கடந்த இதழில் 10, 11-ஆம் பாடல்களில், சாதகன் தன்னுடைய மிக முக்கிய வேண்டுதல்களை இறைவனிடம் எவ்வாறு வைக்கவேண்டும் என்றும், ஒரு குரு மெய்ப்பொருள் விளக்கத்தை சாதகனுக்கு உபதேசத்திற்குமுன்பு எப்படி விளக்குகிறார் என்றும் பார்த்தோம். இந்த இதழில் குருவின் உபதேசம் எவ்வாறு இருக்கும் என்றும், குரு என்ற தத்துவத்தின் அனுபவத்தை சாதகன் எவ்வாறு உணர்வான் அல்லது உணர்ந்துகொள்ளவேண்டும் என்றும் அருண கிரிநாதர் விளக்குவதைக் காண்போம்.
செய்யுள்-12
"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாஇரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.'
விளக்கம்: சிவந்த நிறமுடையமானின் மகளைத் திருடும் என் பெருமான் முருகன் பிறப்பு- இறப்பற்றவன். "சும்மா இரு; சொல் அற' என்று என்னிடம் அவன் சொன்ன அக்கணமே இந்த உலகப்பொருள் ஒன்றையும் அறியவில்லை.
இந்தப் பாடலில் முதலில் "சும்மா இரு; சொல்லற' என்ற பதத்திற்கான விளக்கத்தைப் பார்க்கலாம். மேலோட்டமாகப் பார்த்தால் அருணகிரிநாதர் "அம்மா பொருள் ஒன்றும் அறிந்தி லனே' என்று சொல்வதை இருவிதமாகப் புரிந்துகொள்ளமுடியும். ஒன்று, முருகன் கூறிய மொழி அருணகிரி நாதருக்குப் புரியவில்லை. அதனால் அவர் "அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேன்' என்று கூறுவதாக எடுத்துகொள்ளலாம். இன்னொன்று, "அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே' என்ற பதத்திலும் புரிந்துகொள்ளமுடியும். இங்கே "அம்மா' என்ற பதம் சற்று முக்கியமா னது. இந்தப் பதமே இந்தப் பாடலில் மேலான தத்துவம் பொதிந்துள்ள இடம். இனி இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சியை சற்று நாம் பின்னோக்கிப் பார்க்கலாம்.
அருணகிரிநாதர், திருவண்ணா மலை கோபுரத்தின்மீதிருந்து தற்கொலை செய்துகொள்வதற்காக குதிக்கிறார். அப்போது அவரைக் காப்பாற்றிய முருகன், அருணகிரி நாதருக்கு உபதேசமாக "சும்மா இரு; சொல்லற' என்ற வாக்கியத்தைச் சொல்ல, அருணகிரிநாதர் 12 வருடங் கள் சமாதிநிலையில் அமர்ந்துவிடுகிறார்.
மறுபடியும் முருகன் வந்து சமாதி நிலையிலிருந்து கலைத்து தம் திருப் புகழைப் பாடவைக்கிறார். அருணகிரி நாதர் திருப்புகழ் அல்லது கந்தர் அனுபூதியை சமாதிநிலை அடைந்த பின்புதான் பாடினாரே தவிர, திருப் புகழ் பாடி சமாதிநிலை எய்தவில்லை. அதனால் அவரின் இறை அனுபவத் தையும், எவ்வாறு ஒரு சாதகன் அந்த அனுபவத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையும் கூறுவதே கந்தர் அனுபூதி யின் ஒரே உயரிய நோக்கம்.
இந்தப் பாடலில் முருகன் என்ன உபதேசம் செய்தார் என்று நாம் புரிந்துகொள்வதற்கு, சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு எவ்வாறு உபதேசம் செய்தார் என்று பார்க்க வேண்டும். பிரம்மதேவரின் குமாரர்களான சனகாதி முனிவர்கள், இறைநிலையை உணர சிவபெருமானிடம் சென்று விண்ணப்பித்து அவர் பாதம் பணிகின்றனர். சிவபெருமானும் தட்சிணா மூர்த்தி ரூபம்கொண்டு, தெற்குநோக்கி ஒரு ஆலமரத்தின்கீழ் அமர்ந்து, சின் முத்திரை காட்டி அந்த முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். இந்த உபதேசத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, குருவான சிவபெருமான் மிகவும் இளமையானவர்; சனகாதி முனிவர்களோ வயது முதிர்ந்தவர்கள். இரண்டு, இந்த உபதேசத்தில் எந்த ஒரு பேச்சோ, செய்கைகளோ இல்லை. சிவன் சும்மா இருந்தே முனிவர்களுக்கு உபதேசமளித்தார். முனிவர்களும் புரிந்துகொண்டனர்.
சிவபெருமான் சும்மா இருப்பது என்பது, அவர் சமாதிநிலையில் இருப்பதாகும். அந்தநிலையில் அவர் தியானத்தில் இருக்க, அவர் அருகில் இருந்த முனிவர்களும் சிவனின் சமாதிநிலையின் ஈர்ப்பால் சமாதிநிலை அடைந்து அத்வைத நிலையை உணர்ந்தனர். அதனாலேயே அங்கே பேச்சிற்கு வேலையில்லாமல் போனது.
முருகப்பெருமான் அருண கிரிநாதருக்கும், சிவபெருமான் சும்மா இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ததைப்போலவே, தாமும் உபதேசம் செய்து சமாதி நிலையில் ஆழ்த்துகிறார்.
இந்த செய்கையிலிருந்தே தாமும் ஆறுமுக சிவம்தான் என்று சொல்லாமல் சொல்கிறார்.
இங்கு "பொருள் ஒன்றும் அறிந்திலேனே' என்ற பதத்தில், தாம் சமாதிநிலையில் இருந்தபொழுது இந்த உலகின் பற்றுதல்கள் நீங்கி, உலக விஷயங்கள் தம்மை அணுக வில்லை. ஆதலால் தாம் எந்த ஒரு உணர்வோ பற்றோ இல்லாமல் இருந்த நிலையை இங்கு விவரிக்கிறார். பின்வரும் பாடல்களில் இந்த அனுபவத்தையே "பேசா அனுபூதி' என்றும் குறிப்பிடுவார். மேற்கண்ட சமாதி நிலையில், கற்பவரான முனிவர்கள், அருண கிரிநாதர், கற்பிப்ப வரான சிவபெரு மான், முருகன், மேலும், கற்கப்படும் பொருளான இறைபற்றிய அறிவு, உணர்வு ஆகிய மூன்றும் ஒன்றாகி விடுகின்றன. இந்த அனுபவத்தில்தான் தாமும் இறைவனும் வெவ்வேறல்ல என்ற அத்வைத நிலையில் சாதகன் நிலைத்துநிற்கிறான்.
அதன்பின்பு அந்த சாதகன் தமக்கு அத் வைத ஞானம் தந்த இறைவனின் கருணையை எண்ணிப் பலவாறு புகழ்கிறான்.
இங்கே அருணகிரிநாதர் திருப்புகழை இயற்றினார். சமயக் குரவர்களோ தேவாரம், திருவாசகம் முதலிய பாடல்களைத் தந்தனர்.
இந்தப் பாடல்கள் அனைத்தும் இறை அனுபவத்திற்குப்பிறகு அருளியபடியால்தான் இன்றளவும் மக்களிடம் நிலைத்து நிற்கின்றன; மேலும் பயன்தருகின்றன.
இதே பாடலின் "அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேனே' என்ற பதத்தை, "அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலேனே' என்று பிரித்தால், முருகன் பரப்பிரம்ம ஸ்வரூபமாக நின்று உபதேசம் செய்தாலும், அந்தப் பொருளை தம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லையே என்று அன்னையிடம் முறையிடுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். இந்த பாவத்தில் நாம் கந்தர் அனுபூதிக்கும் லலிதையின் நாமங்களுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்தால் மேலும் சில புரிதல்கள் நமக்குத் தோன்றும்.
இந்தப் பாடலில் "செம்மான் மகள்' என்று குறிப்பிடப்படுவது வள்ளியை. வள்ளியே இங்கு ஜீவாத்மாவின் ஸ்வரூபம். முருகனா கிய பரமாத்மா வள்ளியைக் கவர்வது, எவரும் அறியாமல் எதிர் பாராமல் ஒரு கணப்பொழுதில் ஒருவன் இறை நிலையை அடை வதையும், அந்தப் பரமாத்மாவின் கருணையையும் காட்டும். மேலும் இறையை உணர்ந்த ஒருவனுக்கு அதன் பின் வரும் மாயை யின் தடங்கல்கள் அனைத்தும் முருகன் வதம்செய்தது போன்று காணாமல் போகும்.
லலிதையின் நாமங் களில் "சிவஞான ப்ரதாயினி' என்ற நாமம், அவளே சிவானுபவத்தைத் தருபவளாகவும் இருக்கிறாள் என்றும், "குருமூர்த்தி' என்ற நாமம் அவளே குருவாக இருந்து உபதேசம் செய்கிறாள் என்றும், கடைசியாக "சிவசக்தி ஐக்கிய ரூபிணி' என்ற நாமம் அவளே சிவனாக இருக்கிறாள் என்றும், தம்மை அடைந்த வர்களை சிவபதம் சேர்ப்பிப்பவள் அவள் தான் என்றும் கூறும். இவ்வாறாக அவளே சாதகனுக்கு குருவாக அமர்ந்து, உபதேசம் அளித்து, அத்வைத நிலை காட்டுவதால் தானோ என்னவோ, அருணகிரிநாதரும் "அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலேனே' என்று அவளிடம் முறையிட்டிருப்பார். இதற்குச் சான்றாக பல்வேறு இடங்களில் அவர் வள்ளியை முன்னிட்டு முருகனை வேண்டுவதும், தமது திருவகுப்பின் தேவேந் திர சங்கவகுப்பில் லலிதையின் நாமங்கள் சாரத்தைக் கொடுத்ததிலிருந்தும் நமக்குப் பல விஷயங்கள் புரியவரும்.
செய்யுள்-13
"முருகன் தனிவேல் முனி நம்குருவென்று
அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.'
விளக்கம்: அது ஒரு உருவத்தில் இல்லை; அருவமாகவும் இல்லை. உள்ளது என்றும் சொல்ல முடியாது; இல்லை என்றும் சொல்ல முடியாது. ஒருவேளை இருள் என்று சொல்ல முடியுமா என்றால் அதுவும் இல்லை.
அதற்காக ஒளி என்றும் கொள்ளமுடிய வில்லை. இதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையே அந்தப் பரம்பொருள். இந்தப் பரம்பொருள் நிலையை உணர்வதற்கு குருவாக இருப்பது முருகனின் வேலே!
அருள் உள்ளவர்களைத்தவிர இதை மற்றவர்கள் உணரமுடியுமோ?
சைவ சித்தாந்தம், சாக்தம் ஆகியவற்றையே பார்த்த நாம், இப்போது சற்று வைணவப் பெரியார்களின் கூற்றையும் காண்போம். நம்மாழ்வார் பெருமாளைப் பற்றிக் கூறுகை யில், கீழ்க்கண்ட பாடலைச் சொல்கிறார்.
"ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணுமுருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத் தெம்மானைக் கூறுதலே.'
எம்பெருமான் ஆணுமல்ல; பெண்ணு மல்ல. அதற்காக இரண்டு பாலிற்கும் சேராத இனமுமல்ல. அவனைப் பார்க்கவும் முடியாது.
அதற்காக இல்லை என்றும் கொள்ள முடியாது. ஆனால் அடியார்களுக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய வடிவெடுத்து அவர்களைக் காப்பான். இதனால் அப் பரமனைக் குறித்து எடுத்துரைப்பது கடினம் என்று கூறுகிறார்.
இந்தப் பாடலிலும் அருணகிரிநாதர் இதே விஷயத்தைதான் சொல்கிறார். இங்கும் அந்தப் பரம்பொருளே முருகனின் வடிவில் தோன்றி அருணகிரிநாதருக்கு அருளியதும், முருகனே குருவாகவும் அமர்ந்து உபதேசம் செய்ததும் பரம்பொருள் செய்யும் செயலே ஆகும். ஆதலால் முருகன் வேறு; பரம் பொருள் என்று சொல்லப்படும் பிரம்மம் வேறென்று கொள்வது அறியாமையில் கொண்டு சென்றுவிடும். சாதகன் தான் தேர்ந்தெடுக்கும் தெய்வ வழிபாட்டில் உண்மையான நம்பிக்கை கொள்ளவேண்டும். அவ்வாறு இருக்கும்பொழுது மட்டுமே அருணகிரிநாதருக்குக் கிடைத்த காட்சி, அனுபவம் போன்றவை சாதகனுக்குக் கிட்டும். பெரியவர்கள் பல்வேறு சமயங் களில் கூறிய கருத்து ஒன்றே. பரம்பொருள் ஒன்றே. நமக்கு முருகன், பிறருக்கு பெருமாள், மற்றையோருக்கோ சிவன் என்று வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். மூலப்பொருள் ஒன்றுதான். சைவ, வைணவ சமய பேதங்களோ, ஜாதி, மத பேதங்களோ மனிதன்தான் பார்க்கிறானே தவிர, தெய்வத்திற்கு இல்லை என்பது இந்த ஆழ்வார் பாசுரம் மற்றும் அருணகிரிநாதர் பாடலிருந்து தெளிவாகப் புரிகிறது.
இந்தப் பாடலில் மூன்று கருத்துகள் முன்னிலைப் படுத்தபடுகின்றன.
தெய்வத்தை உணர அவரின் கிருபை வேண்டும்.
தெய்வத்தின் உணர்தலை விவரிக்க முடியாது.
தெய்வமே குருவாக வந்து உண்மையான சாதகனை வழிநடத்துகிறது.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்பதில், தெய்வத்தின் அருள் இல்லையென்றால் அவனை வணங்கக்கூட முடியாது என்பதும், அவனது கருணை இல்லாவிட்டால் எத்தனை தவம்செய்தாலும் அவனை அடைவது கடினம் என்றும் தெரிகிறது. இந்தப் பாடலில் "அருள்கொண்டு அறியும் தரமோ' என்று கூறுவதிலிருந்து, தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அவனை அறியமுடியும் என்று அருணகிரிநாதரும் கூறுகிறார்.
உருவம் இல்லை, அருவம் இல்லை, ஒளி இல்லை, இருள் இல்லை; உண்டு என்று சொல்லமுடியாது; இல்லை என்று சொல்ல முடியாது என்று கூறுவதிலிருந்து, இறைவனை விவரிக்கமுடியாது என்ற கருத்தை சாதகனுக்கு நிறுவுகிறார்.
முருகன் தனிவேல் நம் குரு என்று சொல்வதி லிருந்து, குருவின் கிருபை இருந்தால் இறைவனை அடையமுடியும் என்றும், அந்த குருவே சாதகனை உய்விக்க வந்த இறைவனின் வடிவம் என்றும் கூறுகிறார்.
மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் வந்ததும், அருணகிரிநாதருக்கு முருகன் வந்ததும், காளிதாசனுக்கு பராசக்தி வந்ததும்- அந்த ஒற்றைப் பரம்பொருளே விரும்பும் தெய்வ வடிவம்தாங்கி, குருவாகவும் வந்து உண்மை நிலையின் முன்னோட்டத்தை சாதகனுக்குக் காட்டி, மேலும் அவனை ஆன்மிக வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்கிறது.
இங்கு அருணகிரிநாதர் "தனிவேல் நம் குரு' என்று சொல்வதை நாம் சற்று ஆராய வேண்டும். வேலானது பராசக்தியின் வடிவமே என்று நாம் முந்தைய பாடல்களில் பார்த்தோம். இங்கும் பராசக்தியே குரு வடிவம் தாங்கி, சிவஞானத்தை சாதகனுக்கு உணர்த்துகிறாள் என்று சொல்லாமல் சொல்கிறார் அருணகிரிநாதர்.
இந்தப் பாடலில் அருணகிரிநாதர், குருவின் அண்மையினால் அவரின் கிருபையோடு இறையனுபவம் எவ்வாறு இருக்குமென்று அறிகிறார். ஆனால் இதுவே முடிவன்று; ஒரு தொடக்கமே. குருவாகிய முருகப்பெருமான் தம்முடைய கருணையினால் இறை அனுபவத்தை அருணகிரிநாதருக்கு சமாதியில் அமர்த்தி உணர்த்துகிறார். இந்த அனுபவம் முற்றிலும் முருகனின் கருணையேயன்றி அருணகிரிநாதரின் தவப்பயனல்ல என்பதை யும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
லலிதையின் நாமங்களான "அவ்யாஜ கருணாமூர்த்தி'- காரணங்கள் ஏதுமின்றி அளவற்ற கருணை உடையவள், ஸாந்த்ஸிர கருணா- அளவில்லா கருணை உடையவள், "நிரத்யயா'- அறியமுடியாதவள், "பரா'- எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவள், "பரதேஸிவதா'- இவளே தெய்வங்களுள் எல்லாம் தெய்வம், "குருமூர்த்தி'- குருவாக இருப்பவள். "அமேயா'- அளவிட்டுக் கூற முடியாதவள் போன்ற நாமங்களின் கருத்து களே, கந்தர் அனுபூதியிலும் மேலோங்கி நிற்கிறது.
இவ்வாறு அருணகிரிநாதர் மிகபெரிய விஷயங்களை நான்கு வரிகளில் அடக்கி, சாதகனை ஆன்மிக வாழ்வில் மட்டுமல்ல; உலக வாழ்விலும் கந்தர் அனுபூதியை ஓதினால் உயர்வடையும்படி அமைத்துள்ளார்.