கந்தர் அனுபூதிக்கும் லலிதையின் நாமங்களுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்து வருவதன் தொடர்ச்சியாக, இம்முறை நாம் அனுபூதியின் 5, 6 மற்றும் 7-ஆம் செய்யுள்களை ஆராய்ந்து, அருணகிரிநாதர் எவ்வாறு சாதகனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார் என்று பார்ப்போம்.
செய்யுள்-5
"மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே
அகமாடை மடந்தையர் என்றயரும்
ஜகமாயையுள் நின்று தயங்குவதே.'
விளக்கம்: மஹா மாயையாகிய இந்த உலக வாழ்வின் பற்று, மனம், புத்தி மற்றும் அகங்காரம் மீதுள்ள பற்று போன்றவற்றை அழிக்கக்கூடிய ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமான் கூறியும் (ஜபம்) நான் வீடு, மனைவி, மக்கள் என்ற இந்த உலகவாழ்வில் நின்று தவிக்கிறேனே!
இந்தப் பாடலில் அருணகிரிநாதர் "மொழிந்து' என்ற வார்த்தையைக் கையாள்கி றார். மொழிந்து என்ற சொல்லிற்கு எந்திரகதியில் சொல்வது என்று பொருள். இங்கே முதலில் ஜெபம் ஆரம்பித்த சாதகன், ஒரு குறிப்பிட்ட அளவு ஜெபம் செய்தாலே இறைவனை அடைந்துவிடலாம் என்று நினைக் கிறான். ஆனால் கொஞ்சம் போகப்போகத்தான் தெரிகிறது- அவன் வெறும் வாயளவிலேதான் இறைவனின் பெயரை சொல்கிறானே தவிர, உள்ளுணர்வு பொங்கி அன்போடு சொல்லவில்லை என்று! பின்னால் வரும் பாடல்களில் "மொழிந்து உருகும்' என்ற பதத்தில் இதற்கு சான்றைத் தருகிறார்.
மஹா மாயையே இறைவனின் செய்கைதான். பந்தப்படுத்துவதும் அவனே; பந்தத்திலிருந்து விடுவிப்பவனும் அவனே! வைஷ்ணவ சம்பிரதாயத்தில் "விஷ்ணு வின் கனவே இந்த பௌதீக உலகம்' என்றும்;
"விஷ்ணுவின் மாயா சக்தியின் வெளிப்பாடே. இந்த உலகம்; உலகி லுள்ள ஜீவன்கள் அனைவரும் மாயையின் வெளிப் பாடே' என்ற கருத்தும் உண்டு. ஆதலால் இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாகிறான். அதுபோலவே அவன் மட்டுமே இந்த மாயையைப் போக்கமுடியும். ஆனால், அதற்கு சாதகனுக்கு இறைவனிடம் தூய அன்பு வேண்டும். இங்கே "நான் இத்தனை லட்சம் மந்திரஜெபம் செய்தேன்; கோடி உரு மந்திரம் ஓதினேன்; நூற்றுக்கணக்கில் யாகங்கள் செய்தேன்' என்று சொல்வது ஒன்றும் உதவாது. இதைதான் அருணகிரிநாதர் "மொழிந்தும் ஒழிந்திலனே' என்று கூறுகிறார். பலர் இவ்வாறாக எண்ணிக்கைகளில் இறைவனை அடக்கிவிடலாமென்று நினைக்கின்ற னர். ஆகமங்களும் தந்திரங்களும் எண்ணிக்கை கொடுத்திருப்பது, அந்த மந்திரம் ஜெபம் செய்யும் சாதகனின் சித்தத்தில் நிலைபெறவே.
சில லட்சங்கள் மற்றும் ஆயிரங்கள் ஜெபங் களில் பெரிய மாற்றங்கள் வேண்டுமென்று எதிர்பார்ப்பது உயரிய பரப்ரம்ம ஸ்வரூப தேவதைகளிடத்தில் எதிர்பார்க்க முடியாது.
லலிதையின் நாமங்களில் "மஹா மாயா', "மாயா' என்ற நாமங்கள், லலிதையே மாயையாகக் கட்டுவிப்பவள் என்று கூறுகிறது. அவளே இந்த மாயையிலிருந்து விடுவிப்பவள் என்ற பொருளில் "பந்த மோசினி' என்ற நாமமும், "மைத்ரியாதி ஸிவாஸனாலப் யா' என்ற நாமத்தில் அவளை அன்பினால் மட்டுமே அடையமுடியும் என்றும், "துர்லபா' என்ற நாமத்தில் எளிதில் அடைய முடியாதவள் என்றும் தெரிகிறது.
மேலும் ஜெபம், தவம், யாகம் போன்றவற்றைப் பெருமைக்காக செய்வதாலும், தான் பக்திமான் என்று ஒரு அந்தஸ்தை சமூகத்தில் ஏற்படுத்திகொள்ளச் செய்வதும் செய்யாமலிருப்பதும் ஒன்றுதான். இந்த செயலும் ஒரு மாயையே. "பஹிர்முக சுதுர்லபா' என்ற நாமத்தில், பெருமைக் காகச் செய்யப்படும் ஆன்மிகக் காரியங்களால் இறைவனை அடையமுடியாது என்ற பொருள் வரும். இவ்வாறான செயல்கள் அனைத்துமே எந்திரகதியில் உணர்வொன்றிச் செய்யாத ஒரு செயலாகவே அமையும். இவ்வாறான செயல்களால் இறைவனை அடையமுடியாமல் ஒரு சாதகன் மாயையில் சிக்கித் தவிப்பதையே "ஜக மாயையுள் நின்று தயங்குவதே' என்ற வரியில் அருணகிரிநாதர் கூறுகிறார்.
செய்யுள்-6
"திணியான மனோசிலைமீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியாஎன வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.'
விளக்கம்: கற்சிலை போன்று இறுகிய மனதில் உன்னிரு கால்கள் படாமல், அந்த மனம் மலருமோ? (இறைவனின் திருவடி ஸ்பரிசம் இல்லாமல் சஹஸ்ராரம் என்ற தாமரை மலருமோ?) வள்ளியின் பாதம் பணிந்து இன்னும் என் னென்ன பணி செய்யவேண்டு மென்று வேண்டிக் கேட்கும், வள்ளியின்மீது தணியாத அன்பு கொண்ட கருணைகொண்ட பரம்பொருளே!
இந்தப் பாடலில் அருணகிரி நாதர் இரண்டு முக்கியமான தத்துவங்களைக் கூறுகிறார். இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் முருகன் வள்ளி யம்மைமீது அழியாக் காதல் கொண்டுள்ளதாக மட்டும்தான் புரியும். ஆனால், எல்லாவித உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட வன் முருகன். அவனே இறைவன், பரம்பொருள் என்று முதற் பாடலிலேயே நிரூபித்த அருண கிரிநாதர், இந்தப் பாடலில் வள்ளியம்மைமீதிருக்கும் அன்பைக்கூற எந்த முகாந்திரமும் இல்லை. அப்படியென்றால் இந்தப் பாடலிலுள்ள மறைபொருள்தான் என்ன?
சைவ சித்தாந்தத்தில் "சத்திநி பாதம்' என்றொரு நிலையுண்டு. அது என்னவென்றால், ஒரு ஆன்மாவின் பக்குவம் முதிர்ச்சி யடையும்போது இறைவனின் ஆற்றல் அந்த ஆன்மாவை நோக்கிப் பாயும். இங்கே பாயும் என்ற வார்த்தை பயன்படுத்தபட்ட காரணமே, இறைவனின் ஆற்றல் படுவேகமாக அந்த ஆன்மாவை நோக்கிவந்து, அந்த உயிரை அவரிடத்தில் சேர்க்க என்ன வேண்டுமோ அதைச் செய்யும். இந்த ஆற்றலே சக்தி அல்லது உமையவளின் அருள். இதுவே த்ரிகா சித்தாந்ததில், சக்தியே உயிர் களை இறைவனிடம் சேர்க்கிறாள் என்றும், இறைவன் எப்போதும் தாம் ப்ரஹ்மஸ்வரூபமாகவே இருந்து உயிர்களைச் சேர்க்கும் வேலையை உமையிடம் விட்டுவிட்டான் என்றும் கூறப் படுகிறது. ஆதலால் ஒவ்வொரு முழுநிலவன்றும் உமையவள் முதிர்ந்த ஆன்மாக்களைத் தன்னுடன் சேர்த்து, பின் புதுநிலவன்று இறைவனிடம் தானும் கலந்து, தன்னிலுள்ள ஆன்மாக்களையும் கலப்பிக்கிறாள் என்றும் நம்பப்படுகிறது.
இனி சற்று அனுபூதியைப் பாப்போம். முதல் ஐந்து பாடல்களில் வள்ளியைப் பாடாத அருணகிரிநாதர் இங்கு பாடக் காரணமென்ன? ஒன்றுதான். முருகனின் அருள் வள்ளியின்மூலமே கிட்டும்; வள்ளியம்மையே முருகனிடம் அவன் அடியவர்களைக் கொண்டுசேர்ப்பாள். அதற்குச் சான்றாக மேற்கூறிய சித்தாந்தம் நிற்கும். மேலும் லலிதையின் நாமங்களிலும் "சிவஞானப் ப்ரதாயினி'- சிவஞானத்தை அருள்பவள் என்ற பொருளில் லலிதைதான் சிவதரிசனமே செய்விக்கிறாள். மேலும் "சஹஸ்ரார அம்பு ஜாரூடா' என்ற நாமத்தில், சஹஸ்ராரம் என்ற ஆயிரம் இதழ் தாமரைமீது நிற்பவள் என்று கூறப்படுகிறது.
குண்டலினி யோகத்தில் சக்தியானவள் ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து, அவள் பாதம் சஹஸ்ராரம் சென்று படும்போது, அந்த ஆயிரம் இதழ் தாமரை மலர்கிறது என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது. இதையே அருணகிரிநாதரும் "உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ' என்று கேட்கிறார். இது சக்தி வழியால்தான் நடக்குமென்பதால் முதன்முறையாக வள்ளியைப் பற்றி இங்கே பாடுகிறார்.
எந்தவொரு சாதகன், சஹஸ்ராரம் வரை சென்று இறைவனை தரிசித்து விட்டானோ, அதற்குமேலுள்ள பரவெளியில் இறைவன் ஆன்மாவைத் தானே ஈர்த்துகொள்கிறார். ஆனால், சஹஸ்ராரம் செல்ல சக்தியின் கருணை தேவை. சிலர் சஹஸ்ராரமே இறுதியென்று நினைத்துவிடுகின்றனர்.
ஆனால், அது பாதிப் பயணம்தான். அதற்குமேல் சக்தி இறைவனிடம் நம்மைச் சேர்த்துவிடுகி றாள். அதற்குமேல் நடப்பதை யாராலும் விவரிக்கமுடியாது. அருணகிரிநாதரும் "பேசா அனுபூதி' என்று பின்வரும் ஒரு பாடலில் அதைக் குறிப்பிடுவார்.
இந்தப் பாடலுக்கு வைஷ்ணவ சம்பிரதாயத் தின் மூலமும் ஒரு விளக்கம் உண்டு. பெருமாளை தரிசனம் செய்பவர்கள் முதலில் தாயாரை தரிசித்து, பின்பே பெருமாளிடம் செல்வர். ராமானுஜரும் தன் "சரணாகதி கத்யம்' என்ற பாடலில், மகாலட்சுமியிடம் சரணாகதி செய்தபின்பே பெருமாளிடம் செல்கிறார். கிறிஸ்துவ மதத்திலும் இயேசுவின் அன்னை மேரியிடம் செய்யும் வேண்டுதல்களே அதிகம். இவ்வாறே சக்தியின் முக்கியத்துவம் பல்வேறு இடங்களில் வெளிப்படுகிறது.
இங்கே வள்ளி என்ற சக்தியின் ரூபம் மனிதர்களாகிய ஜீவாத்மாவைக் குறிக்கும். முருகன் பரமாத்மாவாகி, இந்த ஜீவர்களைத் தேடிவந்து ஆட்கொண்டு, ஜீவாத்மாக்களின் தேவைகளையெல்லாம் பூர்த்திசெய்து முடிவில் தன்னில் சேர்த்துக்கொள்கிறார்.
செய்யுள்-7
"கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே.'
விளக்கம்: ஓ மனமே, நீ ஒழிந்துபோவாய். நீ நல்லகதி சேர்வதற்கு இவ்வளவு நாட்கள் மறைத்துவைத்த பொருளையெல்லாம் தானம் செய்வாய். அதோடு முருகனின் பாதங்களை எப்போதும் நினைத்திடு. அதுவே பல ஜென் மங்களில் சேர்த்த வினைகளையெல்லாம் தூளாக்கும். அதோடு சேர்த்து நீ செய்யும் காரியங்களில் "நான்தான் செய்கிறேன்' என்ற அகந்தையினை விடுவாய்.
அருணகிரிநாதர் இந்தப் பாடலில் "மனோ நாசம்' என்ற படியினை அடைவது எப்படி யென்று விளக்குகிறார். ஒரு மனிதனுக்கு மனமே சகல துன்பத்திற்கும் காரணம். அந்த மனமானது அமைதியாக இருந்துவிட்டால் மாளிகையோ மண்வீடோ- மனிதன் எப்போதும் மகிழ்ச்சி யாக வாழமுடியும். ஒருவன்தன் மனதை சந்தோஷப்படுத்துவதிலேயே தன் வாழ்க்கை முழுவதையும் இழக்கிறான். தானும் தன் மனமும் வெவ்வேறு என்ற உண்மையை அறியாமல், அவன் மனமே தான் என்று நினைத்து மனமகிழ்ச்சிக்காகப் பல்வேறு செயல்களைச் செய்து துன்புறுகிறான். "நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே வெறும் மனோ வியாபரமே' என்று தத்தாத்ரேயரும் பரசுராமரிடம் "திரிபுர ரகசியத்தில்' சொல்கிறார். இந்த மனதிற்கு அப்பால்தான் ஒருவனுடைய உண்மைத் தன்மை இருக்கிறதென்பதை உணர்த்தவே இந்தப் பாடல்.
மனம் என்பதும் எளிதில் மறையாது. சற்று சிந்தித்துப் பார்த்தால் மனம் என்பது வெறும் ஞாபகங்களின் குவியலேதான். ஏற்கெனவே கண்ட காட்சிகளை வைத்தே மனம் கற்பனை செய்கிறது. மனம் என்பது கண்கண்ட காட்சிகள், உணர்வுகள் போன்றவற்றின் எச்சமான உருவமில்லா பிம்பங்கள் மட்டுமே. ஒருவன் பல்வேறு பிறவிகளில் சேகரித்த இந்த பிம்பங்களே அவனையுமறியாமல் ஆழ்மனதில் ஊன்றி அவனை செயல்கள் செய்விக்கிறது. இந்த செயல்களே நல்லவை- தீயவை என்ற படிகளுக்குள் அடங்கி, கர்மா அல்லது விதி என்றழைக்கபடுகிறது. ஒருவன் தன் மனதில் எப்பொழுது இந்த பிம்பங்களைச் சேர்ப்பதை நிறுத்துகிறானோ, அப்போதே அவன் கர்மா சேர்வது நிற்கத் தொடங்குகிறது. அதேபோல் ஏற்கெனவே சேர்ந்த பிம்பங்களை எப்போது அழிக்கத் தொடங்குகிறானோ அப்போது கர்மாவும் அழிய ஆரம்பிக்கிறது. முடிவில் முற்றிலும் சுத்தமான தூய நீரோடைபோல் மனதைப் பெறுகிறான். இதையே நிர்மலமான மனம் என்றும் சித்தசுத்தி என்றும் அழைக்கிறோம்.
இவ்வாறான மனம் அமைதியடைந்து, பிம்பங்கள் அழிக்கப்படவே மந்திரஜெபம், வேதாந்த ஞானம் தேவைப்படுகிறது. அதேபோல் கையில் அளவுக்குமீறியுள்ள பொருள் மனதை அமைதியடைய விடாது. அதனாலேயே அருணகிரிநாதர் எதையும் மறைத்து வைக்காமல் தானம் செய் என்றும் சொல்கிறார். இங்கே தானம் என்ற சொல், பொருளுக்கு மட்டும் அல்ல; செய்யும் செயல்களில் "நான்தான் செய்கிறேன்' என்ற எண்ணத்தையும் விடவேண்டும். அவ்வாறு விட்டுவிட்டு இறைவனின் பாதங்களை எவன் நினைக்கிறானோ அவனுடைய கர்மம் இல்லாமல் போகிறது. அவனுக்கு விதி வேலை செய்யாது. மேலும் கடைசி வரியில் அருணகிரிநாதர் "விடுவாய் விடுவாய் வினை யாவையுமே' என்று சொல்லும்போதும் "அகந்தையை விடு' என்பதையே சொல்கிறார். கீதையில் கண்ணனும் இதையே "கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்று ஒருவரியில் சொல்கிறார்.
அருணகிரிநாதர் இறைவனின் திருவடி தியானத்தை இங்கே அறிமுகம் செய்கிறார். நாமஜெபம், வேதாந்தம், ஞானம்; இப்போது அடுத்தபடியாக முதலில் திருவடி தியானம் என்ற ஒரு செயல்முறை உபதேசத்தைக் கொண்டுவருகிறார். இறைவனின் திருவடி தியானமே கர்மவினைகளை அழிக்க வல்லது என்று இந்தப் பாடலில் கூறுகிறார். இந்த அர்த்தம் பொதியும் வகையில், லலிதையின் நாமமான "நகனிதீஸிதி திஸஞ்சனின்னன மஜ்ஜனதமோ குஸிணா'வில் வருகிறது. லலிதையின் கால் நகங்களிலிருந்து புறப் படும் ஒளியானது அவள் பக்தர்களின் தமோ குணத்தை அழித்து, அவர்களை நல்வழிப்படுத்தும். நகங்களின் ஒளியே அவன் கர்மவினைகளையும் அழிக்கிறது.
இறைவன் எதற்கும் ஆசைப்படாதவனாக இருக்கும்போது, அவனை அத்தனைக்கும் ஆசைப்படுபவர்களால் எப்படி அடைய முடியும்? அவனை எல்லா ஆசைகளையும் விட்டவர்கள் மட்டுமே நெருங்கமுடியும். திருமூலரும் "ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்றுதான் கூறுகிறார். இறைவனை அடைவதற்குத் திருமூலர் கூறுவதுபோல், மனதின் ஆசையை அறுத்து தர்மங்கள் செய்து அடையவேண்டும். லலிதையின் நாமம் "மாத்வீபானாலஸா'- எதற்கும் ஆசைப்படாதவள், எதன்மீதும் நாட்டம் இல்லாதவள் என்ற பொருள் கொண்ட நாமம், அருணகிரிநாதரின் இந்தப் பாடலில் வரும் "கரவாது இடுவாய்' என்ற பதத்தை உணர்த்தும்.
மேலும் "இறைவன் மனதிற்கு அப்பாற்பட்டவன்' என்று அனுபூதியில் அருணகிரிநாதர் சொல்லாமல் சொல்வதே "கெடுவாய் மனனே' என்ற பதம். மனம் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருப்பது சாதகனுக்கு துன்பமே தரும். அதனாலேயே அருணகிரிநாதர் "மனம்கெட வேண்டும் அல்லது நாசமடைய வேண்டும்' என்று கூறுகிறார்.
லலிதையின் நாமமான "மனோவாசா மகோஸி சரா' - லலிதை மனம், வாக்கு முதலானவற்றிற்கு அப்பாற்பட்டவள் என்றபொருளில், அருணகிரிநாதரின் முதல்வரியை சஹஸ்ரநாமமும் நிரூபிக்கிறது.