டந்த இதழில் ஆசையைப் பற்றியும், உண்மைக் கல்வி என்ன என்பதையும் பார்த்தோம். இந்த இதழில் ஆத்ம தியானம் மற்றும் உண்மையான செல்வம் என்னவென்று அருணகிரிநாதர் விளக்குவதைப் பார்க்கலாம்.

செய்யுள்-18

"உதியா மரியா உணரா மறவா

விதிமால் அறியா விமலன் புதல்வா

Advertisment

அதிகா அநகா அபயா அமரா

வதிகாவல சூர பயங்கரனே.'

விளக்கம்: பிறப்பு- இறப்பில்லாதவரும், உணரவோ மறக்கவோ முடியாதவரும், பிரம்மனா லும் பெருமாளாலும் அறியமுடியாத பரிசுத்தமான சிவபெருமானின் புதல்வரே, ஒப்புயர்வற்றவரும், மிகப்பெரியவரும், பயமற்றவரும், இந்திரனின் உலகமான அமராவதியின் காவலரும், சூரபத்மனுக்கு மரணபயத்தைக் கொடுத்தவருமான முருகப் பெருமானே.

Advertisment

dd

அருணகிரிநாதரின் காலத்தில் சைவ, வைணவ சமயங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. கௌமார சமயமும் தனியாக பிரதானமாக இருந்தது.

இந்த பாட-லில் சிவனாரை முழுமுதற் தெய்வமாக அறிமுகம் செய்து, அவரின் புதல்வரான முருகப் பெருமானும் ஆறுமுக சிவம் என்றும், பரம்பொருள் பல்வேறு ரூபங்களில் உள்ளது என்றும் முன்னிருத்து கிறார்.

அருணகிரிநாதர் தம் திருப்புகழ்ப் பாடல்களிலும் சைவ, வைணவ, சாக்த, காணாபத்ய மற்றும் கௌமார சமயங்களை இணைத்தே பாடியிருக்கிறார். அருளாளர் இவ்வாறு எல்லா சமயங்களையும் இணைத்துப் பாடுவது, இறைவனின் நாமரூப பேதங்களைக் கடந்து, எல்லாம்வல்ல பரம்பொருள் ஒன்றுதான் என்ற கோட்பாட்டை நிலைப்படுத்ததான். யார் யாருக்கு எந்த ரூபமும் நாமமும் பிடிக்கிறதோ, அந்த ரூபத்திலேயே அந்த பரம்பொருள் சாதகனைச் சென்று ஆட்கொள்கிறது. அதற்காக, 'நான் கண்ட ரூபமே, நான் கொண்ட நாமமே பிரதானம்' என்று ஒரு சாதகன் சொல்லமுடியாது, இறைவனை உணர்ந்த ஒரு சாதகன் அவ்வாறு சொல்லவும் மாட்டான், மாறாக எந்த ரூபத்திலும் இறைவனை- அவனு டைய குணங்களை அனுபவித்து ஆனந்தமடைவான். அது போன்றவொரு ஆனந்த அனுபவமே அருணகிரிநாதரால் பெறப்பெற்று, சாதகர்களுக்கு ஐமுக சிவமும், அறுமுக சிவமான முருகப் பெருமானும் ஒன்றென்று இந்தப் பாடலில் நிலைநிறுத்துகிறார்.

இறைவனின் குணங்களானது பல்வேறு இடங்களில் கந்தர் அனுபூதி யில் காணக்கிடைக்கிறது. இந்த பாடல் முழுக்கவே இறைவனின் புகழென்றே சொல்லலாம், அதனாலேயே இந்தப் பாடல் தனித்துவம் பெற்றது. இறைவன் மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணம்; அவருக்கு பிறப்பு- இறப் பென்ற ஒன்றில்லை. மேலும் இறைவனை முழுவதுமாக உணர்வதோ, அவரின் செய்கைகளுக்கு அர்த்தம் காண்பதோ இயலாது. இதையே 'பேசா அனுபூதி' என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

ஒருசமயம் பிரம்மனும், விஷ்ணுவும் தங்களுக்குள் யார் பெரியவரென்று விவாதிக்க, அதற்கு முடிவுகாண இயலவில்லை, அதனால் இருவரும் யுத்தம் செய்து யார் பெரியவரென்று முடிவெடுக்க எத்தனித்தனர். இந்த யுத்தத்திலும் பல நாட்களாகியும் யாரும் வெற்றயடையவில்லை. இதைக் கண்ட சிவனார், இந்த பிரச்சினைக்குத் தீர்வுசெய்யவேண்டி, ஒரு ஜோதியே உருவாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரின் அடியையோ முடியையோ யார் முதலில் காண்கி றாரோ அவரே வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார் என்று பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் கூற, பிரம்மன் அன்னப்பறவையாக உருவெடுத்து மேலே பறந்துசென்று முடியைக் காணாவும், விஷ்ணு வராஹமாக உருவெடுத்து மண்ணிற்குக் கீழே செல்லவும் ஆரம்பித்தனர், இவர்கள் பலகாலம் இவ்வாறு சென்றும் இறைவனின் ஆதி- அந்தத்தைக் காணமுடியவில்லை. முடிவில் சிவன் இவர்களுக்குக் காட்சிதந்து, இருவரின் அகங்காரத்தையும் நீக்கி, பின்பு பழையபடி ஜோதி யாகி, பின் குன்றி, இப்போ திருக்கும் திருவண்ணா மலையாக மாறினார். இதுவே 'அருணாச்சலம்' என்று பெயர் கொண்டது. யாராலும் எட்ட முடியாத- அதாவது அடி, முடி காணமுடியாததால் 'அண்ணா'மலை என்றும், அடியவர்களின் 'ருணம்'- அதாவது கர்மவினைகளைக் களைவதால் 'அருணாச்சலம்' என்றும் இந்த இடம் பெயர்பெற்றது, அப்படிப்பட்ட அருணாச்சலத்திலேதான் முருகன் அருணகிரி நாதருக்கு முதன்முதலி-ல் காட்சிதருகிறார். சிவனே முருகனாக வருவதும் இவ்வாறே. எவ்வாறு அண்ணாமலையாரின் ஆதியந்தம் காண இயலவில்லையோ, அவ்வாறே இந்த அறுமுக சிவத்திற்கும் ஆதியந்தம் இல்லை.

சிவனிடம் பெற்ற வரத்தால், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் தேவலோகத்தைக் கைப்பற்றி உலகிற்குப் பெருந்துன்பம் விளைவித்தனர். அவர்களை அழிக்க பரம்பொருளான சிவம் தன்னுடைய விமர்ச ரூபமான சக்தியைத் தோன்றச்செய்து, அந்த சக்திவாயிலாகக் கந்தப் பெருமானை உலகிற்குத் தந்து, அந்த சக்தியையே ஆயுத மாகவுமாக்கி, சூரபத்மனை அழிக்க அனுப்பு கிறார். சிவன் தானே நேரில் சென்றால் சூரர்களை அழித்திருக்கலாம். ஆனால் அவர் களுக்குத் தந்த வரத்தைக் காப்பாற்ற தான் செல்லாமல், தன் சக்தியை உருவாக் குகிறார். அதனாலேயே அவர் 'விமலன்'- மாசில் லாதவராக இருக்கிறார்.

முருகப்பெருமான் தன்னிடம் அடைக்கல மான தேவர்களைக் காத்து, சூரபத்மனை அழித்து அமராவதி யைக் காக்கிறார். இங்கு பெருமானின் நல்லதைக் காத்து தீயதை அழிக்கும் குணம் சொல்லப்படுகின்றது. இதன் தத்துவம் பின்வருமாறு:

1. தெய்வீக குணம் கொண்டவர்களைக் காப்பாற்ற இறைவன் தானே வருகிறார்.

2. தீய குணங்களை அழிப்பதற்கு அவர் தயங்குவதில்லை.

இந்தப் பாட-லில் ஆத்ம தியானம் என்ற புதிய விஷயத்தை அறிமுகம் செய்கிறார். ஆன்மாவை பற்றி உபநிடதங்கள் சொல்லும்போது 'ஆன்மா ஆதியந்தம் இல்லாதது; எங்கும் வியாபித்திருக்கிறது; பாவமற்றது; எப்போதும் ஆனந்த மயமானது' என்று கூறும். இவ்வாறாக ஆன்மரூபமாக எல்லாருள்ளும் இறைவன் இருக்கிறார். இந்த ஆன்ம தியானத் தைச் செய்யும்போது இந்திரியங்கள், மனம் மற்றும் அகங்காரம் ஆகியவற்றிற்கு மரணபயம் கொடுக்கிறது. முடிவாக ஆன்ம தியானம் இந்த இந்திரிய- மன- ஆணவ மாயையி-லிருந்து சாதகனை ஆன்ம தரிசனம் மூலம் இறைவனை உணரச்செய்கிறது. இந்த தத்துவத்தை சாதகனுக்கு உணர்த்தவே அருணகிரிநாதர் இந்தப் பாடலி-ல் இறைவனின் குணங்களை வகைப்படுத்தி, எவ்வாறு தியானம் செய்யவேண்டுமென்று கூறுகிறார்.

ல-லிதையின் நாமங்களில் "ஆத்ம வித்யா' என்ற நாமம் ஆன்ம தியானத்தையும் குறிக்கும் பொருளிலும், "தேவ கார்ய சமுத்யதா' என்ற நாமம் தேவர்களை- நல்லவர்களைக் காக்க வந்தவள் என்றும், "நிரபவா' என்ற நாமம் பிறப்பிலாவதவள் என்றும், "நீர்நாஷா' என்ற நாமம் இறப்பில்லாதவள் என்றும், "நிரத்யயா' என்ற நாமம் அறியமுடியாதவள் என்றும். "நிஸ்துலா' என்ற நாமம் இந்தப் பாடலி-ல் "அதிகா அனகா' என்ற ஒப்புயர்வற்ற தண்மையைக் குறித்தும், "பயபஹா' என்ற நாமம் "அபயா' என்று, இந்தபக பாட-லில் வரும் பயமற்ற தன்மையயும், பயம் போக்கும் குணத்தையும் குறிக்கும். அனுபூதியும் சஹஸ்ரநாமமும் வெவ்வேறல்ல என்பதை நிரூபித்து சாதகர்களை வழிநடத்துகிறது.

செய்யுள்-19

"வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோகியவா

அடியந்தமிலா அயில்வேல் அரசே

மிடியென்று ஒருபாவி வெளிப்படினே.'

விளக்கம்: ஆதியந்தமில்லா அரசே முருக பெருமானே, சிவபெருமான் தந்த வஜ்ரவேலை கையில் வைத்திருப்பவரே, அறியாமையாகிய வறுமை என்னும் பாவம் வெளிப்படின், அழகு, செல்வம், மனவுறுதி, ஒழுக்கம், பிறந்தகுடியின் சிறப்பு, குலத்தின் கௌரவம் எல்லாம் ஒருவனைவிட்டுப் போய்விடுமே!

இந்த செய்யுளுக்கு முந்தைய செய்யுளில், ஆத்ம தியானத்தை அருணகிரிநாதர் உபதேசிக் கிறார். இந்த ஆத்ம தியானம் செய்ய முற்படும் சாதகனுக்கு, அதை செய்ய ஆரம்பிக்கும் போதுதான் தெரிகிறது- அறியாமை என்னும் ஒரு பொருள் தன்னை ஆட்டிவைக்கிறது என்பது. இந்த அறியாமை என்னும் இருளே காமம், குரோதம் முதலான ஆறு குறைகளுக்குக் காரணமாகிறது. ஒருவனுக்கு அறியாமை விலகினால் அவன் கோபமோ பொறாமையோ கொள்ளமாட்டான். ஆனால் இந்த அறியாமை என்னும் மாயையே ஒருவனைக் கீழ்நிலைக்குத் தள்ளி, கர்ம சக்கரத்தில் சுழற்றி மேன்மேலும் பிறவியெடுக்க வைக்கிறது. ஆன்ம தியானம் செய்யும்போது அறியாமைதான் முதலில் விழித்துக் கொண்டு, சாதகனை மேலே செல்ல விடாமல் தடுக்கும். அதற்கான அத்துணை முயற்சிகளையும் எடுத்து எல்லாவிதமான முட்டுக்கட்டைகளையும் சாதகனுக்கு இடும்.

இந்த சமயத்தில்தான் சாதகன் தன் குருவினை நாடி, தன்னுடைய ஆன்ம தியானத் திற்கு உதவுமாறு கேட்கிறான். அப்போது குருவானவர் தன் ஆன்மபலத்தை சீடன்மீது பாய்ச்சுகிறார். இந்த செய்கையே உண்மையான உபதேசமாகும். இந்த சக்தியாலும், குருவின் கிருபையாலும் சாதகன் மேலும் சாதனையில் முன்னேற முடிகிறது. இந்த பாடலில் கூறப் படும் 'மிடி', 'பாவி' என்ற பாதங்களுக்கு விளக்கம் அறிந்தால்தான், அருணகிரிநாதர் ஏன் ஆத்ம தியானத்தில் தடைகள் வரும்- குருவின் கிருபை ஏன் வேண்டுமென்று கூறுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

மிடி என்பது வறுமையைக் குறிக்கும் ஒருசொல். வறுமை என்பது மூன்று வகைப்படும்.

1. பொருள் இல்லாததால் வரும் வறுமை, 2. ஒழுக்கமின்மையினால் வரும் வறுமை, 3. ஆன்மிக வறுமை. இதில் ஆன்மிக வறுமையே மிகவும் கொடியது. பொருள் இல்லையென்றால் ஏதாவதொரு வேலை, வியாபாரம் செய்து, கடுமையான முயற்சி செய்தால் கண்டிப்பாக அந்த வறுமை ஒழியும். அதேசமயம் ஒழுக்க மின்மையால் வரும் கஷ்டங்களிலி-ருந்து மிகவும் முயற்சி செய்துதான் வெளியே வரமுடியும்.

இந்த வறுமையைக் கடப்பது அவ்வளவு சுலபமல்ல. எனினும் மிகுந்த பிரயத்தனம் செய்தால் இந்த வறுமையிலி-ருந்தும் மீளலாம். ஆனால் ஆன்மிக வறுமை இருந்துவிட்டால் பலகோடி பிறவிகள் எடுத்தாலும், அது நம்மை விடுவதில்லை. அஞ்ஞானம் என்றும் அறியாமை என்றும் அது நம்மைத் துரத்தி, ஒவ்வொரு பிறப்பிலும் பல கர்மவினைகளைச் சேர்த்து நம்மை வீடுபேறு அடையவிடாமல் செய்கிறது.

மற்றைய இரு வறுமைகளை நாமே முயற்சி செய்தால் நம்மால் அழிக்கமுடியும். ஆனால் ஆன்மிக வறுமையை இறைவன் ஒருவனால், அவனது கிருபை இருந்தால் மட்டுமே அழிக்க முடியும். அதனால்தான் மாணிக்கவாசகர், "அவனருளால் அவன் தாள் வணங்கி' என்று சொல்கிறார்.

ஞானரூபமாக கூர்மையாக இருக்கும் வேல் ஒன்றே நம் இந்த அறியாமை எனும் வினையை அழிக்கவல்லது என்று புரிந்த படியால்தான், அருணகிரிநாதர் சாதகன்பால், இந்த கோரிக்கையை முருகனின் வேலி-டம் வைக்கிறார். வேலானது சக்தியின் சூட்சும வடிவம். இறுதியாக சக்தியே அஞ்ஞானத்தைப் போக்கவல்லவள் என்று இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் போனால் சக்தியே பர ப்ரஹ்மம் என்றும் கூறலாம். அதற்குச் சான்றாக, சற்றே இந்த கோட்பாட்டை உணர, மாறுபட்டு சிந்திக்க வேண்டும். கீழ்வரும் சிந்தனை ஒரு சாதகன் எவ்வாறு எங்கும் தன் இறையைக் காண்கிறான் என்று கொள்ளவே தவிர, மற்றைய தெய்வங்களைக் குறைப்பதற்கல்ல.

இறைவன் தன்னை இரண்டாகப் பிரித்த போது, சக்தியிடம் மொத்த பொறுப்பையும்- அதாவது பஞ்ச கிருத்யங்கள் என்று சொல்லப் படும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத் தல் மற்றும் அருளலை விட்டுவிட்டு, தான் எப்போதும் ப்ரஹ்ம ஸ்வரூபமாக பேரானந்தப் பெருவெளியில் நிலைத்திருக்கிறான். சக்தியே மற்றைய எல்லா செயல்களையும் செய்கிறாள்.

இவ்வாறு இருக்கும்போது எந்த சக்தி வேலைகளைச் செய்கிறதோ அதை பரம்பொருளின் "விமர்ச'' ரூபம் என்று குறிப்பிடுவதுண்டு. எப்போதும் ப்ரஹ்ம ஸ்வரூபமாக இருப்பதை 'பிரகாச' ஸ்வரூபம் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு ஒன்றான பரம்பொருள் இரண்டாக பிரகாச- விமர்ச ஸ்வரூபமாக இருப்பதையே சாக்தத்தில் லலிதா மகா திரிபுரசுந்தரி என்று கூறபடுகிறது. இவளே பக்குவமடைந்த ஆன்மாக்களைக் காத்து மேலே செல்ல ஊக்குவித்து, முடிவில் பரம்பொருளில் தானும் ஒன்றி அந்த ஆன்மாவையும் சேர்கிறாள். இவ்வாறு எந்தப் பொருள் எந்த மாறுதல்களும் இல்லாமல் ஓரிடம் இருக்கிறதோ அதுவே பரம்பொருள் என்று சொல்லத் தகுதி வாய்ந்தது.

இப்போது சற்று நாம் கோவில்களில் நடக்கும் அர்த்தஜாமப் பூஜையை கவனிக்க வேண்டும். சைவத்தில் கோவில் என்றால் நாம் தில்லை நடராஜர் கோவிலைதான் கொள்ளவேண்டும். இங்கு அர்த்தஜாமக் காலத்தில், நடராஜப் பெருமான்தான் பஞ்ச கிருத்யங்களையும் முடித்து, கோவிலைச் சுற்றி, இறுதியாக பள்ளியறையில் வீற்றிருக் கும் அம்பிகையிடம் சேர்கிறார். இங்கு செயல்புரிவது பெருமான்; பிரகாச ரூபமாக இருப்பது அம்பிகை. ஆதலால் அவளே ப்ரஹ்ம ஸ்வரூபமாக இருக்கிறாள். விமர்ச ரூபமாக பெருமான் இங்கு மற்றைய வேலைகளைச் செய்கிறார். நான்கு கரங்களும் படைத்தல் முதலான நான்கு தொழில்களையும், தூக்கிய இடது திருவடி அருளலைச் செய்வதுமே அதற்கு சாட்சி. மாறாக சிவகாமசுந்தரி, பெருமானின் நடனத் திற்கு சாட்சியாகவே அருகில் நிற்கிறாள். பரப்ரஹ்மத்தைபோல், கீதையில் 'நான் சாட்சி மாத்திரமாக மட்டுமே இருக்கிறேன்' என்று கண்ணன் சொல்வதுபோல. இந்த காரணத்தினாலேயே அருணகிரிநாதர் ஞானம் வேண்டி சக்திவேலிடம் கோரிக்கை வைக்கிறார்.

ப்ரஹ்மம் மட்டுமே ப்ரஹ்ம ஞானம் தரமுடியும். முருகனை- அறிவை வேல்மட்டுமே தரமுடியும். அந்த அறிவுமட்டுமே ஆன்மிக வறுமையை ஒழிக்கவல்லது. வேலே ஞானம் தருவதால், வேலே குருவின் ரூபமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பாடலி-ல் "முருகன் தனிவேல் நம் குரு' என்று அருளாளர் கூறுவார்.

லலி-தையின் நாமங்களில் "சிவஞான ப்ரதாயினி', "கைவல்ய ப்ரதாயினி'' என்ற நாமங்கள், அவளே முக்திக்கு வேண்டிய ஞானத்தை அளிப்பவள் என்றும், "மஹாலட்சுமி' என்ற நாமம், அவளே பொருளால் உண்டாகும் வறுமையை அழிப்பவள் என்றும், 'மஹா வித்யா', "ஸ்ரீ வித்யா', "ரமா' ஆகிய நாமங்கள், அவளே சரஸ்வதியாகவும், "ஸர்வார்த்த தாத்ரி' என்ற நாமத்தில் எல்லா செல்வங்களையும் தருபவள் என்றும், "ஸம்ப்ரதாயேஸ்வரி' என்ற நாமத்தில் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல; ஒழுக்கத்தையும் காத்துத் தருபவள் என்றும், இந்தப் பாடலுக் கேற்ப பொருள் கொண்டு, அனுபூதியும் சஹஸ்ரநாமமும் சாதகனை ஒரு பாதையில் இட்டுச் செல்கின்றன.

(அனுபூதி தொடரும்)