பாம்பன் சுவாமிகள் ஆராதனை- 4-6-2018

"பஞ்சாயதன பூஜை' என்று சொல்வார்கள். அதனில் சிவன், அம்பாள், கணபதி, விஷ்ணு, சூரியன் இருப்பர். கந்தன் இல்லை. சிவ பஞ்சாயதனம் என்றால் சிவன் நடுவே இருப்பார். நான்கு பக்கங்களிலும் மற்ற தெய்வங்கள். காசியில் அனுமன் காட்டிலுள்ள காமகோடீஸ்வரர் ஆலயம் சிவபஞ்சாயதனம். சென்னை அடையாரிலுள்ள மத்யகைலாஷ் ஆலயம் கணபதி பஞ்சாயதனம்.

ஆதிசங்கரர், பஞ்சாயதன தெய்வங்களுக்கு அநேக துதி செய்துள்ளார். தகப்பனுக்கே பிரணவ உபதேசம் செய்த சிவகுருநாதன், சூரபத்மாதியரை சம்ஹரித்த திருச்செந்தூர் கந்தன், அந்த ஆதிசங்கரர் தன்னைப்பாட வேண்டும், ஷண்மதம் என்று பஞ்சாயதனத்துள் தன்னையும் சேர்த்துவிட வேண்டும் என்று (கௌமாரம்) ஆசை கொண்டான் போலும்! ஆக அந்த ஆதிசங்கரருக்கு ஒரு உபாதை. அவர், இராவணன் கயிலாயநாத னிடமிருந்து பெற்ற ஆத்மலிங்கம் பிரதிஷ்டையான கோகர்ணம் வந்து வேண்டினார். அந்த சிவன் "திருச்செந்தூர் முருகனை நாடு' என்றார். அவர் திருச்செந்திலம்பதி வர, ஒரு பாம்பு தன் முன்னே வளைந்து வளைந்து சென்றதைக் கண்டு, "புஜங்கப்ரயாதம்' என்ற விருத்தத்தில் நான்கு வரியாக 33 துதிகள் வடமொழியில் செய்தார். ஸுப்ரமண்ய புஜங்கம் என்றே பெயர். ஆதிசங்கரரின் உபாதை தீர்ந்தது மட்டுமல்லாமல், துன்பமடையும் முருக பக்தர்கள் பக்தியுடன் அதை ஓதி பலன் பெற்றோர் அனேகம். அதனில் பன்னீர் இலை விபூதி மகிமை (திருச் செந்தூரில்தான் இது வழக்கம்), அந்தி மக்காலத்தில் எமஉபாதை தீர துதி என பல துதிகள். (அதனுள் புகவில்லை). பல நாமங்கள், லீலைகள் கொண்ட ஒரே பரம ரக்ஷை துதியை சிந்திப்போம்.

"குமார ஈசஸுனோ குஹ ஸ்கந்த

Advertisment

ஸேனாபதே சக்திபாணே மயூராதிரூட

புனிந்தாத்ம காந்த பக்தார்த்திஹாரின்

ப்ரபோதாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம்.'

Advertisment

தமிழாக்கம்:

"பரமன்தன் குமாரா சேனாதிபதியே குஹா கந்தா வேலா

குறமகள் வள்ளிதனக்கேற்ற மணவாளா

அறங்கொல் தாரகனை மாய்த்த அருளாளா அடியார்துயரகல

வரம்தரும் மயில்வாகனா என்னைக்காப்பாய் என்றும்.'

இப்போது கந்தசஷ்டிக் கவசத்திற்கு வருவோம். முருக வழிபாடு செய்யும் சாதாரண தமிழனும் கந்தசஷ்டிக் கவசம் அறியாது, துதியாது இருக்க மாட்டான். ஆழ்ந்த முருக பக்தர்கள் அவசியம் தினம் ஒருமுறையாவது துதிப்பார்கள். உபாதை நிவாரணக் காரணமாக என்றால் ஆறு முறையோ, 36 முறையோ தனியாகவோ அல்லது கூட்டு வழிபாடு போன்றோ செய்வார்கள். துதித்து நிதர்சனப் பலன் கண்டவர்கள் ஏராளம்.

"பாலன் தேவராயன் பகர்ந்ததை' என்று வருவதால் தேவராயன் என்னும் முருக பக்தர் இந்த நூலைச் செய்துள்ளார் என்பது நிதர்சனம். "சரஹணபவ' என்னும் திருநாமம் இந்நூலின் மந்திர பீஜம் எனலாம். 1, 16, 162, 237 வரிகளில் வருகிறது. "சஷ்டியை நோக்க சரஹணபவனார்' என்று ஆரம்பித்து "சரவணபவ ஓம் சரணம் சரணம் ஷண்முகா சரணம்' என முடிகிறது.

இத்துதி செய்தவர், செய்யக் காரணத்தை சிறிது சிந்திப்போமா!

muruganசென்னை- திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலையில் மணலியை அடுத்து வல்லூர் உள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலம் பிறந்து வளர்ந்த ஊர். விநாயகர் கோவில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், கண்டீஸ்வரர் சிவன் கோவில் உள்ளன. இவ்வூரின் மேற்கேயுள்ள மேலூரில் திருவுடையம்மன் சமேத திருமணங்கீசர் கோவில் உள்ளது. உன்னத கோவில். வீராசாமிப்பிள்ளை தம்பதிக்கு வெகுகாலம் புத்திர பாக்கியம் இல்லாமல், முருகன் அருளால் பிறந்த குழந்தையே தேவராயன். 19-ஆம் நுற்றாண்டு. வருடம், மாதம், திதி, நட்சத்திரம் தெரியவில்லை. நன்கு கல்வி கற்று வியாபாரம் செய்ய பெங்களூரு சென்றார்.

திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பெங்களூரு வந்தபோது அவரை சந்தித்து வீட்டுக்கு அழைத்து தமிழ் இலக்கிய அறிவை வளர்த்தார். தமிழ்ப்பற்றால், முருகனிடம் ஆழ்ந்த பக்தியால், "தணிகாசல மாலை', "பஞ்சாட்சர தேசிகர் பதிகம்' முதலியவை இயற்றியதாகத் தெரிகிறது.

ஒருசமயம் பழனி ஆண்டவனை தரிசிக்க வந்தபோது மலை அடிவாரங்கள், மலை, மண்டபங்கள், படிகள் ஆகியவற்றில் பலர் விதவிதமான நோயால் அவஸ்தைப்படுவதைக் கண்டார். இவர்கள் படும் துயரம் ஒரு உன்னத துதியால், முருகன் அருளால், பவரோக வைத்தியநாதப் பெருமானால் தீரக்கூடாதா என்ற எண்ணம் தோன்றியது.

இதனை வரகவி சொக்கலிங்கனார் தமது சேய்த்தொண்டர் புராணத்தில் இவ்வாறு கூறுவார்-

"வலம்வருக் குன்றின் மருங்கில் மண்டபங்கள் தோறும்

பலவகைப் பிணிகள் நோயாற் பீடிக்கப்பட்டு அனேக

அலமுறல் கண்டு அந்தோ என்று இரங்கி

அன்னார்யாவரும்

நலனுற மார்க்கம் ஒன்று ஞான பண்டிதன்பால் இன்றே'.

இரவு ஒரு மண்டபத்தில் உறங்கினார். முருகன் கனவில் தோன்றி, "உனது நல்ல எண்ணம் உனது வாக்காலேயே பூரண மாகும். நமது ஆசி, அருள் உண்டு; செய்க' என்றார். சேய்த்தொண்டர் புராணம் இதனை இவ்வாறு கூறும்-

"அணுகி உன் எண்ணம் போலும் அருளினால் அஞ்சல் வெய்ய

பிணிகள் நோய் பேய்கள் பூதம்பில்லி சூன்யம் தேள்பூரான்

பணிகடிவிட மற்றெல்லா வினைகளும் பரவிவெண்ணீறு

அணிதலும் திருவுற்று இன்பம் அடையுமாம் உனது

வாக்கால்'.

திடீரென விழித்தெழுந்து, மெய்சிலிர்த்து சரவண சண்முக நாமம் ஜெபித்து காலை வழிபாடுகள் செய்து, பழனியாண்டவன் கருணையை, அருளை, ஆணையை சிரமேற்று, கந்தசஷ்டிக் கவசம் இயற்றினார்.

ஒருசாரார் இதனை சிரகிரி (சென்னிமலை) முருகன் சந்நிதியில் எழுதி ஓதினார் என்பர். முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி (திருவாவினன்குடி), திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை தரிசனம் செய்ததால், ஆறுமுகனுக்கு ஆறுபடைவீடுகளுக்கும் தனித்தனியே கவசம் செய்தார்.

ஆறு கவசத்துதிகள் இருந்தாலும் திருச்செந்தூர் கந்தசஷ்டிக் கவசமே அதிகமாகப் பாராயணத்தில் உள்ளது.

அடுத்து "ஷண்முக கவசம்' இயற்றிய பாம்பன் சுவாமிகள் எனும் குமரகுருதாசரை சிந்திப்போம். அவர் 1850-ஆம் வருடம் பிறந்து, புகழ்பெற்ற சென்னை திருவான்மியூர் சிவன் கோவில் அருகே 30-5-1929, வைகாசி மாதம், தேய்பிறை சஷ்டியில் காலை ஏழரை மணிக்கு பூத உடலை உதிர்த்து கந்தன் பதம் சேர்ந்தார். (விசாக மாதத்தில் விசாகன் திருவடியில் கலந்தார்). குரு ஆராதனை இவ்வருடம் 4-6-2018-ல் பிரதி வருடம்போல் நடைபெறுகிறது.

ராமநாதபுரம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் பதியில் சாத்தப்ப பிள்ளை- செங்கமலத்தம்மாளுக்கு முருகன் அருளால் பிறந்தவர். பெயர் அப்பாவு. அவர்களுக்கு வேளாண்மைத் தொழில். ஜாதகம் பார்த்த ஒரு ஜோதிடர் "பையன் ஞானவானாக- கவிஞனாகத் திகழ்வான்' என்றார். முருகனிடம் அன்பு வைத்ததைக் கண்டு தகப்பனாரும் கந்தசஷ்டிக் கவசம் ஓதுவித்து, முடிந்த அளவு துதி செய்யச் சொன்னார். அப்பாவுவும் திருநீறு பூசி, பயபக்தியுடன் கோவில்கள் சென்று கந்தசஷ்டிக் கவசம் துதித்தார். அதனில் ஆழ்ந்திட, தானும் அதுபோன்று ஒரு துதி செய்தா லென்ன என்று மனம் நெகிழ்ந்தது. அப்போது அவருக்கு வயது 13. அருகிலுள்ள நாகநாதர் கோவிலில் தரிசனம் செய்து கவசம் துதிப்பார். ஒருசமயம் "கங்கையைச் சடையில் விரித்து' என்று தொடங்கி, "அருமறை புகழ்ந்த முருக சரவணத்து ஆதியே அமரர் கோவே' என்கிற ஆசிரிய விருத்தம் வெளிவந்தது. அவர் வியந்து, "முருகா! நீ இதனை ஏற்று, எனக்கு தினம் ஒரு பாடல் இதுபோல அருள்செய்' என வேண்டினார். முருகன்தான் பக்த தயாபரன் ஆயிற்றே! ஒரு நூறு பாடல் துதிகள் ஆயிற்று. யதேச்சையாக இதனை வாசித்த ராமேஸ்வரம் கோவிலின் அர்ச்சகர் சேதுமாதவ ஐயர், பாடலில் நெகிழ்ந்து அப்பாவுவுக்கு விஜயதசமியன்று அக்னி தீர்த்தக்கரையில் ஷடாக்ஷர உபதேசம் செய்து ஜெபிக்கக் கூறினார்.

வடமொழி கற்று உபநிடத, வேத, ஆகம, புராணங்களிலும் ஈடுபடக் கூறினார்.

சீர்காழியில் அழுத பிள்ளைக்கு பார்வதியார் ஞானப்பால் ஊட்டினார். பசித்துத் தூங்கிய ராமலிங்கத்துக்கு அம்பாள் அண்ணி உருவில் ஆகாரமிட்டார். அதுபோல் இவருக்கு ஒருசமயம் கனவில் ஒரு சிவனடியார் வாழையிலை இட்டு, பாலும் அன்னமும் பிசைந்திட்டு உண்ணவைத்தார். ஆன்மிக, தெய்வீகக் கனவுகளை, "கானல்நீர்போல் கனவுதானே' என எண்ணக்கூடாது என்று உணர்ந்தார். முருகனே அடியார் உருவில் வந்திருக்கலாம். அதன்பின் அவரது ஞானம், பக்தி ஆழம் மேலோங்கியது.

பெற்றோரின் விருப்பத்துக்கிணங்கி 1878-ல் முத்தம்மாள் என்ற நங்கையை மணந்தார். சிவஞானாம்பாள், முருகையன், குமரகுருதாசன் என்ற மூன்று குழந்தைகளும் பிறந்து வளர்ந்தன.

குடும்பம், தொழில், வியாபாரம் என இருந்தாலும் முருகன்மீது ஆழ்ந்த பக்தி, வைராக்கியம், விவேகம், ஞானம் யாவும் மிளிர்ந்தன.

ஒரு சமயம் அவர், "நான் நாளை பழனிமலை செல்லப்போகிறேன்' என்றார். "எப்போது திரும்புவீர்கள்?' என்று கேட்க, "அது சொல்ல இயலாது' என்றார். "சந்நியாசியாகிவிடுவீரா? அது குமரன் கட்டளையா' என வினவ, ஆர்வத்தில் அப்பாவு "ஆம்' என்றார்.

பழனியாண்டவன் கருணை உள்ளத்தான் என்றாலும் கோபக்காரன் ஆயிற்றே! "நான் கூறாதபோது எப்படி நான் கூறியதாகக் கூறலாம்' என்று கோபக்கனலுடன் கனவில் தோன்றி, "நான் அழைத்தாலொழிய நீ பழனிக்கு வரக்கூடாது; வரமாட்டேன் என்று கூறு' என அதட்ட, அப்பாவு, "தவறுக்கு மன்னிக்கவும்; தங்கள் ஆணையின்றி பழனி வரமாட்டேன்; சபதம்' என்றார். பழனிக்கு அவர் போகவே இல்லை.

இச்சமயம் மற்றொரு சம்பவமும் உணரவேண்டும். சுவாமிகள் காஞ்சிபுரம் சென்று ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி, மற்றுமுள்ள கோவில்களை தரிசித்துவிட்டு ஊர் கிளம்ப ஆயத்தமானார். அப்போது ஒரு சிறுவன், "என்ன, எல்லா கோவில்களும் பார்த்தாயிற்றா?' என்றான். "ஆம்' என்றார். "குமரக் கோட்டம் தரிசித்தீரா' என வினவ, "இருக்குமிடம் அறியேன்' என்றார். (அக் காலத்தில் நுழை கோபுரம் இல்லை). "வாருங்கள்' என பையன் அழைத்துச் சென்று கோவிலில் புகுந்து மறைந்தான். பார்க்காத அடிகளைப் பார்க்க வைத்தது யார்? குமரனே! தத்துவப் பாடம் என்ன? ஆன்மிக விஷயத்தில் தவறியும் பொய் கூறாதே!

கந்தன் கருணையில் ஏங்கி 1891-ல் எழுந்ததே "ஷண்முக கவசம்'. நான்கு வரிகள் கொண்ட முப்பது துதிகள்.

சந்தனத்தைப் பார்த்தால் மணக்காது. பார்க்காவிட்டாலும், மணந்தால் நறுமணம் வீசும். அதுபோல துதிகளை அன்புடன் ஆழ்ந்து துதித்தால்தான் அதன் மணம், ரசம், மகிமை உணரலாம். அவர் துதிகள் 6,666.

சுவாமிகள் ஒருசமயம் "பிறப்பன் வலசை' என்ற ஊர் மயானத்தில் 35 நாட்கள் சதுரக்குழியில் அமர்ந்து தவம் செய்தார். 7-ஆம் நாள் அகத்தியர், அருணகிரியார் தரிசனம் பெற்றார். இளைஞனாக வந்த கந்தன் ரகசிய மொழியில் உபதேசம் செய்தான். 35-ஆவது நாள் தலைக்குமேலே பேரொலி; ஒளியும் பரவியது. அந்த உபதேசமே 1894-ல் சுவாமிகள் எழுதிய "தகராலய ரகசியம்' என்ற நூல்.

பிறகு ஆன்மிகத் தல யாத்திரை செய்தார். காசியில் குமர குருபர சுவாமிகள் மடத்தில் காவியுடை அணிந்தார். சென்னை திரும்பிய பிறகு "ஸ்ரீமத்குமார சுவாமியம்' என்று கந்த புராணத்தை காவியமாகப் பாடினார். பெயரும் குமரகுருதாச சுவாமிகளாயிற்று.

1923-ல் சென்னை தம்புசெட்டித் தெருவில் சென்றபோது, குதிரை வண்டிச்சக்கரம் இடது கணுக்கால்மீது ஏறிட, எலும்பு முறிந்தது.

சென்னை அரசு பெரிய மருத்துவமனையில் 11-ஆவது படுக்கையில் சிகிச்சை. "பல வருடங்களாக உப்பில்லா உணவு உட் கொண்டாலும், 73 வயதானதாலும்; எலும்பு கூடாது, காலை வெட்டிட வேண்டும்' என்றனர்.

சுவாமிகளோ, "எனது காலை வெட்டுவது என்பது எனக்கு ஒன்றுமில்லை. முருகா உனக்கு அவமதிப்பான செயல்; உன்னிஷ்டம்!' என்றார். இவரது சீடர் சுப்ரமணியதாசர் மனைவியுடன் ஷண்முக கவசம் பாராயணம் இடைவிடாது செய்தார். மற்ற அடியார்களும் சேர்ந்து பாராயணம் செய்தனர். மறுநாள் இரு மயில்கள் தரிசனம். காலடியிலே இருவேல்கள் குத்த, ஒரு குழந்தை தரிசனம்! ஸ்வாமிகள் மனம் குளிர்ந்தது. ஒடிந்த எலும்புகள் கூடிவிட்டன. அதிசயம் என மருத்துவர்கள் வியந்தனர். ஆண்டவன் கருணைக்கு அளவுண்டோ!

இந்த சம்பவம் மார்கழி மாத வளர்பிறை பிரதமையில் "மயில்வாகன சேவை' என்று இன்றும் விழா நடக்கிறது.

திருவான்மியூரில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அகத்தியர், சிவ- பார்வதியின் திருமணக்கோலம் கண்ட தலம். வால்மீகி முனிவர் முக்திபெற்ற இடம்.

தலம், தீர்த்தம், தெய்வம் என சிறப்புகள் பல கொண்ட தலம். மருந்தீஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாம்பன் சுவாமிகளின் சமாதி உள்ளது. தினமும் ஆராதனனை நடக்கின்றன. ஒவ்வொரு மாதப் பௌர்ணமியிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குரு, குமரனருள் பெறுகின்றனர்.

சென்னைவாழ் பக்தர்கள் அவசியம் தரிசித்து இன்புறலாமே!