ந்த இதழில், செய்யுள் 26, 27-ல், சாதகன் எவ்வாறு ஆன்மிக முன்னேற்றம் அடைகிறான்;

இறைவனின் தன்மையை எவ்வாறெல்லாம் உணர்கிறான் என்று அருணகிரிநாதர் கூறியுள்ளதைப் பார்க்கலாம்.

செய்யுள்-26

"ஆதாரம் இலேன் அருளைப் பெறவே

Advertisment

நீதான் ஒருசற்றும் நினைந்திலையே

வேதாகம ஞான விநோத மனோ

தீதா சுரலோக சிகாமணியே.'

Advertisment

பொருள்: வேதங்கள், ஆகமங்கள் தரும் ஞானத்தை நொடிப் பொழுதிற்குள் தரவல்லவரே, மனதிற்கு அப்பாற்பட்டவரே, மனதை அழிப்பவரே, தேவலோக சிகாமணியே, எனக்கு உன்னைவிட்டால் வேறு ஆதரவென்று ஒன்றுமில்லை. உன் கிருபையைப் பெறவும் என்னிடம் எந்தவொரு ஆதாரமுமில்லை. நீயும் இதைப்பற்றி சற்றும் நினைக்கவில்லையே... என்னே ஒரு பரிதாபமான நிலை!

dd

இந்தப் பாடலை இருவேறு கண்ணோட்டங்களோடு நாம் பார்க்கலாம். 1. இறைவனின் கிருபைக்கு ஆளாகமுடியவில்லை. அதனால் சாதகன் இறைவனை நோக்கித் தன்னுடைய ஆற்றாமையையும் பரிதாப நிலையையும் கூறுவதுபோல ஒரு கண்ணோட்டம். 2. இறைவன் கிருபைக்கு ஆதாரம் இல்லையென்றாலும், சாதகனை நோக்கித் தன் கிருபையை செலுத்துகிறான் என்றொரு கண்ணோட்டத்துடனும் பார்க்கலாம்.

சாதகன் இவ்வளவு நாட்கள் குருவிடம் தீட்சை பெற்றபின்பு, ஆத்ம தியானம்செய்து சிறுசிறு அனுபவங்கள் பெற்றாலும், பூரண விடுதலை பெறமுடியவில்லை. காரணம், பௌதீக கர்மங்களைக் கடந்தாலும் சூட்சும- அதிசூட்சும கர்மங்களானது மனம் மற்றும் ஆன்மாவைவிட்டு நீங்கவில்லை. அதற்கான முயற்சிகளை சாதகன் எவ்வளவு செய்தும், இறைவனை நோக்கிச்செல்லும் வேகம் தடைப்பட பல்வேறு காரணங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இறைவனின் இருப்பை சத்தியமென்று உணர்ந்துகொண்ட ஒரு ஆன்மா, எப்பாடுபட்டாவது இறைவனை அடைந்துவிடும். இறைவனை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு செயலையும் கர்மவினை தடுக்கப் பார்ப்பதும், அதைக் களைவதிலேயே நேரம் கடப்பதும், அகநாநூற்றுத் தலைவிலி தலைவன் பிரிவாற்றாமையைவிட கொடுமையானதாக இந்த சாதகன் உணர்கிறான்.

இறைவனை அடைய சாதகனிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை. தவமில்லை; நற்செயல்களினால் விளைந்த புண்ணியமில்லை. ஞானமும் இல்லாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான். இறைவன் உள்ளான் என்னும் உண்மை மட்டுமே சாதகனுக்குப் புலனாகியுள்ளதும், இறைவனின் கிருபை இல்லாமல் இருப்பதும் அவனுக்கு இப்போதுதான் விளங்குகிறது.

கிருபை கிடைக்க என்ன செய்யவேண்டும் என்றும் தெரியாத நிலைமைதான் சாதகனின் தற்போதய நிலை. இறைவனாக நினைத் தால்தான் அதுவும் இவனுக்குப் புலனா கும். அதனால்தான் "நீதான் ஒரு சற்றும் நினைந்திலை' என்று இறைவனிடமே அவனைப்பற்றி முறையிடுகிறான். அந்த இறைவன் நினைத்தால் என்னவெல்லாம் கொடுக்கமுடியும் என்றால், வேத, ஆகம ஞானம், மனோ நாசம், சுரலோகம் என்னும் சுவர்க்கம் எல்லாமே சற்று நேரத்திற்குள் கொடுத்துவிடுவான்.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய பதம் "சிகாமணியே' என்பது. சிகாமணி என்பது தலையில் "சிகை' என்று கூறப்படும் உச்சியில் சூடும் மணி. இங்கு சூடும் மணி எவ்வாறு ஆடம்பரமாகும்? சிகாமணி என்பது, நாம் நினைப்பதுபோல் மகுடத்திலோ, நெற்றிப் பக்கத்திலோ இருந்தால் அதனால் ஒரு ஆடம்பரமும் அலங்காரமும் அரசர்களுக்கு உண்டு. ஆனால் சிகையில்- அதாவது உச்சந்தலையிலுள்ள மணியால் என்ன பயன்? அது மணிதானா என்று ஆராயவேண்டிய கட்டாயத்துக்கு இந்தப் பாடலின்மூலம் அருணகிரிநாதர் நம்மை ஆளாக்குகிறார்.

குண்டலினி சக்தியானது, மூலாதாரம் தொடங்கி சஹஸ்ராரம் சென்றடையும் இடம் உச்சந்தலையே. அங்கு நாம் அதை மறைத்துவைக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே சிகை வைக்கும் பழக்கம் வந்தது. இந்த இடத்திலுள்ள மணி என்பதே, சஹஸ்ராரத்தில் குண்டலினி பரப்பிரம்மதோடு கலக்கும் நிலைதான். இவ்வாறாக சிவசக்தி ரூபமாக, புருஷ பிரக்ருதி ரூபமாக, காமேஸ்வரன்- காமேஸ்வரியாக, பிரகாஷ விமர்ஷ ரூபமாக விளங்குவதால்தான், முருகனை சிகாமணி என்று அருளாளர் அழைக்கிறார். இங்கு கவிதைச் சுவையைவிட மறைந்திருக்கும் உண்மைச் சுவைதான் அதிகம்.

இறைவனின் கிருபை கிடைப்பதற்கு ஒரு காரணமும் தேவையில்லை. ஒரு ஆதாரமும் நம்மிடம் இருக்கத் தேவையில்லை. ஆதாரம் கொண்டருள இறைவன் ஒரு வியாபாரி அல்ல. இறைவனின் செயலுக்கு விளக்கம்காண முயல்வதும், கர்மவினையின் மூலத்தைக் காண முயல்வதும், நூலைக்கொண்டு கடலை அளக்க நினைப்பதுபோல் வீண்பொழுதாக முடியும். இறைவனை ஏற்கெனவே நிஷ் காரணன், நிஷ் பரிக்ரஹன், நிராதாரன் போன்ற நாமங்களில்- இறைவன் காரணமின்றி இருப்பவன்; அவனுக்கு யாரும் எதுவும் கொடுக்கத் தேவையில்லை; அவனே எல்லாவற்றுக்கும் ஆதாரன்; அவனுக்கு ஆதாரம் தேவையில்லை என்பதெல்லாம் கண்டிருக்கிறோம்.

அவ்வாறான இறைவன் எப்படி கிருபை செய்ய ஆதாரம் தேடுவான்? எலி ஓடும்போது விளக்குத் திரி தூண்டப்பட்டதைக்கொண்டு, எலியை மறுபிறவியில் மன்னனாக்கி னார் சிவபெருமான். இறைவனுக்கு ஆதாரம், ஏதோவொரு சிறிய செயலைக் காரணம்காட்டி பெரிய கிருபை புரியவேண்டுமென்பதே. இதற்கும் காரணம் அவன் வகுத்துக்கொண்ட கர்மவினைக் கொள்கையே. (ஈஹன்ள்ங் ஹய்க் ஊச்ச்ங்ஸ்ரீற்).

இந்தப் பாடலில் அருளாளர், அந்த சிறிய வினைகூட என்னிடம் ஆதாரமாக இல்லை. இருந்தும் நீ கருணை புரிந்தாயே முருகா என்றும்; அவனது கருணையானது வேத ஞானம், மனோ நாசம், சுரலோகம் போன்ற அனைத்தையும் அளித்தது மட்டுமல்லாமல், அவனையும் உணரச்செய்யுமே என்றும் சாதகனை ஒரே பாடலில் புலம்பவும் வைத்து, இறைவனின் கருணையையும் உணரச் செய்கிறார்.

லலிதையின் சஹஸ்ரநாமத்தில், "ஸோப4னாஸுலபா4க3ஸிதி'- எளிதாக அடையக்கூடியவள்; "நிஜாஜ்ஞாரூபநிக3 ஸிமா'- வேதங்களின் ஞானமாக விளங்குபவள்;

"ஸ்வர்கா3ஸிபவர்கஸிதாஸி'- சொர்க்கத்தை யும், மோட்சத்தையும் கொடுப்பவள்; "ஸத்3ஸியப்ரஸாதிஸி3னீ'- உடனே கிருபையை அளிப்பவள்; "அவ்யாஜகருணாமூர்த்தி'- காரணமின்றி கருணை புரிபவள் என்று கூறப் படுகிறது. இவ்வாறு லலிதையின் சஹஸ்ரநாம மும், கந்தர் அனுபூதியும் ஒரே பரம்பொருளைப் பேசுவதை இந்தப் பாடலிலும் காணலாம்.

செய்யுள்-27

"மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான்

என்னே விதியின் பயன் இங்கிதுவோ

பொன்னே மணியே பொருளே அருளே

மன்னே மயிலேறிய வானவனே.'

பொருள்: மின்னலை ஒத்த வாழ்வை நான் இதுநாள்வரை விரும்பினேனே! இதுவே விதியின் பயனோ? பொன்போன்ற அருமை வாய்ந்தவரே, பொன் நிறத்தவரே, மாணிக்கம் போன்றவரே, உண்மைப் பொருளே, முக்தியளிக்கும் அருள்வடிவானவரே, அரசே, மயில்மீது வரும் தேவாதிதேவனே, நீங்கள் இருந்துமா எனக்கு இந்த நிலை!

சாதகன் ஒவ்வொரு பாடலிலும் சற்றே முதிர்ந்து வருவதும், அவனுடைய மன ஓட்டமும், இறைவன்மீதுள்ள புரிதலும் மாறி வருவதையும் நாம் காணமுடிகிறது. போன பாடலில் இறைவனின் கருணை இல்லையென்று முதலில் புலம்பியும், பின் இறைவன் கருணைக்குக் காரணம் தேவையில்லை என்றும் இரண்டாவது புரிதல் பிறக்கிறது. இந்தப் பாடலில் உலகவாழ்வை மாயை என்றும், இந்த வாழ்வும் கர்மவினையின் பயனென்றும் உணர்கிறான்.

மின்னல் போன்று ஒரு நொடியில் தோன்றி மறையும் வாழ்க்கையை நான் விரும்பினேன் என்று கூறும்போதே, இறைவன் இந்த விதியை விதிக்கவில்லை என்ற உண்மை சாதகனுக்குப் புரிகிறது. மேலும் அது விதி; அந்த விதியை விட்டு வெளியேற வேண்டுமென்றால் விதிக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் இறைவனை சரணடைய வேண்டும் என்றும் சாதகன் புரிந்துகொள்கிறான். இந்த விதியின் பயன் எவ்வாறு வருகிறதென்றும் அருணகிரிநாதர் சொல்லாமல் சொல்கிறார்.

ஒருவனுக்கு கர்மவினை (நல்வினை- தீவினை இரண்டும்) எங்கிருந்தெல்லாம் உருவாகிறது- பொன், பணம் மீதுள்ள ஆசை! இங்கு மணி என்னும் பதம் இருப்பதிலேயே உத்தமமான தரத்திலுள்ள பொருளென்று கொள்ளவேண்டும். ஆகவே முதல்தர பொருட்கள் தன்னிடம் மட்டுமே இருக்கவேண்டுமென்ற ஆசை, பலவித பொருட்களை அடையவேண்டுமென்ற ஆசை ஆகியவையும், இறைவனின் அருளையும் இதனோடு சேர்க்கவேண்டுமென்று நினைப் பதுவுமே கர்மவினைகளை சேர்க்கும் ஒரு காரணியாக இருந்திருக்கிறது என்பதை சாதகன் உணர்ந்துகொள்கிறான். இதனால் விதியின் பயனை உணர்ந்து ஏற்றுக்கொள்வதும், இந்தநிலை மாற கருணைக்கடலாக இருக்கும் முருகனிடம் சரணைடைவது ஒன்றே என்றும் புரிதல் ஏற்படுகிறது.

26 மற்றும் 27 ஆகிய பாடல்கள் இரண்டிலும் சாதகன் இறைவன் அருளைவேண்டி மன்றாடுகிறான். பல பிறவிகளில் பொருளைக் கேட்டவன் இப்போது அருளை மட்டுமே கேட்கிறான். இந்த செயல் அவனது ஞானத்தை முதிரச்செய்வதோடு, வைராக்கியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இங்கு, இறைவன் அருளைக் கொடுப்பதற்கு ஏன் காலதாமத மாகிறது என்று நாம் பார்க்கவேண்டும்.

சாதகனுக்கு பூரண சரணாகதி வாய்க்கவில்லை. செய்யுள் 26-ல் "ஆதாரம் இலேன்' என்று சொல்வது சரணாகதி இல்லை என்றும் குறிக்கும்.

வினைகளின் செயல்களால் அறியாமை சூழ்ந்திருக்கிறது. வினைகளை அனுபவித்துத் தளர்ந்தால்தான் அறியாமை நீங்க வழி பிறக்கும். சஞ்சித, ஆகாமிய கர்மங்களைக்கூட இறைவன் அழித்தாலும், இந்த பிறவியின் பிராரப்த கர்மத்தின் பெரும்பகுதியை அனுபவித்தபின்தான் இறைவனின் கருணையே நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதுவரையிலும் இறைவன் அருகிலேயே நின்றாலும் நாம் உணர்வதில்லை என்பதே உண்மை.

இந்தப் பாடலில் இரண்டாவது கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது, சாதகன் இறைவனை அருள் கொடுப்பவர் என்று சொல்லாமல், "அருளே' என்றுதான் வேண்டுகிறான். இதிலிருந்தே இறைவன் அருள் வடிவானவரென்று சாதகன் உணர்ந்துகொண்டது விளங்குகிறது. இந்த உணர்தலே சாதகனை அடுத்த நிலைக்கு இட்டுச்சென்றுவிடும். அந்த செய்கையை நாம் அடுத்த பாடலில் காணத்தான் போகிறோம்.

இறைவன் ஒருவனே உண்மையான செல்வம். அதனால்தான் அவனை சாதகன் "பொன்னே, மணியே' என்று அழைக்கிறான்.

மேலும் எல்லாவற்றுக்கும் உயரிய சாம்ராஜ்யமான மோட்ச சாம்ராஜ்யம் அளிக்கவல்லவனாக இருப்பதால் அவனை "அரசே' என்று அழைக்கிறான். உண்மைப் பொருளின் உறைவிடமாக இருப்பதால் "பொருளே' என்றும், பக்தர்களுக்கு உடனே அருளவேண்டும் என்ற உள்ளம் கொண்டவராதலால் மயிலில் எப்போதும் ஏறி அருளச்செல்ல தயாராக இருக்கிறார் என்றும் சாதகன் இறைவனின் இயல்பை இங்கு புரிந்து போற்றுகிறான்.

லலிதையின் நாமங்களில் "சாம்ராஜ்ய தாயினி' என்னும் நாமம் மோட்ச சாம்ராஜ்யம் அளிக்க வல்லவள் என்றும், தேவி மகாத்மியத்தில் "ஸ்த்ரீ ரத்னம்' என்று இவளை அசுரர்கள் கூறுவதும், "பெண்ணில் நல்லாள்' என்று சைவத் திருமுறைகள் போற்றுவதும், அபிராமி அந்தாதியில் பட்டர் "உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்' என்று சொல்வதும் மணி என்ற பதத்தைக் காட்டும். அருள் என்ற பதத்திற்கு "ராஜத் க்ருபா' என்ற நாமம்- கிருபை அளிப்பதில் இவளுக்குமேல் எவருமில்லை என்றும், ராஜ்யலட்சுமி, ராஜேஸ்வரி, ராக்னி போன்ற நாமங்கள், இவளே அரசிகளுக்கெல்லாம் அரசி என்றும், "ப4க்திமத்கல்பலதிகா' என்ற நாமம், பக்தன் கேட்பதெல்லாம் கொடுக்கும் தெய்வமாக இருக்கிறாள் என்றும், "க்ஷிப்ர ப்ரசாதினி' என்ற நாமம், கேட்டவுடன் கொடுப்ப வள் என்றும் பொருள் கொண்டவாறு, அனுபூதியின் பாடல்கள் ஒத்த பொருளைக் கொண்டு லலிதையின் துதியைப் பாடுகிறது.

(அனுபூதி தொடரும்)