னந்த அனுபவத்தையடைந்தாலும், உத்தவர் மனம், இரு களிறு பொருந்திய களம்போல் கலங்கியது.

""ஞானியராலும் உணரமுடியாத லீலா விநோதனே! குருகுலத்தில் ஐயம்திரிபுரக் கற்று இல்லம் திரும்பிய சீடன், அதன்பின்னும் ஐய வினா எழுந்தால் மனம் கலங்கிடுவான். அதுபோல தாங்கள் வைகுண்டம் ஏகியபின், என்னை வழிநடத்தும் குருவைத் தாங்களே எனக்குக் காட்டியருளவேண்டும். கோடி சூரியப் பிரகாசத்தை மானுடக்கண்களால் கண்ணுறுதல் ஆகாது. தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுதல்போல தங்கள் உபதேத்தை அருளிச்செய்தல் வேண்டும்'' என்று பரமாத்மாவிடம் தன் அறிவின் எளிமையை உத்தவர் எடுத்துரைத்தார்.

சீர்மல்கும் வாயில் ஜகத்தைக் காட்டிய யசோதை இளஞ்சிங்கம், உலகத்தின் வாயிலாய், ஞானத் தின் வாயிலைக் காட்டினான்.

அமுதூட்டினான்.

Advertisment

""புலன்களையும், மனதையும் வசப்படுத்தி, இவ்வுலகம் முழுவதையும் உன்னில் காண்பாய். தலைவனான என்னிடம் உன் ஆத்மாவைப் பார். (நானே இவ்வுலகமாக விளங்குவதை உணர்ந்துகொள்). அனைத் திலும் ஆத்மாவாக இருப்பது நானே என்று உணர்ந்துகொள். அவ தூதரான தத்தாத்ரேயர், யது மகாராஜவிடம் தன் குருமார்களைப் பற்றிக் கூறியதையறிந்தால் தெளிவு பிறக்கும்.

யயாதியின் மகனான மன்னர் யது, ஒருநாள் அவதூதரான தத்தாத்ரேயரிடம், "தாங்கள் எந்த குருவையும் நாடிச்செல்லாமலேயே தங்களுக்கு மிகவும் ஆழமான, தெளிந்த நல்லறிவு கிடைத்ததெப் படி? சிறந்த ஞானியான தாங்கள் எவ்வாறு ஒரு பாலகனைப் போல் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அவதூத சந்நியாசி, தான் இருபத்து நான்கு குருமார்களிடம் ஞானம்பெற்றதை விவரித்தார்.

Advertisment

1. பூமி: பூமியிடமிருந்து பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் என்ற குணத்தையும்; தன்னையே அகழ்ந்தாலும் (தோண்டினாலும்) அகழ்பவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம்போல, தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும், செயலால் துன்பப்படுத்துபவர்களையும் மதித்துப் பொறுப்பதே முதன்மையான அறம்.

(அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை). தன் பிள்ளைகள் எவ்வளவு தீங்கினைத் தனக்கு இழைத்தாலும் பொறுத்து, அவர்தம்மைக் காத்தருளுதல்போல, பூமியன்னை தன்னைக் கீறிக் காயப்படுத்துபவர்களுக்கு ரத்தினங் களை நல்கும். பொறுமையே தாய்மையின் பெருமை. பொறுமையுடையவன் எதைச் சாதிக்கவேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான். ஒரு விதையை விதைத்துவிட்டு பொறுமையாய் உள்ளவனே கனியை ருசிக்கமுடியும். பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி தனது பயணத்தைத் துவக்கும். எவ்வளவு காற்றடித்தாலும் மலைகள் அசைவ தில்லை. மேலோர் இன்ப- துன்பங்களால் பாதிப்படைவதில்லை.

2. காற்று: பிராணன் என்னும் உயிர்க்காற்று நிலைப்பதற்கு, போதுமான அளவு மட்டுமே உணவு உட்கொள்ளவேண்டும். காற்று தசவாயுக்களால் நம் உடலைக் காப்பதுபோல, தசமகா வித்தையைக் கற்றுணர்ந்து இவ்வுலகை ரட்சிக்க வேண்டும். கவின்மிகு கானகத்தின் சோலைகளில் புகுந்து, புகைபோல எழும் அருவிகளில் நுழைந்து குளிர்ச்சியைக் கவர்ந்து, முல்லை மல்லிகைப் பந்தர் தாவி, நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றலாய் வாழ்க்கைப் பயணத்தில் நல்ல கருத்து களைத் தெரிந்தெடுத்து, தமதாக்கிக் கொள்ள வேண்டும்.

3. ஆகாயம்: ஆகாயத்திடமிருந்து ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ஞானத்தை அடையலாம். காலிக் குடத்திற்குள் இருப்பதும் ஆகாயம்தான். பகவானும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந் திருக்கிறான் என்பதை விளக்குவதே ஆகாய தத்துவம். பஞ்சபூதத் தத்துவத்தில் தலையாய தத்துவமே ‘ஆகாயம்தான்.

kk

4. தண்ணீர்: நீரிடமிருந்து தூய்மையின் சிறப்பினை அறியலாம். 'நீரின்றி அமையாது உலகு.' சுத்தமான நீரின் குணமே நிர்குணம். தானும் தூய்மையாயிருந்து, பிறவற்றையும் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தண்ணீர் நமக்குக் கற்றுத்தரும்.

5. நெருப்பு: அக்னியிடமிருந்து குற்றமுடையதென்று எதையும் ஒதுக்கித்தள்ளாத மனோநிலையைப் பெறலாம். தீ மேல்நோக்கியே வளர்வதுபோல மேலான எண்ணங்கள் வளரவேண்டும். நெருப்பு நல்லது, தீயது என்ற வேறுபாடு காணாது, எல்லாவற்றையும் எரித்துவிடுவதுபோல சுக- துக்க உணர்வுகளைக் கடந்து பயணித்தல் வேண்டும். (மேவிய சீர் வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே செத்தாரைப்போலே திரி).

6. சந்திரன்: சந்திரனிடமிருந்து பூதவுடல் தோன்றி மறைந்தாலும், ஆன்மா மறைவ தில்லை என்ற ஞானத்தைப் பெறலாம். சந்திரன் சுய ஒளியின்றி, சூரியனின் ஒளியைப்பெற்று பிரகாசிப்பதுபோல நம் உடலை உயிர்பிப்பதே ஆன்மாவின் தேஜஸ். பரமாத்மாவின் ஒளியில்தான் ஜீவாத்மா பிரகாசிக்கிறது.

7. சூரியன்: ஒரு பொருளைப் பெற்றுக்கொள்வதிலும், அதை வழங்குவதிலும் ஒட்டுதல் இல்லாமல் யோகி இருக்கவேண்டுமென்ற ஞானத்தை சூரியனிடமிருந்து அடையலாம். முகிலால் நீர் முகந்து பெருங்கூட்டமாய்த் திரட்டிப்பெற்ற நீரை பூமிக்கே திரும்பத் தந்துவிடும் சூரியன்போல, பெற்றதை மற்றவருக்குத் தருவதே சிறப்பு.

8. புறா: திறந்துவைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்ற மனித உடலை அடைந்த தும் புறாவைப்போல உலகப் பற்றில் (பந்தபாசத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள் முக்தியடையமுடியாது. மாயையால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டில் வாழ்வதுதான் உயிர் என்பதாகும். ஜீவன், இந்த தேகம் தனக்காகவே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதென்று எண்ணுவதால், மாயையின் விருப்பத்தின்படி செயல்படுகிறது. வேடனின் வலையில் பரவியிருக்கும் தானியங் களை உண்ணப் புகுந்து சிறைப்படும் புறா வினைப்போல மாயையில் சிக்குண்டு மாளும் மனிதராய் மாறுதல் கூடாது.

9. மலைப் பாம்பு: மலைப் பாம்புமூலம், யோகி தானாக எது கிடைகிறதோ, அதையே உண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்ற ஞானத்தைப் பெறுவான். வாழ்வில் இரைதேடுவதைக் குறைத்து, இறைதேடவேண்டும். பல நாட்கள் பட்டினி கிடந்தாலும், இரையைத்தேடி நெடுந்தூரம் பயணிக்காத மலைப்பாம்புபோல, இருக்குமிடம்விட்டு இல்லாத இடம் தேடியலையாதவனே யோகி. சும்மாயிருந்து சுகம் காணுதலே யோகம். சொல்லுகைக் கில்லை என்று எல்லாமிழந்து சும்மாயிருக்கும் சுகத்திற்கு எல்லையுண்டோ?

10. கடல்: கடலிடமிருந்து, ஒரு ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், நிறைவேறாத போது தளர்ந்துபோய் கலக்கமும் அடையக் கூடாதென்ற ஞானத்தைப் பெறுவான். ஆழியில் (கடலில்) நீரை நிறைத்தாலும், நிரம்பி வழியாது இறைத்தாலும் குறையாததுபோல குணமெனும் குன்றேறி நின்றார், பிறரால் வரும் இசையையும் (புகழ்), வசையையும் (இழிசொல்) பொருட்படுத்தமாட்டார். சமுத்திரம் ஒருபோதும் தன் ஆழத்தை வெளிக்காட்டுவதில்லை. ஞானிகள் தாங்கள் கற்ற அறிவையும், பெற்ற அனுபவத்தையும் வெளிச்சம்போட்டு வெளிக்காட்டுவதில்லை.

11. விட்டில்பூச்சி: தீபத்தின் ஒளி கவர்ந்திழுப்பதால், அதில் வீழ்ந்து விட்டில்பூச்சி அழிந்துவிடுகிறது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதையறியாமல், மாயையால் படைக்கப்பட்ட பொருட்களில் மயங்கி தன் அறிவையிழந்து, விலைமதிக்கமுடியாத வாழ்வைக் காலனின் காலடியில் கிடத்திவிடும் மானிடர்கள், மாயையை விலக்கிவிடவேண்டும் என்று விளக்குவதே விட்டில்பூச்சியால் கிடைக்கும் ஞானம்.

12. தேனீ: தேனியிடமிருந்து வயிற்றுத் தேவைக்குமேல் பிச்சையெடுக்கக் கூடாதென்றும், சாத்திர நூல்களிலிருந்து சாரமான தத்துவங்களை மட்டும் மனதில் பதிந்துகொள்ள வேண்டுமென்ற ஞானத்தை யும் அடையலாம். தேனீக்கள் அருந்தியது போக மிகுந்ததை தன் கூட்டில் பதுக்கி வைக்கும். அவ்வாறு வைத்த மாநிதி, வேடுவரால் அபகரிக்கப்படும். பேராசையே பெரும் கள்வன். அதுவே உடனிருந்து கொல்லும் வியாதி.(ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.) தேனீக்கள் மலரிலிருந்து மதுவைப் பிரித்தெடுப்பதுபோல, நாம் கற்கும் நூல்களில் அல்லவை நீக்கி, அறம் பெருகும் நல்லவை நாடிய அறிவைத் தெரிந்தெடுக்க வேண்டும்,

13. ஆண் யானை: ஞானிகள் பெண் களிடம் மயங்கக்கூடாது என்ற ஞானத்தை ஆண் யானைமூலம் அடையலாம். பல ஆண் யானைகளுக்கிடையில் ஒரு பெண் யானையிருந்தால், யானைகளுக்குள் சண்டை உண்டாகி, ஆண் யானை மரணமடையும். பெண் யானைமீதுள்ள காமத்தால் மதோற்கடம் (மதயானை) சுற்றித்திரிந்து, பயம்பெனும் பாழ்குழியில் விழுதல்போல ஞானிகளுக்கு காமத்தால் ஞானம் அழியும்.

14. தேன் எடுப்பவன்: தேன்கூட்டிலிருந்து தேன் எடுப்பவன், தேனீக்களின் கொடுக்குகளால் காயங்கள் ஏற்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, தன் பணியில் கவனம் செலுத்துவதுபோல சாஸ்திரங்களைக் கற்கும்போது பல தடைகளும் துன்பங்களும் வந்தாலும், ஞானத்தை நாடுபவர்கள் சலிப்படையமாட்டார்கள்.

15. மான்: மான்மூலம், காட்டில் வாழும் துறவி ஒருபோதும் உலக இன்பங்கள் தொடர்பான பாடல்களைக் கேட்கக்கூடாது என்ற ஞானத்தைப் பெறலாம். வேடர்கள் மானைப் பிடிக்க ஒரு யுக்தியைக் கையாள்வார்கள். வேடர்கள் இனிய இசையை எழுப்பும்போது, மான் தான் மேய்வதைவிடுத்து, இசையின் இனிமையால் தன்னிலை மறந்து நிற்கும். அவ்வமயம் வேடுவர்கள் மானைக் கைக்கொள்வர். இசையில் மயங்கிய ரிஷ்ய சிருங்கர் எனும் மழைதரும் மாமுனி, தான் தவம்செய்த காட்டைவிட்டு நாடுபுகும் நிலை உண்டானது. மான் தன் அழகான கொம்புகளை ஓடைநீரில் கண்டு மகிழும். அதையெண்ணிப் பெருமிதம் கொள்ளும். ஒருநாள் கொம்புகள் மரக்கிளைகளில் சிக்கி, துரத்திவரும் புலியிடம் அகப்பட்டுத் தன் வாழ்வைத் தொலைக்கும். எது அழகானதோ அதுவே ஆபத்தானாது. எது பெருமையானதென்று நாம் நினைக்கிறோமோ அதுவே நமக்கு சிறுமை சேர்க்கும்.

16. மீன்: மீன்மூலம் நாக்கை (உணவின்மீது ஆசை) கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டு மென்ற ஞானம் உண்டாகும். குளத்தில் வாழும் மீன், அந்த குளத்திலுள்ள உணவை மட்டும் உன்டுவாழ்ந்தால் அதன் உயிருக்கு ஆபத்தில்லை. தூண்டிலில் இடப்படும் இரைக்காக ஆசைப்படும்போது உயிரிழக் கும். இரைக்கு ஆசைப்பட்ட மீன், மீனவனுக்கு இரையாகும். நாவின் சுவைக்கு அடிமை யானால் தீமையே உண்டாகும். பசிக்குதான் உணவுண்ண வேண்டும். ருசிக்காக ஆசைப் படக்கூடாது என்பதை மீனிடம் கற்றறிய லாம்.

(அமுதம் பெருகும்)

சீடர்: குருவே! தங்களை அனைவரும் ஜகத்குரு என்றே அழைக்கிறார் கள். தாங்கள் இந்த உலத்திற்கே குருவாக விளங்குகிறீர்கள் என்பதே இதன் பொருளா?

குரு: பகவானைத்தவிர, எவரும் இந்த ஜகத்திற்கு (உலகிற்கு) இருள் நீக்கியாக (குரு) அமையமுடியாது. ஒவ்வொருவருக்கும் இந்த உலகி லுள்ள எல்லா உயிர்களும் ஜடப்பொருட் களும் குருவாக இருந்து, மழைமேகங் கள்போல ஞானத்தை வர்ஷிக்கின்றன. பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள், திசைகள், பஞ்சபூதங்கள் போன்ற அனைத்தும் பிரம்மத்தின் வடிவங்களே என உணர்ந்த சத்தியகாம ஜாபாலியைப்போல (சாந்தோக்கிய உபநிடதம்) ஜகத்தை குருவாக ஏற்ற பிரும்ம ஞானியே ஜகத்குரு.’