"துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.'

"ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும். அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் வேண்டிய எல்லா நலன்களும் கிட்டும்' என்கிறார் வள்ளுவர்.

"தெய்வம் மானுஷ்ய ரூபேன'- அதாவது தெய்வம் மனிதவடிவில் வரும் என்பது முன்னோர் வாக்கு. ஆம்... தெய்வம் மனித வடிவில் வரும்; அல்லல் தீர்த்து அருள்புரியும்! இதில் சந்தேகமே இல்லை. மனித உருக்கொண்ட நமக்கு அருள்புரிய தெய்வமும் மனிதவடிவம் தாங்கியே வருகிறது. இதை இதிகாசங்களும் புராணங்களும் விரிவாகக் கூறுகின்றன.

Advertisment

kovai

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத் தலங்களை தரிசித்தபடியே வந்தார். சீர்காழியை தரிசித்து அங்கிருந்து திருப்புன்கூர் தலத்திற்குப் புறப்பட்டார். நடந்துவருகையில் வெயிலால் தாகமும் பசியும் சுந்தரரை வருத்தின. அவருடன் வந்த அடியார்களுக்கும் அதே நிலைதான்.

இதையறிந்த சிவபெருமான் அடியார் வடிவில் எழுந்தருளினார். சுந்தரர் வரும் வழியில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துக் காத்துக்கொண்டிருந்தார்.

Advertisment

அடியர்களுடன் வந்த சுந்தரர் தண்ணீர்ப் பந்தலைப் பார்த்தார். அனைவரும் அங்கு சென்றனர். அவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்ற ஈசன், "நீங்கள் பசியால் வாடிப்போயிருக்கிறீர்கள். உணவு தயாராக உள்ளது. அனைவரும் காலந்தாழ்த்தாமல் சீக்கிரமாக உண் ணுங்கள். தாகம் தீர நீர் அருந்தி இளைப்பைப் போக்கிக் கொள் ளுங்கள்'' என் றார். "சிவாய நம' என்றபடியே அமர்ந்த சுந்தரர் ஈசன் அளித்த உணவைப் பெற்று அடியார்களுடன் உண்டு மகிழ்ந்தார். அனைவரும் உணவுண்டு நீர் அருந்தினர்.

இறைவனின் அருள்திறத்தை எண்ணித் துதித்த சுந்தரரும் அடியார்களும், உண்ட களைப்புதீர அங்கேயே படுத்துறங்கினர். அதே வேளையில் தாம் அமைத்த தண்ணீர்ப் பந்தலுடன் அங்கிருந்து மறைந்தார் ஈசன். உறக்கத்திலிருந்து விழித்தார் சுந்தரர். அடியார்களும் உறக்கம் நீங்கினர். தண்ணீர்ப் பந்தலை யும் காணவில்லை; உபசரித்து பசிதீர்த்த அடியாரையும் காண வில்லை.

kovai

களைத்துப் பசித்து தாகத்தால் இளைத்து வந்தவர்களுக்கு தண்ணீர்ப் பந்தல் வைத்து உணவூட்டி தாகம் தீர்த்தவர் இறைவனே என்பதையுணர்ந்த சுந்தரர், "இத்தனையாம் அறிந்திலேன்' என்று மனமுருகப் பதிகம் பாடியவாறு அங்கிருந்து புறப் பட்டார்.

தெய்வம் மனித வடிவில் வந்து துயரங்களை நீக்கும் என்பதை விளக்கும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண் டின் வரலாற்று நிகழ்விது.

அன்றைய காலத்தில் மட்டுமல்ல; இன்றைய காலகட்டத்திலும் பலவிதங்களில் மனிதவடிவில் வந்து உதவிசெய்து, துயரங்களைப் போக்கி அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இறைவன் அருள்புரிந்துகொண்டுதான் இருக்கிறான்.

அத்தகைய தெய்வம் குடிகொண்டுள்ள ஒரு திருத்தலம்தான் குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: கோணேஸ்வரர்.

இறைவி: பெரியநாயகி.

புராணப் பெயர்: திருக்குடவாயில்.

ஊர்: குடவாசல்.

மாவட்டம்: திருவாரூர்.

தலவிருட்சம்: வாழை.

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம்.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம், தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. தேவாராப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 157-ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 21-ஆவது தலமாகவும், திகழ்கின்ற தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெரும் சிறப்புகளுடன், திருஞான சம்பந்தர், அருணகிரிநாதரால் பாடப்பட்ட பெருமையுடன், இன்னும் பல்வேறு சிறப்பு களைப் பெற்றதொரு திருத் தலம்தான் குடவாசல் கோணேஸ்வரர் ஆலயம்.

"திகழுந் திருமாலொடுநான் முகனும்

புகழும் பெருமான் அடியார் புகல

மகிழும் பெருமான் குடவாயில் மன்னி

நிகழும் பெருங்கோயில் நிலா யவனே.'

-திருஞானசம்பந்தர்

"எண்டோ ளீசர்க்கு எழில் மாடம் எழுபது அமைத்த' கோச்செங்கட்சோழனால் கட்டப்பெற்று, திருக்குடவாயிற் கோட்டம் எனும் சரித்திரப் புகழ் பெற்றதும், கதலி வனம், கோணத்தானம், வன்மீகாசலம் என்றெல்லாம் புகழப்படுவதுமான மாடக்கோவில் தான் கோணேஸ்வரர் ஆலயம்.

dd

திருமாலும் கருடனும் ஒருவரே என்று மகாபாரதத்திலுள்ள "அனுசாசன பர்வம்' கூறுகிறது. ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும் என்றும், வைணவ ஆழ்வார்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனைப் போற்றிப் பாடியிருக்கிறார் கள். மகாபாரதப் போரில் கடைசி நாளில் கருடவியூகம் அமைத்துப் போர் நடந்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

கருத்மான், சாபர்ணன், பந்தகா சாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்சடயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யப்பிரியர், மங்களாலயர், சோமகாமீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜெயகருடன், புள்ளரசு, சுவனன் கிரி, ஒடும்புள், கொற்றப் புள் என்று கருடனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்புமிக்க கருடனே சிவனை வழிபட்ட தலமென்றால் அது எத்தகையது என்று பார்ப்போமா?

தலவரலாறு

பிரளய காலத்தில் படைப்புக்குரிய வேதங்களை பிரம்மா ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்துவந்தது. மீண்டும் உயிர்களைப் படைக்கும் பொருட்டு, வேடன் வடிவில் சென்று குடத்தின்மீது அம்பு எய்தார்.

அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன் சுயம்புவாக எழுந்தருளினார்.

உயிர்கள் அழிந்துவிடக்கூடாதே என்றெண்ணி, அக்குடத்தினுள் உயிர்களையும் அமுதத்தையும் நிரப்பி, குடத்தின் முகப்பில் சிவலிங்கமாய் இருந்து அனைத்து உயிர் களையும் பாதுகாத்துவந்தார். காலங்கள் கடந்தன.

குடத்தின் வாயிலில் இருந்த சிவலிங்கத் தைப் புற்றுமூடியது. அப்புற்று வளர்ந்து பெரிய மலைபோலானது. புற்றால் மூடப் பட்டிருந்த சிவலிங்கத்தை கருட பகவான் தன் மூக்கினால் கொத்திப் பிளந்து சிவனை வெளிப்படுத்தினார். இதனால் இந்த இறைவன் வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று அழைக்கப்படுகிறார்.

அமிர்தத்துளி விழுந்த இடம் அமிர்தத் தலமாயிற்று. அமிர்தநீர் தேங்கிய இடம் அமிர்தத் தீர்த்தமாயிற்று. உயிர்களைப் பலகாலம் காத்துவந்ததால் இறைவன் கோணேசர் ஆனார். (கோ- உயிர்; நேசம்- அன்பு. உயிர்களை நேசித்து அருள்பவர் என்பதால் கோணேஸ் வரர் என்று அழைக்கப் படலானார்.) தன் மூக்கால் கொத்தி வெளிக் கொணர்ந்த கருடன், ஈஸ்வரன் அருளால் ஆலயம் எழுப்பி வழி பட்டதாகத் தலபுராணம் சொல்கிறது.

ஈஸ்வரனால் பாது காக்கப்பட்ட அமிர்த கலசம் தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்து. முதல் பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடம் கும்பகோணம்; இறைவன் ஆதி கும்பேசுவரர் என அழைக்கப்படுகிறார்.

நடுப்பாகம் விழுந்த இடம் கலயநல்லூர். இன்றைய சாக்கோட்டை. இங்குள்ள ஈசன் அமுத கலசலேஸ்வரர் ஆவார். குடத்தின் முகப்பு- அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில் (குடவாசல்) ஆயிற்று.

கச்யப முனிவருக்கு கத்ரு, விநதை என்னும் மனைவிகள் உண்டு. அவர்கள் மூலம் கார்க்கோடகன், கருடன் என இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். இதில் கத்ருவின் சூழ்ச்சியால் விநதை பல துன்பங்களுக்கு ஆளானாள். தன் தாய் விநதையின் துன்பத்தைப் போக்க, முன்பு பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை தேவலோகம் சென்று முயன்று பெற்றுவந்தார் கருடன்.

அமிர்த குடத்தைக் கொண்டு வரும் வழியில் குடவாயில் அருகே பறந்து வந்தபோது, பயங்கரன் என்னும் அசுரன் அமுத குடத்தைப் பறிக்கமுயன் றான். அப்போது தரையில் ஓரிடத்தில் தர்ப்பையைப் பரப்பி அதன்மேல் குடத்தை வைத்தார் கருடன். பிறகு அந்த அசுரனோடு போரிட்டு வீழ்த்தினார். அமுத குடத்தை எடுக்க முயன்றபோது, அங்கிருந்த புற்றுக்குள் அது அழுந்திப் புதைந்துகொண்டிருந்தது. கோபமுற்ற கருடன் தன் அலகினாலும் கால்களாலும் புற்றினைப் பிளக்க முற்பட்டபோது, உள்ளிருந்து அமுத கலசத்துடன் லிங்கப் பெருமான் வெளிப்பட்டார். பட்சிராஜனைப் பார்த்து, "உன்மூலம் இத்தலத்தில் வெளிப்பட விரும்பியதால் இவ்வாறு செய்தேன்' என்று கூறி அருள்பாலித்தார். இறைவன் ஆணைப்படி அந்த இடத்திலேயே கருடன் கோவில் எழுப்பி வழிபட்டார் என்று தலபுராணம் சொல்கிறது.

ஈழநாட்டு (இலங்கை) சிவத்தலங்களில் மிகச்சிறப்புடன் பேசப்படும் ஆலயங்கள் வரிசையில் இந்த கோணேசமும் ஒன்று. முன்பு செங்கல் தளியாக இருந்துள்ளது. இதனை கோச் செங்கட்சோழன் மாடக் கோவிலாக மாற்றியமைத்தான்.

கோச்செங்கட்சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்காவல் இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டதன் பலன், பின்னாளில் சோழ நாட்டின் பேரரசனாகப் பிறக்கும் பேறு பெற்றான்.

சிலந்தியாய் இருக்கும்போது சிவபூஜைக்கு யானை இடையூறாக இருந்ததால், யானை ஏறமுடியாத மாடக்கோவில்களைக் கட்டினான்.

அவற்றுள் ஒன்றுதான் குடவாசல் திருத்தலம், குடக்கு என்றால் மேற்கு என்று ஒரு பொருள் உண்டு. இத்தல இறைவன் மேற்குநோக்கிய வாசல் கொண்டுள்ளதால் குடக்குவாசல் என்றானது.

சிறப்பம்சங்கள்

= மூலவர் சுயம்புமூர்த்தி யாக அருள்பாலிக்கிறார்.

= இறைவி பெரியநாயகி அம்பாள் துர்க்கையின் அம்ச மாக விளங்குவதால் பெரிய துர்க்கை என்றும் அழைக்கின் றனர். கோஷ்டத்தில் துர்க்கைக் குத் தனியே சந்நிதி இல்லை.

=கருடன் பூஜித்து அமுதம் பெற்று, தானும் தன் தாயும் சாபம்நீங்கப் பெற்ற தலமாதலால், திருமதிலின்மேல் கருடன் உருவங்கள் உள்ளன.

=திருணபிந்து முனிவருக்கு குடத்தின் வாயில் ஈசன் வெளிப்பட்டு குஷ்டநோயைத் தீர்த்தருளிய தலம்.

=இத்தல தீர்த்தமான அமிர்த தீர்த்தத்தைத் தொட்டவர்களின் முற்பிறவிப் பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை அருந்தி யவர்கள் புண்ணியவான்கள் ஆகிறார்கள்.

இத்தீர்த்தத்தில் நீராட எண்ணி, இது இருக் கும் இடம் நோக்கி ஓரடி எடுத்துவைத்தாலே கங்கா ஸ்நானம் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்களாகிறார்கள்.

"சிவராத்திரியில் பக்தியுடன் இத் தீர்த்தத்தில் மூழ்கினால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் இத்தீர்த்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவராகிறார்கள். இதில் ஸ்நானம் செய்யும் அனைவரும் அமிர்த மயமான சரீரம் உடையவர்களாகிறார்கள்'' என்று தீர்த்த மகிமையைப் பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான சந்திரசேகர சிவாச்சாரியார்.

=குடந்தைக் கோட்டத்தில், திருப்புகழ் திருக்குமரன், திருக்குடவாயிற் திருக்குமரன் என்று மிகவும் பிரபலமாகப் பேசப்படுகின்ற இத்தல முருகன் அருணாகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளது சிறப்பான ஒன்று.

=சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதை மகாத்மியத்தில் 101, 102-ஆவது படலம் கோணேஸ்வர மகாத்மியத்தின் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. சங்ககாலச் சிறப்பும் பழமையும் வாய்ந்த இவ்வாலயத்தில் காரணாகம விதிப்படி பூஜைகள் நடைபெறு கின்றன. ஜடாயு, அக்னி, சூத முனிவர், பிருகு மற்றும் தாலப்பியர் வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர். நைமிசாரண்ய முனிவர்களுக்கு சூத முனிவர் இத்தல மகிமையை எடுத்துரைத்துள்ளார்.

=தை மாதத்தில் இத்தல மூலவர்மீது சூரியஒளி மூன்று நாட்கள் விழுகிறது. மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் அமிர்த புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகின்றனர். மாசி மக பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், நவராத்திரி, ஆடி வெள்ளி, மார்கழித் திருவாதிரை போன்றவை ஆலய விழாக்களாகும்.

=இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு சங்ககாலச் சோழ மன்னர்களின் கோ நகரமாக விளங்கிய குடவாயிற் கோட்டம், சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக விளங்கியுள்ளது. குடவாயிற் கீர்த்தனார் என்ற சங்ககாலப் புலவர் இவ்வூரின் சிறப்பை நற்றினை, அகநாநூறு போன்ற சங்க காலப் பாடல்களில் சிறப்பித்துள்ளார். செவ்வப்ப நாயக்கர் பொறித் துள்ள கல்வெட்டில், இறைவனை குட வாசல் அழகர் தம்பிரானார் என்றும், அம்பாளை பெரியநாச்சி என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் குடவாயில் என்ற பெயர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் மருவி "குடவாசல்' என்றானதும் குறிக்கப் பட்டுள்ளது.

திருக்கோவில் அமைப்பு

கும்பகோணம்- திருவாரூர் வழியில், குடவாசல் என்ற ஊரின் பிரதான சாலையோரத்தில், நான்கு ராஜவீதிகளின் நடுவே நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று மேற்கு நோக்கிய வண்ணம் ஆலயம் அமைந்துள்ளது. பஞ்சமூர்த்திகளின் வண்ணச் சுதைச் சிற்பத்துடன் அழகுறக் காணப்படும் முகப்பு வாயிலின் முன்புறம் அமிர்த தீர்த்தக்குளம் உள்ளது. கரையின் மேற்கே கிழக்கு நோக்கி சுவாமியைப் பார்த்தபடி ஆதிகஜானனர் என்னும் விநாயகர் சந்நிதி உள்ளது.

ஆலயத்திற்குள் நுழைந்தால் கொடிமரம், கொடிமரத்து விநாயகர், பலிபீடம் உள்ளது. அதனையடுத்து அர்த்த மண்டபத்தில், நிலமட்டத்தில் தெற்குநோக்கி நின்ற திருக் கோலத்தில் அம்பாள் பெரியநாயகி அபய வரதத்துடன் அருட்காட்சியளிக்கிறாள்.

dd

கீழ்ச்சுற்றில் மேற்கு பார்த்தபடி இரண்டு பைரவர்கள்- நாய் வாகனத்துடன் ஒருவரும், வாகனம் இல்லாமல் ஒருவரும் அருட்காட்சி தருகின்றனர். சிவாலயத்துக்குரிய மற்றும் பல சந்நிதிகளும் உள்ளன.

கட்டுமலையின் படிகளில் ஏறினால் மேலே ஒரு திருச்சுற்று உள்ளது. சுவாமி சந்நிதியிலிருந்து பார்த்தால் ஆதிகஜானனர் சந்நிதி கலசம் தெரியும் படி அமைத்திருக்கிறார் கள். கருவறையில் உயரமான சதுரமான பீடத்தில் சுயம்புமூர்த்தியாக கோணேஸ்வரர், கருடன் தன் அலகால் கொத்தப்பட்ட தழும்புகளுடன் அருட்காட்சியளிக் கிறார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக் கின்ற மகாமகப் பெருவிழாவிற்கு நெருங்கிய தொடர்புடைய தலமிது. திருஞானசம்பந்தர், அப்பரால் "எழில்மாடப் பெருங் கோவில்' என்று புகழப்பட்ட தலம். "எத்தகைய துயரமானாலும், நீதிமன்ற வழக்கானாலும், உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சினையானா லும், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினையானா லும், எதிரியால் ஏமாற்றப்பட்டாலும் அனைத்திற்கும் தீர்வுதரும்வகையில், அச்சம் என்கிற மடமையைப் போக்கி அகமகிழ்வு என்ற உடமையைத் தந்தருள்வார் இந்த கோணேஸ்வரர்'' என்று ஆத்மார்த்தமாகச் சொல்கிறார் ஆலய இணை அர்ச்சகரான சுரேஷ் குருக்கள்.

பெரியநாயகி உடனுறை அருள்மிகு கோணேஸ்வரரை வலம்வந்து வழிபடுவோம்; வளம் பெறுவோம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு:

செயல் அலுவலர், அ/மி கோணேஸ்

வரர் திருக்கோவில், குடவாசல்நகர், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்- 612 601.

அலைபேசி: சந்திரசேகர சிவாச்சாரியார்: 94439 59839, சுரேஷ் குருக்கள்: 98651 50543.

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பஸ் வசதியுண்டு.