தீபாவளி 4-11-2021
பாரத நாடு பழம்பெரும் நாடு. பெருமைவாய்ந்த இந்த நாட்டில் பற்பல புண்ணிய நதிகள் ஓடினாலும், காசியில் ஓடும் கங்கை நதிக்கு ஒரு தனிப்பெருமையுண்டு. மனிதன் செய்த பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாக கங்கை கருதப்படுகிறது. ஒருமுறையாவது கங்கையில் குளிக்க வேண்டும்; காசி விஸ்வநாதரை தரிசிக்கவேண்டும்.
அற்புதமான பனிமலைச் சாரலில், இமயமலையின் உயர்ந்த பகுதியில் கரவேல் என்னும் இடத்தில் கோமுகம் என்னும் தலம் உள்ளது.
பசுவின் முகம்போன்ற இந்தத் தோற்று வாயிலிருந்து கங்கை பெருகி, அசுர வேகத்தில் குகை போன்ற ஒரு துவாரத்தின் வழியே பாய்ந்துவருகிறது. அதன் ஆர்ப்பரிப்பும், தூய்மையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
இங்கிருந்து புறப்படும் கங்கை தன் போக்கில் சென்று கௌரி குண்டம், கங்கோத்ரி, உத்திரகாசி, தேவப்பிரயாகை போன்ற இடங்களைக் கடந்து ரிஷகேஷம், ஹரித்துவார் சமவெளிப்பகுதிக்கு வந்தடைந்து, யமுனை நதி, சரஸ்வதி நதியுடன் கலந்து பிறகு வங்கதேசத்தில் கடலில் கலக்கிறது. நீண்ட இந்த கங்கை நதியின் கரையில் பல அற்புதமான ஆலயங்கள் அமைந்துள்ளன.
இந்துக்கள் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடி மூதாதையர்களுக்கு நீத்தார் கடன் தீர்க்கவேண்டும். காசி நகரில் கங்கை நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடுகிறது. இதில் 64 ஸ்நானக் கட்டங்கள் உள்ளன.
காசி மாநகரில் பிரதான தெய்வம் விஸ்வநாதராகும். இவர் இங்கு ஜோதி லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அம்பிகை விசாலாட்சி என்ற பெயரில் அருளாட்சி புரிகிறாள். குறுகலான ஒரு சந்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கத்தை நாமே தொட்டு வணங்கலாம்; அபிஷேகமும் செய்து மலர்மாலை சாற்றலாம். இதைச் செய்தாலே நமக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும்.
காசி விஸ்வநாதர் அமைந்துள்ள அதே தெருவில் சற்றுத் தொலைவில் அன்னபூரணி அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. மராத்திய மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயம், பல சிற்ப, சித்திர வேலைப்பாடுகளுடன் அற்புதமாக அமைந்துள்ளது.
தீபாவளியன்று இங்கு தங்கமயமாக அன்னபூரணி தேவி தரிசனம் தருகிறாள்.
பலவித மணிகள் ரத்தினங்கள், தங்க அணிகலன்கள், வைரங்கள் பதித்த மணிமுடியுடன், பட்டாடை உடுத்தி சர்வ அலங்கார தேவியாகக் காட்சிதருவாள். இடக்கரத்தில் தங்கக்கிண்ணம், வலக் கரத்தில் தங்கக்கரண்டி ஆகியவற்றுடன், பிச்சைகேட்டு நிற்கும் பரமேஸ்வரனுக்கு அன்னமளிக்கிறாள். தீபாவளியையொட்டி லட்டுகளால் செய்யப்பட்ட தேர் பவனிவர, நள்ளிரவில் அந்த லட்டையே உடைத்துப் பிரித்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கு கிறார்கள். அன்னபூரணியை இங்கு தீபாவளித் திருநாளில் தரிசிப்பது மிகமிக புண்ணியமாகும்.
காசியில் தீபாவளியன்று மூன்று நாட்களும் பக்தர்கள் வந்து கூடுவார்கள்.
மூன்றாவது நாள் அன்னத்தைக் குவித்து வைத்து அன்னக் கூடம் உருவாக்கு வார்கள். மலைபோன்று குவித்து வைக்கப் பட்ட சாதம், அதனுடன் இனிப்புப் பண்டங்கள், அதன்மேல் மலர் மாலை சாற்றியிருப்பார்கள். பக்தர்கள் இந்த அன்னக் கூடத்தின்மேல் மலர்களை வாரிவாரி வீசுவார்கள். சிலர் பணமும் போட்டு ஆனந் தப்படுவார்கள்.
தீபாவளியின்போது மட்டுமே பவனிவரும் அன்னபூரணியை முழுமையாகக் காணலாம். மற்ற நாட்களில் சாளரத்தின் வழியேதான் தரிசனம் செய்யமுடியும். தீபாவளியன்று விஸ்வநாதப் பெருமானுக்கு பஞ்சமுக அலங்காரம் செய்து வெள்ளிக்கவசம் சாற்றியிருப்பார்கள்.
காசியில் எந்தக் கோவிலை எந்த வரிசையில் தரிசிக்க வேண்டும் என்பதைக் கீழுள்ள ஸ்லோகம் சொல்கிறது.
"விசுவேசம்- மாதவம்- துண்டிம்
தண்டபாணிஞ்ச பைரவம்- வந்தே
காசி குஹாம் கங்காம் பவனிம்
மணிகர்ணாம்.'
காசிக்குப் போகமுடியாதவர்கள் எங்கிருந் தாலும், தீபாவளியன்று கங்கையை நினைத்து கீழுள்ள மந்திரம் சொல்லி எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே கங்கையில் குளித்த பலன் கிடைக்கும்.
"கங்கேச யமுனேச கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மிந்
ஸந்நிதிம் குரு'
இதுதவிர, "காசி காசி' என்று சொன்னாலே காசிக்குப் போய்வந்த புண்ணியமும் கிடைக்கும்.
சுமார் 2500 கிலோமீட்டர். ஓடிவரும் கங்கை கடைசியாக "கங்காசாகர்' என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. அற்புதமான இந்த கங்கையை நமக்குப் பெற்றுக்கொடுத்தவன் பகீரதன் என்னும் அரசனாவான். பகீரதனை தீபாவளித் திருநாளில் நாம் நினைத்து வணங்கவேண்டும்.
காசியும் கங்கையும் ஒன்றுடன் ஒன்றி ணைந்த ஒரு அற்புதமான வழிபாட்டுத் தலமாகும்.
குறிப்பாக தீபாவளித் திருநாளில் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும், நமக்கு நாளெல்லாம் அன்னமிடும் அன்னபூரணி யையும் தரிசித்து வழிபட்டு நற்பேறு பெறலாம்.