அயன்புரம் த. சத்தியநாராயணன்
ஒருசமயம் ஈசன் உமையவளைப் பார்த்து "காளியே வருக' என்றழைத்தாராம். கருமை நிறத்தவள் என்ற பொருளில் தன்னை அவர் அழைத்ததாகக் கோபம் கொண்ட பார்வதி தேவி, "எனது கருமை நிறத்தைப் போக்கி பொன்னிறமான உடலைப் பெறுவேன்' என்று கூறியதுடன், அவருடைய அனுமதி பெற்று "கேதாரம்' (கேதார்நாத்) எனும் திருத்தலம் வந்து அங்கு கடும் தவம்புரிந்து சிவபூஜை செய்து ஈசனருளால் பொன்னிற மேனியைப் பெற்று "கௌரிதேவி' எனும் திருநாமம் பெற்றாளாம்.
கயிலைமலையில் தேவர்கள் சூழ சிவபெருமான் கௌரிதேவி சகிதமாக அமர்ந்திருந்தார்.
அச்சமயம் அங்கு வந்த பிருங்கி மகரிஷி ஈசனை மட்டும் வணங்கிவிட்டு கௌரி தேவியாரைக் கண்டுகொள்ளாமல் சென்றார். இதனால் கோபம்கொண்ட கௌரிதேவி பரமசிவனை நோக்கி, ""பெருமானே, இந்த உலகிலுள்ள சகல ஜீவராசிகளும் நம்மை அம்மையப்பனாக ஒன்றாக பாவித்து வணங்கிவருகையில், இந்த பிருங்கி முனிவர் மட்டும் என்னை மதியாமல் தங்களை மட்டும் வணங்கிச்செல்வது ஏன்?'' என்று வினவினாள்.
அதற்கு பரமசிவன், ""தேவி, எல்லாருக்கும் வேண்டியதைப் பெறுவது, வீடுபேற்றை அடைவது என்று இரண்டுவிதப் பிரார்த்தனைகள் உண்டு. வீடு, செல்வம், நோயின்மை போன்றவை வேண்டுவோர் உன்னையும் என்னையும் சேர்த்து வணங்கி நமது அருளால் வேண்டியதை அடைந்துவருகின்றனர். ஆனால் "வீடுபேறு' மட்டும் விரும்புகின்ற பிருங்கி போன்றவர்களுக்கு உனதருள் தேவையில்லை. அதனால் என்னை மட்டும் வணங்குகின்றனர்'' என்றார்.
ஈசனின் பதிலால் சமாதானமடையாத தேவி, ""எனது அருளை விரும்பாத பிருங்கி முனிவருக்கு என்னுடைய அம்சமாகிய தசை, உதிரம் எதற்கு? அதை விட்டுவிடலாமே'' என்றாள்.
இதனைக் கேட்ட பிருங்கி மகரிஷியார், ""கௌரிதேவி கூறியது சரிதான். சிவமே என் உயிர்ப்பொருள் என்றுணர்ந்த எனக்கு தசையும் உதிரமும் தேவையில்லை'' என்று கூறியதுடன், தன் தவ வலிமையால் அவற்றை இழந்து என்புருவனார். சக்தியை இழந்த அவரால் நிற்க முடியவில்லை. அப்போது ஈசன் அவருக்கு மூன்றாவது காலை வழங்கியருளினார். தன்னை வணங்காத பிருங்கி முனிவருக்கு ஈசன் அருள்புரிந்ததைக் கண்டு வருந்திய கௌரிதேவியார் கயிலையைவிட்டு வெளியேறி பூலோகம் வந்து, அங்கு கௌதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தாள். அவரிடம் நிகழ்ந்தவற்றைக்கூறி, ""ஈசனைவிட்டுப் பிரிந்துவந்துவிட்டேன்'' என்றாள்.
கௌதம முனிவர் கௌரிதேவியாரிடம் நல்ல வார்த்தைகளைக்கூறி, மறுபடியும் கயிலை செல்லும்படி அறிவுறுத்தினார். அதற்கு கௌரிதேவியார், ""முனிவரே, அவரைப் பிரிந்து வந்த நான் மீண்டும் கடும் தவம்செய்து பூஜித்துதான் அவரை அடையமுடியும்'' என்றாள்.
இதைக்கேட்ட கௌதம முனிவரோ, ""அம்மா தேவியாரே, நீ ஈசனை அடைய நீண்டநாள் கடும் தவமிருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு அவரே அருளிய எளிய விரதம் ஒன்று இருக்கிறது.
அதனை நீ கடைப்பிடித்தாலே போதும்- விரைவில் உனக்கு சிவதரிசனம் கிட்டும். அவரை அடைந்துவிடலாம்'' என்றார். உடனே கௌரிதேவி, ""முனிவரே, ஈசனை எளிதில் அடைய உதவும் விரதத்தை உடனே கூறுங்களேன்'' என்று வேண்டினாள்.
கௌதம முனிவர், ""கௌரி தேவியாரே, நீ உடனே கேதாரம் எனும் திருத்தலம் சென்று, கங்கைக்கரையில் 21 நாட்கள் ஈசனைப் பூஜித்து தவம் புரிந்தால் போதும். ஈசன் உன்னை ஆட்கொள்வார்'' என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பினார்.
அதன்படி கௌரிதேவியார் 21 நாட்கள் விரதமிருந்து தவம்புரிய, அதனால் மனமகிழ்ந்த பரமசிவன் இனி என்றும் தன்னைவிட்டுப் பிரியாதிருக்கும்படி கௌரி தேவியாரை தனது இடப்பாகத்தில் இணைத்துக்கொண்டு, கௌரி சங்கரனாகக் காட்சி தந்தார். ஈசனை அடைய கேதாரம் வந்து தவம்புரிந்து கௌரிதேவியார் அனுஷ்டித்த இந்த விரதம் "கேதார கௌரி விரதம்' என்று கொண்டாடப்படுகிறது.
பொதுவாக தீபாவளிக்கு அடுத்த அமாவாசையன்று ஒருநாள் விரதமாக இது அனுஷ்டிக்கப்படுகிறது. கேதார கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் கன்னிப்பெண்களுக்கு சிறந்த கணவனும், மணமான பெண்களுக்கு இல்லற வாழ்வில் இன்பமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வடமொழியில் "கேதம்' என்ற சொல்லுக்கு துன்பம் என்பது பொருள். கேத+ஹர+ஈஸ்வர என்ற இப்பதத்திற்கு "துன்பங்களைப் போக்குகிற இறைவன்' என்று அர்த்தமாகும்.
எனவே கேதாரீஸ்வர கௌரி விரதத்தை அனுஷ்டிப்பதால் பெண்கள் ஈசனருளைப் பெற்று துன்பங்களைப் போக்கிக்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.