வான் என்றால் நிலவுண்டு. மரமிருந்தால் கிளையுண்டு. கிளை இருந்தால் இலையுண்டு; மலருண்டு. முருகன் என்றால் வேலுண்டு. வேல் இருந்தால் அதில் சக்தி உண்டு. உலகத்திலுள்ள சக்திகளையெல்லாம் ஒன்றுதிரட்டி அன்னை பராசக்தி முருகனுக் களித்த அளித்த அற்புத ஆயுதம் வேலாயுதம். அன்னை கையிலே சூலாயுதம். அழகன் முருகன் கையிலே வேலாயுதம்.

"சரவணபவ' என்னும் ஆறெழுத்துதான் இந்த புனிதவேல். கல்வி, செல்வம், ஆகிய வீரம்மூன்றையும்; ஞானம், முக்தி, அடக்கம் என்ற மூன்றையும் கூரிய வேல்முனை பெற்றுத் தரும்.

சுக்கிராச்சாரியாரின் சீடர்களில் ஒருத்தி "மாயை' என்பவள். நிறைய மாயக்கலைகளை அவளுக்குக் கற்பித்து "மாயை' என்ற பெயரையும் சூட்டினார். இந்த மாயை ஒருசமயம் காட்டில் தவத்திலிருந்த காஸ்யப முனிவரிடம் வந்தாள். அவரது தவத்தைக் கலைத்து, அவரைத் தன்வசப்படுத்த எண்ணிய மாயை, அங்கு ஒரு பூஞ்சோலையை அமைத்து, தன்னை ஒரு அழகு தேவதைபோல மாற்றிக்கொண்டு, முனிவரின் முன்பு பாதச்சிலம்புகள் "கலீர் கலீர்' என்று ஒலிக்க, நடந்துவருவதும் போவதுமாக இருந்தாள். இந்தச் சிலம்பொலி கேட்டு தவம் கலைந்த முனிவர், எதிரே அழகிய கன்னிப்பெண் நிற்பதைக்கண்டு அவள் அழகில் மயங்கினார். காஸ்யப முனிவரின் ஆசையைத் தூண்டிவிட்டுப் பின் அவரைவிட்டு விலகிவிலகிப் போனாள்.

முனிவரின் விரகதாபம் அதிகரித்தது. முனிவரை அவள் ஏற்காததுபோல் நடித்தாள். மன்றாடி மாயையை இணங்க வைத்தார். அந்தி மாலைச்சூரியன் மறைந்து, இரவும் பகலும் சேரும் நேரம் வந்தது. இது அசுர சந்தி வேளை. இந்த வேளையில் முனிவருக்கும் மாயைக்கும் உதித்துப் பிறந்தவனே சூரபத்மன்.

Advertisment

அவனது தாய் "மாயை'யின் ஆலோசனை யின் பேரில் பெருஞ்செல்வமும், அரசாளும் தகைமையும், ஈரேழு உலகத்தைத் தன்வசப் படுத்தும் வன்மையையும் பெறவேண்டி சூரபத்மன் கொஞ்சமும் சளைக்காமல் சிவபெரு மானைக் குறித்துத் தவமியற்றினான். சுக்கிராச்சாரியாரும் ஆசி வழங்கினார். வடக்கு திசை சென்று பதினாராயிரம் "யோஜனை' அகலமும் நீளமும் கொண்ட பெரிய நிலப்பரப்பைத் தேர்ந்தெடுத்து, அதில் பெரியபெரிய யாகக் குண்டங்களை அமைத் துக் கடுமையாக தவமியற்றினான். ஆனால் சிவபெருமான் நேரில் தோன்றவில்லை. மேலும் கடுமையாகத் தவமியற்றிய சூரபத்மன், தானே யாகக் குண்டத்தில் விழுந்து ஆகுதி ஆனான். அப்போது அங்கு ஒரு கிழவன் வேடத்தில் தோன்றிய சிவபெருமான் அக்னி குண்டத்திலிருந்து சூரபத்மனை எழுப்பினார்.

வெளியே வந்த சூரபத்மன், ஒரு பெண் வயிற்றில் பிறந்த எவராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்றும், இந்த மூவுலகிற்கும் தானே அதிபதியாக இருக்கவேண்டுமென்றும் வரம் கேட்டான். கேட்ட வரத்தைக் கேட்டபடி அருளினார் சிவபெருமான்.

அசுரனுக்கு வரம் கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும்! அவ்வளவுதான்; முதலில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டான். அவர்களைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தான். முனிவர்களையெல்லாம் ஓடஓட விரட்டினான்.

Advertisment

அவர்களின் தவத்தைக் கலைத்தான். பூலோகத்து மக்களையெல்லாம் புரட்டிப் புரட்டிப் போட் டான். அசுரர்களுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்தான். எத்தனை வகை செல்வங்கள் உண்டோ அத்தனையும் சேர்த்துக்கொண்டான்.

ஆணவமும் அகம்பாவமும் அதிகமாகும் போது அழிவு தானேவந்து ஒட்டிகொள்ளும். அடக்கத்தில் இருக்கும் சுகம் ஆணவத்தில் இருக்காது. தேவர்களும் முனிவர்களும் பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர்.

அழுதுபுலம்பினர். அவர்களின் வேதனைகளுக்குச் செவிசாய்த்த சிவபெருமான், ""அச்சம் வேண்டாம்... சூரபத்மனின் அழிவு காலம் நெருங்கிவிட்டது. அவனை அழிக்க பெண் வயிற்றிலிருந்து பிறக்காமல், என்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து அக்னிப்பொறிகளை வெளிப்படுத்தி ஒரு ஆண்மகனை உண்டாக்குகிறேன். அவனே சூரபத்மனை வதம் செய்யப்போகும் ஆறுமுகனாவான். சென்று வாருங்கள்'' என்று கூறி அனுப்பினார்.

சிவபெருமான் அருளியதுபோலவே, "ஸ்கந்தன்' சிவபெருமானின் ஆறு முகங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப்பட்டான். ஆறு பொறிகளும் கங்கையில் விழுந்து குளிர்ந்தது. குளிர்ந்தபின் சரவணப் பொய்கையில் விழுந்து, ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாயின. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவி அணைத்துக்கொள்ள ஆறு உருவமும் ஓருருவாகி ஆறுமுகனான்.

murugan

காலமும் நேரமும் வந்தது. சூரபத்மனை எதிர்கொள்ளும் வேளையும் வந்து சேர்ந்தது. முருகன் தயாரானான். படைகளை சேர்த்துக் கொண்டான். ஒவ்வொரு தலைவனுக்கும் ஒவ்வொரு படை; அதில் ஒரு லட்சம் போர் வீரர்கள் என்று ஒன்பது லட்சம் படை வீரர்களுடன் சூரபத்மனை வதம்செய்யச் சென்றான். தன்னுடைய முழு சக்தியையும் ஒரு அழகிய வேலில் ஆவாஹனம் செய்து கொடுத்தாள் பார்வதி அன்னை. அந்த ஒரு வேலே பல லட்சம் வீரர்களின் முழுவலிமை யும் கொண்டதாக இருந்தது.

சிவகுமாரனை, சூரபத்மன் தன் அரக்கர் படைகளுடன் எதிர்கொண்டான். ""சின்னஞ் சிறுவனான இவனை சின்னாபின்னமாக்கிவிடுகிறேன்'' என்று கொக்கரித்தான். எச்சரித்தான் முருகன். ஏற்றுக்கொள்ளவில்லை சூரபத்மன். வேறுவழியின்றி படை வீரர்களை முடுக்கிவிட்டான் முருகன். போர் நடந்தது. தோற்றுப் போனான் சூரபத்மன். இல்லை; தோற்கடிக்கப்பட்டான். அவனை வதம் செய்ய முருகன் முற்பட்டபோதெல்லாம், சூரபத்மன் தன் மாயசக்தியால் இங்குமங்கும் மாறிமாறித் தோன்றி மறைந்தான். மாயமான சூரபத்மன் தன்னை ஒரு மாமரத்தோற்றத் தில் மறைத்து நின்றான். இதுதான் தக்க சமயமென்று பராசக்தி ஆசிகூறிக் கொடுத்த தங்கவேலை எடுத்து மரத்தின்மீது வீசினான்

முருகன். மாமரம் இரண்டாகப் பிளவு பட்டு விழுந்தது. அதில் ஒன்று மயிலானது. மற் றொன்று சேவலானது. மயிலைத் தன் வாகன மாக்கிக்கொண்டான் முருகன். சேவலைத் தன் கொடியாக்கி கையிலேயே வைத்துக் கொண்டான். ஆணவம் அங்கே அழிந்தது.

அகம்பாவம் ஒழிந்தது. ஞானம் தலைநிமிர்ந்து நின்றது. அப்போது மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், மாமுனிவர் களும் முருகனின்மீது மலர்களைச் சொரிந்தனர்.

முருகனை வாழ்த்தினர். இது நடந்த சஷ்டி நன்னா ளையே "கந்தசஷ்டி' என்று கொண்டாடு கிறோம்.

அலைகடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் திருச்செந்தூரில் இந்த போர் நடந்து முருகன் வெற்றிவாகை சூடியதால், ஒவ்வொரு கந்த சஷ்டியிலும் "சூரசம்ஹாரம்' நிகழ்ச்சி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆலயத்தில் முருகன் ஒரு கரத்தில் வேலும், இன்னொரு கரத்தில் தாமரை மலரும் வைத்துக்கொண்டு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அதாவது சூரபத்மனை போரில் வென்று வெற்றிவாகை சூட, தனது தந்தையான பரமேஸ்வரனை தாமரை மலரால் பூஜை செய்வதே இத்திருக்கோலம். மூலவருக்குப் பின்னால் பஞ்சலிங்கங்கள் இருப்பதே இதற்குச் சான்று.

தீபாவளிப் பண்டிகை அமாவாசையை அடுத்த பிரதமை திதியிலிருந்து ஆறு நாட்கள் சஷ்டி விரதமிருந்து, சஷ்டியன்று முருகனை ஆராதனை செய்யவேண்டும். இந்த சஷ்டி விரதத்தை ஏனோதானோவென்று கடைப்பிடிக்கக்கூடாது. மிகுந்த நியம நிஷ்டை யுடன், ஆச்சாரத்துடன் விரதமிருந்து பூஜிக்க வேண்டும். இந்த ஆறு நாட்களும் திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தசஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் போன்றவற்றை பக்தியோடு பாராயணம் செய்யவேண்டும். முருகனுக்குரிய செவ்விய மலரால் பூஜிக்க வேண்டும். தேனும் தினைமாவும் கலந்து நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு விரதம் மேற்கொண்டால் நமக்கு முருகன் எல்லா ஐஸ்வரியத்தையும் அள்ளிக்கொடுப்பான். குழந்தையில்லாத தம்பதிகள் இந்த சஷ்டி விரதத்தைக் கடைப்பிடித்தால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும். இதில் சந்தேகமே இல்லை.

"கந்தசஷ்டி'யன்று திருச்செந்தூரில் "சூரசம்ஹாரம்' நிகழ்ச்சி இன்றும் அமர்க்கள மாக நடைபெறுகிறது. அங்கு மட்டுமல்ல; அனைத்து முருகன் கோவிலிலும் இந்த விழா சிறப்பாக நடைபெறும். (திருத்தணி தவிர).

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட ஆதி சங்கரர் திருச்செந்தூரில் வந்து தங்கியிருந்து, "கந்தசஷ்டி' விரதத்தைக் கடைப்பிடித்ததால் அவரது வயிற்றுவலியை முருகன் நீக்கினான். அப்போதுதான் அவர் "சுப்ரமண்ய புஜங்கம்' என்ற துதியை இயற்றிப் பாடினார்.

திருத்தணி குங்குமம், திருச்செந்தூர் விபூதி, பழனி சரவணப்பொய்கை, பழமுதிர்ச்சோலை தென்றல் காற்று, சுவாமிமலை மந்திரம், திருப்பரங்குன்றத்து தெய்வானை என்றென்றும் நம்மைக் காத்தருளும் முருகக் கவசங்களாகும்.

முருகன் குழந்தைகளுக்குக் குழந்தையானவன். இளைஞர்களுக்குக் குமரன். கலைஞர் களுக்கு ஆறுமுகன். வீரர்களுக்கு சேனாபதி. வேதமந்திரம் கற்றவர்களுக்கு ஞானபண்டிதன். நல்ல தம்பதிகளுக்கு வள்ளி மணாளன். பற்றற்ற ஞானிகளுக்கும் மகான்களுக்கும் அவன் ஆண்டியாக இருந்து அருள்பாலிக்கிறான். அழகன் முருகனை கந்த சஷ்டியில் துதிப்போம். அருள்பெறுவோம்.