கடந்த இதழில் ஆன்மிகச் செல்வமென்றால் என்னவென்றும், பரம்பொருளின் குணநலன் களையும் பார்த்தோம். இந்த இதழில் 20 மற்றும் 21-ஆம் பாடல்களிலுள்ள உபதேச விளக்கம் மற்றும் தியானத்தின் நிலைப்பாடு என்னவென்று காணலாம். இந்தப் பாடல்கள் எவ்வாறு லலிதை யின் ஆயிரம் நாமங்களில் அர்த்தம் பொதிந்து வருகின்றன என்பதையும் பார்ப்போம்.
செய்யுள்-20
"அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேளிமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.'
பொருள்: மிகவும் அரிதான மெய்ப் பொருள் எனப்படும் பரம்பொருள் தத்துவத்தின் விளக்கத்தையும், வேதத்தின் மகா வாக்கியங் களின்- அத்வைத சித்தாந்தங்களின் விளக்கத்தை யும் எனக்கு உபதேசமாகக் கொடுத்தாயே முருகா! எனக்கு அதற்கு என்ன தகுதி இருக்கிறதென்று நீ எண்ணவில்லையே ! இந்தப் பிறவிக் கடலைக் கடப்பதற்குரிய பெரிய கப்பலைப் போல் உள்ளவரே, எல்லாரும் விரும்பத்தக்க வரே, தேவர்களால் விரும்பி தியானிக்கப்படு பவரே, பிரணவப்பொருளே!
இவ்வளவு நாட்கள் சாதகன், ஒரு நல்ல குருவை அடைந்து மெய்ப்பொருள் விளக்கம் கேட்டு அறியப்பெற்றான். அதன்பின்னர் ஆத்ம தியானம் செய்ய முற்பட்டபின், அவனுக்கு சில தெளிவுகள் பிறக்க லாயிற்று. அவ்வாறான தெளிவுகள் பெற்ற சமயத் தில்தான், தனக்கு உபதேசம் கிடைக்க ஒரு தகுதியும் இல்லை யென்றும், அது குருவின் மற்றும் பரம்பொருளின் அளவில்லா- காரணமில்லா கருணை ஒன்றி னாலேயே என்றும் தெளிகிறான்.
இந்தப் பாடலில்தான் முதன்முதலில் அருண கிரிநாதர் உபதேசத்தைப் பற்றிப் பேசுகிறார்.
இவ்வளவு நாட்கள் சாதகன் குருவை அடைந் திருந்தாலும், அவனுக்கு மெய்ப்பொருள் விளக் கம் கிடைக்கப்பெற்று ஆத்மதியானம் அறிவிக் கப்பட்டிருந்தது. ஆயினும் இப்போதுதான் உபதேசம் கிடைக்கப் பெறுகிறது. கடவுளை உணர்ந்த ஒரு குருவோ அல்லது கடவுளோதான் உண்மையான உபதேசம் நல்கமுடியும். மற்றவையெல்லாம் நாம் ஆன்மிக வாழ்வில் முன்னேற வெறும் கைகாட்டிகளே.
இந்த உபதேசமானது பலவகைப்படும். இவ்வகைகள் சாதகனுக்குள் பாயும் இறை சக்தியின் தீவிரத்தைப் பொருத்து மாறுபடும். இந்த வகைகளைக் காணும்முன்னர் உபதேச மென்றால் என்னவென்று தெரிந்துகொள் வோம்.
உபதேசமென்பது, குருவானவர் தன் ஆன்ம சக்தியை சீடனுக்குள் பாய்ச்சுவது. இந்தப் பாய்ச்சலானது "சக்தி பாத்' என்று வடமொழி யில் அழைக்கப்படுகிறது. மந்திர உபதேசம் செய்யும்போது, குருவானவர் தம் ஆன்ம பலத்தை சீடனிடம் செலுத்துகிறார். இவ்வாறு செலுத்துவதற்குப் பல்வேறு மார்க்கங்கள் உண்டு. கண்களாலே செலுத்துவது, ஸ்பரிசத் தால் செலுத்துவது, எங்கேயோ இருக்கும் குரு வேறிடத்திலுள்ள சீடனுக்கு உபதேசம் கொடுப்பது என்று பலவகைப்படும். ஒரு சாதகனுக்கு எவ்வாறான உபதேசம் வேண்டு மென்பதை குருவே முடிவுசெய்வார். இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டியது, குரு வானவர் இறைவனை உணர்ந்தவர்; இறைவனின் மானிட வடிவமாகவே இருப்பவர் என்பதை! இந்த உபதேசம் செல்வத்தினாலோ, மிக்க படித்த கல்வியினாலோ கிடைப்பதல்ல என்று தெளிவுகொள்ள வேண்டும். இவ்வாறான உபதேசம் தீவீர தீவிர, தீவிர மத்ய, தீவிர மந்த, மத்யாதி தீவிர, மத்ய மத்ய, மத்ய மந்த என்று வகைப்படுகிறது. ஒருவரின் கர்மவினைகளைக் கொண்டும் அவர்களுக்கான உபதேச வகைகள் மாறுபடும். இனி இந்த உபதேசங்களின் விளக்கத்தைக் காண்போம்.
தீவிர தீவிர- பரம்பொருள் ஒருவனை ஆட் கொள்ள நினைத்துவிட்டால், அவனைநோக்கித் தன் சக்தியைப் பாய்ச்சும். இந்த சக்தியைத் தாங்கும் ஆற்றல் எந்த உடலுக்கும் கிடையாது. இந்த வகையில் அந்த சாதகன் சக்தியின் பாய்ச்சலில் அப்போதே முக்தியடை கிறான். அவன் உடல் பரம்பொருளாலேயே மாய்க்கப்படுகிறது. உடல் இருந்த அடை யாளம்கூட மிஞ்சாது. இந்த உபதேசத்தில் மந்திர ஜெபத்திற்கோ தியானத்திற்கோ வேலையில்லை. தூய அன்புமட்டுமே இதைச் செய்யும். இவ்வாறான சாதகர்கள் வெளியுலகிற்கு பைத்தியம்போல் தெரிவார்கள். இந்த உபதேசம் கிடைப்பது அரிதிலும் அரிது.
தீவிர மத்ய- இந்த உபதேசத்தின்போது சாதகன் உடனே கடவுளை உணர்கிறான்.
ஆனால் இந்த உணர்தலுக்குப் பின்னும் உடலோடு வாழ்கிறான். இந்த உணர்தல் கொண்டவரே பரமேஸ்வரனின் அருளால் மற்றையோரையும் பரம்பொருளுடன் இணைக்க பாடுபடுகிறார். இவரே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பாலமாக அமைகிறார்.
தீவிர மந்த- இந்த உபதேசம் பெற்ற ஒருவர். ஆன்மிக வாழ்வில் மேல்நிலைகளுக்குச் சென்று, இந்தப் பிறவியின் முடிவில் முக்தியடைகிறார்.
மத்ய அதிதீவிர- இந்த உபதேசமானது மந்திரம், யோகப் பயிற்சிகள் போன்றவற்றை குருவிடம் கற்று நெடுங்காலம் தவம்செய்தபின், குரு மற்றும் இறையருளால் முக்தியடைவது.
மத்ய மத்ய- இந்த வகையிலுள்ள சாதகர்கள் மேற்கூறிய உபதேசம் பெற்றா லும், உலக வாழ்விலும் நன்றாக வாழ எண்ணம் இருக்கும். பிறவியின் முடிவில் மேலுலகங்களில் நீண்டகாலம் வாழ்ந்து பின் இறைவனோடு இணைவார்கள்.
மத்ய மந்த- இந்த சாதகர்கள் குருவை யடைந்து, மிகுந்த காலம் உலக வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும் வாழ்ந்து, பிறவி முடிந்து மீண்டும் பிறந்து, ஆன்மிக வாழ்வில் மட்டுமே ஈடுபட்டு முக்தியடைவார்கள்.
மேற்கூறிய உபதேச வகைகள் ஒன்றுக் கொன்று தாழ்ந்ததல்ல. மாறாக சாதகனுக்கேற்றவாறு இந்த உபதேசங்கள் கிடைக்கின்றன. இவ்வாறு ஏதோ ஒருவகையில் சத்குருவிடம் தீட்சைபெற்ற ஒருவன், குரு, மந்திரம், இறைவன் மூவரும் ஒருவரேதான் என்று உணரும்போது, அவனுடைய முக்திக்கு கடவுளின் கருணை மட்டுமே காரணம் என்றெண்ணி, அவரின் அருளை வியப்பதே இந்தப் பாடல். அதைத்தான் "அடியேன் உரிதா' என்ற பதம் உணர்த்துகிறது.
இவ்வாறாக எந்த ஒரு சாதகன் உபதேசம் பெறுகிறானோ அவனே கடவுளின் அண்மைக் குச் செல்கிறான். எவ்வளவு சீக்கிரம், எவ்வளவு அண்மை என்பதை அவனது தவமும் கர்மவினை களின் தன்மையும் முடிவுசெய்யும். உபதேசம் பெற்ற ஒரு சாதகன் எப்படியேனும் இரண்டு பிறவிகளுள் இறைவனை அடைந்துவிடுகிறான் என்பது மேற்கூறிய உபதேச வகைகளிலிருந்து தெரிகிறது.
லலிதையின் நாமங்களில், "குரு மூர்த்தி'யாக இருந்து தீட்சை கொடுப்பதும் அவளே என்று கூறப்படுகிறது. "தீக்ஷிதா' என்ற நாமம் இதை உணர்த்தும். மேலும், "நிர்வாண சுகதாயினி' என்ற நாமத்தால், அவளே சமாதியில் சாதகனை அமர்த்துகிறாள்; சாதகன் மீண்டும் பிறந்து தான் மோட்சம் அடையவேண்டும் என்றால், "பவ சக்ர ப்ரவர்த்தினி' என்ற நாமத்தால், பிறவிச் சக்ரத்தை நடத்துபவளாகவும் இருக்கிறாள்; முடிவில் "முக்திதாயினி' என்ற நாமத்தால், சாதகனுக்கு முக்திகொடுக்கிறாள் என்பதை அறியலாம்.
செய்யுள்-21
"கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசந்தர என்றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடனனே.'
பொருள்: நினைவு, மறவாமை என்ற நிலையில் நான் நிலைத்திருக்க உன் இரண்டு திருவடிகளில் எனக்கு சரணாகதியை என்று தருவாய்? எல்லாருக்கும் வரத்தைத் தருபவன் நீயே முருகா! மயில் வாகனத்தைக் கொண்ட வனே, பக்தர்களுக்கு வரம்தந்தே தீருவதென்ற விரதத்தைக் கொண்டவனே, சூரனை வேலால் பிளந்தவனே.
இந்தப் பாடலில், "கருதா மறவா நெறி' என்ற சொல் முக்திநிலையைக் குறிக்கும். முக்தி நிலையில் இறைவனை நினைப்பதுமில்லை; மறப்பதுமில்லை. அத்வைத நிலையில் இறைவன் வேறு; ஜீவாத்மா வேறு என்ற வேற்றுமை எப்போதும் இருப்பதில்லை. இந்த நிலையையே தமக்கு எப்போது வாய்க்குமென்று அருண கிரிநாதர் இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
அருணகிரிநாதரைக் காப்பாற்றியபோதும், பின்னர் அவரைத் திருப்புகழ் பாட உத்தரவிட்ட போதும், இறைவனை துவைத நிலையில்தான் உணர்ந்திருக்கிறார். ஆனால் முருகனே குருவாய் வந்து உபதேசம் தந்தபின்பு, மெய்ப்பொருள் அறிவு ஏற்பட்டபின்புதான் இந்த இரண்டறக் கலக்கும் நிலையைப் பற்றி அவருக்குத் தெரிகிறது. இதுவே முக்திநிலை என்றும் அறிகிறார். அதனால்தான் "கருதா மறவா நெறி' வேண்டும் என்று கேட்கிறார். அது எப்போது கிடைக்குமென்று சாதகனுக்கு அடுத்த வரியில் உணர்த்துகிறார் அருளாளர்.
"இருதாள் வனசம்' என்னும் பதம், முருகனின் திருவடிகளில் சரணாகதி அடைவதைக் குறிக்கிறது. எப்போது ஒரு சாதகன் இறைவனிடம் பூரண சரணாகதி அடைகிறானோ அப்போது அவனுக்கு முக்திநிலை வாய்க்கப் பெறுகிறது. இந்த பூரண சரணாகதியே அவனுக்கேற்ற உபதேசத்தையும் பெற்றுத் தருகிறது. இங்கு சாதகன்- இறைவன், இறைவனின் பாதம், முக்தி ஆகிய மூன்றுமே ஒன்றுதான் என்பதை உணர்கிறான். இந்த ஒற்றுமையினாலேதான் சனாதன தர்மத்தில் இறைவனின் பாதங்கள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்தப் பாடலில் தியானத்தின் நிலைகளையும் அருணகிரிநாதர் சாதகனுக்கு விளக்குகிறார். ஆத்மதியானம் செய்ய ஆரம்பித்த சாதகன், அந்த பயிற்சியில் மேலும்மேலும் முன்னேறி ஆழமாக தியானம் செய்யவேண்டும். அவ்வாறான தியானத்தில் சாதகன் தன்னை மறந்து- அதாவது தான் என்ற அகங்காரமற்று இருப்பது! இந்த ஜீவாத்மாக்கள் அனைத்தும் இறைவனின் அம்சம் மட்டுமே என்பதை உணர்வதே, கருதா மறவா நெறி.
மேலும் இந்த அனுபவமானது, இறைவனுடைய அபார கருணை ஒன்றினால் மட்டுமே நிகழும்; அந்த கருணைக்கு ஆட்படவேண்டி செய்யப்படும் இந்த எல்லா முயற்சிகளும்கூட பொய்த்துப் போகலாம். ஆனால் இறைவனின் கருணையானது ஏதாவதொரு காரணத்தை முன்னிருத்தி சாதகனுக்கு அருளிவிடும். அதற்காகவே ஒரு சாதகன் தன்னால் முடியுமோ- முடியாதோ என்று எண்ணாமல், இறைவனை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். இந்த ஒரு காரணத்தினாலேயே இறைவன் "வரதன்' என்னும் நாமத்தில் அழைக்கப்படுகிறான். வேண்டுபவர் வேண்டியவிதம் வரங்களை அள்ளிக்கொடுக்கிறான். இதுவே லலிதையின் நாமமான "வாஞ்சிதார்த்த ப்ரதாயினி' என்பதில் பொருளுடன் வருகிறது.
வரமளிக்கும் முருகன் மயில்மீது விரைவாக வந்து அளிப்பதாக இங்கு சொல்லப் படுகிறது. "கேட்டதை மட்டுமல்ல; கேட்டதைக் கேட்டமாத்திரத்தில் கொடுப்பதே இறைவனின் இன்னொரு வரப்ரதான குணமாகக் காட்டப்படுகிறது. கேட்பது உலக வாழ்விற்குத் தேவையான பொருளோ அல்லது ஆன்மிக வாழ்வின் முன்னேற்றமோ- முருகன் உடனே கொடுக்கிறான். கேட்கும் வகையறிந்து ஒரு சாதகன் கேட்க, உடனே அளிப்பது இறைவனின் தன்மை.
இந்தக் கருத்தை முன்னிருத்தும் வகையில் தான் ஸ்ரீவித்யா மந்திரங்களில், "அஸ்வாரூடா' என்ற தேவி குதிரைமீது வேகமாக வந்து அருள்புரிகிறாள் என்று கூறப்படுகிறது. "சம்பத்த கரி' என்ற தேவியும் யானைமீது வந்து செல்வம் நல்குகிறாள் என்று அவளது மந்திரம் மற்றும் தியான சுலோகங்கள் கூறும்.
இந்த இரண்டு தேவிகளுமே பண்டாசுர னுடன் ஏற்பட்ட போரில் முன்னின்று பெரும் பகைகளைக் களைந்தனர். அதேபோல் முருகனின் மயில் போர்க்களத்தில் செய்த தீரச்செயல்களை "வேல் வகுப்பு' மற்றும் "மயில் வகுப்பு' போன்ற பாடல்களில் அருணகிரிநாதர் பதிவுசெய்துள்ளார்.
சிலகாலத்திற்குமுன் வாழ்ந்த பாம்பன் சுவாமிகளும் மயிலை வேண்டி முருகனை அழைத்துவரச் சொல்கிறார்- "கொணர்தியுன் இறைவனையே' என்று பகை கடிதல் பாடலில் வரும். இவ்வாறாக வாகனமேறும் இறைவன், சாதகனுக்கு ஏற்படும் உட்பகை, வெளிப்பகை ஆகிய இரண்டையும் களைகிறான். இந்த செய்கையே லலிதையின் அம்சங்களான "அஸ்வாரூடா' மற்றும் "சம்பத்தகரி' என்ற தேவிகள் இருவரும் முறையே குதிரை மற்றும் யானைப் படையை நடத்தி, பண்டாசுரனுடன் நடந்த போரில் லலிதைக்குத் துணையாக நின்றார்கள்.
சூரபத்மனுடன் நடந்த போரில், சூரன் மாமரமாக உருவெடுத்து பூமிக்கும் மற்ற உலகங்கள் அனைத்திற்கும் ஒருசேர படர்ந்து விரிந்து தொல்லை கொடுத்தான். அவனை முருகன் வேலைவீசி இரண்டாகப் பிளந்து அழித்தார். மரம் வீழ்ந்தபின்னும் அசுரன் உருவெடுக்க, இரண்டாம் முறை வேல் அவனை இருகூறாகப் பிளந்து கடலில் எறிந்தது. இந்தச் செயலை சற்று உற்றுநோக்கினால், மகிஷாசுரவதத்தில் துர்கை, எருமை உருவெடுத்த மகிஷனை அழித்தபின்னும் அசுரன் தன் சுய உருவில் வர, வாளால் அவனை வெட்டுகிறாள். இவ்வாறு சக்தியின் வெளிப்பாடு முருகனாகவும், முருகனே ஆறுமுக சிவமாகவும் இரண்டற விளங்கும் நிலையை அனுபூதி மற்றும் சக்தியின் பல்வேறு கிரந்தங்களை ஒப்புநோக்க தெளிவுறத் தெரியும்.