கந்தசஷ்டி- நவம்பர் 4-9

ந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறுவித வழிபாட்டு முறைகள் உள்ளன.

கௌமாரம் எனும் முருக வழிபாடு ஆதி காலந்தொட்டே இருந்து வந்துள்ளது.

முருகன் தோன்றிய கதை ஒருமுறை தட்சன் தான் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவபெருமானை அழைக்காமல் அவமானப்படுத்தினான். இதனால் கோபம்கொண்ட பார்வதி தேவி, தன் தந்தை தட்சனுடன் நியாயம் கேட்டு அவமானமடைந்து, அதே யாகத் தீயில் விழுந்துவிட்டாள். சிவபெருமான் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தையும் தட்சனையும் அழித்தார். பின் அவர் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

Advertisment

அச்சமயத்தில் சூரபத்மன் எனும் அசுரன் பிரம்மாவிடம் பல வரங்களைப் பெற்றான். அதில் சிவகுமாரனைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்னும் வரத்தையும் பெற்றான். இந்த வரத்தின் வலிமையால் அனைத்துலக உயிர்களுக்கும் பெரும் துன்பத்தைக் கொடுத்தான் சூரபத்மன். இதனால் துயருற்ற தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் வேண்டினர்.

சிவபெருமான் தனது அகோரம், ஈசானம், வாமதேவம், தத்புருஷம், அதோமுகம் ஆகிய ஐந்து முகங்கள் மற்றும் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவை சரவணப் பொய்கையில் சேர்ந்து ஆறு குழந்தை களாயின. அவற்றுக்கு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டினர்.

பார்வதி தேவி அவர்களை அனைத்தெடுக்க, ஓருடலும் ஆறுமுகமுமாக முருகன் காட்சியளித்தார்.

Advertisment

vee

சூரபத்மன் வதம்

தனது அளப்பரிய வரத்தால், அகில உலகத்தையும் நடுநடுங்கச் செய்தான் சூரபதமன். இவனுடைய உடன் பிறப்புகளாகிய தாரகனும் சிங்கமுகனும் சேர்ந்து மூவுலகுக்கும் துன்பம் கொடுத்தனர்.

முருகன் விரதமிருந்து, தன் தாய் சக்தியிடம் வேல் பெற்று, நவவீரர்களான வீரபாகுத்தேவர் போன்றோ ருடன் சேர்ந்து சூரபத்மனுடன் போர்புரிந்தார். சூரபத்மன் நேரிடைப் போர் மட்டும் புரியவில்லை. மாயாசக்தி உடையவன் என்பதால் மறைந்திருந்தும் போரிட்டான். மேலும் அவனைப் பொருத்தவரை, "முருகன் சிறுபிள்ளை; இவனிடம் என்ன பெரிய சக்தி இருந்துவிடும்' எனும் இறுமாப்பும் இருந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் ஆறுநாட்கள் கடும் போர் நடந்தது.

பின், ஆணவத்தின் வடிவாகிய சூரனையும், கன்மத்தின் வடிவாகிய சிங்கனையும், மாயாமலத்தின் வடிவாகிய தாரகனையும் அழித்து, மூவுலகின் தர்மத்தை நிலைநாட்டி னார். ஆறாம் நாள் போரில் சூரபத்மன் மாமரமாகி நின்றபோது, கந்தப்பெருமான் மரத்தை இருகூறாக்கி, ஒரு கூறை சேவலாகவும், மறுகூறை மயிலாகவும் மாற்றிக்கொண்டார்.

கந்தசஷ்டி

கந்தப் பெருமான் ஆறு நாட்கள் போரிட்ட காலத்தையே மக்கள் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறார் கள். மற்ற எந்த விழா என்றாலும் அந்தந்த பண்டிகைக்கென்று குறிப்பிட்ட சிலபல பட்சணங்கள் உண்டுதானே! ஆனால் இந்த கந்தசஷ்டி விழாவென்பது ஒரு போர்க் காலத்தை குறிப்பதாலாயோ அல்லது எம்பெருமான் முருகனே விரதமிருந்ததாலேயோ, இவ்விழா முழுக்க முழுக்க மக்கள் விரதமிருக்கி றார்கள். அதுவும் மிக பலமானதாக இருக்கும். இந்த ஆறு நாட்களுமே சிலர் எதுவும் உட்கொள்ளாமல் முழு உண்ணாவிரதமும், சிலர் பால், பழம் மட்டும் எடுத்துக்கொண்டும், சிலர் ஒருபொழுது மட்டும் உண்டும் அவரவர் மன திண்மையைப் பொருத்து விரதம் மேற்கொள்வர்.

குமரக்கடவுள், அசுரர்களின் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை வேரறுத்ததுடன், மனிதர்களின் காம, குரோத, மோக, லோப, மத, மாத் சர்யங்களையும் அழிக்கிறார்.

இதனால்தான் கந்தசஷ்டி விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு, மன அமைதி கிடைக்கிறது. அவர்களைச் சுற்றியுள்ள செய்வினை போன்ற துர்செயலும் அறுத்து, அடித்துச் செல்லப்படுகிறது.

மேலும் இந்த உண்ணாநோன்பிருப்ப வர்கள் பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டியே இருப்பர். "சட்டியிலே இருந்தால் அகப்பையில் வரும்' என்பது பழமொழி. சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையிலே குழந்தை வளரும் என்பது அனுபவ மொழி.

ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை பிரதமையில் விரதத்தைத் தொடங்கி, தொடர்ந்து ஆறு நாட்கள் கந்தனை வழிபட்டு விரதமிருப்பதை மகாசஷ்டி விரதம் என்பர். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டியிலும் சிலர் விரதம் எடுக்கின்றனர். தினமும் கந்தசஷ்டி கவசம் கூறி வணங்குவது வழக்கம்.

முருகனின் ஆறுபடை வீடுகள்

முருகனின் ஆறுபடை வீடுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.

முதல் வீடு திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை மணம்முடித்த தலம். இங்கு வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

இரண்டாவது வீடு திருச்செந்தூர்: சூரனை சம்ஹாரம் செய்த திருத்தலம். இங்கு சுப்பிரமணியர் சிவனை வணங்கிக் கொண்டிருக்கும் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அதனால் அவருடைய கையில் பூஜைக்குரிய தாமரை மலர் இருப்பதைக் காணலாம். மேலும் முருகனின் சுற்றில் பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம். இந்த பஞ்ச லிங்கத்தினை தினமும் தேவர்கள் வந்து வணங்கிச்செல்வதாக ஐதீகம். கோவிலுள் பெருமாள் சந்நிதி இருப்பது சிறப்பு. வள்ளி ஒளிந்த குகையும், நாழிக் கிணறும் இத்தலத்தின் மிக முக்கிய சிறப் பான விஷயங்கள்.

மூன்றாவது வீடு திருவாவினன்கூடி: இது பழனி தண்டாயுதபாணியைக் குறிக்கும். இவர் குழந்தை வேலாயுத சுவாமி என்றும் அழைக்கப்படுவார். இவரது கையில் தண்டம் எனும் கோல் ஏந்தியிருப்பதும், இவர் நவபாஷணாத்தால் உருவாக்கப்பட்டிருப்பதும் மிக மேன்மையான விஷயமாகும். அதிகாலை விஸ்வரூப தரிசனத்தில், இரவில் சுவாமிக்கு சாற்றிய சந்தனம் கிடைப்பது பெரும்பேறு. இதனை உட்கொண்டால் அனைத்து நோய்களும் தீரும் என்பது உண்மை. மேலும் இங்குள்ள போகர் சமாதி மிக சக்திவாய்ந்தது.

நான்காவது வீடு திருவேரகம்: இது சுவாமிமலை சுவாமி நாத சுவாமி தலம். இங்கு சிவனுக்கு "ஓம்' எனும் பிரணவத்தின் பொருள் சொன்னார் கந்தன் என்பது தலச் சிறப்பு.

ஐந்தாம் வீடு குன்றுதோறாடல்: திருத்தணி. சென்னை அருகேயுள்ள தலம். 365 படிகள் கொண்டது. மன அமைதிக்கான தலம்.

ஆறாம் வீடு திருச்சோலைமலை: இது மதுரை பழமுதிர்சோலை. வள்ளியை மணம் செய்த தலமாகும். மேலும் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான சுப்பிரமணியர் ஆலயங்கள் உள்ளன.

கந்தனுக்கு பல கோவில்கள் இருந்தாலும், அவர் சூரபத்மனை போரிட்டு வென்ற திருச்செந்தூர்தான் சஷ்டி விரதத்துக்கு மிக முக்கிய தலமாகக் கருதப்படுகிறது. சஷ்டி தொடங்கியதிலிருந்து யாகம் நடைபெறும்.

பின் தனியாகச் சென்று போரிட்டு வெற்றி வாகை சூடித் திரும்புவார். அவர் போரிலிருந்து திரும்பியவுடன் ஒரு கண்ணாடி வைத்து, அதில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்துக்கு அபிஷேகம் செய்வர். இதனை சாயாபிஷேகம் என்பர்.

சூரனை வதம் செய்த மறுநாள், ஏழாவது நாள் முருகன் தெய்வானையை மணந்து கொள்வார். இந்த திருமண வைபவம் திருப் பரங்குன்றத்தில் நடந்தது.

திருச்செந்தூரில் விபூதியை பன்னீர் இலையில் வைத்துத் தருவர். சூரபத்மனை வதம் செய்து முடித்தவுடன், முருகன் ஜோதியாய் ஒளிவீசி நின்றார். அவரது பெருமைகளைத் துதிக்க அனைத்து வேதங்களும் பன்னீர் மரமாகி நின்றன. எனவே இந்த பன்னீர் இலையில் வேதமந்திர சக்தி பொதிந்துள்ள தாக நம்பப்படுகிறது. இந்த பத்ரவிபூதி மிக சக்திவாய்ந்தது. இந்த பன்னீர் இலையிலுள்ள 12 நரம்புகள் முருகரின் பன்னிரு கரங்களை ஞாபகப்படுத்துகிறது.

ஒருமுறை ஆதிசங்கரருக்கு ஏற்பட்ட நோய்தீர, அவர் ஜெயந்திபுரம் எனும் திருச் செந்தூர் வந்து நோய் நீங்கப் பெற்றதால், "சுப்பிரமணிய புஜங்கம்' பாடித் துதித்தார்.

திருச்செந்தூரில் குருபகவான் வந்து வழிபட்டதால், இத்தலம் செவ்வாய், குரு சேர்க்கைக்குரிய பரிகாரத் தலமுமாகும்.

முருகனை வணங்கிய மகான்கள்

போகர், அவ்வைப் பிராட்டி, அருண கிரியார், வள்ளலார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், மௌனகுரு சுவாமி, காமாட்சி மௌனகுரு சுவாமி, வல்லநாடு சித்தர், தண்டபாணி சுவாமி, வள்ளியூர் ஸ்ரீவேலாண்டி சுவாமி, வாரியார் சுவாமி என பலர் எம்பெருமான் முருகனை உள்ளமும் உயிரும் உருக வேண்டி நிரம்பினர்.

சஷ்டி விரதப் பலன்கள்

சஷ்டி விரதத்தின் முக்கிய பலன் கரு தங்குவது- அதாவது குழந்தைப் பிறப்பது. மேலும், இன்னொரு முக்கியமான பலன், செய்வினைக் குற்றம் நீங்கிவிடும். செல்வப்பெருக்கு, அறிவு அதிகப்படுவது, மனதிலும் உடலிலும் சுறுசுறுப்பு, கடன் அடைவது, திருமணத்தடை நீங்குவது, நாள்பட்ட நோய்கள் மறைவது, பெரும் ஆபத்துகள் விலகுவது, நல்லதிர்ஷ்டம் பெறுவது, தொழில், வேலை மேன்மை, நினைத்த நற்செயல்கள் நடப்பது என ஒரு மனிதருக்கு எவையெல்லாம் அவசியம் தேவையோ அனைத்தும் தருவது கந்தசஷ்டி விரதமே!

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் கட்டாயம் சஷ்டி கவசப் பாராயணம், காலை, மாலை இருவேளையும் கூறுவர்.

பொதுவாக, ஸ்ரீதேவராய சுவாமிகள்

அருளிய, "சஷ்டியை நோக்க சரவண பவனார்'

எனத் தொடங்கும் கவசத்தைக் கூறுகிறோம்.

இது தவிர அவர் பழனி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருத்தணிகை, பழமுதிர் சோலை என அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தசஷ்டி கவசம் இயற்றி அருளியுள்ளார். நாம் பொதுவாக திருச் செந்தூர் சஷ்டி கவசம் மட்டுமே கூறுகிறோம்.

மேலும் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்தகுரு கவசம், குமரகுருபர சுவாமிகள் அருளிய திருச் செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணாகிரி நாதர் அருளிய கந்தர் அனுபூதி என சொல்லிக் கொண்டே போகலாம். பாம்பன் சுவாமிகள் அருளிய "குமாரஸ்தவம்' படிப்பது மிக நல்லது.