கடந்த இதழில் சாதகனுக்கு சமாதி நிலையையும், முருகனின் உபதேசம் எவ்வாறு இருக்கும் என்றும், கடவுளின் உண்மைநிலை எவ்வாறு இருக்கும் என்றும் 13-ஆம் செய்யுளில் விளக்கிய அருணகிரிநாதர், 14 மற்றும் 15-ஆம் பாடல்களில் ஆசையை வெல்லும்வழியையும், முருகனின் கடவுள் தன்மையையே- அதாவது அவரது கல்யாண குணங்களையும் விளக்குகிறார்.
செய்யுள்-14
"கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய்வழி செல்லும் அவாவினையே.'
விளக்கம்: கைகளிலே வேல் தாங்கிய முருகப்பெருமானின் கழல் அணிந்த பாதங்களைப் பற்றி மனமே நீ ஒழிவாய். நீ ஒழிந்தால்தான் ஆன்மா நல்வழி செல்லும். உடல், வாய், கண்கள், நாசி மற்றும் செவியான பஞ்ச இந்திரியங்கள் வழியாக மனதின் ஆசைகளை மனமே நீ ஒழித்துவிடுவாயாக.
12 மற்றும் 13-ஆம் செய்யுள்களில், குருவானவர் சீடனுக்கு ஆன்மிக அனுபவம் எவ்வாறு இருக்குமென்று ஒரு முன்னோட்டம்தான் காண்பிக்கிறார். அந்த அனு பவமே இறுதியாகாது. இந்த இடத்தில்தான் பல்வேறு சாதகர்கள் இறைநிலையை அடைந்துவிட்டதாக எண்ணி மாயையில் மீண்டும் அகப்பட்டுவிடுகின்றனர். இந்த முன்னோட்டமான சமாதிநிலை எந்த மார்க் கத்திலுள்ள ஒருசீடனுக்கும் எப்போதா வது ஏற்படுவதுண்டு. இந்த சமாதி நிலையை இன்னும் பிறப்யோகப் பயிற்சிகளாலும், செயற்கையான சில பொருட்களாலும் ஏற்படுத்தமுடியும். இந்த தந்திரத்தை அறிந்த சில போலி ஆன்மிகவாதிகளால் இன்றளவும் மக்கள் பெருந்திரளாக ஏமாற்றபடுகின்றார் கள். இவ்வாறான அனுபவங்களை அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்திலும் சிலர் ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனா லேயா என்னவோ, அருணகிரிநாதர் உண்மையான சமாதிநிலை அடைந்த சீடன் குருவின் கிருபையால் அந்த அனுபவத்தை நேரில் பெற்றிருந்தாலும், மீண்டும் அவன் உலக மாயையில் விழுவதைத் தடுக்கமுடியாது என்பதை உணர்த்தவே இந்த பாடலைச் செய்திருக்கிறார்.
உண்மையான குரு வாய்த்தும், சமாதி அனுபவம் எய்தியும் இந்தநிலை வரக் காரணம் என்ன? அப்படியென்றால் குரு உண்மையானவர் இல்லையா?
அல்லது சாதகன் கண்ட அனுப வம் பொய்யானதா என்ற கேள்விகள் எழுகின்றன. நாம் இந்த கேள்விகளுக்கு கண்டிப்பாக விடைகாணவேண்டும். விடை தெரிந்தால்தான் மேலுள்ள பாடல்களின் அர்த்தமும் அருண கிரிநாதர் எவ்வாறு இதை ஒரு இறைவழிபாட்டு முறையாக கந்தர் அனு பூதியை அமைத்திருக்கிறார் என்றும் புரியும்.
இந்தப் பாடலில் அருணகிரிநாதர் மறுபடியும் மனோநாசத்தைதான் பேசுகிறார்.
ஏற்கெனவே, "கெடுவாய் மனனே' என்று 7-ஆம் பாடலில் மனோநாசத்தை அறிமுகம் செய்த அருளாளர், மறுபடியும் இங்கு பேசக் காரணம் என்ன? 7-ஆம் பாடல் மனோ
நாசத்தின் ஒரு கோட்பாடுதான். (ற்ட்ங்ர்ழ்ஹ்).
ஆனால், இந்தப் பாடலில்தான் அருணகிரி நாதர் நடைமுறை விளக்கத்தை அளிக்கி றார். இங்கு நாம் கவனிக்கவேண்டிய பதம் "ஒழிவாய் ஒழிவாய்' என்று இருமுறை கூறுவதை. மனம் என்பது நாம் ஏற்கெனவே முந்தைய பாடல்களில் வெறும் எண்ணக் குவியல் என்பதைக் கண்டோம். ஆனால், இந்த எண்ணக்குவியலுக்குதான் எத்தணை பலம். ஒருவரை நல்லவர் ஆக்குவதும் சமயத்தில் தீயவை செய்யவைப்பதும் இந்த எண்ணங்களே. இந்த எண்ணங்களின் அடிப்படை மனமே. மனம் இயங்கும்வரை தான் ஒருவரை கர்மவினை தொடரமுடியும். மனம் அடங்கினால் அல்லது இல்லாமல் இருக்கும் நிலையே இறைநிலையை அடைய உதவும்.
முந்தைய பாடல்களில் குருவின் கிருபை யால் மனம் ஸ்தம்பித்து இறைநிலையை சற்றுநேரம் உணர முடிந்தது. ஆனால் ஒரு சாதகன் தன் சொந்த முயற்சியில்லாமல் இறை நிலையினைத் தக்கவைத்து கொள்ளமுடியாது. இந்த முயற்சியினை செய்யவே சரியான வழிகாட்டுதலை குரு கொடுப்பார். ஆனால், குருவே சாதகனுக்காக அந்த முயற்சியை செய்யமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு ஆன்மாவும் பல்வேறு கர்மவினைகளைச் சுமந்துதான் பூமிக்கு வருகிறது. குருவானவர் வினைகளை ஒரேபிறவியில் போக்க வழிசொல்லுவார். மேற்கொண்டு அதற்கான முயற்சிகளை சாதகன்தான் எடுக்கவேண்டும். இந்த முயற்சியில் தளராமல் இருக்க குரு அவ்வப்போது தன் கருணையின் மிகுதியால், சாதகனுக்கு தன் தபோபலத்தால் ஆன்ம அனுபவங்களைத் தருகிறார்.
இந்தப் பாடலில் மனம் ஒழிவது என்பது, எண்ணக்குவியலும் அந்த எண்ணங்களால் ஏற்படும் ஆசைகளும் ஒழிவதுதான். அதனா லேயே, அருணகிரிநாதர் ஒழிவாய் என்ற பதத்தை இருமுறை பயன்படுத்துகிறார். கண் முதலிய பஞ்ச இந்திரியங்களும் தங்கள் பங்கிற்கு வெளியுலகில் உள்ள பொருள்கள்மீது மனதில் ஆசையைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. கண்காணும் பொருள்மீதெல்லாம் மனம் ஆசை கொள்கிறது, தம் செவிகளில் தம்மை பற்றி நல்ல மற்றும் உயர்ந்த கருத்தே உலகோர் பேசவேண்டும் என்று நினைக்கிறது. உடலோ எப்போதும் இன்புற்றிருக்க வேண்டுமென்றே நினைக்கிறது. நாசி எப்போதும் நல்ல வாசனைகளை மனதிற்குப் பிடித்தவாறு நுகரவேண்டுமென்று நினைக் கிறது. வாயோ மனதிற்குப் பிடித்த உணவை மட்டுமே உண்டால்தான் மகிழ்ச்சியுண்டு என்று முடிவு செய்துவிடுகிறது, இந்த பஞ்ச இந்திரியங்களுக்கு இயல்பிலே ஒரு உணர்ச்சியும் இல்லை. மனதின் விருப்பதைக்கொண்டே இந்திரியங்கள் இது பிடிக்கும்; இது பிடிக்காது என்று முடிவு செய்கிறது. உதாரணமாக, ஒரேமாதிரியான நாக்கின் அமைப்புதான் மனிதர்களுக்கு உள்ளது. ஆனால், ஒருவருக்கு இனிப்பு பிடிக்கிறது. ஒருவருக்கு காரம் பிடிக்கிறது. நாவோ இதுதான் பிடிக்குமென்று முடிவு சொல்வதில்லை. ஆனால் மனம் மட்டுமே இந்தச் செயலைச் செய்யவைக்கிறது.
இவ்வாறாக மனம் ஒன்றே இறைநிலையை அடையத் தடையாக இருந்து, சாதகனை வெளியுலக மாயைகளில் ஈடுபடச் செய்கிறது. மனம் அடங்கினால் மட்டுமே சாதகன் உள்முகம் நோக்கி இறையனுபவம் பெறமுடியும். அதனால்தான் அருணகிரிநாதர் மனத்தை "ஒழிவாய்' என்று சொல்கிறார். மேலும் மனதை நாம் முயற்சிசெய்து அழிக்கமுடியாது; அது தானாகவே அழியவேண்டும். அது எவ்வாறு நடக்கும்? அதற்கும் அருணகிரிநாதர் வழிசொல்கிறார்.
முருகனின் வேல் தாங்கிய உருவம், கழல் அணிந்த திருவடியை தியானம் செய்ய மனம் மெல்ல அழியும். ஆசைகள் எவ்வாறு பஞ்ச இந்திரியங்கள்மூலம் மனதிற்குள் வந்ததோ, அவை வந்த வழியிலேயே சென்றுவிடும். அதற் காகவே இந்தப் பாடல். இறைவனின் திருவடி யின் மகிமை கூறவே இந்தப் பாடல். சாதகனை சரியாக வழிநடத்தவே இங்கு மனதை ஒழித்து ஆன்மாவை "உய்வாய்' என்று கூறுகிறார்.
லலிதையின் சஹஸ்ரநாமங்களில் "மனோ ரூபேக்ஷு கோதண்டா' என்ற நாமம், நம் மனதை லலிதையின்பால் சரணாகதியாக அர்ப்பணிக்க, அவளே மனதைக் கரும்பைப்போல் இனிக்கச் செய்து வாழ்வை உய்விப்பாள் என்ற பொருள் கொண்டு வரும். மனமே அவளின் ஆயுதமாக வும் இருப்பதால், அவள் நம் மனதை நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு செய்கிறாள். மேலும் "பஞ்ச தன்மாத்ர சாயகா' என்ற நாமத்தில், நம் பஞ்ச இந்திரியங்களே அவளின் பஞ்ச மலரம்புகளாக இருக்கின்றன. இங்கும் அருணகிரிநாதர் பஞ்ச இந்திரியங்கள் வழியாகவே கர்மவினை தொலைய வேண்டு மென்று கூறுகிறார். மனமும் உடலும் லலிதை யிடம் சரணாகதி ஆகும்பொழுது, அவளே சாதகனுக்கு குருவாக அமர்ந்து மனதைத் திருத்தி, இந்திரியங்களை ஒழுங்குபடுத்தி சாதகனைத் தன்னுடைய உயர்வடிவான பரதியானதில் ஆழ்த்தி, முடிவில் இறைநிலைக்கு உயர்த்தி, சாதகனைத் தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்கிறாள். இவ்வாறு அனுபூதியும் லலிதை யின் வழிபாடும் வேறுவேறு விஷயங்களை சொல்லவில்லை என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி.
செய்யுள்-15
"முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வென்று அருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.'
விளக்கம்: முருகா!, குமரா! குஹா! என்று நான் கண்களில் நீர் மல்க உன் மந்திரங்களை என்று கூறப்போகிறேன்? அந்த உணர்வை நீ எப்போது கொடுப்பாய். விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டிலும் நீக்கமற நிற்கும் குருவே, இரு உலகத்தினராலும் வணங்கபடு பவரே, எட்டு திவ்ய குணங்களை உடைய பரப்ரஹ்ம பொருளே.
"ஆடும் பரிவேல்' என்ற பாடலில் அருண கிரிநாதர், சாதகனுக்கு நாமஜபத்தை அறிமுகம் செய்தார். பின்வந்த பாடல்களில் வேதாந்த விளக்கங்கள், சமாதிநிலை, குருவின்நிலை, குரு என்பவர் யார், உண்மை குருவை எவ்வாறு கண்டு பிடிப்பது போன்றவற்றையும்; குருவின்மூலமாக மெய்ப்பொருள் விளக்கம் மந்திர உபதேசம் எவ்வாறு கிட்டும் என்றும் விளக்கினார். இந்தப் பாடலில் மீண்டும் மந்திர ஜெபத்தைப்பற்றி பேசுகிறார். இதற்குக் காரணம் என்ன? சாதகன் ஆரம்பத்தில் செய்த ஜெபமானது உணர்வுப் பூர்வமான ஜெபமல்ல. அவன் இறைமீதிருந்த பற்றால், இறையின் கருணையால், குருவின் கிருபையால் மந்திர உபதேசம் பெறுகிறான்.
ஆனால் அவன் செய்த ஜெபமோ எந்திர கதியில் தான் இருந்தது. அங்கு இறைவனின்மீது அன்பு இருக்கவில்லை. மாறாக இறையின்மீது ஒரு பயம். ஏதோ எட்டாத ஒரு பொருள்போன்ற மனப்பாங்கே இருந்தது. ஆனால், குருவின் கிருபையால் வேதாந்த பொருள்புரிய ஆரம் பிக்கும்போது, இறையின் கருணை புரியத் தொடங்கும்போது பயம் மறைகிறது. மாறாக தீராக் காதல் உருவாகிறது. இந்த காதலைத்தான் சம்பந்தர் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்று குறிப்பிடுகிறார். இங்கும் காதலால் கசியத்தான் வேண்டும். இங்கு எப்போதும் ஒரு செயற்கையான தேவை இருப்பதில்லை. மாறாக சாதகன் இறையின் செயலை நினைக்க நினைக்க நாமத்தை ஓதவோத மனமெனும் கல் உருகி, கண்கள்வழியாக வினை வழிந்தோட வேண்டும்.
முந்தைய பாடலில் "மெய்வாய் விழி நாசியொடு' என்ற வரியில் இதே தத்துவம்தான் வருகிறது. இறைநாமம் ஓத, கண்கள் நீர் சொரிய, வாய் நாமத்தால் இனிக்க, செவிகள் அவன் புகழை என்றும் கேட்க, மெய் தன்னை மறந்து அவன் திருவடி தியானத்தில் அமர, நாசியின் வழியாக யோகப் பயிற்சிகள் தானே அரங்கேறும். இந்த நிலைதான் சில சம்பிரதாயங்களில் "பாவ சமாதி' என்று குறிப்பிடப்படுகிறது. இதேநிலை தனக்கு எப்போது வாய்க்கும் என்று சாதகன் இறைவனிடம் இறைஞ்சுகிறான்.
இந்தப் பாடலில் மூன்று நாமங்கள் பிரதானப்படுத்தபடுகின்றன. அவை முறையே முருகன், குமரன், குகன். முருகனுக்கு எத்தனையோ நாமங்கள் இருக்க, ஏன் இந்த மூன்று நாமங்களை மட்டும் அருணகிரிநாதர் குறிப்பிட வேண்டும்? சரவணபவ, வச்சத்பூவே போன்ற மந்திரங்களை குமார தந்திரமும் ஆகமங்களும் பெருமைவாய்ந்ததாகக் குறிப்பிடும்போது, அருணகிரிநாதர் அது தெரியாமலா இந்த மூன்று நாமங்களைப் பெருமைப்படுத்தி இருப்பார்.
சைவ சித்தாந்தத்தில் பஞ்சாட்சரமான "நமசிவய' என்ற மந்திரம் ஸ்தூல பஞ்சாட்சரம் என்று அழைக்கபடும். இந்த மந்திரம் உலக இன்பங்கள் அனைத்தையும் தரவல்லது. "சிவயநம' என்ற மந்திரம் சூட்சும பஞ்சாட்சரம் என்று அழைக்கபடும். இந்த மந்திரம் மோட்சத் திற்கான வழி. இன்னும் மூன்று பரிணாமங் களில் பஞ்சாட்சரமானது, "சிவய'-காரண பஞ்சாட்சரம் எனவும், "சிவ'-மஹா காரண பஞ்சாட்சரம் எனவும், "சி'-முக்தி பஞ்சாட்சரம் எனவும் அழைக்கப்படும். இந்த மந்திரங்களே குருமுகமாக முறையான தீட்சையில் கொடுக்கப் படுகிறது.
இதேபோல் "முருகன்' என்ற நாமம் அடியவர் களின் உலகத் தேவைகளைப் பூர்த்திசெய்கிறது. "குமரன்' என்ற நாமம் மனம் சார்ந்த ஆசை களைக் களைந்து, வேண்டியவற்றைக் கொடுத்து, வேண்டாதவற்றைக் கெடுத்து சாதகனை ஆட் கொள்கிறது. இறுதியாக "குகன்' என்ற நாமம் இதயக் குகையில் உறையும் பரமாத்மாவான முருகனை உணரச் செய்கிறது. இந்த உணர்தல் அவ்வப்போது சில விநாடிக்கும் குறைவான நேரங்களில் நடக்கும்போது, கண்கள் கசிந் துருகி மனம் வெளியே செல்கிறது. மனதின் பாரம் குறைந்து உடலே லேசாக மாறுகிறது. இந்த அன்புமிகுதி எப்போது கிடைக்குமென்றே அருணகிரிநாதர் சாதகன்பால் இறைவனிடம் கோரிக்கை வைக்கிறார்.
இந்தப் பாடலில் மேலும் இரண்டு வார்த்தை கள் கவனிக்கபட வேண்டியவை. அவை: "எண்குண' மற்றும் "பஞ்சரன்.'
இறைவனின் எட்டு கல்யாண குணங்களானவை: கீழ்வருமாறு முருகனை வழிபடுவோர் இந்த குணங்களை நிச்சயம் பெறுவர்.
1. யாரையும் சாராதவன்- சுதந்திரன். லலிதையின் நாமத்தில் "ஸ்வதந்திரா' "நிராதாரா' என்ற நாமங்கள் இதே பொருள் கொடுக்கும்.
2. தூய உடலுடையவன். இறைவன் எப்போதும் தூய உடலை உடையவன். இங்கு தூய்மை என்பது கர்மவினையில்லாத உடல். இந்த உடலே பூஜிக்கத் தக்க உடல். லலிதையின் நாமத்தில் "அநவத்யாங்கி', "பூஜ்யா' என்ற நாமங்கள் இந்த பொருள் கொடுக்கும்.
3. இயற்கையாகவே எல்லாம் உணர்ந்தவனாக இருப்பவன்.
4. இயற்கையின் உணர்வு மேலிட இருப்பவன். "சர்வக்ஞா' என்ற லலிதையின் நாமம் இதேயே குறிக்கும்.
5. மாயை நீங்கிய நிலையில் இருப்பவன். லலிதையே "மாயை'. அவளே எல்லாவற்றிற்கும் காரணம். மாயை என்பதே இறைவனின் கைப்பாவைதான். மாயை இறைவனை என்றும் நெருங்கமுடியாது. படைத்தவனை விஞ்சும் தன்மை படைக்கப்பட்ட பொருளுக்கு என்றும் கிடையாது.
6. எல்லையில்லா கிருபை உடையவன். "அவ்யாஜ கருணா மூர்த்தி' என்ற நாமம், லலிதை எல்லையில்லா கருணை கொண்டவள் என்று கூறும்.
7. முழுமையான ஆற்றல் பெற்றவன். "சர்வ சக்திமயீ' என்ற நாமம், எல்லா ஆற்றலுக்கும் காரணம் லலிதை என்றே கூறும்.
8. எல்லையற்ற ஆனந்தம் கொண்டவன். "பரமானந்தா' என்ற நாமம், லலிதையே ஆனந்தத்தின் மொத்த வடிவாகவும், அவளுக்குமேல் ஓர் ஆனந்த நிலை இல்லையென்றே கூறும்.
பஞ்சரன் என்று அருணகிரிநாதர் கூறும் பதம், முருகனே சத்- சித்- ஆனந்த வடிவான பரம்பொருள். லலிதையின் "சச்சிதானந்த ரூபிணி' என்ற நாமம் இதே பொருள்கொண்டே வரும். அருணகிரிநாதரும் ஸ்ரீ வித்யாகிரமமும் ஒரே பரம்பொருளை நோக்கியே சாதகனை இட்டுச் செல்கின்றனர். இவ்வாறு லலிதா சஹஸ்ர நாமமும் கந்தர் அனுபூதியும் ஒரே இறைவனை அடைய ஒரே மாதிரியான வழிகளைக் காட்டுகின்றன.
(அனுபூதி தொடரும்)