பிரிக்கும் சக்தி, இணைக்கும் சக்தி என்னும் இருவகை சக்திகள் நம்மை இயக்குகின்றன. பிரிக்கும் சக்திதான் நாம் பிறரிலிருந்து வித்தியாசமானவர்களாக இருக்கவும், நமது தனித்தன்மைக்கும் காரணம்.

இணைக்கும் சக்தியே நம் உறவுக்கும், பிறரோடு இணைந்து வாழ்வதற்கும் காரணம்.

இந்த இரு சக்திகளும் சமநிலையில் இருக்கும் போதுதான் நமது தனித்தன்மையைத் தட்டி யெழுப்பி, உறவு வாழ்விலும் உயரமுடியும். ஆனால் துரதிர்ஷ்டமாக நாம் பிரிக்கும் சக்திக்கு அடிமையாகிவிடுவதால் நம்மை மட்டும் மையப்படுத்துகிறோம். இதுவே ஆணவத்திற்கும் சமூக அக்கறையின்மைக்கும் காரணம். நம்மை இணைக்கும் மாபெரும் சக்தி அன்பு.

சோதனைகளை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது கடவுள் தரும் வெற்றி வாகையினை அவர்கள் சூடுகிறார்கள். சோதனை வரும்போது "இது கடவுளிடமிருந்து வருகிறது' என்று நாம் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தன் சொந்த தீயநாட்டத்தினா லேயே சோதிக்கப்படுகிறார்கள். இச் சோதனைகளை சிலர் "கர்மா' என்றும் கூறுவர்.

Advertisment

கர்மா என்பதை விளக்கும்முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதை ஒன்றைக் கூறினார்.

Advertisment


ஒரு நாட்டின் மன் னன் நகர்வலம் சென்று கொண்டிருந்தான். அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப் பிட்ட கடைக்குமுன் வந்தபோது மன்னன் தன் மந்திரியிடம், ""இந்தக் கடைக் காரனைத் தூக்கி லிட்டுக் கொன்று விடவேண்டும்போல தோன்றுகிறது மந்திரி யாரே'' என்றான்.

அடுத்தநாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அங்கு சென்று அந்தக் கடைக்காரனிடம் எதார்த்தமாக ""வியாபாரம் நன்றாக நடக்கிறதா?'' என்று விசாரித்தார்.

அதற்கு அந்தக் கடைக் காரன், ""என் கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர். சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க் கின்றனர். நல்ல மணம் வீசுவதா கப் பாராட்டக்கூட செய்கின்றனர். ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது'' என்று வருத்தத்துடன் சொன்னான்.

அதன்பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்துபோனார். ""இந்த நாட்டின் அரசன் இறந்துபோனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக்கட்டைகள் தேவைப்படும். எனக்கு நல்ல வியாபாரமாகி கஷ்டமும் தீரும்'' என்றான் கடைக்காரன்.

அதைக்கேட்ட மந்திரிக்கு முதல்நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கி அப்படி சொல்ல வைத்தது என்று உணர்ந்தார் மந்திரி. உடனே மந்திரி கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கிக்கொண்டு அரசனிடம் சென்று, ""நேற்று நீங்கள் சொன்ன அந்த கடைக்காரன் இந்த சந்தனக் கட்டைகளைத் தங்களுக்குப் பரிசாகத் தந்தான்'' என்றுகூறி அதை அரசனிடம் சமர்ப்பித்தார்.

அந்த தங்கநிறமுள்ள சந்தனக்கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான். அந்தக் கடைக்காரனைக் கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டு, அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான். அந்த பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட வியாபாரி, இத்தனை நல்ல அரசனை தன் சுயநலத்துக்காக இறக்கவேண்டுமென்று எண்ணியதற்கு மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். அவன் மனம் திருந்தி நல்லவனாகவும் ஆனான். அவனது வறுமையும் தீர்ந்தது. குரு சீடர்களைக் கேட்டார்.

""சீடர்களே, இப்போது சொல்லுங்கள். கர்மா என்றால் என்ன?'' சீடர்கள் பலவிதமாக பதில் கூறினர். அவற்றையெல் லாம் மறுத்த குரு, ""கர்மா என்பது நமது எண்ணங்களே. நாம் அடுத்தவர்கள்மேல் அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறு ஏதேனும் வழியில் சாதகமாகத் திரும்பிவரும். மாறாக நாம் அடுத்தவர்மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அவை நம்மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்துசேரும்'' என்றார்.

நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே கிடைக்கும். நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும். நல்லதையே தேடி, நல்ல தையே சிந்தித்தால் நல்லதே நடக்கும் என்ப தற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதோடு, எதிர்மறை எண்ணங்களைப் போக்கி, நேர்மறை எண்ணங்களைத் தந்து வாழ்வைக் கோலாகலமாக்குகின்றவொரு அற்புத தலம்தான் கோவில்பட்டியில் உறைகின்ற ஸ்ரீபூவனநாதர் திருக்கோவில்.

இறைவன்: பூவனநாதர்.

இறைவி: செண்பகவல்லி அம்பாள்.

புராணப்பெயர்: கோயிற்புரி (மங்கைநகர்).

ஊர்: கோவில்பட்டி.

தலவிருட்சம்: களா (கிளா மரம்).

தீர்த்தம்: அகத்திய தீர்த்தம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்பு களுடன், சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடன் திகழ்கிறது இவ்வாலயம். அகத்தியர் உள்ளிட்ட பல மகரிஷிகள், செண்பக மன்னன், உள்ளமுடையான், சங்கன், பதுமன், இராமபிரான் ஆகியோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

"நஞ்செய்யொரு புன்செய்கள் நன்மரங்கள் பூஞ்சோலை

மஞ்சு தவழ் மாமலைகள் வானருவி- செஞ்சொல்

மருந்துதரும் பெண்கொண்டு வாழ்மாந்தர் நீத்தார்

பொருந்துநகர் கோவிற் புரி.'

-வ.உ. சிதம்பரனார்



திருப்பூவனம், திருமங்கைநகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோயிற்புரி என்றெல் லாம் பெயர்கள் இருந் தாலும், தற்பொழுது கோவில்பட்டி என்றே அனைவராலும் அழைக்கப்பெற்று வருகிறது. இவ்வூரைச் சுற்றி எட்டயபுரம், ஒட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, மணியாச்சி, கயத்தாறு, கழுகுமலை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள் அமைந்துள்ளன. "கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனார் இவ்வூரில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியது இத்தலத் திற்கு கூடுதல் பெருமையளிக்கிறது.

தலக்குறிப்பு

சிவன்- பார்வதி திருமணத்தின்போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்ததால் அதை சமன்செய்ய அகத்தியர் தென்திசை நோக்கி வரும்போது, வழியில் எதிர்த்த அரக்கர் களான வாதாபி, வில்வலன் ஆகியோரை அழித் தார். அதனால் உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்க பொன்மலை களாமரக்காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டுவிட்டு, அங்கு தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார்.

அம்முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வட கிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடிவரலாயிற்று. அதுவே அகத்தியர் தீர்த்தம் என்று பெயர் பெற்ற இக்கோவிலின் திருக்குளமாகும்.

அதன்பின் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் காட்சிதந்து, ""நீவிர் எமது பெருமைகளை முனிவர்களுக்குச் சொல்லியபின் பொதிகை மலைக்கு வந்து எமது திருமணக்காட்சியைக் காண்க!'' என்றருளி னார். இறைவன் கட்டளைப்படி அகத்தி யர் பூவனநாதரின் பெருமைகளை எடுத் துக்கூறி, ""இங்கு கோவிலும், கோவில் புரியும் உண்டாகும்'' என்றுகூறி தன் பயணத் தைத் தொடர்ந்தார்.

அவர் பொதிகை மலையை அடைந்த போது உலகம் சமநிலை பெற்றது.

சங்கன், பதுமன் வழிபட்டது முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத்தலைவர்களுக்கு சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. அது நீங்க, களாக்காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளியிருந்த ஈசனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர்.

அவர்கள்முன் ஈசன் தோன்றி, ""இன்று முதல் இச்சிவலிங்கம் பூவனநாதர் என்று பெயர்பெறும். புன்னைக்காவலில் (சங்கரன் கோவில்) உங்களது ஐயம் தீர்ப்போம்'' என்றார்.

(சிவனும் திருமாலும் பெரியவர்களே. நான் சிவன். திருமால் எனக்கு மனைவி. மேலும் அவளே எனக்கு அம்பு, வாகனம், அடியாளாகி, சக்தி சத்தனாகிய என்னுள் அடக்கம் என்பதில் ஐயமில்லை'' என்றுகூறி ஐயம் தெளிவித்து மறைந்தார்.)

செண்பக மன்னன் வரலாறு

வெள்ளிமலையில் சிவகுழாமிற் சிறந்த வனாக விளங்கிய வாமனன் என்பவன் பெண் மயக்கமுற்று தன்நிலை தாழ்ந்தது கண்டு நந்திதேவர் அவனை சபித்தார். அவன் வெம்பக்கோட்டையில் வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர்பெற்றான்.

சிவனடியாரான செண்பக மன்னன் கனவில் இறைவன் தோன்றி திருவாய் மலர்ந்தருளியபடி, அவன் பொன்மலைக் களாக்காட்டினை அடைந்து, அங்கு தவமியற்றிய முனிவர்களுடன் சேர்ந்து ஒரு ஊரை அமைக்க முயன்றான்.

அப்போது ஈசன் சித்தர் உருவில் வந்து, ""வடக்கே மதுரை; மேற்கே புன்னைவனம் மற்றும் கழுகுமலை; கிழக்கிலும் மேற்கிலும் கடல். அருகில் ஒளிர்குகை உள்ளது. அதில் ராமர் சிவவழிபாடு செய்தார். அவருடன் வந்தோர் தங்கிய இடம் மந்தித்தோப்பு. வானரங்கள் தங்கிய இடம் வானரம்பட்டி. மேலும் பாண்டவர்கள் சிவவழிபாட்டால் மங்களம் பெற்ற ஊரே பாண்டவர்மங்கலம். இவற்றின் நடுவே கோவில்புரியை ஆக்குவாயாக!'' என்று கூறி மறைந்தார். அதன்படி.. செண்பக மன்னன் லிங்க வடிவில் இருந்த பூவனநாதரை வழிபட்டு, அருவிக்கு மேற்கே பிள்ளையார் அருவிக்குளம், அருவிக்கு தென்மேற்கே வடக்குப் பார்த்த பிள்ளையார், பூவனநாதருக்கு தனிக்கோவில், தென்புறம் அம்பாளுக்குத் தனிக்கோவில் ஆகியவற்றை காமிகாகம முறைப்படி கட்டினான். செண்பக வேந்தன் அமைத்ததால் இத்திருத்தலத்து அம்பாள் செண்பகவல்லி எனப் பெயர் பெற்றாள். பின்னர் அந்த மன்னன் சாபநிவர்த்தி பெற்று மீண்டும் சிவகுழுவுக்குத் தலைவனாகி கயிலை சென்றான் என்று தலபுராணம் சொல்கிறது.

ss

""இத்தகைய சிறப்புமிக்க கோவிலைக் கட்டிய செண்பக மன்னனுக்கு நம்முன்னோர் கள் தனிச்சந்நிதி அமைத்துள்ளனர். இன்றும் தொடர்ந்து வழிபாடு நடைபெறுகிறது'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர் செண்பகராம பட்டர்.

சிறப்பம்சங்கள்

✷ இத்திருக்கோவிலில் காமிகாகம முறைப் படி ஐந்துகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

✷ ஆதியில் களாமரக்காடாக இருந்து, 1911-ல் வெறும் 5,016 பேர் மட்டுமே மக்கட் தொகையாகக் கொண்ட இவ்வூரில், தற்பொழுது லட்சக்கணக்கில் மக்கள் தொகை யுடன் பல ஆலைகள், தீப்பெட்டித் தொழிற் சாலைகள் உள்ளன. குறிப்பாக "கோவில்பட்டி கடலைமிட்டாய்' என்றாலே சிறுவர்முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும்வண்ணம், கடலைமிட்டாய் உற்பத்தி சாலைகள் கொண்ட தொழில் நகரமாகத் திகழ்கிறது.

✷ தீராத வயிற்று நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த திண்டுக்கல்லைச் சார்ந்த உள்ளமுடையான் என்பவர் (கி.பி.1029-க்கு முற்பட்ட ஒரு ஒளிநூல் புலவர்) கோவில் புரி இறைவனையும் அம் பாளையும் வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். அதற்கு நன்றிக்கடனாக சில திருப்பணிகள் செய்து இறைவன் அருளால் வீடுபேறு பெற்றார்.

✷ சங்கரபட்டர் எனும் மெய்யன்பர் தன் செல்வமெல்லாம் இழந்து, ஏழு வயதுடைய நீலகண்டன் என்னும் ஒரே மகனை இழந்த நிலையிலும் அடியார்களுக்கு உணவளித்து வந்தார். இத்தல ஈசன் அவர் பெருமையை உலகிற்கு உணர்த்த, அடியவராக சங்கரபட்டர் இல்லம் வந்தார். தனது வறுமை நிலையை வெளிக்காட்டாமல் மனைவியின் தாலியை விற்று அடியவருக்கு உணவளித்தார் சங்கரபட்டர். உண்ணும்போது ஈசன் நீல கண்டனை உயிருடன் வரவழைத்ததுடன் சங்கரபட்டருக்கு வீடுபேறும் அருளினார்.

✷ அம்பாள் அருள்தரும் அன்னை செண்பகவல்லி என்ற பெயரில் ஏழடி உயரத்தில் நின்ற கோலத் தில், எழில் கொஞ்சும் தோற்றத் தில் அருள்பாலிக்கிறான். இங்கு அம்பாளை வழிபட்ட பின்னரே ஈசனை வழிபடுவர். செண்பகவல்லி என்னும் பெயரில்லாத குடும் பங்களே இப்பகுதியில் இல்லை யென்று எண்ணுமளவிற்கு இத்தாயின் சிறப்பு மேலோங்கியிருக்கிறது.

✷ உண்டியல் திருடியவனை காவல் துறை காவலர் வடிவிலும், மூக்குத்தி திருடிய வனை பட்டர் உருவிலும் வந்து அம்பாள் பிடித்துக்கொடுத்தாள் என்பதும்; பெண் களிடம் பலநாள் நகைகள் திருடிய ஒரு பெண், ஒரு வெள்ளிக்கிழமை அம்மன் சந்நிதியில் பிடிபட்டாள் என்பதும் இத்தல அம்பிகைக்கு சிறப்பு ஆதாரங்களாகும்.

✷ தலவிருட்சமான களாமரத்தைச் சுற்றி கருங்கல்லினால் அமைக்கப்பட்ட மேடையில், ஒரே பீடத்தில் திருவிழா மூர்த்தி களான விநாயகர், நாகர்கள், நந்தியுடன் சுவாமி- அம்பாள், சாஸ்தா ஆகியோரின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

இந்த தலவிருட்சத்தின் முன்பு மணமாகப்போகும் மணமக்களின் பொருத்தம் பார்க்கும் நிகழ்ச்சி, மகப் பேறு வேண்டி மரக்கிளை களில் தொட்டில் கட்டுவது, இங்குள்ள சாஸ்தா முன்பு ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டுவது போன்றவை நடைபெற்று வருகின்றன.

✷ சித்திரை தீர்த்த விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆடியில் அம்பாள் வளைக் காப்பு உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசியில் திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் (பத்து நாட்கள்), மார்கழியில் தனுர்மாத திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி, மாசி சிவராத்திரி, பங்குனி மாதம் 11 நாட்கள் தேரோட்டப் பெருந்திருவிழா போன்றவை ஆலய விழாக்கள்.

✷ அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டதால் அகத்திய தீர்த்தம் என்றும், இதற்கு கெண்டியிலிருந்து நீர் வருவதுபோல் அருவிநீர் வருவதால் கெண்டித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. மனக்குறை களையும் உடற்பிணிகளையும் போக்கவல்ல தொரு மகிமைவாய்ந்த தீர்த்தம்.

திருக்கோவில் அமைப்பு

கோவில்பட்டி நகரில் உயர்வான கோவில்மேடு என்னும் மையப்பகுதியில், தேரோடும் வீதிகளின் நடுவே நெடிதுயர்ந்த திருமதில்களால் சூழப்பெற்று, கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கிறது ஆலயம். ஏழுநிலை ராஜகோபுரம், மூன்று நிலை கோபுரம் என சுவாமி, அம்பாளுக்குத் தனித்தனியாக நுழைவாயில்கள் உள்ளன. சுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு பொதுவான முன்மண்டபம் பழங்கால கல்தூண்களுடன் கலைச்சிறப்போடு திகழ் கிறது. இதனை திருக்கல்யாண மண்டபம் என்பர்.

சிவாலயத்துக்குரிய அனைத்து சந்நிதிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது இக்கோவில்.

திருக்கோவில் நிர்வாகிகள், திருப் பணிக்குழுவினர், ஆலயத் தக்கார், ஆன்மிக அன்பர்கள், கோவில்பட்டிவாசிகள் அனைவரது பெருமுயற்சியால், 150 லட்சம் செலவில் ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம் சமீபத்தில் எழுப்பி கும்பாபிஷேகம் கண்டு பொலிவுடன் திகழ்கின்ற ஆலயமாம்- மாமதுரை மீனாட்சி, நீலத்திரைக்கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரியன்னை, நெல்லையில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி ஆகிய வரிசையில், செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்துபாடிய அளவிடற்கரிய அருள்தரும் அன்னை செண்பகவல்லி அருள்கின்ற தலமாம்- எதிர்மறை எண்ணங் களைப் போக்கி நேர்மறை எண்ணங்களைத் தந்து, கோள்நிலைக் கோளாறுகள் அகற்றி கோலாகல வாழ்வை வழங்கு கின்ற கோவில்பட்டி கோமானாம் ஸ்ரீபூவன நாதரை வாசமிகு மலர்களுடன் வணங்கு வோம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு: நிர்வாக அதிகாரி, தொலைபேசி: 04632-220248

அ/மி பூவனநாத சுவாமி திருக்கோவில்,

சாத்தூர் வட்டம், கோவில்பட்டி போஸ்ட்,

தூத்துக்குடி மாவட்டம்-628 501.

செண்பகராம பட்டர் (அர்ச்சகர்),

அலைபேசி: 94428 17971

மோகன் பட்டர், சுவாமிநாத பட்டர், பழனியப்பன் (அலுவலகம்) அலைபேசி: 94435 27743.

அமைவிடம்: மதுரை- கன்னியா குமரி தேசிய நெடுஞ்சாலையில், சாத்தூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில்பட்டி. பஸ்- ரயில் வசதி உண்டு.

படங்கள்: போட்டோ: கருணா