கன்னி என்பது காலபுருஷனின் 6-ஆவது ராசியாகும். இதன் அதிபதி புதன் ஆவார். இதே ராசியில் புதன் ஆட்சி, உச்சமடைவது மிகச் சிறப்பு. சுக்கிரன் இங்கு நீசமடைவார்.
குடும்ப விவரம்
கன்னி ராசியினர் நல்ல உழைப்பைக் கொடுப்பவர்கள்.
மற்றவர்கள்போல அல்லாமல், இவர்களின் உழைப்பில் புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும். ஒரே அலைச்சலில், மூளையோடு பத்து வேலையை முடித்துவிடுவர். சிலரிடம் சற்று குறும்பும் நரித்தனமும் நிறைந்திருக்கும். இவர்களது குடும்பத்தினர் இனிமையாகப் பேசுவர். அழகியல், கலைசார்ந்த பணம் புழங்கும் குடும்பமாகும். இவருடைய இளைய சகோதரர் சற்று சண்டைக்குணம் கொண்டவராக இருப்பார். தாயார் நல்ல பக்தியும் அன்பும் கொண்டவர். பூர்வீகம் பழமை மிகுந்ததாக இருக்கும்.
தாய்மாமன் எதையும் வெளிக்காட்டாத அழுத்தமானவராக இருப்பார். உழைப்பை மிக நல்கும் வேலை அமையும். மனைவி பக்தியோடும், கணவன் பயண விருப்பத்தோடும் உள்ளவராக அமைவார். முன்கோபம் அவமானத்தைத் தேடித்தரும். தந்தை கலையுணர்வு மிக்கவராக இருப்பார். இவர்கள் தொழிலில் கணிதம், தொலைத்தொடர்பு அதிகம் சார்ந்திருக்கும். மூத்த சகோதரி, ஒரு தாயைப்போல இவர்களைப் பேணிக்காப்பார். அரசு சார்ந்த பயணம் அதிகமிருக்கும்.
இது கன்னி ராசியின் பொதுவான அமைப்பு. பிறந்த ஜாதக கிரக நிலைப்படி சற்று வேறுபாடுகள் இருக்கும்.
குரு இருக்குமிடப் பலன்
குருபகவான் கன்னி ராசியின் 4, 7-ன் அதிபதியாவார். அவர் இவ்வளவு நாளும் மகரம் எனும் 5-ஆமிடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது கும்பம் எனும் 6-ஆமிடத்தில் அமர்கிறார்.
6-ஆமிடம் என்பது ருண, ரோக, எதிரி ஸ்தானம். அவர் கன்னி ராசியின் சுக, களஸ்திர அதிபதி.
குரு 4-ஆமிட அதிபதியாகி 6-ல் அமரும்போது, கன்னி ராசியினரின் சுகம் சற்று கெட வாய்ப்புள்ளது. இதனால் கணவன்- மனைவியிடையே இடைவெளி ஏற்படும்.
வாழ்க்கைத்துணைக்கு வேலை கிடைத்து வேறிடம் செல்வதால், தம்பதிகள் ஆளுக்கு ஓரிடமாக இருப்பர். குழந்தைகளின் கல்வி பொருட்டு இடமாற்றம் உண்டு.
ஜாதகரின் வேலை இடமாற்றத்தால், தம்பதிகள் பார்த்துக்கொள்ளும் நேரம் குறையும். உங்களில் ஒரு சிலருக்கு கைபேசி செய்திப் பரிமாற்றம் புகழைத்தரும். வேறு சிலரை இதே விஷயம் சிறையில் தள்ளும். இதனாலும் தம்பதிகள் பிரிவுண்டு. ஆன்மிக விஷயம் ஆளுக்கொரு இடம் செல்லச் செய்யும்.
வார்த்தைகள் தடித்து, அதுவும் தம்பதிகளிடையே சுவர் கட்டிவிடும். சில வீடுகளில் ஜாதகரின் தந்தையும் இதற்குக் காரணமாவார். வீடு கட்டுவதாலும், வயல் வேலைகளாலும் தம்பதிகள் பிரிய நேரலாம்.
ஏழாமதிபதி 6-ல் இருப்பதால், தம்பதிகளிடையே சண்டை சாதாரண மாக இருக்கும். சிலசமயம் உங்கள் தாய், நண்பர்கள், பிறந்த வீட்டு சொந்தங் களிடம்கூட மனக்கசப்பு நேரிடும்.
இதில் தம்பதிகள் பிரிவென்பது வேறு ஊருக்குச் செல்வது மட்டுமல்ல; ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருவரோடொருவர் பேசாமலிருப்பதும் ஒருவித பிரிவுதான்.
5-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 5-ஆம் பார்வையால் கன்னி ராசியின் 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். 10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம். எனவே இந்த குரு பார்வை உங்களில் நிறைய ஜாதகர்களை சொந்தத் தொழில் தொடங்கச் செய்யும். அது உங்களின் சொந்த முயற்சியால் ஆரம்பிக்கப்படும். அனேக மாக உங்கள் பெயரிலியே கடை, ஸ்தாபனம், வணிகம் தொடங்குவீர்கள்.
தொழில் சம்பந்தமாக ஏதேனும் வழக்கு நிலுவையில் இருப்பின், இந்த காலகட்டத்தில் அது உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகும். உங்களில் சிலர் எதிர்வீட்டை வாங்க இயலும். உங்களில் சிலர் திருமண மண்டபத்தை வணிக வளாகமாக மாற்றுவீர்கள். பூமி சம்பந்தமான வில்லங்கம் தீரும்.
வெளிநாட்டு சம்பந்தம் கொண்ட ஏற்றுமதி- இறக்குமதி தொழிலில் இருந்த வில்லங்கம் நீங்கிவிடும். அது சம்பந்தமான எதிர்பாராத தகவல் கிடைக்கும்.
10-ஆமிடம் கௌவரத்தைக் குறிக்கும். எனவே இந்த கும்ப குரு, உங்கள் கௌரவத்தை, புகழை, செல்வாக்கை, அந்தஸ்தை அதிகரிக்கச் செய்வார்.
உங்களில் தொழில், இல்லறம் சார்ந்த பொறுப்புகள் அதிகமாகும்.
உங்களின் தொழிற்சங்கம், வணிக அமைப்பு, வர்த்தக சபை போன்றவற்றில் தலைமைப் பொறுப்பு வந்துசேரும்.
விவசாயப் பெருமக்கள் மகிழும் வண்ணம் சூழ்நிலை அமையும். வேளாண் வேலையில் எதிர்மாறான ஒரு செயல் வெகு நன்மை தரப்போகிறது.
கைபேசி, தொலைதொடர்பு, ஒப்பந்த குத்தகைகள், அறுவை சிகிச்சை மருத்துவமனை, சிறைச்சாலை சம்பந்தம், கோவில் ஸ்தபதிகள், வீடு கட்டும் தொழில், கல்வி நிலையம், இல்லறத் துறையின் நட்புக்கரம், பலமொழி ஆராய்ச்சி சம்பந்தம், இஸ்லாமிய நாட்டுத் தொடர்புடைய தொழில்கள், அக்கவுண்ட் இன்ஸ்ட்டியூட், வணிக வளாகங்கள், திருமண அமைப்பு நிலையம், கல்வி ட்யூஷன் தொழில், நீராதாரம் கண்டுபிடித்தல் என இவை போன்ற தொழில்கள் குருவின் பார்வையால் செழிக்கும்.
7-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 7-ஆம் பார்வையால் கன்னி ராசியின் 12-ஆம் வீடு எனும் விரய ஸ்தானத்தை உற்று நோக்குகிறார். குரு பார்ப்பதால், அனைத்தும் சுப விரயமாக அமையும். அலைச்சலும் நன்மை தரும் விதமாக இருக்கும்.
அரசு சம்பந்தமான அலைச்சல் அமையும். தந்தை சம்பந்தமாக அலைச்சலும், விரயமும் ஏற்படும்.
உங்கள் இளைய சகோதரனுக்கு வேலை தேடும் பொருட்டு அல்லது அவரது தொழிலில் முதலீடு சேர்க்கும் பொருட்டு அலைச்சல் மற்றும் செலவிருக்கும்.
உங்கள் குடும்பத்தாரின் செலவு வரும். உங்கள் வாக்கினால் அலைச்சல் உண்டு. உபன்யாசம், பேராசிரியர் போன்ற பணிகளில் இருப்பின் சற்று வேறிடம் சென்று தொழில், வேலை செய்யக்கூடும். சிறிய புழுவைப் போட்டு, பெரிய மீனைப் பிடித்துவிடுவீர்கள்.
உயர்கல்வி கட்டணச் செலவு வரும். ஹோமம் செய்யும் பாக்கியம் கிட்டும். நகை வாங்கும் செலவுண்டு. ஆன்மிக- ஜோதிட நூல்கள் வாங்கும் செலவு வரும்.
நல்ல தூக்கம் வர ஏசி. மெத்தை என வாங்குவீர்கள்.
உங்களில் சிலருக்கு திருமணச் செலவு, அலைச்சல் ஏற்படும்.
மனை, வீடு டெபாசிட்டுகள், பத்திரிகை, ரியல் எஸ்டேட் என முதலீடு செய்வீர்கள். இரண்டாவது தொழில் முதலீடு உண்டு. வீட்டில் ஏற்படும் சுப விசேஷங்கள் சார்ந்து செலவுண்டாகும்.
ஆக குரு பார்த்த 12-ஆமிடம், நிறைய சுபச்செலவுகளையும், ஆதாய அலைச்சலையும் தரும்.
9-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 9-ஆம் பார்வையால் கன்னி ராசியின் இரண்டாமிடத்தைப் பார்க்கிறார். இது ஒரு நல்ல பார்வையாகும். குரு பார்வை பட்ட இடம் பொன்னாகும். அதுவும் தனஸ்தானத்தில் குரு பார்வைபடுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்டது துளிர்க்கும். அசையும் சொத்துகள் வாங்குவீர்கள்.
2-ஆமிடம் என்பது குடும்பத்தைக் குறிக்கும். அதை பெருக்கத்தைக் குறிக்கும் குரு பார்ப்பதால், குடும்பப் பெருக்கம் உண்டு. உங்களில் நிறைய கன்னி ராசியினர், திருமணமாகி குடும்ப சொந்தபந்த விஸ்தரிப்பு காண்பீர்கள்.
2-ஆமிடம் வாக்கு ஸ்தானம். பேச்சில் இனிமை கூடும். அர்த்தம் பொதிந்த பேச்சாகப் பேசுவீர்கள். அந்த பேச்சு பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
உங்களின் திட்டவட்டமான, தீர்க்கமான சொற்கள், குடும்பத்தில் முதன்மைநிலை பெற்றுத்தரும்.
குடும்பக் கடமைகளைக் குறிப்புணர்ந்து நிறைவாக நிறைவேற்றுவீர்கள். இதனால் உங்கள் நிலை ஓங்கும்.
வாக்கில் உண்மை உறுதிப்படும். சொற்கள் வலிமை பெறும்.
பணம் வரும் வழிகளை பலவிதமாக சிந்தித்து பலப்படுத்துவீர்கள்.
புதையல்போல் ஏதோ ஒரு பரிசு கிடைக்கும். அது பூமி, மண் சார்ந்த விஷய மாக இருக்கும். விவசாயிகள் ஏதோ ஒரு பணப்பலன் பெறப் போகிறார்கள்.
அயல்நாட்டு சங்கதி, சரளமான செல்வம் கொண்டுவந்து சேர்க்கும்.
அயல் மொழி பயன்பாடு அதிக தனம் தரும்.
திருமணம் செல்வம் சேர்க்கும். சிலருக்கு தாயாரின் ஏதோவொரு சொத்து கிடைக்கும். ஆரம்பக் கல்விக் குழந்தைகளின் கல்வி சிறக்கும். கைபேசி செல்வம் சேர்க்கும்.
பொதுப் பலன்கள்
கன்னி ராசிக்கு குரு 6-ல் மறைந்தாலும், அவர் தொழில், தன ஸ்தானத் தைப் பார்வையிடுகிறார். இதனால் கன்னி ராசியாரின் தொழில் வளம் பெருகி, செல்வச் செழிப்பு ஏற்படும். எனினும் குருவின் பார்வை 12-ஆமிடத்திலும் பதிவதால், கன்னி ராசியினருக்கு விரயமும் செலவும் மிக அதிகரிக்கும். என்னதான் சுபச் செலவாக இருப்பினும், செலவழித்த பணமும் அலைந்த அலைச்சலும் இல்லையென்று ஆகிவிடுமா? இதுவொரு மைனஸ் பாயின்ட் ஆகும். இந்த அலைச்சலும், பண விரயமும் எந்த தம்பதியிடம் இணக்கத்தைத் தரும்? மனப்பிரிவு உண்டு. எனவே இந்த குருப்பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு 50 சதவிகித நற்பலன் தரும்.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கு அதீத செலவுகளை அள்ளித்தரும். சுபச்செலவுகளே ஆனாலும் கட்டுக்கடங்காமல் போகும்போது திகைப்பும் எரிச்சலும் கொடுப்பது இயற்கையே. இவ்வாறு அலைந்து செலவு செய்துசெய்து, இதில் பாண்டியத்யம் பெற்றுவிடுவீர்கள். உதாரணமாக, திருமணத்திற்கு யார் யாரை அணுகவேண்டும்- அலைச்சலைக் குறைத்து, கூடிய மட்டும் கைபேசியின்மூலம் எந்த வேலையை முடிக்கலாம் என மிகத் தெளிவு பெற்று, அடுத்தவருக்கு ஆலோசனை கூறுவீர்கள். அடுத்து, அரசுத் துறைகளில் லஞ்சம் கொடுப்பது எப்படி- லஞ்சத்தைத் தர சரியான நபர்களைக் கண்டுபிடிப்பது எப்படி- அதன்மூலம் அரசு விஷயங்களை எளிதாக, விரைவாக முடிப்பது எப்படி என வகுப்பெடுக்கும் அளவிற்குத் தேறிவிடுவீர்கள். யார் கண்டது- பிற்காலத்தில் இந்த அனுபவங்களைக்கொண்டு, தொழில் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. தோட்டம், விவசாய பூமி, பசுமையான இடங்களின் நடுவே உள்ள சிவனை வணங்கவும்.
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சியில் உங்களுக்கு திண்ணிய எண்ணம் தோன்றும். தொழில் லாபத்தைப் பெருக்குவது எப்படி? உங்கள் யோசனையின்படி தொழிலை வடிவமைப்பது எவ்வாறு? முதலீடுகளுக்கான சரியான வழி என்ன? எளிதாகப் பணம் சம்பாதிப்பது எப்படி? அரசியல் உயர்பதவி பெறவும், அரசு கௌரவம் கிடைக்கவும் எந்த வழியில், யாரை அகற்றி விட்டு நாம் முதல்படிக்குச் செல்லலாம்? மூத்த சகோதரியின் சொத்தை முழுவதாக அடையும் வழி என்ன? பதவி உயர்வு எங்கு கிடைக்கும் என இவ்விதமாக சிந்தனை செய்வதற்கே நேரம் போதாது. இதுபோன்ற விஷயங்களில் பெருமுயற்சி எடுத்து வெற்றியும் பெறுவீர்கள். வயல் நடுவில் அமைந்திருக்கும் அம்பாளை வணங்கவும்.
சித்திரை 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி சமயத்தில் எப்போதும் கைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். ஒரு நேரம்போல் ஒரு நேரம் இருக்காது! திடீர் வில்லங்கம் வரலாம். அப்புறம் ஆயிரம் காரணம் சொன்னாலும் தப்பிக்க முடியாது. எளிதாகப் பணம் கிடைக்கிறதென்று எந்த குறுக்கு வழிகளிலும் இறங்கவேண்டாம். வேலையாட்களிடம் கவனமாக இருத்தல் அவசியம். நன்றாக விசாரிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டாம். வயல்சூழ் கந்தனை வணங்கவும்.
பரிகாரங்கள்
சிவனை வணங்கவும். செலவு செய்யும்போது ஏழைகளிடம் மட்டும் பேரம் பேசவேண்டாம். அடிபட்டவர்களுக்கு தேவைப்படும் மருந்து உதவி செய்யவும். குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவவும். பெருமாளை, சங்கர நாராயணரை வணங்கவும். "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்' என்ற பஞ்ச புராணப் பாடலைப் பாராயணம் செய்யவும்.