூதி தொடரும்)