"சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே' என்பார் பாரதி. ஆயிரக்கணக்கான எடுத்துக் காட்டுகளைச் சொல்லி இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு சொல்லிலேயே புலப்படுத்திவிட முடியும்.
இந்து தர்மத்தின் ஆணி வேர்- அச்சாணி வேதங்களே ஆகும். விதை என்று பொருள்படும் வடமொழிச் சொல்லிருந்து பிறந்ததே வேதம் என்னும் சொல் என்பார்கள். தமிழில் வேதத்தை சில சொற்களால் குறிப்பார்கள். அவற்றுள் ஒன்று "மறை' என்னும் சொல்லாகும்.
ஒரு பெரிய மரம் பரந்து விரிந்து கிடக்கி றது. அவற்றின் கிளைகள் தெரிகின்றன. காய்கனிகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. பருத்த அடிமரம் பளிச்சென தெரிகிறது. ஆனால், இவையனைத்தும் பூத்துக்குலுங்கி பச்சைப்பசேலென காட்சியளிக்கக் காரணமாக இருப்பதென்ன? வேர்தானே. அந்த வேர் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. மறைந்திருந்து அந்த மரத்தைத் தாங்குகிறது. அதுவே அனைத் திற்கும் அடிப்படையாகிறது. இதுபோலவே, மறைந்திருந்த அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதால்தான் வேதத்தை "மறை' என்னும் தமிழச்சொல்லால் குறித்தார்கள்.
"வேதத்தை விட்ட அறமில்லை' என்பது திருமூலர் வாக்கு. இதை "வேதோ தர்மமூலானாம்' என்கிறது வடமொழி வாக்கியம்.
கடவுளைப் பார்க்க விரும்பிய ஒருவன் கோவிலுக்குச் சென்றான். வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர், ""கடவுளைப் பார்ப் பது இருக்கட்டும். முன்னதாக கடலைப் பார்க்க லாம் வா'' என்றார். இருவரும் கடற்கரையை அடைந்ததும், ஞானி ஒரு கதை சொன்னார்.
""இந்தக் கடலில் வசிக்கும் ஒரு மீனுக்கு கடல் எங்கே இருக்கிறது என்று அறிய ஆவல். பலரையும் கேட்டுப் பார்த்தது அந்த மீன். "நாங்களும் கேள்விப்பட்டிருக்கி றோம். ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை' என்றே அவற்றிடமிருந்தும் பதில் வந்தது. இனி யாரைக் கேட்கலாம் என்று சிந்தித்தபடியே நீந்திய அந்த மீன் எதிர்பாராதவிதமாக கரைக்கு அருகில் வந்துவிட்டது. அலை களின் வேகத்தால் கரையில் சென்று விழுந்தது. இப்போது அந்த மீனுக்கு பதில் கிடைத்தது. "இதோ, இதுவரை நான் தேடிக் கொண்டிருந்த கடல் என் கண் ணெதிரில் தெரிகி றது.' அத்துடன் மற்றொரு விஷயமும் மீனுக் குப் புரிந்தது. "ஒரே இடத்தில் இருக்கின்றவரை நாம் இருக்கும் இடம் நமக்கு எப்படித் தெரியும்? விலகி வெளியே வந்தால்தானே அது புரியும்' என்பதையும் உணர்ந்தது'' என்று கதையை முடித்தார் ஞானி.
கதையைக் கேட்டவன், ""சுவாமி, எனக்கு விடைகொடுங்கள்'' என்றான். ஞானி, ""கடவு ளைப் பார்க்க வேண்டும் என்றாயே'' எனக் கேட்டார். ""இறைவனை உணர்ந்தால்தான் அவரை வழிபடமுடியும். முதலில் நான் என்னைவிட்டு விலகினால்தான் இறைவனைக் காணமுடியும் என்று அறிந்துகொண்டேன்'' என்று கூறி புறப்பட்டுவிட்டான் அவன்.
இறைவனைக் காணவும், வழிபடவும் இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். "அவனருளால் அவன்தாள் வணங்கி' என்கிறது சிவபுராணம். உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணிப்பதுதான் பரிபூரண சரணாகதி எனப்படுவது. அதனு டன் கூடியதுதான் உண்மையான பக்தி. இப்படி உண்மையான பக்தியுடன் வாழ்ந்த வர்கள்தான் நாயன்மார்கள். அத்தகைய நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணை யார் அவதரித்து முக்தியடைந்த ஒரு திருத்தலம் தான் அழகாபுத்தூர். அங்கு படிக்காசுநாதர் திருக்கோவில் உள்ளது.
இறைவன்: படிக்காசுநாதர், சொர்ண புரீஸ்வரர்.
இறைவி: அழகம்மை.
விசேஷ மூர்த்தி: சங்கு, சக்கரத்துடன் ஷண்முக சுப்பிரமணியர்.
புராணப் பெயர்: அரிசிற்கரைபுத்தூர், செருவிலிபுத்தூர், சிறுவிலிபுத்தூர்.
ஊர்: அழகாபுத்தூர்.
தலவிருட்சம்: வில்வம்.
தீர்த்தம்: அமிர்தபுஷ்கரணி தீர்த்தம்.
சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள் 274-ல், காவேரி தென்கரைத் தலங்கள் 127-ல் 66-ஆவது தலமாகத் திகழ்கின்றதும், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளுடன் அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடப்பட்ட பெருமை வாய்ந்த தலமாகவும் போற்றப்படுகிறது.
"அரிசிலின் கறை மேலனி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க் கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே!'
-அப்பர்
நாயன்மார் அவதார தலம்
புகழ்த்துணையார் சோழ நாட்டிலுள்ள செருவிலிப்புத்தூரில் சிவவேதியர் குலத்தில் தோன்றினார். சிவனது அகத்தடிமைத் தொண்டில் சிறந்த அவர், சிவபெருமானைத் தத்துவ நெறியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். இவ்வாலய நாதர் சொர்ணபுரீஸ்வரருக்கு நித்தியப்படி பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் என, தனது வாழ்வின் நோக்கமே இறைப் பணி ஒன்றே என்று அன்றாட சிவத்தொண்டு செய்துவரலானார்.
இவர் தலநாதருக்கு ஆறுகால பூஜைக்காக அருகிலுள்ள அரிசி லாற்றிலிருந்து பெரிய கும்பத்தில் நீரை நிரப்பித் தனது தோளில் சுமந்துவந்து, லிங்கத் திருமேனியை அபிஷேகத்தால் குளிரச் செய்வார். இவர் மனமும் குளிர்ந்துபோகும்.
இப்படி இளமையில் ஆரம்பித்த சிவப்பணி முதுமைவரையிலும் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இந்நிலையில் இயற்கையின் இடர்ப்பாடோ அல்லது இறைவனின் சோதனையோ என்பதற்கேற்றவாறு கடுமையான வறட்சி. விளைநிலம் பாலைவனமாக மாறி பஞ்சம் தலை விரித்தாடியது. அப்போது ஒரு நாள் அவர் பசிமயக்கத்தில் குறைந்த அளவே இருந்த ஆற்றுநீரை குடத்தில் நிரப்பி தோளில் சுமந்துவந்து அபிஷே கம் செய்தபோது, கைதவறி நீருடன் குடம் சிவலிங்கத் திருமேனி மீது விழுந்துவிட்டது. புகழ்த்துணை யார், "ஐயனுக்கு அபச்சாரம் செய்து விட்டேனே! குடம் விழுந்ததால் அவருக்கு வலிக்குமே' என்று அரற்றி, அந்த வேதனை தனக்கு வந்த நிலையில் சுயநினைவற்று மயக்க மடைந்தார்.
ஒளிமயமான இறைவன் வேதியரின் கனவில் தோன்றி, "உனது நிலை யாவரும் அறிந்ததே! ஆகவே பஞ்சம் தீரும்வரை சதுரஆவுடையாரின் அருகிலுள்ள வாயிற்படியில் ஒரு தங்க நாணயம் வழங்குகிறேன்.
அதனைப் பெற்று உனது வறுமையும், மற்றவர்களின் வறுமையும் நீங்கி, ஆலயத்தொண்டை தங்குதடையின்றி செயல்படுத்தி வரவும்' என்றருளினார்.
இவ்வரலாற்றை சுந்தரர் ஏழாம் திருமுறையில்-
"அகத்தடிமை செய்யும் அந்தணன்றான்
அரிசீற்புனல் கொண்டு வந்தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்
முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற் படியும்
வரும் என்றோரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்பகச் செய்து கந்திரு
பொழிலார் திருப்புத்தூர் புனிதரே'
என்று உறுதி செய்துள்ளார். தலநாதரின் ஆணைப்படி புகழ்த்துணையார் இறைவன்
கொடுத்த தங்கக் காசினை படியிலிருந்து பெற்று நித்தியக்கடன்களைச் செய்து வரலானார்.
தலநாதரின் பெயர் வரலாற்றில் சொர்ணபுரீஸ் வரர் என்றாலும், அடியாரின் தொண்டு காரண மாக படிக்காசுநாதர் என்ற பெயரே வழங்கப் பட்டு வருகிறது.
இறைவன் திருவருளால் வான் பார்த்த தரிசுநிலம் மழை பொழிந்து விளைநிலமாகி பஞ்சம் பறந்தோடியது. அதுமட்டுமல்ல; புகழ்த் துணையார் இங்கேயே முக்தியடைந்தார். சிவன் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.
ஆலய பூஜைகள் இன்றும் தொடர்ந்தநிலை யில், புகழ்த் துணையாரின் வம்சாவளியினரான சிவாச்சார்யார்கள் பூஜை செய்து வருகின்றனர். ""நாயனாரின் சிவத்தொண்டினைப் பின்பற்றி சிவகடாட்சம் பெறவேண்டும் என்பதே எனது விண்ணப்பம். எனது கோரிக்கையை தலநாதர் ஏற்பார் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை'' என்று கூறுகிறார் ஆலய அர்ச்சகரான கார்த்திகேய குருக் கள்.
தல வரலாறு
ஒருசமயம் பிரம்மா கயிலை சென்றபோது அங்கிருந்த முருகனை கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், ""நீங்கள் யார்?'' எனக் கேட்டார். அவர், ""நான் பிரம்மா. உலகத் தைப் படைத்தவன் நானே'' என்று கர்வத்து டன் கூறினார்.
முருகன், ""எந்த மந்திரத்தின் அடிப்படை யில் படைக்கிறீர்கள்?'' எனக் கேட்டார். ""ஓம் என்னும் பிரணவ மந்திர அடிப்படை யில்தான்'' என்றார் பிரம்மா. முருகன் அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்க, பிரம்மாவால் சொல்ல இயலவில்லை.
எனவே அவரது தலையில் குட்டி பதவியைப் பறித்தார் முருகன்.
இதையறிந்த சிவன் முருகனிடம் பிரம்மாவுக்குப் பதவியைக் கொடுக் கும்படி கூறினார். முருகன் கேட்க வில்லை. அப்படி யானால் பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் சிவன் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும், வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன்.
எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.
சிவன் அவருக்கு காட்சி தந்து, ""தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். ஆனால் தண்டிக் கத்தான் கூடாது'' என்று அறிவுரை கூறினார். இவரே இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.
சங்கு சக்கர முருகன்
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, அவர்களை அழிக்க இங்கிருந்த முருகனை அனுப்பினார் சிவபெருமான். அப்போது சிவனும் தேவர்களும் முருகனுக்குப் பல ஆயுதங்களைக் கொடுத்தனர்.
திருமால் தனது சங்கு, சக்கரத்தைக் கொடுத்தார். அவற்றுடன் சென்ற முருகன் அசுரர்களை அழித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் சங்கு, சக்கரத் துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக உள்ளது.
சிறப்பம்சங்கள்
✷ புகழ்த்துணை நாயனார்க்குசுயம்புமூர்த்தியாய்க் காட்சிதந்த படிக்காசுநாதர் சந்நிதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, அவற்றுள் ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜிக்கின்றனர் பக்தர்கள். இதனால் குடும் பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது கண்கூடு.
✷ பொதுவாக நவகிரக மண்டபத் தில் சூரியனும் சந்திரனும் கிழக்கு நோக்கியே இருப்பர். ஆனால் இங்கு எதிரெதிரே பார்த்தபடி உள்ளனர்.
எதிரே ஒன்பது குழிகள் உள்ளன. இந்தக் குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம். இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது.
முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், நவகிரக சந்நிதியில் சூரியசந்திரருக்குப் பூஜை செய்து, நவகிரகக்குழியில் தீபமேற்றி வழிபட்டால் தோஷம் விலகி நன்மை பயக்கும்.
✷ இந்திர மயில்மீது அமர்ந்த கோலத்திலிருக்கும் முருகனை கல்யாண ஷண்முக சுப்பிர மணியர் என்று அழைக்கிறார்கள். அருகில் வள்ளி, தெய்வானையும் உள்ளனர். இவரது திருக்காட்சி "ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் விசேஷமான ஒன்று.
✷ திருமாலின் ஆயுதங்களுடன் இருக்கும் முருகன் சந்நிதி அருகில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.
✷ இத்தல இறைவனை வேண்டிக்கொள்ள தவறைத் தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவமும் உண்டாகும் என்று தல புராணம் சொல்கிறது.
✷ திருமண, புத்திர தோஷமுள்ளவர்கள், முருகனுக்கு அமாவாசையன்று பால் பாயசம் படைத்து பூஜை செய்தால், தோஷம் நீங்கி சந்தோஷம் குடிகொள்ளும் என்பது இவ்வாலயத் தின் நெடுங்கால நம்பிக்கை.
✷ ஆவணி ஆயில்ய நட்சத்திர நாளில் புகழ்த் துணை நாயனாரின் குருபூஜை வெகு விமரிசையாக நடக்கும்.
✷ மாசி மகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, பிரதோஷம் போன்றவை ஆலய விழாக்கள்.
✷ அழான வரன் அமைத்துத் தருவதில் (ஆடவர்க்கும் பெண்டிருக்கும்) இத்தல அழகம்மை உலகநாயகியாகத் திகழ்கிறாள்.
✷ இத்தலத்தின் பெயர் செருவிலிபுத்தூர், சிறுவிலிபுத்தூர், அரிசிற்கரைப்புத்தூர் என்றிருந்தாலும் அழகன் (முருகன்) புதுமை யான கோலத்தில் அருட்காட்சி தந்ததால் அழகன்புத்தூர் என்றிருந்து அழகாபுத்தூர் ஆனது. அதேபோல் இறைவன்- இறைவி சொர்ணபுரீஸ்வரர்- சௌந்தரநாயகி என்றிருந்தா லும் படிக்காசுநாதர்- அழகம்மை என்று மக்கள் மனதில் பதிவாகியுள்ளது.
கோவில் அமைப்பு
பிரதான சாலையில் நம்மை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவு உள்ளது.
அதனையடுத்து அமிர்தபுஷ்கரணி தீர்த்தக் குளம் உள்ளது. மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்தால் சொர்ண விநாயகர் சந்நிதி உள்ளது. இவரை வணங்கியபின் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
ஆகமவிதிகளின்படி கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் பரிவார தெய்வங் களின் சந்நிதிகள் விநாயகர் முதல் பைரவர் வரை உள்ளது. திருச்சுற்றுமுடிவில் நவ கோள்களும், ஈசான்யத்தில் சொர்ணபைரவர், காலபைரவரும் அருள்கின்றனர்.
உள்ளே பெரிய மண்டபத்தில் மூலவர் தாமரை போன்ற ஆவுடையாரில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் மேற்கு நோக்கியும், அழகம்மை நின்ற நிலையில் தெற்கு நோக்கியும் அமைந்துள்ள விதம் அற்புதம். அம்மண்டபத்தில் இருகரம் கூப்பிய நிலையில் புகழ்த்துணை நாயனார் தனது மனைவி லட்சுமியுடனும்; சுந்தரர் பரவை நாச்சியாருடனும் இருக்க, அவர் களுடன் அப்பர், சம்பந்தரும் வடக்கு நோக்கிக் காட்சி தருகின்றனர்.
அப்பர், சம்பந்தர் இரண்டாம் திருமுறை யிலும், சுந்தரர் ஏழாம் திருமுறையிலும் பாடப்பட்ட தலமாம்- புகழ்த்துணை நாயனா ரின் துன்பத்தைப் போக்கியதுபோல தன்னை நாடிவந்து ஏழ்மை நிலையினை மாற்றித்தர வேண்டுமென்று விண்ணப் பித்தால், வறுமையை விலக்கி வசந்த வாழ்வைத் தருகின்ற அழகாபுத்தூர் அரனாம் படிக்காசுநாதரை வழிபடுவோம்; படிப்படி யாய் வாழ்வில் உயர்வோம்.
காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: கார்த்திகேய குருக்கள், அலைபேசி: 99431 78294, படிக்காசுநாதர் திருக்கோவில், அழகாபுத்தூர் போஸ்ட், தஞ்சை மாவட்டம்-612 401.
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. பஸ் வசதி நிறைய உண்டு.
படங்கள்: போட்டோ கருணா