குமர குருதாச சுவாமிகள்! - மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/kumara-gurudasa-swami-mumbai-ramakrishnan

"ஷண்முக கவசம்' இயற்றிய பாம்பன் சுவாமிகள் எனும் குமர குருதாசரை சிந்திப்போம். இவர் சரிதம் சேய்த்தொண்டர் புராணத்தில் 2546-2588 பாக்களில் உள்ளது. அவர் 1850-ஆம் ஆண்டு பிறந்து, புகழ்பெற்ற சென்னை திருவான்மியூர், சிவன் கோவில் அருகே 30-5-1929, வைகாசி மாதம், தேய்பிறை சஷ்டியில் காலை ஏழரை மணிக்கு பூதவுடலை உதிர்த்து கந்தன் பதம் சேர்ந்தார். (விசாக மாதத்தில் விசாகன் திருவடியில் கலந்தார்). குரு ஆராதனை வருடந்தோறும் நடைபெறுகிறது.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் பதியில் சாத்தப் பிள்ளை- செங்கமலத்தம்மாளுக்கு முருகன் அருளால் பிறந்தவர் அப்பாவு. அவர்களுக்கு வேளாண்மைத் தொழில். ஜாதகம் பார்த்த ஒரு ஜோதிடர், "இந்த சிறுவன் பிற்காலத்தில் ஞானவானாக- கவிஞனாகத் திகழ்வான்' என்றார்.

gg

அப்பாவு முருகனிடம் அன்பு வைத்ததைக் கண்ட தகப்பனார், கந்த சஷ்டிக் கவசம் ஓதுவித்து, முடிந்த அளவு துதிசெய்யச் சொன்னார்.

அப்பாவுவும் திருநீறு பூசி, பயபக்தியுடன் கோவிலுக் குச் சென்று கந்த சஷ்டிக் கவசம் துதித்தார். அதனில் ஆழ்ந்திட, தானும் அதுபோன்று ஒரு துதி செய்தாலென்ன என்று மனம் நெகிழ்ந்தது. அப்போது அவருக்கு வயது 13. அருகிலுள்ள நாகநாதர் கோவிலில் தரிசனம் செய்து கவசம் துதிப்பார்.

ஒருசமயம் "கங்கையைச் சடையில் விரித்து' என்று தொடங்கி, "அருமறை புகழ்ந்த முருக சரவணத்து ஆதியே அமரர் கோவே' என்னும் ஆசிரிய விருத்தம் மனதில் உதித்தது. அவர் வியந்து, "முருகா! நீ இதனையேற்று, எனக்கு தினம் ஒரு பாடல் இதுபோல அருள்செய்' என வேண்டினார்.

முருகன்தான் பக்த தயாபரனாயிற்றே! நூறு பாடல்கள் ஆயிற்று. எதேச்சையாக இதனை வாசித்த இராமேஸ்வரம் கோவிலின் அர்ச்சகர் சேதுமாதவ ஐயர் பாடலில் நெகிழ்ந்து, அப்பாவுவுக்கு விஜயதசமியன்று அக்னி தீர்த்தக்கரையில் ஷடாக்ஷர உ

"ஷண்முக கவசம்' இயற்றிய பாம்பன் சுவாமிகள் எனும் குமர குருதாசரை சிந்திப்போம். இவர் சரிதம் சேய்த்தொண்டர் புராணத்தில் 2546-2588 பாக்களில் உள்ளது. அவர் 1850-ஆம் ஆண்டு பிறந்து, புகழ்பெற்ற சென்னை திருவான்மியூர், சிவன் கோவில் அருகே 30-5-1929, வைகாசி மாதம், தேய்பிறை சஷ்டியில் காலை ஏழரை மணிக்கு பூதவுடலை உதிர்த்து கந்தன் பதம் சேர்ந்தார். (விசாக மாதத்தில் விசாகன் திருவடியில் கலந்தார்). குரு ஆராதனை வருடந்தோறும் நடைபெறுகிறது.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் பதியில் சாத்தப் பிள்ளை- செங்கமலத்தம்மாளுக்கு முருகன் அருளால் பிறந்தவர் அப்பாவு. அவர்களுக்கு வேளாண்மைத் தொழில். ஜாதகம் பார்த்த ஒரு ஜோதிடர், "இந்த சிறுவன் பிற்காலத்தில் ஞானவானாக- கவிஞனாகத் திகழ்வான்' என்றார்.

gg

அப்பாவு முருகனிடம் அன்பு வைத்ததைக் கண்ட தகப்பனார், கந்த சஷ்டிக் கவசம் ஓதுவித்து, முடிந்த அளவு துதிசெய்யச் சொன்னார்.

அப்பாவுவும் திருநீறு பூசி, பயபக்தியுடன் கோவிலுக் குச் சென்று கந்த சஷ்டிக் கவசம் துதித்தார். அதனில் ஆழ்ந்திட, தானும் அதுபோன்று ஒரு துதி செய்தாலென்ன என்று மனம் நெகிழ்ந்தது. அப்போது அவருக்கு வயது 13. அருகிலுள்ள நாகநாதர் கோவிலில் தரிசனம் செய்து கவசம் துதிப்பார்.

ஒருசமயம் "கங்கையைச் சடையில் விரித்து' என்று தொடங்கி, "அருமறை புகழ்ந்த முருக சரவணத்து ஆதியே அமரர் கோவே' என்னும் ஆசிரிய விருத்தம் மனதில் உதித்தது. அவர் வியந்து, "முருகா! நீ இதனையேற்று, எனக்கு தினம் ஒரு பாடல் இதுபோல அருள்செய்' என வேண்டினார்.

முருகன்தான் பக்த தயாபரனாயிற்றே! நூறு பாடல்கள் ஆயிற்று. எதேச்சையாக இதனை வாசித்த இராமேஸ்வரம் கோவிலின் அர்ச்சகர் சேதுமாதவ ஐயர் பாடலில் நெகிழ்ந்து, அப்பாவுவுக்கு விஜயதசமியன்று அக்னி தீர்த்தக்கரையில் ஷடாக்ஷர உபதேசம் செய்து ஜெபிக்கக் கூறினார். வடமொழி கற்று, உபநிடத, வேத, ஆகம, புராணங்களிலும் ஈடுபடக் கூறினார்.

சீர்காழியில், அழுத பிள்ளைக்கு பார்வதியார் ஞானப்பால் ஊட்டினார்.

பசித்துத் தூங்கிய ராமலிங்கத்துக்கு அம்பாள் அண்ணி உருவில் ஆகாரமிட்டார். அதுபோல் ஒருசமயம் இவருக்கு கனவில் ஒரு சிவனடியார் வாழையிலை இட்டு, பாலும் அன்னமும் பிசைந்திட்டு உண்ண வைத்தார். ஆன்மிக, தெய்வீகக் கனவுகளை, "கானல் நீர்போல் கனவுதானே' என எண்ணக்கூடாதென்று உணர்ந்தார். முருகனே அடியார் உருவில் வந்திருக்கலாம். அதன்பின் அவரது ஞானம், பக்தியின் ஆழம் கூடியது.

பெற்றோரின் விருப்பத் துக்கிணங்கி 1878-ல் முத்தம்மாள் என்னும் நங்கையை மணந்தார். சிவஞானாம்பாள், முருகை யன், குமரகுருதாசன் என்று மூன்று குழந்தைகளும் பிறந்து வளர்ந்தன. அவரது வம்சாவளிகள் இன்றும் உள்ளனர்.

குடும்பம், தொழில், வியாபாரம் என இருந்தாலும் முருகன்மீது ஆழ்ந்த பக்தி, வைராக்கியம், விவேகம், ஞானம் யாவும் மிளிர்ந்தன.

ஒருசமயம் அவரிடம் ஒருவர் கேட்க, "நான் நாளை பழனிமலை செல்லப்போகிறேன்'' என்றார். "எப்போது திரும்புவீர்கள்?'' என்று கேட்க, "அது சொல்ல இயலாது'' என்றார்.

"சந்நியாசியாகிவிடுவீரா? அது குமரன் கட்டளையா'' என வினவ, ஆர்வத்தில் அப்பாவு "ஆம்'' என்றார்.

பழனியாண்டவன் கருணையுள்ளவன் தான் என்றாலும் கோபக்காரனாயிற்றே! "நான் கூறாதபோது எப்படி நான் கூறியதாகக் கூறலாம்' என்று கோபக்கனலுடன் கனவில் தோன்றி, "நான் அழைத்தாலொழிய நீ பழனிக்கு வரக்கூடாது. வரமாட்டேன் என்று கூறு' என அதட்ட, அப்பாவு, "தவறுக்கு மன்னிக்கவும். தங்கள் ஆணையின்றி பழனி வரமாட்டேன்; சபதம்' என்றார். ஆக, அவர் பழனிக்குப் போகவே இல்லை!

இச்சமயம், மற்றொரு சம்பவமும் உணரவேண்டும். சுவாமிகள் காஞ்சிபுரம் சென்று ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி மற்றுமுள்ள கோவில்களை தரிசித்துவிட்டு ஊர் கிளம்ப ஆயத்தமானார். அப்போது ஒரு சிறுவன், "என்ன, எல்லா கோவில்களும் பார்த்தாயிற்றா?'' என்றான். "ஆம்'' என்றார். "குமரக் கோட்டம் தரிசித்தீரா'' என வினவ, "இருக்குமிடம் அறியேன்'' என்றார். (அக்காலத்தில் நுழைவு கோபுரம் இல்லை. எனது முதல் காஞ்சி குமரன் தரிசனமும் அவ்வாறே). "வாருங்கள்'' என சிறுவன் அழைத்துச்சென்று கோவிலில் புகுந்து மறைந்தான். பார்க் காத அடிகளைப் பார்க்க வைத்தது யார்? குமரனே! இதன் தத்துவம் என்ன? "ஆன்மிக விஷயத்தில் தவறியும் பொய் கூறாதே' என்பதுதான்.

கந்தன் கருணையில் ஏங்கி 1891-ல் எழுந்ததே- "கந்தர் சஷ்டி கவசம்'போல், "ஷண்முக கவசம்.' நான்கு வரிகள் கொண்ட முப்பது துதிகள்.

ஒரு சில ஷண்முக கவசத் துதிகள் சிந்திப்போமா-

"அண்டமாகி அவனியாகி அறியொணாப் பொருளதாகி

தொண்டர்கள் குருவுமாகி துகளறு தெய்வமாகி

எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈசனான

திண்டிறற் சரவணத்தான் தினமும் என் சிரசைக்காக்க.'

ஆதிசங்கரர் சிவன்மீது இரு கவசங்கள் பாடியுள்ளார். ஒன்று தலையிலிருந்து கால்வரை; மற்றது காலி-ருந்து தலைவரை. இவர் தலையிலிருந்து "காக்க' என்று கவசம் பாடுகிறார்.

மேலும் "இளமையிலும் வாலிபத்திலும் முதுமையிலும் அறுமுக சிவனார் காக்க' என்று வேண்டுகிறார்.

கடைசியாக-

"இனமெனத் தொண்டரோடும் மிணக்கிடும் செட்டி காக்க

தனிமையிற் கூட்டம் தன்னில் சரவண பவனார்

காக்க

நனி அனுபூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக்

கனிவொடு சொன்னதாசன் கடவுவான் காக்க வந்தே.

"அடியவர் இனத்தவன் என்று என்னைக் காக்க வேண்டும். தனியாகவோ, கூட்டத்திலிருந்தாலோ சரவணபவன் காக்கவேண்டும். கந்தர் அனுபூதி செய்த அருணகிரியார் கந்தன் காக்க வேண்டும். இக்கவசம் அன்போடு கூற, குமரகுருதாசன் கடவுள் வந்து காக்க' என்று முடிக்கிறார்.

குமரகுருதாசர் துதிகள் மந்திர சக்தி பொருந்தியவை. ஆக, அன்பர்கள் அவரது துதிகள் துதித்து நலமடைய கந்தனையே வேண்டுவோம்.

சந்தனத்தைப் பார்த்தால் மணக்காது. பார்க்காவிட்டாலும் நறுமணம் வீசும். அது போல துதிகளை அன்புடன் ஆழ்ந்து துதித்தால்தான் அதன் மணம், ரசம், மகிமையை உணரலாம்.

jj

சுவாமிகள் ஒருசமயம், "பிறப்பன் வலசை' என்னும் ஊர் மயானத்தில் 35 நாட்கள் சதுரக்குழியில் அமர்ந்து தவம் செய்தார். 7-ஆம் நாள் அகத்தியர், அருணகிரியார் தரிசனம் பெற்றார். இளைஞனாக வந்த கந்தன், ரகசிய மொழியில் உபதேசம் செய்தான். 35-ஆவது நாள் தலைக்குமேலே பேரொலி, ஒளியும் பரவியது. (அதுவே குண்டலினி தத்துவத்தில் சஹஸ்ராரம் எனப்படுவது). அந்த உபதேசமே 1894-ல் சுவாமிகள் எழுதிய "தகராலய ரகசியம்' என்னும் நூல்.

பிறகு ஆன்மிகத் தலயாத்திரை செய்தார். காசியில் குமரகுருபரர் சுவாமிகள் மடத்தில் காவியுடை அணிந்தார். சென்னை திரும்பியபிறகு "ஸ்ரீமத் குமார சுவாமியம்' என்று கந்த புராணத்தைக் காவியமாகப் பாடினார். பெயரும் குமரகுருதாச சுவாமி களாயிற்று.

இவர்மீதுள்ள அந்தாதிப்பாடல் சிந்திப்போமா...

"பொற்புறு பாம்பன்நகர் தவப்பேறாய் பொலன்கவிகள்

அற்புதற்கு ஆறாயிரத்து அறுநூற்றறு பானொடு

ஆறு

நற்பவளத் திருவாய் மலர்ந்து ஐயன் நலம் அருளப்

பெற்ற குமர குருதாசர் யானென்றும் பேண் குருவே.'

1923-ல் சென்னை தம்புசெட்டித் தெருவில் சென்றபோது, குதிரை வண்டிச்சக்கரம் இடது கணுக்கால்மீது ஏறிட, எலும்பு முறிந்தது. சென்னை அரசு பெரிய மருத்துவமனையில் 11-ஆவது படுக்கையில் சிகிச்சை நடந்தது. "பல வருடங்களாக உப்பில்லா உணவு உட்கொண்டதாலும், 73 வயதாகி விட்டதாலும் எலும்பு கூடாது. காலை வெட்டிட வேண்டும்'' என்றனர். சுவாமிகளோ, "எனது காலை வெட்டுவதென்பது எனக்கு ஒன்றுமில்லை. முருகா, உனக்கு அவமதிப்பான செயல்; உன்னிஷ்டம்'' என்றார். அவரது சீடர் சுப்ரமணியதாசர், மனைவியுடன் ஷண்முக கவசம் பாராயணம் இடைவிடாது செய்தார். மற்ற அடியார்களும் சேர்ந்து பாராயணம் செய்தனர்.

இதனையே வரகவி சொக்கலிங்கனார் இவ்வாறு பாடுவார்: (2580)

"பெருகா விழி சுழலா ஒருபெரு மூச்சதும் எறியா

முருகா முருகா கா என மூர்ச்சித்தவன் விழலும்

அருகா நடப்பவர் கண்புதைத்து அந்தோ இதென் செய்யென்று

உருகா மருத்துவச் சாலையில் உய்த்துற்றதை ஓதி.'

மறுநாள் இரு மயில்கள் தரிசனம் கண்டார். காலடியில் இருவேல்கள் குத்த, ஒரு குழந்தை தரிசனம்! சுவாமிகள் மனம் குளிர்ந்தது. ஒடிந்த எலும்புகள் கூடிவிட்டன. அதிசயம் என மருத்துவர்கள் வியந்தனர். ஆண்டவன் கருணைக்கு அளவுண்டோ! ஆதிசங்கரர் கூறுவார்- "பக்தி கிம் ந கரோதி?' பக்தி எதைத்தான் செய்யாது?

இந்த சம்பவம் மார்கழி மாத வளர்பிறைப் பிரதமையில் "மயில்வாகன சேவை' என்று இன்றும் விழா நடக்கிறது. (இவ்வாண்டு 3-1-2022-ல் நடக்கிறது.) இதன்பின் ஐந்தரை வருடங்கள் வாழ்ந்துள்ளார். இவர் பாடியுள்ள மொத்த பாடல்கள் 6,666 இவை. ஆறு மண்டலங்களாகத் தொகு பட்டுள்ளன.

திருவான்மியூரில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அகத்தியர், சிவ- பார்வதியின் திருமணக்கோலம் கண்ட தலம். வான்மீக முனிவர் முக்திபெற்ற இடம். ஆகவேதான் தலப்பெயர் திருவான்மியூர்.

தலம், தீர்த்தம், தெய்வம் என சிறப்புகள் பல கொண்ட தலம். மருந்தீஸ்வரர் கோவிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாம்பன் சுவாமிகளின் சமாதி உள்ளது. தினமும் ஆராதனைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதப் பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்கூடி, குரு, குமரனருள் பெறுகின்றனர். சென்னைவாழ் பக்தர்கள் அவசியம் தரிசித்து இன்புறலாமே.

om010122
இதையும் படியுங்கள்
Subscribe