சொல்லைச் செயலாக்கும் சொன்னவாறு அறிவார்!

/idhalgal/om/know-word

பிறவி குணத்தை மாற்றுவது அரிது என்பதற்கு நாய் வாலை உவமையாகக் காட்டுவதுண்டு. மனிதனாகப் பிறந்தவன் எக்காலத்திலும் மனிதப்பண்புகளிலிருந்து பிறழவே கூடாது. ஒருசில அம்சங்களில் நாய் வெறுக்கத்தக்கதாகக் காணப்பட்டாலும், அதனிடமுள்ள வேறு குணங்கள் அதன் பெருமையை பறைசாற்றுகின்றன.

நாய் மிக நன்றியுள்ள பிராணி. தன்னை வளர்க்கும் எஜமானனை வேறு எவரும் நெருங்காது பக்கத்துணையாக நின்று காப்பதுடன், அவரது குடும்பத்தாரையும் கண்ணை இமை காப்பதுபோல பாதுகாக்கும்.

கடவுளைக் கண்டுகொண்ட ஒரே ஜீவன் நாய் என்று ஒரு வழக்கு உள்ளது. எங்கிருந்தாலும்- எந்த வடிவத்திலிருந்தாலும் நாய் தன் எஜமானனைக் கண்டுகொள்ளும். மனிதனோ கடவுள் மாறுபட்ட உருவத்தில் வரும்போது கண்டுகொள்வதில்லை. ஓர் எலும்புத்துண்டை நாயிடம் காட்டி எங்கு மறைத்து வைத்தாலும் அது தன் மோப்பசக்தி மூலம் கண்டறியாமல் விடாது. ஆனால் இறைவனைத் தேடும் முயற்சியில் ஈடுபடும் மனிதன் இடையில் கவர்ச்சிகளில் சிக்கித் தன் இலக்கில் தவறிவிடுகிறான்.

பின்னர் நடப்பதை முன்கூட்டியே அறியும் ஜீவராசிகளில் நாயும் ஒன்று. சுனாமியின்போது அந்தமான், நிக்கோபர் போன்ற தீவுகளிலிருந்த ஜீவராசிகள் அனைத்தும் மேட்டுக்கு ஓடிவிட்டன. மனிதன் மட்டுமே அழிந்தான்.

நாயைக் கண்டு சகுனம் பார்க்கும் முறை ஒன்றுள்ளது. பயணம் புறப்படும் நேரத்தில் வாயில் இறைச்சித்துண்டைக் கவ்விக்கொண்டிருக்கும் ஒரு நாயைப் பார்த்தால் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. ஆனால் நாய் ஒரு புதிய எலும்பையோ கொள்ளிக்கட்டையையோ தூக்கிச் செல்வதைப் பார்த்தால் கெட்ட சகுனமாகவும், மரணத்தின் முன்னறிவிப்பாகவும் கருதப்படுகிறது. நாய் தூங்கும்போது மூன்றுமுறை பூமியில் மண்ணைப் பறிக்கும். அந்தத் தூசி எந்த திசையை நோக்கிச் செல்கிறதோ அந்த திசைக்கு எதிர்ப்புறம் அது தூங்கும். பூமித்தாயையும், மும்மூர்த்திகளையும் வணங்கிவிட்டுப் படுப்பதாக அர்த்தம்.

பெறற்கரிய பெறும்பேறுபெற்ற மாணிக்கவாசகர் தனது தேன்சிந்தும் திருவாசக மலர் ஒவ்வொன்றிலும் தன்னை "அடி நாயேனை', "நாயடியேன்', "நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னை', "பொல்லா நாயான புன்மையேனை' என்றெல்லாம் குறிப்பிடுவது மட்டுமல்லாமல், "நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே' என சிவபுராணத்தில் ஈசனைக் குறிப்பிடுகிறார்.

ஒருவன் அலைந்து திரிந்து பிழைக்கும் வாழ்க்கையை நாய்ப் பிழைப்பு என்கிறோம். மற்றவரிடம் சேவகம் செய்து பிழைப்பதும் நாய்ப்பிழைப்புக்க

ஒருவன் அலைந்து திரிந்து பிழைக்கும் வாழ்க்கையை நாய்ப் பிழைப்பு என்கிறோம். மற்றவரிடம் சேவகம் செய்து பிழைப்பதும் நாய்ப்பிழைப்புக்கு சமம் என்கிறார்கள்.

இப்படி நாய்ப் பிழைப்புபோல் வாழ்பவர் களை நியாயமான பிழைப்பாய் நல்ல நிலைக்கு மாற்றம் செய்து, அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியைத் தக்கவைக்கும் மகத்தானதொரு திருத்தலம்தான் குத்தாலம் உக்தவேதீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: உக்தவேதீஸ்வரர், உத்தவேதீஸ்வரர், சொன்னவாறறிவார்.

இறைவி: பரிமள சுகந்தநாயகி (அமிர்தமுகிழாம்பிகை), அரும்பன்ன வனமுலையாள் (மிருத்முகிளகுஜாம்பிகை).

தலவிநாயகர்: துணைவந்த பிள்ளையார்.

புராணப்பெயர்: திருத்துருத்தி.

ஊர்: குத்தாலம்.

தலவிருட்சம்: உத்தால மரம் (ஆத்தியில் ஒருவகை).

தீர்த்தம்: பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்.

amman

தருமபுர ஆதினத்திற்குட்பட்ட இவ்வாலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களில் 37-ஆவது தலமாகப் போற்றப் படுவதோடு மூவராலும் பாடல்பெற்ற பெருமையுடன் சிறந்து விளங்குகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய உன்னதமான திருத்தலம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அச்செல்வத்தை தரவல்லதொரு திருத்தலமாக இது விளங்கிவருகிறது.

"மின்னுமா மேகங்கள் பொழிந்திருந் தருவி

வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்

அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்

அடியிணை தொழதெழும் அன்பராம் அடியார்

சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

என்னை நான் மறக்குமா றெம்பெரு மானை

யென்னுடம் படும்பிணி இடர்கெடுத்தானை.'

-சுந்தரமூர்த்தி சுவாமிகள்

ஆற்றிடைக்குறையாக உள்ள தலங் களுக்கு துருத்தி என்று பெயர். இத்தலமும் அவ்வாறேயாகும். முன்னர் இருபுறமும் சென்ற காவிரி தற்போது கோவிலின் வடப்புறம் ஓடுகின்றது. உத்தால மரம் தலவிருட்சமாதலின், உத்தாலவனம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் மருவி குத்தாலம் என்றாயிற்று.

தல வரலாறு

பரத மாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என கடுந்தவம் புரிந்தார். அவரது வேண்டுகோளையேற்ற இறைவன் வேள்விக்குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளானாள். அவளது ஒரே விருப்பம் சிவபெருமானைக் கணவனாக அடைவது என்பதுதான். காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபடத் தொடங்கினாள். 8-ஆவது நாள் வழிபாடு செய்ய வந்தபோது அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கரம் பற்றி அழைத்தார். ஆனால் பார்வதி சிவனுடன் செல்லாமல், ""இறைவனே, என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும்படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்'' என்று வேண்டினாள். இறைவனும் அதற்கிசைந்து, ""நாமே விதித்த விதியின்படி நடந்து உம்மை மணம் கொள்வோம்'' என்று அருள்புரிந்தார். அதனால் இறைவனுக்கு சொன்னவாறு அறிவார் என்று பெயர் வந்தது.

சில காலம் கழித்து நந்தியை பரத முனிவருடன் மணம் பேசிவர தூது அனுப்பினார் ஈசன். முனிவரும் சம்மதிக்க மணநாள் குறிக்கப்பட்டது. கயிலையிலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவபெருமான் புறப்பட்டார். விநாயகர் முன்னே செல்ல, உத்தாலம் என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்துகொண்டே வந்தது. குத்தாலம் வந்து பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்துகொண்டார். சிவன் இங்குவந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்துவந்த பாதுகைகளையும், கயிலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்துவந்த உத்தால மரத்தையும் விட்டுச்சென்றார் என்பது வரலாறு.

பாம்பாட்டியாக வந்த சிவன்

உருத்திரசன்மன் என்பவன் முக்திபெற காசிக்குச் சென்று கொண்டிருந்தான். இத்தலமும் காசிக்குச் சமம்தான் என்பதை உணர்த்த சிவன் குண்டோதரனை அழைத்து, ""நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்து'' என்றார். அதன்படி பாம்பு இவனைத் தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கி விழுந்தது. பாம்பைக் காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவில் வந்தார். அவ்வாறு வந்திருப்பது சிவபெருமானே என்பதையறிந்து அவன் வணங்க, ""இத்தலத்தை தரிசித்தாலே காசியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்'' என்று கூறியருளினார் சிவன்.

சிறப்பம்சங்கள்

✷ சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இத்தல இறைவன்.

✷ பரத முனிவர் மகப்பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தபோது, அம்பிகையே வேள்விக் குண்டத்தில் தோன்றியது மிகவும் சிறப்பம்சம் வாய்ந்தது.

✷ மூலவர் உக்தவேதீஸ்வரர், உத்தவேதீஸ்வரர் என்றிருந்தாலும் கல்வெட்டில் இத்தல இறைவனை வீங்குநீர் திருத்துருத்தியுடைய மகாதேவர், உடையார் சொன்னவாறு அறிவார், திருக்கற்றளி மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

✷ மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் திருத்துருத்தி புராணம் பாடப்பட்ட பெருமையுடன் திகழ்கிறது.

✷ இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபர், ஆங்கீரசர், கௌதமர், மார்க் கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகத்தியர் ஆகியோரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

✷ உமையம்மை, அக்னி, வருணன், காமன், சிவபக்தன் வித்துன்மாலி, கதிரவன், உருத்திரசன்மன், பரதன், புண்டரீசன், ககோளமுனிவர், புலகன், குச்சன், விக்ரமன், சுந்தரர், சதானந்தர் வச்சன், சோமசேகரன், தரும சன்மன், சுமதி, சௌதரிசன முனிவர் ஆகியோரும் இறைவனை தரிசனம் செய்துள்ளனர்.

✷ தன்னால் தீண்டப்படும் பொருட்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி தேவன், இங்கு வந்து தன் குறையைப் போக்கி அனைவருக்கும் பயனுள்ளவனானான்.

✷ திருத்துருத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருவேள்விக்குடியில் வேள்விப் பூஜை செய்து, திருமணஞ்சேரியில் மணம் புரிந்து, மணம் புரிந்தபின் அம்மையப்பன் இங்குவந்து, கயிலாயத் திலிருந்து நிழற்குடையாக வந்த உத்தாலமரத்தின்கீழ் தன் பாதத் திருவடிகளை விட்டுவிட்டு கயிலை சென்றார். சிவபெருமானின் இப்பாதங்கள் நான்கு வேதங்களை உள்ளடக்கியது. அவற்றை இப்போதும் காணலாம்.

✷ வித்துன்மாலி என்ற அசுரன் சிவபெருமானை எண்ணி இடையறாது பெரும் தவமிருந்து சூரியனைப்போல ஒளியுடையவனாக மாறினான். இதனால் வித்துன்மாலிக்கும், சூரியனுக்கும் வானவெளியில் போர்மூள, சூரியனால் பூமிக்குத் தன்னொளியை வழங்க முடியாமல் போனதாம். இதனால் சினந்த சிவபெருமான் சூரியனின் பதவியைப் பறித்தார். சிவபெருமானின் கோபம் தணியவும், இழந்த தன் பதவி நிலைக்கவும், குத்தாலமாகிய இத்தலத்தில் உறையும் சொன்னவாறு அறிவாரை வணங்கி அருள்பெற்றான் சூரியன். அந்த நாள் கார்த்திகை கடை ஞாயிறு. "அன்றைய தினம் காவிரியில் நீராடியபின் கோவில்குளமான சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோர் சகல செல்வங்களும் பெறவேண்டும்' என்று சூரியன் கேட்ட வரத்தையும் இறைவன் வழங்கினார்.

✷ இத்தலத்தில் கல்யாண சனி உள்ளார். சனி பார்வையில் எந்தவொரு சுவாமியும் இருக்காது. இங்கு பிள்ளையார் இருப்பதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும். இந்தியாவிலேயே தோஷமில்லாத கல்யாண சனி பகவான் இங்கிருப்பது முக்கிய சிறப்பு.

✷ காரண, காமீக அடிப்பைடயில் தினமும் ஐந்துகால பூஜைகள் நடக்கும் இவ்வாலயத்தில் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு போன்ற திருவிழாக்கள் விமரிசையாக நடக்கும். மற்றும் சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறைப்படி நடக்கும்.

✷ "இறைவனே திருமணம் நடத்த வந்தபடியால், இங்கு அர்ச்சனை செய்து வழிபட்டு சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்துகொண்டால் எப்பேர்ப்பட்ட திருமணத்தடையும் நீங்கிவிடும்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர்.

✷ இத்தலத்திற்கு சோழர் மற்றும் விஜயநகரத்தார் நிலம் வழங்கியதும், ராஜேந் திர சோழன் தனது படைகள் வெற்றி பெறுவதற்காக சைவ அன்பர்களுக்கு உணவளிக்க பொருள் தந்ததும் மற்றும் ஒரு மடம் கட்ட நிலம் வழங்கியதும், விக்ரமதேவன் 1123-ஆம் ஆண்டு ஆகஸ்டு 19-ஆம் தேதி 90 பொன் வரக்கூடிய வரிகளைத் தந்தார் என்பதும் கல்வெட்டுகள்மூலம் அறியப்படும் செய்திகள்.

✷ பிறந்து வளர்ந்து மணப்பருவம் அடைந்த பரிமள சுகந்தநாயகி மணப்பெண் வடிவில் மேற்கு நோக்கி தனிச்சந்நிதியுடனும், அன்பின் திருவுருவமான தாய் அம்சத்தில் அரும்பன்ன வனமுலையாள் நின்ற நிலையில் தெற்கு நோக்கியும் அருள்வது சிறப்பு.

✷ செல்வ நிலையை பக்தர்களுக்கு உயர்த்தும் வண்ணம் குபேர கணபதி தெற்கு நோக்கி கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார். அவரை இரு குபேரர்கள் வணங்குகின்றனர்.

✷ மூலவிமானத்தின் கிழக்குப்புறம் இறைவனின் திருமணக்கோலத்தை சுதைச்சிற்ப வடிவில் அமைத்திருப்பது கண் கொள்ளாக்காட்சி.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, தெற்கில் ஒரு நுழைவாயிலும் மேற்கில் ஐந்துநிலை ராஜகோபுரத்துடன்கூடிய நுழைவாயிலும் கொண்டு இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது ஆலயம். மேற்கு நோக்கிய சந்நிதி. அனைத்துப் பரிவார மூர்த்திகளும் சிறப்புடன் எழுந்தருளியுள்ளனர்.

"துருத்தியஞ் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே' என அப்பர் பருமானால் பாடப்பட்ட தலமாம்- "பொங்கிலங்கு பூணநூலுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா வடங்கி வாழ்வதென்கொலோ' என சம்பந்தரால் பாடப்பட்ட தலமாம்- "சொன்னவா றறிவார் துருத்தியார்' என சுந்தரரால் பாடப்பட்ட தலமாம்- காசியை தரிசித்த பேறு கிட்டுகின்ற தலமாம்- கனவிலும் கிட்டாத கயிலாயக் காட்சி கிடைக்கும் வகையில் ஈசன் திருவடிகளை உத்தால மரநிழலில் அன்பர்கள் காணும் வண்ணம் விட்டுச்சென்ற தலமாம்- நியாயமான கோரிக்கைகளைச் சொன்னால் சொன்னவாறு அறியும் குத்தாலத்து குணவானாம் ஈசனை அன்புடன் அடிபணிவோம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: இராஜசேகர குருக்கள், செல்: 94878 83800

அ/மி உக்தவேதீஸ்வரர் திருக்கோவில்.

குத்தாலம் போஸ்ட், நாகை மாவட்டம்-609 801.

அமைவிடம்

கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையிலிருந்து தென்மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குத்தாலம். பஸ் வசதி நிறைய உண்டு.

படங்கள்: போட்டோ கருணா

இதையும் படியுங்கள்
Subscribe