மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என இரு மனைவிகள். மகாலட்சுமியான ஸ்ரீதேவி திருமாலின் இதயத்தினுள்ளேயே உள்ளாள். திருமலையில் மகாலட்சுமித் தாயாருக்குத் தனியே கருவறை இல்லை.
ஆண்டாள் அரங்கனையே கணவனாக மதித்தாள்; அவருள் கலந்து மறைந்தாள். பெருமாள் கோவில்களில், தனிச் சந்நிதிகளில் மகாலட்சுமித் தாயார் அமர்ந்த நிலையிலும், ஆண்டாள் (பூதேவி அம்சம்) நின்ற நிலையிலும் உள்ளதைக் காணலாம். உற்சவ மூர்த்திகளாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாளை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம்.
திருமாலின் அவதாரங்களான மத்ஸ்ய, கூர்ம மூர்த்திகளை தேவியுடன் காணவியலாது. வராஹ மூர்த்தியைக் காண்பதரிது. லட்சுமியை ஏந்துபவராகக் காணலாம். நரசிம்மர் உக்ர அவதாரம். அவரைக் கண்டு மகாலட்சுமி அஞ்சினாள். நரசிம்மரைத் திருமணம் செய்து கொண்டாள் என்றில்லை. ஆயினும் லட்சுமி நரசிம்மராகக் காணலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krishnan_36.jpg)
இராமபிரான் ஏகபத்தினி விரதன்.
அவருக்கு சீதை மட்டுமே. பரசுராமரை பத்தினி யுடன் காண்பதரிது. கிருஷ்ணன் என்றாலே- கருவறை மூர்த்தியோ, உற்சவ விக்ரகமோ- ருக்மிணி, சத்யபாமாவுடன்தான் காணலாம்.
ராதாகிருஷ்ணன், ராதாரமணன் என்போம். ராதாவை வடநாட்டில்தான் காணலாம். அங்கு ருக்மிணி, சத்யபாமாவைக் காணவியலாது.
கிருஷ்ணனுக்கு ருக்மிணி, சத்யபாமா, நக்னஜித்தி, ஜாம்பவதி, மித்ரவிந்தா, காளிந்தி, பத்ரா, லக்ஷ்மளை என்று எட்டு மனைவியர் என்பர். ஆனால் இவர்கள் எண்மரையும் கிருஷ்ணருடன் ஆலயங்களில் காணவியலாது. இப்போது அந்த எட்டு மனைவியரின் திருமண விவரத்தை சுருக்கமாகக் காண்போம்.
ருக்மிணி
விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனின் மகள் ருக்மிணி. பைஷ்மி என்னும் பெயருமுண்டு. மகாலட்சுமியின் அம்சமா கக் கருதப்படுபவள். அவளுக்கு ருக்மரதன், ருத்ரபாஹு, ருத்மகேசன், ருக்மமா- என நான்கு சகோதரர்கள். ஒருசமயம் ருக்மிணி நந்தவனத்தில் வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். அப்போது வானில் உலவிக்கொண்டிருந்த நாரதர் அந்த இசையில் மயங்கி, இந்த வீணாவாதினிக்கு வேணுகோபாலனே உகந்த கணவன் என்றெண்ணினார். உடனே துவாரகை சென்று கிருஷ்ணரிடம் கூறினார்.
ருக்மிணி, கண்ணனே தனக்குக் கணவன் என மனதார வணங்கி வந்தாள். இதை அவளது தந்தை பீஷ்மகனும் உணர்ந்திருந் தான். வயதான பீஷ்மகன் சபையைக் கூட்டி, "துவாரகாதீச கிருஷ்ணனுக்கு ருக்மிணியை மணம் செய்து கொடுப்போம்'' என்றான். சகோதரன் ருக்மியோ, "கிருஷ்ணனா? அவன் மிகப்பெரிய திருடன். கோபியர்மீது மோகமுள்ளவன். எனவே சேதிநாட்டு அரசனின் மகன் சிசுபாலனுக்குதான் அவளைத் தரவேண்டும்'' என்று கர்ஜித் தான். பீஷ்மகனால் வாதிட முடியவில்லை.
இந்த செய்தி ஒரு தோழிமூலம் ருக்மிணிக் குத் தெரியவந்தது. உடனே ருக்மிணி ஒரு காதல் கடிதம் எழுதினாள். (வடமொழியில் அருமையான துதிகளுடன் இது உள்ளது.) அதில் "நான் உங்களையே கணவனாக வரித்துவிட்டேன். திருமணத்திற்கு முதல் நாள் இரவு அம்மனை வழிபட கோவிலுக் குச் செல்வேன். அப்போது நீங்கள் அங்கு வந்து என்னைக் கவர்ந்து சென்று மணந்து கொள்ளவேண்டும்' என்று குறிப்பிட்டு, அதை ஒரு உஞ்சவிருத்தி அந்தணர்மூலம் கண்ணனுக்கு அனுப்பிவைத்தாள்.
அந்தணர் கடிதத்தைக் கொண்டுசென்று கண்ணனிடம் கொடுக்க, "நீரே அதைப் படியும்'' என்றான் கண்ணன். அந்தணர் படித்துக்காட்ட, "கவலை வேண்டாம்'' என்றான் கண்ணன். இந்தத் தகவல் ருக்மிணிக்குத் தெரிவிக்கப்பட்டது.
ருக்மிணி குறிப்பிட்ட நாளில் கண்ணன் தேரில் ஏறி கோவிலை நோக்கிச் சென்றான்.
இதையறிந்த அண்ணன் பலராமன், சந்தேகம் கொண்டு, தேரில் ஏறி படைகளுடன் கண்ணனைப் பின்தொடர்ந்தார்.
(மகாராஷ்டிராவிலுள்ள அமராவதியில் இரண்டு அம்மன் கோவில்கள் உள்ளன. ஒன்று ருக்மிணியுடையது; மற்றொன்று அவள் வணங்கிய அம்மனுடையது. தலை மட்டுமே பெரிதாகத் தெரியும்படியான பிரம்மிப்பூட்டும் விக்ரகங்கள்.)
அங்கு சிசுபாலன் தன் தோழர்களுடனும் உறவினர்களுடனும் வந்து சேர்ந்தான். பல அரசர்களும் குழுமினர். அம்மனை வேண்டி வணங்கிய ருக்மிணி, அங்கு கண்ணன் வந்திருக்கி றானா என்று கவலையுடன் பார்த்தாள். ஒரு ஓரமாக கண்ணன் நின்றிருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தாள். அந்த சமயத்தில் கண்ணன் ருக்மிணியைக் கவர்ந்துசென்று தன் தேரில் ஏற்றினான். அங்கிருந்து தேர் விரைந்து அகன்றது.
சிசுபாலனும் மற்ற அரசர்களும் வியந்தனர்.
ருக்மிணியின் அண்ணன் ருக்மி தனது படை களுடன் துரத்தினான்.
கண்ணனுடனான போரில் படையினர் யாவரும் கொல்லப் பட்டனர். ருக்மி பிடிபட் டான். அவன் தலையைக் கொய்ய கண்ணன் முற்பட்டபோது, ருக்மிணி வேண்டித் தடுத்தாள். அதனால் கண்ணன் ருக்மியின் தலைமுடியில் பாதியை அகற்றினான். (அந்த இடம் "தாடிதாபா' என்னும் பெயரில் இன்றும் அமராவதியில் உள்ளது.) கண்ணன் துவாரகை வந்துசேர, அனைவர் முன்னிலையிலும் கண்ணன்- ருக்மிணி திருமணம் வெகுசிறப்பாக நடந்தேறியது.
காளிந்தி
ஒருசமயம் கண்ணன் பஞ்சபாண்டவர்களைக் காண இந்திரப்பிரஸ்தம் சென்றான். அனைவரும் கண்ணனை வணங்கினர். குந்திதேவி கண்ணனை வணங்கி, "இங்கேயே சில நாட்கள் தங்கவேண்டும்'' என கேட்டுக்கொள்ள, கண்ணனும் இசைந்தான்.
ஒருநாள் கண்ணனும் அர்ஜுனனும் வேட்டை யாடச் சென்றனர். பின்னர் களைப்படைந்த அவர்கள் யமுனையில் நீராடிவிட்டு இளைப் பாறிக்கொண்டிருந்தனர். அப்போது காளிந்தி என்னும் அழகிய பெண்ணைக் கண்டான் கண்ணன். "தங்களையே கணவனாக அடைய நான் தவமிருக்கிறேன்'' என்றவள் வேண்டிப் பணிய, கண்ணன் அவளைத் தேரில் ஏற்றி துவாரகைக்கு அழைத்துச்சென்று, அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டான்.
மித்ரவிந்தா
கண்ணனின் அத்தை ராஜாதிதேவி யின் மகள் மிக்ரவிந்தா. அவளும் ருக்மிணியைப் போல கண்ணனையே அடைய விரும்பினாள். அவளது சகோதரர்கள் விந்தா, அநுவிந்தா ஆகியோர் "திருட்டுக் கண்ணன்' என்று சொல்லி அவள் ஆசைக்குத் தடை விதித்தனர். அவளுக்கு சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தனர். அதற்கு கண்ணனும் வந்தான். அவளைக் கவர்ந்து சென்று துவாரகையில் திருமணம் செய்து கொண்டான்.
பத்ரா
கேகய நாட்டு அரசி ஸ்ருதகீர்த்தி கண்ணனின் அத்தை. அவளது மகள் பத்ரா கண்ணனையே கணவனாக வரித்தாள். இதையுணர்ந்த அவளது அண்ணன்கள் கேட்டுக்கொள்ள, கண்ணன் அவளை மணந்துகொண்டான்.
லக்ஷ்மளை
மந்ர நாட்டு அரசனின் மகள் லக்ஷ்மளை. அவள் கண்ணனையே கணவனாக அடைய விரும்பினாள். அவளுக்கு சுயம்வரம் நடந்தபோது கண்ணன் அங்குசென்று, தடுத்தவர்களையெல்லாம் தோல்வியுறச் செய்து, லக்ஷ்மளையுடன் துவாரகை வந்து அனைவரது முன்னிலையிலும் அவளை மணந்துகொண்டான்.
நக்னஜித்தி
கண்ணனில் எட்டு மனைவிகளில் ஆறாவ தாக வருபவள் நக்னஜித்தி. அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னஜித்தின் மகள் என்பதால் இவளுக்கு இப்பெயர், தான் வளர்க்கும் ஏழு காளைகளை அடக்குபவ வருக்கே நக்னஜித்தியை மணம் செய்துதர தீர்மானித்திருந்தான். ஏறு தழுவி, நக்னஜித்தியைக் கைப்பிடித்து நாடு திரும்பினன் கண்ணன். கண்ணன்- நக்னஜித்தி ஜோடிக்கு பத்து புத்திரர்கள்.
ஜாம்பவதி
சத்ராஜித் என்பவனுக்கு சூரியபகவான் உற்ற தோழர். சூரியன் அவனுக்கு சியமந்தக மணியை அளித்தார். அதனை அணிந்து கொண்ட சத்ராஜித் சூரியனைப்போல பிரகாசித்தான். அந்த மணியை பூஜா மண்டபத்தில் ஸ்தாபித்தான். அது தினமும் எட்டு பாரம் எடையளவு தங்கம் தருமாம். அந்த மணி இருக்குமிடத்தில் பஞ்சம், நோய், அகால மரணம் போன்றவை ஏற்படாது. கிருஷ்ணர் சத்ராஜித்திடம், "அந்த மணி உக்ரசேனரிடம் இருக்கவேண்டும்' என கேட்டார். சத்ராஜித் தர மறுத்துவிட்டான். கிருஷ்ணனும் அதற்காக சஞ்சலப்படவில்லை. ஒருசமயம், சத்ராஜித்தின் தம்பியான பிரசேனன் அந்த சியமந்தக மணியை அணிந்துகொண்டு வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அங்கிருந்த சிங்கம் ஒன்று குதிரையையும் பிரசேனனையும் கொன்றுவிட்டது. சிங்கத்துடன் மணியைக் கண்ட ஜாம்பவான் (கரடி) அந்த சிங்கத்தைக் கொன்று, சியமந்தக மணியைத் தன் குகைக்கு எடுத்துச்சென்று தன் மகள் ஜாம்பவதியிடம் விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தார். மணியை அணிந்து சென்ற தன் தம்பி பிரசேனன் திரும்ப வராததைக் கண்ட சத்ராஜித், சியமந்த மணிக்காக கண்ணன்தான் தன் தம்பியைக் கொன்று மணியைக் கவர்ந்து சென்றிருக்க வேண்டுமென்று பறையறிவித்தான். இந்த தகவலையறிந்த கண்ணன், தன்மீது வீண்பழி சுமத்தப்படுகிறதே என்றெண்ணி காட்டுக்குச் சென்று தேடினான்.
ஓரிடத்தில் குதிரையும் பிரசேனனும் இறந்து கிடப்பதைக் கண்டு, இது சிங்கத்தால் திகழ்ந்ததுதான் என்றறிந்து, சிங்கத்தின் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து சென்றான். மலைமீது சிங்கமும் கொல்லப்பட்டிருந்தது.
ஒரு கரடியால் சிங்கம் கொல்லப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த கண்ணன், அதன் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றான். அது ஒரு குகையருகில் சென்றது. அங்கே ஜாம்பவதியிடம் சியமந்தக மணி இருப்பதைக் கண்டான். அப்போது அங்கு வந்த ஜாம்பவான், மணியைத் திருடத்தான் வந்திருக்கிறான் என்றெண்ணி கண்ணனைத் தாக்கினார். 28 நாட்கள் கடும்போர் நிகழ்ந்தது. ஜாம்பவான் களைத்துப் போனார்.
தன் பிரபு ராமச்சந்திர மூர்த்தியோ இவர் என்று வியந்து வணங்க, கண்ணனை ராமனாகவே தரிசித்து நெகிழ்ந்தார்.
கண்ணன் அவரிடம், "நான் அந்த மணியைத் திருடிவிட்டதாக அவதூறு பரப்புகிறார்கள். அதைத் தெளிவுபடுத்தும் பொருட்டே மணியைத் தேடிவந்தேன்'' என்றான்.
அதைக்கேட்ட ஜாம்ப வான் தன்னை மன்னிக்கு மாறு வேண்டி, மணி யுடன் மகளையும் மனம் செய்துகொடுத்தார். ஜாம்பவதி மற்றும் மணியுடன் திரும்பிய கண்ணன், சத்ராஜித்தை சந்தித்து மணியை ஒப்படைத்தான். தன்மீது சுமத்தப்பட்ட பழியையும் போக்கிக் கொண்டான்.
சத்யபாமா
"மணியைத் திருடியவன்' என்று கண்ணன்மீது பழிசுமத்தியது குறித்து சத்ராஜித் மிகவும் வருந்தினான். எனவே கண்ணனிடமே அந்த மணியைக் கொடுத்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். கண்ணனோ, "இது உம்மிடமே இருக்கட்டும்'' என திரும்பக் கொடுத்துவிட்டான். மனம் சமாதானமடையாத சத்ராஜித், தன் மகளை மணந்துகொள்ளுமாறு வேண்ட, கண்ணன்- சத்யபாமா திருமணம் அனைவரும் காண நடந்தது. ஜாம்பவதி, சத்யபாமா, சியமந்தக மணியின் கதையைக் கேட்பவர்கள்மீதுள்ள அபவாதங்கள் நீங்கும் என்பது பல ஸ்ருதி.
16,000 மனைவிகள்
திருமாலின் வராக அவதாரத்தின்போது பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன்.
அவனுடைய கொடுமைகள் அதிகரித்தன. மகாவிஷ்ணுவோ, "பூமாதேவியின் அனுமதியின்றி நரகாசுரனைக் கொல்ல மாட்டேன்' என்று வரமளித்திருந்தார். சத்யபாமாவோ பூமாதேவி அம்சம் கொண்டவள். அவள் அனுமதியுடன், அவளே தேரோட்ட பிராக்ஜோதிஷபுரத்தில் (இன்றைய அஸ்ஸாம்) முரன், நரன் என்னும் இரு அசுர குடும்பங்களை அழித்து, தன் மகனே ஆயினும் அசுரன் என்பதால் நரகாசுரனையும் அழித்தார்.
அவன் இறக்கும் தறுவாயில் வேண்டிக் கொண்ட படியே இன்றும் அவன் மறைந்த நாளில் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.
அன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். பொதுவாக அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது; அது பாவம். ஆனால் தீபாவளியன்று அதுவே சுப மங்களம்.
மேலும், நரகாசுரன் தன் கோட்டையில் 16,000 கன்னிப் பெண்களை சிறையில் வைத்திருந்தானாம். அவர்கள் அனைவரும் விடுதலை பெற்றனர். அவர்களோ கண்ணனையே கணவனாக அடைய விரும்பினர். ராஸலீலையின்போது, கண்ணன ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணனாக உருவெடுத்து நடனமாடியதுபோல, 16,000 கன்னிப் பெண்களையும் 16,000 கண்ணனாக உருவெடுத்து மணந்துகொண்டானாம். (இந்த விவரங்கள் ஸ்ரீமத் பாகவதம், தசம ஸ்கந்தம் 56, 57-ஆம் அத்தியாயங்களில் உள்ளன.) இதைப் பரிசோதிக்க எண்ணிய நாரதர், சில வீடுகளுக்குள் புகுந்து கவனிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கண்ணன் தன் மனைவியுடன் ஆனந்தமாக இருப்பதைக் கண்டாராம். வினோதமான விஷயங்கள்!
சர்வம் கிருஷ்ண மயம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/krishnan-t.jpg)