ரெங்கும் ஒரே பேச்சு... மழை மழை! எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது. வரலாறு காணாத வெள்ளம் என்று பேசிக் கொள்கின்றனர். ஒரு விஞ்ஞானி மேக வெடிப்பென்று சொல்கிறார். இன் னொரு வானிலை ஆராய்ச்சியாளர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்கிறார். அதையெல்லாம் இல்லையென்று ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. ஆனால் நாம் ஒன்றை மறந்துவிட்டோம். அது நமது மூதாதையர்களின் வாழ்வியல் வரலாறு. நமது முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களைத் தாங்கள் வழிபடும் தெய்வங்களாக வணங்கி வந்தனர்.

பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றும் தனித் தனியாகவும், ஒருங்கினைந்தும் செயல்படும் ஆற்றல் பெற்றவை.

நீருக்கான தலமாக திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் எனும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. நிலத்துக்கான தலமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், நெருப்புக்கான தலமாக திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவிலும், காற்றுக்கான தலமாக திருக் காளத் தீஸ்வரர் கோவிலும் விளங்கு கின்றன. இவையனைத்தையும் உள்ளடக்கிய பரவெளியைக் குறிக்கும் இடமாக வும், பரம்பொருள் சிவபெருமானின் அருட்பேராற்றல் அபரிதமாக விளங்கும் தலமாகவும் சிதம்பரம் தில்லைநடராஜர் கோவில் ஆகாயத் திற்கான தலமாக இருக்கிறது.

மழையை நம் முன்னோர்கள் "வருணபகவான்' என்று வணங்கி வந்துள்ளனர். இன்றைய தலைமுறை யினர் உட்பட அனைவரும் படித்தவர், படிக்காதவர் என்ற பேதமில்லாமல், "மழைவந்து பொழப்ப கெடுத்துருச்சு' என்று சாதாரணமாகப் பேசுகின்றனர்.

Advertisment

uu

கடந்த 45 வருடங்களாக பருவ மழை என்பது தமிழகத்தில் பொய்த் துப்போன ஒன்றாகும். புயல் சின்னம் உருவானால்தான் நல்ல மழை வருமென்ற நிலை இருந்தது. தற்போது "கொரோனா' நோய்த்தொற்று மனிதர்களைத் தாக்கி இரண்டு வருடத்தை நெருங்கும் நிலையில், உலக நாடுகள் பலவும் ஊரடங்கை செயல்படுத்தியதால் இயற்கை தன்னை புதுப்பித்துக்கொண்டது. மாசு குறைந்தது; மரங்கள் மகிழ்ந்தன. வனங்கள் வளம்பெற்று பசுமை துளிர்த்தது. விளைவு- பருவமழை பொழிந்துகொண்டிருக்கிறது.

"ஆடிக்காற்றில் அம்மியே பறக் கும்,' "மார்கழிப் பனியில் மரமெல் லாம் நடுங்கும்', "ஐப்பசி மாதத்தில் அடைமழை கொட்டும்' என்பது முன்னோர் சொன்ன பழமொழிகள். இப்போது ஐப்பசி மாதம் முறையாகப் பருவமழை தொடங்கி அடை மழையாகக் கொட்டித் தீர்த்திருக் கிறது.

ஆனால் மனித இனமோ எந்தப் பிரச்சினை வந்தாலும் யாரையாவது குறைசொல்லிக்கொண்டிருக்கிறது. எங்கேயோ ஒரு விவசாயக் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. இங்கிருப்பவரோ அது நமக்கல்ல என்று நினைக்கிறார். எங்கோ ஒரு அணை உடைந்துவிட்டது. இது நமக்கானதல்ல என்று நினைக்கின்றனர். வீட்டுக்குள் இருப்பவரே இப்படி நினைத்தால், சாலையோரம் இருப்பவரது நிலை எப்படியிருக்கும்? சமதர்மம், சமத்துவம், சமாதானம் சீர்குலைந்து வருகிறது. முறையாகப் பருவமழை பெய்த காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுண்டு. ஆனால் அதன்காரணமாக அழிவு ஏற்பட்டதில்லை. அப்போது குளங்களும், ஏரிகளும் ஒழுங்காக இருந்தன. அப்படியென்றால் இப்போது ஏன் இப்படி நடக்கிறது?

மனசாட்சியே இல்லாமல் நீர் வழித்தடங்களையும், ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமத்து அடுக்குமாடி குடியிருப்புகளையும், மிகப்பெரும் வணிக வளாகங்களையும், பல கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் கட்டி பெரிதாக சுற்றுச் சுவரும் போட்டுவிட்டோம். தனது வழியில் ஆர்ப்பாட்டமில்லாமல் சென்றுகொண்டிருந்த தண்ணீர், தற்போது தனக்கான தடத்தைக் காணாமல் கண்டகண்ட தெருக்களிலும், குடியிருப்புகளிலும் புகுந்து, தான் சேரவேண்டிய இடத்திற்கு வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. மனித இனமோ தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. "மழை' என்பது சமகால மனித இனத்திற்கு வெகு சாதாரணமாகத் தெரிகிறது. ஆனால் மழை சாதாரணமல்ல. மாபெரும் பொக்கிஷம்! மழையின் சிறப்பைப் பற்றித் திருவள்ளுவர்-

"விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

பசும்புல் தலைகாண்ப தரிது'

என்கிறார். வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி, இந்த உலகில் பசும்புல்லின் (ஓரறிவு உயிரின்) தலையைக்கூடப் பார்க்கமுடியாது.

மழை பெய்தவுடன் நகரத்தில் உள்ளவர்களும் சரி; கிராமத்தில் உள்ளவர்களும் சரி- ஒருவர் "அலுவலகம் செல்ல முடிய வில்லை' என்கிறார். இன்னொரு வர், "இந்த மழைவந்து எல்லா வேலையும் கெட்டுருச்சு' என்கி றார். இன்னொருவர், "வாகனங் கள் போகமுடியவில்லை' என்கிறார்.

"வான் சிறப்பு' எனும் பொருள்பட மழையைப் பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர்-

"அமுதூறு மாமழை நீரத னாலே

அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்

கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை

அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே'

என்று குறிப்பிடுகிறார். சாகாத் தன்மையைத் தந்து, உயிரையும் அளிக்கும் அமுதம் போன்றது மழையாகும். வானிலிருந்து பொழியும் மழைநீர் அமுதம் போன்று இனிக்கும். இனிய சுவை தரும் பலவகை மரங்களை சுமந்துகொண்டிருக்கும் மண்மீது விழுந்த மழைநீரால், அவை செழிப்பாக வளர்ந்து வளம் பெறும். பாக்கு, தென்னை மரங்களோடு, கரும்பும் வாழையும் தழைத்து, அமுதச் சுவையை அளிப்பது இந்த மழையால்தான். மிக உச்சமான கசப்புச் சுவையைக் கொண்ட எட்டிக்காய் மரம் வளர்வதற்கும் இந்த மழையே காரணமாக உள்ளது.

எனவே மழையைக் குறைசொல்ல நமக்குத் தகுதி இல்லை. குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் எதிர்வீட்டு சுவருக்குள் வீசியெறியும் மனப்போக்கு மாறவேண்டும். வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். நீர் வழித்தடங் களைப் பாதுகாப்பதோடு, குடிநீருக்கு ஆதாரமான ஏரிகளையும், குளங்களையும், தடுப்பணைகளையும் முறையாகப் பராமரிக்கவேண்டும். நீராதாரங்களைப் பாதுகாப் பது மட்டுமல்லாமல், மழை நீரை சேமிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். வனங்களை அழித்ததனால், அங்கு சுதந்திரமாக சுற்றித் திரிந்த விலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்து விடுகின்றன.

மழையைத் தடுக்க மனிதனால் முடியாது. நீர் மேலாண்மை, நில மேலாண்மை, நகர மேலாண்மை, நகர உட்கட்டமைப்பு மேலாண்மை என்பதையெல்லாம் நாம் சிறப் பாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் இனியாவது வரலாற்றைத் திரும்பப் பார்க்கவேண்டும். நமது தமிழ் மண்ணின் வாழ்வியல் வரலாற்றைப் பின்பற்றி வாழப் பழகவேண்டும். அது நமக்குமட்டுமல்ல; நமது வருங்கால சந்ததிகளுக்கும் நல்லது. அதற்கு கீழடி ஒன்றே சாட்சி; நம் மூதாதையர்களின் சிறந்த வாழ்வியலுக்கு அத்தாட்சி.

"தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்காது எனின்'

என்கிறார் வள்ளுவர். மழை பெய்யா விட்டால் பரந்த இவ்வுலகில் தானம், தவம் ஆகிய இருவகை நல்வினைகளும் இல்லையென்ற நிலை உண்டாகிவிடும்.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும்- இந்த

ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்'

எனும் மகாகவியின் பாடல் வரிகளுக்குப் பொருளுரைக்க வேண்டியதில்லை.

மழைநீரே நமக்கும், பூமிக்கும் மூலாதாரம். அதைப் போற்றிப் பாதுகாப்பதே நமது வாழ்க்கையின் ஆதாரம். அதற்கு நமக்கு இயற்கையுள் ஒளிந்துகொண்டிருக்கும் இறைபக்தி, இறைசிந்தனை மேம்படவேண்டும். இடைவிடாத இறை சிந்தனையோடு நமது செயலைச் செய்யும்போது துன்பம் என்பது இல்லவே இல்லை. எல்லாம் இன்பமயமாகும். எங்கும் சிவமயமாகும்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று உலகிற்கே எடுத்துரைத்து, ஞானத்தைவிட சிறந்த அறநெறி இல்லை என்பதை உணர்த்த, திருமூலர் அருளிச் செய்துள்ளதைப் பார்க்கலாம்.

"வரையிடை நின்றிழி வான்நீர் அருவி

உரையிலை உள்ளத் தகத்துநின் றாலும்

நுரையிலை மாசிலை நுண்ணிய தெண்ணீர்க்

கரையிலை எந்தை கழுமணி யாறே.'

"மலைகளுக்கு நடுவே (வரையிடை) மழைநீர் சேரப் பெருகிவரும் அருவி' என்கிறார்.

இன்னுமொரு பொருள்படக் கூறும் போது, பரம்பொருளாகிய சிவபெருமானின் திருமுடியிலிருந்து விழுகின்ற சிறப்புக்குரிய ஆகாய கங்கையை விவரித்துரைக்க வார்த்தை கள் இல்லை. உள்மனத்துள் இருந்து ஊறும் அமுதப் பொலிவு அது. இதில் நுரையில்லை; மாசில்லை. பளிங்கு போல் தெளிந்த நீரான இதற்கு, இந்த ஆற்றுக்குக் கரையே இல்லை. இது வெறும் மழைநீர் அல்ல; நமது பாவங்களைக் கழுவும் எந்தைப் பரம்பொருளின் அருள் வெள்ளப் பேராறாகும்.

சிவனின் அன்பெனும் அருள்வெள்ளத் தைப் பெற்றுவிட்டால் நாம் எந்த வெள்ளத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். சுற்றுப்புறத்தை சுகாதார மாகப் பராமரித்து, உட்கட்டமைப்பை சீர்செய்து சிறப்பாக வைத்துக்கொள்வோம். மழைநீரைச் சேமிப்போம். சிவம் எனும் அன்பு மழையில் நனைந்து ஆனந்தவெள்ளத்தில் திளைக்க அண்ட சராசரத்தை ஆளும் அரனைத் துதிப்போம்.