இந்த இதழில் வரும் அனுபூதிப் பாடல்களில், இறைவனின் கருணையை எவ்வாறு வேண்டுவது என்றும், எவ்வாறு தியானம் செய்யவேண்டும் என்றும் அருணகிரிநாதர் விளக்குவதைக் காண்போம்.
செய்யுள்-24
"கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர்வேல புரந்தர பூபதியே.'
பொருள்: சூரபத்மன், அவனுடைய குலம், கிரௌஞ்ச மலை ஆகியவற்றை உன்னுடைய கூரிய போர்வேலால் துளைத்து இந்திரனுக்கு தேவலோகத்தை மீட்டுக்கொடுத்த பெருமானே, கூரியவேல் போன்ற கண்களையுடைய மங்கையருடன் சேர்ந்த எனக்கு உன் திருவருளைத் தந்து உய்விக்கமாட்டாயா?
சாதகன் ஆத்ம தியானத் தில் ஈடுபட ஆரம்பித்தபின் அவனுடைய சம்ஸ்காரம் அல்லது வாசனைகள்- கர்மாவானது இதுவரை இல்லாத அளவு வீறு கொண்டு எழும். அவனு டைய வினைகள் அந்த சாதகனை இறைவனிடம் செல்லவிடாமல் தடை களை உருவாக்கும். இங்கு "கூர்வேல் விழி மங்கையர்' என்னும் பதத்தில் அருண கிரிநாதர் மூன்று பொருள் படுமாறு பாடலை அமைத் திருக்கிறார்.
1. சாதகன் பெண் களின்பால் ஆசைகொண்டு அவர்களுடன் களிப்புற்ற நினைவுகள் மேலெழுந்து வந்து, அவனை தியானம் செய்யமுடியாமல் தடுத்து வினைகளைச் சேர்க்க உந்துகிறது. "சேர்வேன்' என்று அருளாளர் சொல்வது, இவரே சென்று பெண்களின்பால் விழுவதும், தம்மால் அதைத் தடுக்க முடிய வில்லை என்றும் இறைவனிடம் முறையிடுகிறார். இங்கு அவர் "வினையின் பயனால் சேர்வேன்' என்று சொல்லவில்லை. அதேபோல் "சேர்வேன்' என்ற பதத்தில் நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் இரண்டையும் சொல்கிறார். இதிலிருந்து தம்மால் தம் ஆசை களையும் மனதையும் கட்டுப்படுத்த முடிய வில்லை என்ற இயலாமையும், என்னைப் போன்ற ஆட்களுக்கும் உன் அருள் தருவாயா என்றும் முருகனின் பாதங்களில் சரணடைகிறார்.
2. "மங்கையர் கொங்கையிலே சேர்வேன்' என்ற பதம், ஒரு ஜீவன் பலமுறை பிறந்து தாயிடம் வளர்ந்து மீண்டும் பிறப்பெடுக்கும் முடிவில்லா வட்டத்தைக் குறிக்கிறது. இந்த பொருளுக்கு ஆதாரமாகத் திருப்புகழில் "எருவாய்' என தொடங்கும் பாடலில், "ஒருதா யிருதாய் பலகோ டியதாயுடனே யவமாயழியாதே' என்னும் வரிகளைக் குறிப்பிடலாம். பல பிறவிகள் எடுத்தும், பல தாய்களின் உதரத்து உதித்தும் தான் இன்னும் இறைவனை அடையவில்லை என்று சாதகன் முறையிடுவதும் இங்கு பொருந்தும்.
3. "கூர்வேல் விழி மங்கை' என்ற பதம் சித்தாந்த விளக்கத்தில், "ப்ரக்ருதி' என்று கூறப்படும் மாயையையும் குறிக்கும். இதையே சைவ சித்தாந்தம் "மாயாமலம்' என்று கூறும். மாயாமலம் அகலவேண்டுமென்றால் அதற்கு இறைவனின் கருணை ஒன்றினால் மட்டுமே இயலும். ஏனென்றால் மாயையும் இறைவனின் ஒரு அங்கமே. அறிவும் அறியாமையும் இரண்டுமே இறைவனின் படைப்பே. இறைவன் கருணை கொண்டாலொழிய அறியாமையும் அகலாது; அறிவும் ஏற்படாது. அதனால்தான் சாதகன் இங்கு இறைவன் தன்மீது கருணைகொள்ளவேண்டும் என்ற முறையிலும், தம் செய்கை அனைத்துக்கும் காரணம் இறைவன் ஒருவனே என்றும் சற்று புத்திப்பூர்வமாகப் புரிந்தபின்பு (இன்னும் அனுபவம் கிட்டவில்லை) முருகனிடம் தம்மை இந்த மாயாமலத்திலிருந்து விடுவிக்குமாறு பிரார்த்தனை செய்கிறான்.
தேவேந்திரன் அசுரர்களை எதிர்த்து தாமே பலமுறை போர் புரிகிறான். முடிவில் பல தேவர்களை சூரபத்மன் சிறை யிலடைத்துவிடவே, தேவேந்திரன் சூரனுக்கு பயந்து ஒளிந்து வாழவேண்டிய நிலை வருகிறது. பதுங்கிய தேவேந்திரன் இறைவனை நோக்கித் தவமிருக்க, சில காலம்கழித்து பரம்பொருள் ஷண்முக வடிவம் தாங்கிவந்து, சூரருடன் போர்புரிந்து தேவலோகத்தை மீட்டு தேவேந்திரனுக்கு அளிக்கிறது. இங்கு தேவேந்திரன் எவ்வாறு சூரபத்மனுடன் போராடி தம்மால் வெல்லமுடியாமல் தோற்று, முடிவில் இறைவனின் திருவடி பற்ற, அவரே வந்து சூரனுடன் போர்புரிந்து இந்திரனுக்கு வெற்றிபெற்றுத் தந்தாரோ, அதேபோல் இந்த சாதகனுக்கு தன் இடையூறு களைக் களைந்து வெற்றிபெற்றுத் தருமாறு கேட்பதே இந்தப் பாடல்.
கூர்வேல் விழிகொண்ட மங்கையரிடமிருந்து தம்மைக் காக்க கிரௌஞ்ச மலையை இடித்த, சூரனைக் கொன்ற நெடிய போர்வேலின் துணையை வேண்டுகிறார் அருளாளர். மங்கையரிடம் சேரும் வினையானது, இறைவனின் அருள் சேர்வதால் தொலைந்து போகும். கூர்வேல் பார்வைக்கு எதிராக, இறைவனின் போர்வேலானது சாதகனைக் காக்கும்.
நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இறைவனின் வேலானது சக்தியின் மறு வடிவமாகும். பராசக்தி தன்னிலிருந்து வடிவமைத்துக் கொடுத்த வேலையே முருகன் கைக்கொண்டு போர்செய்தார். இங்கு சாதகர் அந்த பராசக்தி யின் துணையைத்தான் கூர்வேல் விழி பார்வைக்கு எதிராகக் கேட்கிறார். இங்கு நுட்பமாக நாம் புரிந்துகொள்ள வேண்டி யது என்னவென்றால், பராசக்தி தான் மொத்த இயக்கத்திற்கும் காரணம். அவளே மாயையாக இருந்து மறைக்க வும் செய்கிறாள். ஞானசக்தி வேலாக இருந்து, குருவாய் அமர்ந்து சாதகனை சேர்க்கவும் செய்கிறாள். சக்தியே மாயையை விலக்க நினைத் தாலொழிய, இங்கு எந்தவொரு சாதகனும் இறைவனை அடையமுடியாது. அதனால்தான் அருணகிரிநாதர் மிக அதிகமாக பராசக்தியின் வடிவமான வேலையும், வள்ளியையும் பாடுகி றார். முருகனை பரப்பிரம்மமாக- நிர்குண பொருளாகவே தியானிக்கிறார்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் "ஸம்'ஸாரபங்க நிர்மக்3னஸமுத்3த4ரண பண்டி3தா' என்ற நாமம், பிறவிகளில் வரும் துயரை எவ்வாறு களைவதென்ற ஞானம் லலிதைக்கு மட்டுமே உண்டு என்ற பொருளில் வரும். இந்தப் பாடலிலும் பராசக்தியான வேல் மட்டுமே பிறவித் துயரைக் களையவல்ல பொருளாக அருணகிரிநாதர் பாடுகிறார்.
லலிதையின் "ராக ஸ்வரூப பாஷாட்யா' என்ற நாமம், ஆசைகளைப் பாசக்கயிறு கொண்டு அடக்கியாள்பவள் என்ற பொருளில் வரும். சாதகனுக்கு ஆத்ம தியானத்தின்போது கர்மவினையால் எழும் ஆசைகளை இறைவன்பால் இழுத்து அடக்கியாள்கிறாள். இங்கும் கூர்வேல் விழி பார்வைக்கு மாறாக போர்வேலிடம் கருத்தைச் செலுத்த, அது இறைவனிடம் சாதகனை அழைத்துச்செல்கிறது.
செய்யுள்-25
"மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே.'
பொருள்: இந்த உலகவாழ்வை உண்மை யென்று நம்பி, கர்மவினைகள் சூழ்ந்து நான் இங்குமங்கும் அலைகிறேனே! உடல், கைகள், திருவடி எல்லாமுமே சிவந்த வண்ணத்தில் இருக்கும் முருகப் பெருமானே, மயில்மீது வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து சேவை புரிவோனே, என்னுடைய இந்த அலைச்சலை நீக்கமாட்டாயா?
இந்தப் பாடலிலும் இதற்கு முந்தைய பாடல்களிலும், சாதகன் குருவை அடைந்து உபதேசம் பெற்றும், ஆத்ம தியானம் செய்தும் கர்மவினைகள் விடாமல் துரத்துவதை அருணகிரிநாதர் எடுத்துக்காட்டுகிறார். நம்மில் பெரும்பாலானோர் குருவையடைந்து உபதேசம் கிடைத்தாலே "இறைவனை அடைந்தோம்; நம் தொல்லை தொலைந்தது' என்று நினைக்கிறோம். இன்னும் பலரோ ஒவ்வொரு தெய்வத்தை வணங்கினால் ஒவ்வொரு பலன் கிடைக்குமென்று அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை உபதேசிக்கும் குருவை நோக்கிச் செல்கிறோம். எதிரிகள் தொல்லைக்கு உக்ரதெய்வ வடிவங்களையும், செல்வ வளத்திற்கு லட்சுமி, ஸ்வர்ண பைரவர் என்றும் ஒவ்வொரு தெய்வமாக இலாக்கா பிரித்து வணங்கச் செல்கிறோம்.
இந்த அவ்வளவு வடிவங்களும் ஒரே பொருளின் பிரதிபலிப்புதான். காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு பரம்பொருள் வேண்டிய உருத்தாங்கி வந்துசென்றது என்பதையும் அறிய மறுக்கிறோம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை ஆன்மிக வாழ்விலிருக்கும் ஒவ்வொரும் அறியவும் உணரவும் வேண்டிய ஒரு உண்மை. இந்த உணர்தலை நோக்கிச்செல்வதே உண்மையான ஆன்மிகம். சமயங்கள் பலவாக இருந்தாலும், அவரவர் சமயத்தின் வாயிலாக இறைவனை உணர்தலையே பெரியவர்கள் வகுத்துச் சென்றுள்ளனர். இங்கு இந்த கருத்தைச் சொல்வதற்குக் காரணம், அருணகிரிநாதர் பயன்படுத்திய "அலைய' என்ற பதமே.
இங்கு "அலைவது' என்னும் வார்த்தை பல பொருள்பட வரும். 1. பிறவிகளில் சுழன்று அலைவது; 2. பல்வேறுவிதமான உயிர்களாகப் பிறந்து அலைவது; 3. நன்மை- தீமைகளுக்கு நடுவில் அகப்பட்டுக்கொண்டு அலைவது; 4. சமயங்களில் எது சிறந்தது- எது நமக்கு நன்மை பயக்கும் என தெரியாமல் அலைவது; 5. மந்திரங்கள் மற்றும் பல குருக்களைத் தேடி அலைவது; 6. பல்வேறு பயிற்சிகளைச் செய்கிறேன் என்று, அதற்கேற்ற வழிமுறைகளைக் கற்க அலைவது என்று எல்லா விதங்களிலும் நாம் அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டுமல்லா மல் இவையனைத்தும் உண்மையென்றும் நம்பி வாழ்கிறோம். இவ்வாறு நாம் அலைந்து திரிவதற்குக் காரணம் வேறொன்றுமல்ல. நம் கர்மவினைகள்தான். இந்த வினைகள் எவ்வாறு செயல்படுகிறது என நாம் சற்று தெரிந்து கொள்ளவேண்டும்.
இறைவன் ஆதியில் உலகைப் படைத்த போது சில விதிகளையும் சேர்த்துதான் படைத்தான். இதுவே இயற்கை அல்லது இயற்கை விதி என்று நம்மால் அறியப்படுகிறது. உதாரணமாக, பிறந்த அத்துணை உயிர்களும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். இதேபோல் ஒவ்வொரு வினைக்கும் காரணம் இருக்கவேண்டும். இந்த மொத்த வினைத் தொகுப்பே "ஸ்ரீஹன்ள்ங் ஹய்க் ங்ச்ச்ங்ஸ்ரீற்' என சொல்லப்படும் காரண காரிய வெளிப்பாடுதான். இயற்கை இறைவனின் படைப்பில் எப்போதும் சமநிலையில் இருக்கும். எப்போதெல்லாம் சமநிலை தவறுகிறதோ, இயற்கை சமநிலையை நோக்கி எதிர்வினை செய்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒரு அகங்கார மையமாக வாழ்ந்து எண்ணற்ற நன்மை- தீமைகளைச் செய்கிறோம். அந்த செயல்களுக்கேற்றவாறு இயற்கை நம்மை சமநிலைக்கு இட்டுச் செல்கிறது. நல்ல செயலுக்கு நன்மையை அடையச்செய்கிறது; தீயச்செயலுக்கு தீமையை அடையச்செய்கிறது. இங்கு நன்மையானது தீமையை அழித்துவிடாது. உதாரணமாக, நாம் பத்து நன்மைகளையும் எட்டுத் தீமைகளையும் செய்தால், பத்து நல்லவற்றில் எட்டு தீமைகள் நீக்கி, இரண்டு நன்மைக்கேற்ற செயல்மட்டும் திரும்பவராது. பத்து நற்செயலுக்கு பத்து நன்மையும், எட்டு தீவினைக்கு எட்டு தீவினையும் வந்துசேரும். இதுதான் சமநிலையை நோக்கிச் செல்லும்படி இயற்கை நம்மை இழுத்துச்செல்லும் பாதை. இதுவே விதி. இந்த விதியும் இறைவன் அமைத்ததே.
ஒருவர் ஒரு பிறவியில் இந்த சமநிலையை அடையமுடியவில்லை என்றால் பிறவிகள் தொடரும். எப்போது இந்த வினைகள் சமநிலையில் இருக்கிறதோ அப்போது அந்த நிலையை "பூஜ்ஜியம்' என்று அழைக்கி றோம். இங்கு பூஜ்ஜியம் என்றால் ஆங்கிலத் தின் க்ஷ்ங்ழ்ர் அல்லது சூன்யம் அல்ல. மாறாக சமம் என்று பொருள். இந்த சமநிலையை சமாதி, இறைவனின் அண்மை என்றெல்லாம் பல்வேறு சமயங்களில் அழைக்கப்படுகிறது. அதனால்தான் மகான்களைச் சொல்லும் போது "பூஜ்யஸ்ரீ' என்ற பதம் உபயோகப் படுத்தப்படுகிறது. ஏனென்றால் அவர் நன்மை- தீமைகளைக் கடந்தவர்; இறைவனை அறிந்தவர் என்பதால்! எல்லாரும் இந்த பூஜ்யஸ்ரீ பதத்திற்குத் தகுதியானவர்கள் அல்லர் என்பதையும் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சமநிலையை நோக்கி தாமும் முன்னேற வேண்டும்; பிறவி, பொருள், வினை இவற்றால் அலையக்கூடாது என்றும் இறைவனை நோக்கி வேண்டுதல் வைக்கிறார் அருளாளர்.
இந்த வேண்டுதல் எவ்வாறான இறைவனிடம் வைக்கிறார் என்றுதான் நாம் கவனிக்க வேண்டும். இரண்டாம் வரியில் இறைவனை வர்ணனை செய்யும்போது, முழுவதும் செவ்வண்ணமாக இருப்பதாகவே சொல்கிறார்.
இறைவனின் கைகள் அடியவர்க்கு வேண்டிய வரமெல்லாம் கொடுத்துக் கொடுத்து சிவந்திருக்கின்றன. அவனுடைய வேலோ சூரனின் உதிரம்பட்டுச் சிவந்திருக்க, கால்கள் மோட்சம் கொடுத்துச் சிவந்திருந்தது. சிவப்பு என்ற வண்ணமே தயை, கருணை, செயலின் வண்ணம் போன்றவற்றைக் குறிக்கும். முருகன் ஆக்கப்பூர்வமான கருணைகொண்ட- கேட்ப தைக் கொடுக்கும் பரம்பொருளின் வடிவம். அதனால்தான் இங்கு மோட்சம் வேண்டி இறைவனை செவ்வண்ணமாக தியானம் செய்து வேண்டியதைப் பெறவேண்டுமென்று அருணகிரிநாதர் சூட்சுமமாக உபதேசம் செய்கிறார். இறைவனை செவ்வண்ணத்தில் தியானம் செய்ய, கேட்பதைக் கண்டிப்பாகக் கொடுப்பார் என்றும் இதிலிருந்து தெரிகிறது.
லலிதையின் தியான சுலோகமும், "அருணாம் கருணாம்' என்றுதான் ஆரம்பிக்கும். அவளு டைய வண்ணம் சிவப்பு என்றே தியானம் கூறுகிறது. 'சிந்தூராருண வர்ணாம், சகுங்கும விலேபனாம்' என்னும் சுலோகங்களும் லலிதையின் செவ்வண்ணத்தைதான் பேசுகின் றன. சஹஸ்ரநாமமும் "சர்வாருணா'- முழுவதும் செவ்வானமானவள்; "நிஜாருண பிரபா பூர'- சிவந்த மண்டலத்தின் நடுவில் இருப்பவள் என்கிறது. "அருண அருண கௌசும்ப' என்ற நாமத்தில் சிவப்பு உடை அணிந்தவள் என்றும், "பத்மராக ஸமப்ரபா' என்ற நாமத்தில் பவள வண்ணத்தினள் என்றும், "ஆரக்த வர்ணா' என்ற நாமத்தில் ரக்த வர்ணத்தினள் என்றும், "வித்திருமாபா' என்ற நாமத்தில் பவளம்போல் ஜொலிப்பவள் என்றும் லலிதையை சிவந்த வண்ணத்தில் தியானம் செய்வது குறிப்பிடப் பட்டுள்ளது.
இதிலிருந்து, முருகனும் லலிதையும் வெவ்வேறு தெய்வங்கள் அல்ல; இருவரும் ஒரு பரம்பொருளின் இருவடிவமே என்று புலப்படும்.