கடந்த இதழில் அருணகிரி நாதர், முருகனும் மற்ற தெய்வங்களும் பரப்பிரம்மத்தின் வெவ்வேறு வடிவங்களே என்று கூறி, வேதாந்த கல்விக்கும் குருவுக்கும் உள்ள தொடர்பைக்காட்டி, எவ்வாறான குருவை நாம் நாடவேண்டுமென்று காண்பித்தார். இனிவரும் பாடல்களில் ஒரு சாதகனின் மனோநிலை எவ்வாறு இருக்குமென்றும், அவன் அந்த நிலைகளை எப்படி போக்கிக்கொள்ள வேண்டு மென்றும் கூறுகிறார்.
செய்யுள்-10
"கார்மாமிசை காலன்வரில் கலபத்து
ஏர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரிதலாரி எனும்
சூர்மா மடியத்தொடு வேலவனே.'
பொருள்: அழகிய மலர் மாலைகளை மார்பின்மீது அணிந்த வேலவா, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுக்குப் பகைவனான சூரபத்மன் மாமரமாகி நின்றபோது, வேல்கொண்டு அவனை அழித்த வேலவா, கரிய எருமையின்மீது அமர்ந்து எமதர்மராஜன் என் உயிரைக் கொண்டுபோக வரும்பொது, அழகிய மயில்மீது அமர்ந்துவந்து நீ என்னை அழைத்துக்கொள்ளவேண்டும்.
கடவுளை அடையத் தவமிருப்பவர்கள், மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.
மாறாக ஒரு சாதகன் அஞ்சுவது, கடவுளை அடையாமலே மரணித்தலுக்கு மட்டுமே. அதற் குக் காரணம், ஒருவன் கடவுளை அறியாமல், தன்னை உணராமல் மரணித்தால் மீண்டும் இந்த பிறவிக்கடலில் விழுந்து எழ வேண்டுமென்ற ஒன்றேதான். இங்கும் அவன் அஞ்சுவது மரணத்திற்கல்ல; பிறப்பதற்குதான். மீண்டும் பிறந்தால் அவன் இதே பக்குவத்தை எப்போது பெறுவான் என்பதைப் பற்றிதான். குழந்தைப்பருவம் முதல் வாலிபப் பருவம்வரை பெரும்பாலான உயிர்களுக்கு பக்தியோ இறையின்மீது உண்மைப் பற்றோ ஏற்படுவதில்லை. இதைக் கருத்தில்கொண்டே சாதகனின் நியாயமான பயத்தை அருணகிரிநாதர் இங்கே படம்பிடித்துக் காட்டுகிறார்.
வலன் என்ற அசுரன் சிவபெருமானைக் குறித்துத் தவம்செய்து, தான் இறந்தபிறகு தன் உடல் நவரத்தினங் களாக மாறவேண்டுமென்ற வரம் வாங்கினான். அதன்பிறகு அவன் இந்திரனோடு போர்புரிந்து, இந்திரனை வென்றான். இந்திரன் போரில் தோற்றிருந்தும், வலனின் வீரத்தை மெச்சி ஒரு வரம் தருவதாகக் கூறினான். வலனோ தன்னிடம் தோற்ற இந்திரனிடம் வரம் வாங்க விருப்பமில்லாமல், இந்திரனுக்கு தான் வரம்தருவதாகக் கூறினான். இந்திரனும் சமயத்தைப் பயன்படுத்தி, தான் நடத்தும் யாகத்தில் வலன் தன்னை பலிகொடுக்கப்படும் பொருளாக வரம் தருமாறு கூறி, வலனை ஏமாற்றிக் கொன்றான். வலனுடைய உடலிலிருந்த ரத்தம் மாணிக்கமாகவும், பல் முத்தாகவும், தலைமுடி வைடூரியமாகவும், எலும்பு வைரமாகவும், பித்தம் மரகதமாகவும், கொழுப்பு கோமேதகமாகவும், சதை பவளமாகவும், கண் நீலக்கல்லாகவும், கபம் புஷ்பராகமாகவும் மாறின.
வலனை தவறாக சூழ்ச்சியால் கொன்றதாலும், மேலும் பல தவறான செயல்கள் புரிந்ததாலும், இன்னொரு சிவபக்தனான சூரபத்மன் தோன்றி இந்திரனுக்கும் அவனைச் சேர்ந்தோர்க்கும் இன்னல் கொடுக்கலானான். இதுவொரு தேவாசுரப் போர் மட்டுமல்ல; இந்திரனுக்கும், அவன் தவறு செய்த போது துணை நின்றோர்க்கும் கிடைத்த தண்டனை.
கந்தப்பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த போர் மிக பயங்கரமானது. அது எவ்வளவு பயங்கரமென்றால், அருணகிரிநாதர் தன் வேல்வகுப்பில் அதை இவ்வாறு கூறுகிறார்.
"திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்.'
"கடல்நீரையெல்லாம் குடித்து வற்றச்செய்து, அந்த இடத்தில் அசுரர்களின் ரத்தத்தை நிறைத்து விளையாடும் வேல்' என்று அந்த போரின் பயங்கரத்தைப் பற்றிக் கூறுகிறார். இந்தப் போரின் முடிவில் சூரன் கடலிலே வேரூன்றி விண்ணுலகம்வரை மிகப்பெரிய மாமரமாக வளர்ந்து குலுங்கி, மொத்த படைப்பையும் அஞ்சச்செய்தான். இந்த மாய மரத்தை முருகப்பெருமான் தன் வேலை எறிந்து சாய்த்தார்.
இங்கு "கடல் நீரில் அவுணர் ரத்தம்' என்று சொல்லபடுவது நாம் செய்த தீவினைகளை. அங்கே மாமரமாக எழுந்து நிற்கும் சூரன் என்பது, நம்முடைய அகந்தை (ங்ஞ்ர்) என்ற பதத்தை. முருகனின் கைவேலானது, பரப்பிரம்மத்தின் சக்தியான அந்த பராசக்தி, பக்தனின் அகந்தையை அழித்து பிரம்மத்திடம் சேர்ப்பதைக் குறிக்கிறது.
இந்தப் பாடலில் அருணகிரிநாதர், மயில்மீது முருகனை எதிர்ப்பட வேண்டிப் பாடுவது, சாதகனின் வாழ்நாளின்போதே கடவுளின் தரிசனம் கிடைக்க வேண்டுவதா கும். உபநிடதங்கள் மூன்று விதமான மரணத்தைப் பற்றிப் பேசும். ஒன்று நோய்களினால் இறப்பது, இரண்டு விபத்துகளால் இறப்பது, இன்னொன்று அகால மரணம். இந்த மூன்றுவித மரணங்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஒருவன் தன்னை அறிதல்வேண்டும். அதுவே கடவுளை அறிதல் எனவும் கூறப்படுகிறது. ஸ்வேதாஸ்வர உபநிஷத்தும், கட உபநிஷத்தும் "கடவுளை உணர்பவனும், தன்னை உணர்பவனும் மரணத்திலிருந்து விடுபடுகிறான்' என்று கூறுகின்றன.
லலிதையின் "சர்வம்ரித்யு நிவாரணி' என்ற நாமம், "அவளே இந்த எல்லாவித மரணங்களிலிருந்தும் விடுவிக்கிறாள்' என்றும் கூறுகிறது. "காலஹந்த்ரீ' என்ற நாமம் "காலனை அழிப்பவள்' என்ற பொருள் பொதிந்து, "எமபயம் போக்கி அருள்பவள்' என்று வரும். இவ்வாறு அனுபூதியும் லலிதா சஹஸ்ரநாமமும் ஒரே வேண்டுதல்களை சாதகன்பால் வைத்து, சாதகனுக்கு நன்மை செய்துவருகிறது.
செய்யுள்-11
"கூகாவென என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே.'
பொருள்: நாகாசலம் என்று கூறப் படும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் வேலவனே, நான்கு வகை கவிபாடும் திறனை அளிப்பவரே, என் மனைவி, மக்கள், சொந்தங்கள் எல்லாம் கூவி அழாதவாறு எனக்கு மெய்ப்பொருள் உபதேசம் செய்தவரே.
இந்தப் பாடலின் அருணகிரிநாதர் "மெய்ப்பொருள் பேசியவா' என்றுதான் கூறுகிறாரே தவிர, "உபதேசம் அருளியவா' என்று கூறவில்லை. ஏனென் றால், உண்மையான உபதேசம் பின்வரும் இருபதாம் பாடலில்தான் வரும். இங்கு மெய்ப்பொருள் என்பது, ஒரு குரு தன் சீடனிடம் வேதாந்த உண்மைகளான "ஆன்மா அழிவற்றது; உடல் நீயல்ல; ஆன்மாவே நீ' என்று கூறி, "நீ இந்தப் பிறவியலிலேயே கடவுளை அடைவாய்' என்று உறுதியளிப்பதே மெய்ப்பொருள் பேசுவது. இவ்வாறு ஒரு குருவின் உறுதிமொழியுள்ள சாதகன் சாதாரணமாக இறக்கப் போவதில்லை. ஆதலால் குடும்பத்தார் அவன் உடலைச் சுற்றியமர்ந்து அழும்நிலை வராது என்றும் தெளிவடைகிறான். ஏனென்றால் கடவுளை உணர்ந்த ஒருவன் தன் மரணத்தை ஏற்கும் நிலை மகத்தான ஒரு செயலாக இருக்கும். பரம்பொருளில் மொத்தமாக ஒடுங்கும் நேரமே ஒருவனது பிறவியின் பயனாகும். ஆதலால் உடலிற்கு வரும் மரணம் இந்த சாதகனைப் பொருத்தவரை வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாக இருக்கும். அவன் சுற்றத்தாரும் அந்த சாதகன் அடைந்த நிலையைக்கண்டு பெருமிதம் கொள்வாரே அன்றி அழுவதற்கு வாய்ப்பில்லை.
இந்தப் பாடலில் அருணகிரிநாதர் திருச்செங்கோட்டு வேலவனைப் பற்றிப் பாடுகிறார். மேலும் இந்த மலைமீதிருக்கும் வேலவனைப் பல பாடல்களில் புகழ்வதி லிருந்து, செங்கோட்டு வேலவன் அருணகிரி நாதரை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறார் என்று புலப்படும். இங்கு அருளாளர் முருகனை "நான்கு கவி தியாகா' என்று கூறுவதற்குக் காரணம், முருகனே தமிழ்க் கடவுளாக இருந்து அருணகிரிநாதருக்கு நான்குவித கவிதைகளாலும் தன்னைப் பாட வல்லமை தந்ததை உணர்த்துகிறார். இந்த நான்கு கவிகளும் அதன் விளக்கமும் பின்வருமாறு:
1. ஆசு கவி- ஒரு பொருளைப் பற்றி எந்தவித முன்னேற் பாடும் இல்லாமல் பார்த்தவுடன் பாடுவது.
2. மதுர கவி- இசை யோடு இனிமையாகப் பாடுவது.
3. சித்திரக் கவி- ஒரு சித்திரத்தை அமைத்ததற்கு ஏற்ப பாடுவது.
4. வித்தாரக் கவி- மிகவும் விரிவாக ஒரு பொருளைப் பற்றிப் பாடுவது.
இந்த நான்குவகைக் கவிதைகளாலும், அருணகிரிநாதர் முருகனைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்.
இந்த மலைக்கு நாகமலை என்று பெயர்வர ஒரு காரணம் உண்டு. முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர், சக்திமிக்கவர் என்று ஒரு போட்டி வந்தது. அந்தப் போட்டியின் நிபந்தனை, ஆதிசேஷன் மேரு மலையின்மீது சுற்றிக்கொள்ளவேண்டும். வாயு பகவான் தன் காற்றின் பலத்தால் ஆதிசேஷன் பிடித்திருக்கும் பிடியை வலுவிழக்கச் செய்யவேண்டும். இந்த போட்டியில் ஆதிசேஷன் வென்றுவிடவே, கோபத்தில் வாயு பகவான் காற்று சுழற்சியை நிறுத்தி விட்டார். உயிர்கள் அவதிப்பட ஆரம்பித் தன. அதன்பின் முனிவர்களின் அறிவுரையை யேற்று வாயு பகவான் காற்றின் சுழற்சியை மீண்டும் ஏற்படுத்தினார். திடீரென நிகழ்ந்த காற்றின் சுழற்சியால் ஆதிசேஷனும், அவர் பிடித்திருந்த மேருவின் ஒரு பகுதியும் உடைந்து பறந்து பூமியில் விழுந்தன.
அந்த ஒரு பகுதியே இன்று திருச்செங்கோடு மலையாக இருக்கின்றது. ஆதிசேஷனின் ரத்தம் படிந்ததால் மலை செந்நிறமாகக் காட்சியளிக்கிறது. மேலும் மலைமீது குடிகொண்டுள்ள அர்த்தநாரீஸ்வரர் சொரூபமானது சிவசக்தி ஐக்கியமாக இருப்பதும், மலையில் கந்தப் பெருமான் இருப்பதும் மேலும் ஒரு தத்துவத்தை இந்தப் பாடலில் விளக்குகிறது.
அதாவது பரப் பிரம்மமாகிய சிவ பெருமானின் ஆற்றலான சக்தியே இந்த உலகின் இயக்கம் அனைத்திற்கும் காரணம். அந்த சக்தியும் சிவனும் வெவ்வேறல்ல என்றும், சக்தியே முருகனின் வடிவாக வந்ததையும் முந்தைய பாடல்களில் பார்த்தோம். இங்கு முருகனே குருவாக அருணகிரிநாதருக்கு வந்து மெய்ப்பொருள் விளக்கம் மற்றும் உபதேசம் அளிப்பதும், சக்தியே அந்த செயலையும் முருகனின் வடிவில் செய்து, முடிவாக பரமேஸ்வரனுடன் இனையச் செய்கிறாள் என்ற தத்துவத்தையும் இந்தப் பாடலில் மறைபொருளாக வைத்துள்ளார்.
இந்தப் பாடலின் வரும் செங்கோட்டு வேலவன் குருவாக அமைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சக்தி வழிபாட்டில், ஸ்ரீ சக்கரத்தில் சக்தியை வழிபடும் கடைசி ஆவாரணத்திற்குமுன்பு குருவை வழிபடும் வழக்கம் உண்டு. இதற்குக் காரணம், குருவே சக்தியிடம் ஒரு ஆன்மாவை சேர்ப்பதாலும், சக்தியே அந்த பக்குவமடைந்த ஆன்மாவை பரமேஸ்வரனிடம் சேர்ப்பதாலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. ஸ்ரீசக்ரத்தை மேரு என்னும் முப்பரிமாண வடிவத்தில் வழிபடும் வழக்கம் உண்டு. அதற்குக் காரணம், அம்பாள் மேரு மலையில் தன் ஸ்ரீபுரம் என்ற நகரத்தை நிர்மாணித்து, மகா திரிபுர சுந்தரியாக இந்தப் படைப்பை வழிநடத்திச் செல்வதால், அவளின் எந்திர ரூபமான வழிபாட்டிற்கும் மேரு என்றே பெயர்.
இங்கும் திருச்செங்கோடு மேருமலையாவ தால், அங்கு இன்றளவும் இருக்கும் ஆதி சேஷனின் உருவம் குண்டலினியை உருவகப்படுத்தி இருக்கிறது. அந்த மலை யின் உச்சியில் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிக்கு அருகில் வேலவனின் சந்நிதி அமையப் பெற்று, வேலவன் குருவாக அமர்ந்து சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபத்தை தன்னை நாடிவரும் சாதகனுக்கு உணர்த்தி, அவனைப் பரம் பொருளிடம் ஒன்றச் செய்கிறார். முருகன் இங்கு குரு வடிவாக இருந்து மெய்ப்பொரு ளும் பேசி, சக்தியாக இருந்து ஆன்மாவைப் பரிசுத்தமாக்கி, ஆறுமுக சிவமாக இருந்து அவனைத் தன்னுள் சேர்த்து பிறவிக்கடலிருந்து மீட்கிறார். இவ்வாறு யார் ஒரு ஆன்மாவை மீட்கிறாரோ அவரே உண்மையான குரு. அவரே இறையின் உண்மையான தூதர். அந்த குரு எல்லாருக்கும் தெரியும்படி இந்த செய்கையைச் செய்ய மாட்டார். திருச்செங்கோடு முருகனின் இந்தத் தத்துவம் எவ்வாறு மறைந்திருக்கிறதோ அவ்வாறே அவரின் செய்கையும் உலகத்தாரிட மிருந்து மறைந்திருக்கும்.
ஆனாலும் எந்த சாதகனை எப்போது எங்கு பார்க்கவேண்டும்; எந்த மந்திரம் உபதேசம் செய்யவேண்டுமென்று அத்தனையும் இந்த குரு முன்கூட்டியே தீர்மானித்து, அந்த சாதகனைத் தன்பால் இழுப்பார். இந்த காரியங்கள் அனைத்தையும் குரு செய்வதற்கு ஒரே காரணம், அவர் இறைவனை உணர்ந்தபின், சக்தியானவள் தன் பெருங் கருணையால் குருவின்மூலமாக மேலும் உயிர்களை பரமேஸ்வரனிடம் சேர்க்க உழைக்கிறாள். இந்த செயல்கள் எதுவும் வெளியில் தெரிவதில்லை. ஆகவே, உண்மை யான குருவைத் தேடியலையத் தேவை யில்லை. அவர் குறித்த சமயத்தில் நம்மை இழுத்துக் கொள்வார். வெளியில் ஆடம்பரமாக- படாடோபமாக இருக்கும் அத்தனைப் பேரும் குரு என்ற கொள்கைக்குள் அடங்கமாட்டார் கள். செங்கோட்டு வேலவன்போல் யார் வேலைசெய்கிறாரோ அவரே குரு. இந்த விளக்கத்தையும் அருணகிரிநாதர் இந்தப் பாடலில் வைத்து, சாதகனை அவனுடைய குழப்பங்களிலிருந்து மேலும் சற்று விடுவிக்கிறார்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் "குருமூர்த்தி, தட்சிணாமூர்த்தி ரூபிணி'- குருவாக இருப்பவள் என்ற நாமமும், "சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி'- சிவம், சக்தி என்று இருவரும் சேர்ந்து பரப்பிரம்மமாக விளங்குபவள் என்ற நாமமும் மேற்கூறிய தத்துவத்திற்கு சான்றாக வரும்.
மேலும் கலாமாலா- அறுபத்து நான்கு கலைகளையும் மாலையாக அணிபவள்; கலாநாதா- கலைகளின் அரசியாக இருப்ப வள்; காவ்யாலாப வினோதினி- கவிதைகளால் மகிழ்ச்சி கொள்பவள் என்ற நாமங்கள், அவளுக்கு நால்வகை கவிதைகளின்மீதுள்ள நாட்டமும், அவற்றால் அவளை அடைய முடியும் என்றும் உணர்த்துகிறது. இங்கு முருகனும் அருணகிரிநாதர் தம்மைப் பற்றிப் பாடுவதையே விரும்பியதும், அந்தப் பாடல் பாடும் வல்லமையையும் அவரே அந்தக் கலைக்கு அரசனாக இருந்து கொடுத்த தும்- இந்த நாமங்களில் சக்தியும் முருகனும் ஒருவரே என்பதை நிரூபிக்கும். பவரோக ஸிக்னீ என்ற நாமம், அவளே இந்தப் பிறவி கடலிலிருந்து விடுவிப்பவள் என்ற பொருளில், சாதகனின் கடைசி நிகழ்வான மரணத்தையும் எளிதாகக் கடக்கவைக்கிறாள் என்ற அர்த்தம் பொதிந்துவந்து, இந்தப் பாடலுக்கு மேலும் விளக்கங்கள் தரும்.
(அனுபூதி தொடரும்)