மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம் என்றுரைத்தார். திருமால் எடுத்த கூர்மாவதாரத்தை விளக்கியபின் வராக அவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.
பூமியை சுமந்த பூவராகன்
சந்திர விமானத்தின்கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மகர நெடுங்குழைக் காதோடு, மார்பில் மகாலட்சுமி வாசம் செய்ய, நாபியில் பிரம்மனைத் தாங்கி சயனக்கோலத்தில் எம்பெருமான் வைகுண்டத்தில் காட்சி தந்தார். மறைதொழும் மாய வனின் தொடுகழல் கமலம் காண விழைந்தனர் மகரிஷிகள் நால்வர். பரம பாகவதோத்தமர்களான ஜெயனும் விஜயனும் வைகுந்தத்தின் ஏழாவது நுழை வாயிலைக் காத்துநின்றனர். அந்த துவார பாலகர்கள் தங்கள் அதிகாரத் தைப் பயன்படுத்தி சனகாதி முனிவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் சினமடைந்த முனிவர்கள் காவல்காரர்கள் இருவரும் தங்கள் வைகுண்டப் பதவியை இழந்து, பூமியில் மூன்று பிறவிகள் கொடிய அசுரர்களாகப் பிறந்து, ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரங்களால் அழிக்கப்பட்ட பின் வைகுண்டத்தை அடையவேண்டுமென்று சாபமிட்டனர். அதன்படி இருவரும் காசிப முனிவருக்கும் அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு. அடுத்துப் பிறந்த வன் இரண்யாட்சன்.
இரண்யாட்சன் பிரம்மனிடம் வரங்களைப் பெற்று பலசாலியாகி, தேவர்களைத் துன்புறுத்திவந்தான்.
அவனுடைய கொடூரமான உருவத்தைப் பார்த்துத் தேவர்கள் அனைவரும் அவன் கண்ணில்படாமல் ஒளிந்து வாழ்ந்தார்கள். பூமியைக் கவர்ந்துசென்ற இரண்யாட்சன் கடலுக்கடி யில் ஒளித்து வைத்தான். பூலோகம் நீர்ப்பிரளயத்தில் மூழ்கியதால் தனது படைப்புத்தொழிலைச் செய்யமுடியாமல் தவித்த பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். இரண்யாட்சனின் கொடுமைகளைத் தாங்காத பூமா தேவியும் இந்திராதி தேவர்களும் தங்களைக் காக்கவேண்டி ஆபத்பாண்ட வனாகிய அரங்கனைத் தொழுதனர். அவர்கள் வேண்டுகோளை அபயவரதன் ஏற்றார்.
ஊழியில் ஆழியில் ஆலிலைமேல் அறிதுயில் கொண்ட பெருமாள், பிரம்மாவின் சுவாசத்திலிருந்து வெண்ணிற வராகமாகத் தோன்றினார்.
அவதாரத்தைக் கண்டு மகிழ்வுற்ற வேதியர் வேதபாராயணங்களை முழங்கினர்.
நான்கு வேதங்களைப் பாதங்களாகக் கொண்டு, யோக மேடையில் விரிக்கப்படும் தர்ப்பைப்புல் போன்ற உரோமங்களுடனும், யக்ஞத்தின் பலிபீடம் போன்ற இரண்டு தந்தங் களுடனும், அக்னியைப் போன்ற நாக்குடனும், சாமவேதம் போன்ற கம்பீரமான குரலுடனும், ஆறுவேத அங்கங்களைக் காதணியாகவும் கொண்டு பெரிய யாகசாலை போன்று தோன்றிய "யக்ஞ வராகம்' கர்ஜித்தது. அதன் பிரம்மாண்ட ஒலி ஜனலோகம், தபோலோகம், சத்ய லோகம் ஆகிய மூன்றையும் உயிர்ப்பித்தது. மகரிஷிகள் மகிழ்ந்தனர். பிரளயத்தில் மூழ்கியிருந்த பூமியை வெளியே கொண்டுவர சமுத்திரம் புகுந்தார்.
இரண்யாட்சன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான். அதற்கு வருண பகவான், ""அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் எடுத்துள்ளார். அவரிடம் போராடு'' என்று சொன்னார். அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான். எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால் இரண்யாட்சன் சோர்வடைந்து அசுர லோகத்தில் சுகமாக இருந்தான்.
அப்போது நாரதர் அங்கே தோன்றி, ""இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக்கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக்கொண்டிருக்கிறார்'' என்று சொன்னார்.
உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.
வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும்போர் மூண்டது. இரண்டு பெரிய மலைகள் மோதுவதைப்போன்ற காட்சியைக் கண்ட தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் தாக்க, மகாவிஷ்ணு இடக்காலால் அதைத் தட்டிவிட்டு தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார். இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப்பொடியானது. இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின்மீது ஓங்கிக்குத்தினான்.
பின் அவன் மறைந்து ஒளிந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும் அனேகவித பாணங்களையும் கொண்டு மந்திரபோர் நடத்தினான்.
தன் மாயாஜால வேலைகள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்த இரண்யாட்சன், தனது பலமான இரு கைகளால் பகவானைத் தழுவி நசுக்க முன்வந்தான். சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகாவிஷ்ணு. அசுரர்கள் பலர் பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர். ஆனாலும், சிங்கத்தைக் கண்டு அஞ்சியோடடும் சிறுநரிக் கூட்டம்போல் சிதறி ஓடினர். முடிவில், மகாவிஷ்ணு அவனை இறுகப்பிடித்துத் தலையின்மீது ஓங்கி அடிக்க, உதிரத்தைக் கக்கிக்கொண்டு பூமியின்மீது விழுந்து மாண்டான்.
பகவான் வராகரின் திருப்பாதம் இரண்யாட்சன் நெஞ்சில் வைக்கப்பட்டி ருந்ததைக் கண்ட பிரம்மா, "யோகிகளும் ஞானிகளும் பகவானின் திருப்பாதங்களை தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் மேற்கொள்கின்றனர். ஆனாலும், அவர்களுக்குக் கமலபாதங்களின் ஸ்பரிச தீட்சை கிடைப்பது அரிதாகிறது. இந்த அசுரனுக்கோ பகவான் வராகரின் திருப்பாதங்கள் உடலைத் தொட்டவண்ணம் உயிரை நீக்கும் பாக்கியம் கிட்டியது'' என எண்ணி வியந்தார்.
வராக பகவானின் உடலிலிருந்து பெருகிய வியர்வைத் துளிகளால் நித்யபுஷ்கரணி தீர்த்தம் உருவானது. அந்த தீர்த்தத்தின் அருகில் வராகர் ஓய்வெடுத்தார். பின்னர் கண்விழித்துப் பார்த்தார். அப்போது ஒருவிழிப் பார்வையில் இருந்து அரச மரமும், மறுவிழிப் பார்வையிலிருந்து துளசிச் செடியும் உருவாகின. தேவர்கள் அனைவரும் வராக மூர்த்தியாக இருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டனர். பின்னர் மகாவிஷ்ணு அங்கிருந்து வைகுண்டம் புறப்படத் தயாரானார். ஆனால் அவரிடம் பூமாதேவி, வராகத் திருக்கோலத்திலேயே பூவுலகில் சிலகாலம் தங்கியிருந்து அருள் பாலிக்கும்படி வேண்டியதால் பூவராகப் பெருமாளாக அங்கேயே அருள்பாலிக்கத் தொடங்கினார். அப்பொழுது, அவருடைய பரிவாரங்களும் பூமியிலேயே தங்கின.
திருமால் தன் கைகளில் இருக்கும் சங்குக்கு சங்கு தீர்த்தத்திலும், சக்கரத்திற்கு சக்கர தீர்த்தத்திலும், பிரம்மாவுக்கு பிரம்ம தீர்த்தத்திலும், கருடனுக்கு பார்க்கவ தீர்த்தத்திலும், வாயுவுக்கு கோபுரத்திலும், ஆதிசேஷனுக்கு பலிபீடத்திலும், விஷ்வக்சேனருக்கு வாசலிலும் இடமளித்து அருளினார். அதோடு இங்கு வந்து தன்னை வழிபடுபவர்களை எமதூதர்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் பணியை ஆதிசேஷனுக்கும், வைகுண்டத் திற்கு அழைத்துச் செல்லும் பணியை பிரம்மாவுக்கும் வழங்கினார். வராக அவதாரத்தின் முடிவில் ஸ்ரீவராக ஸ்வாமியால் சொல்லப்பட்ட சரம ஸ்லோகம்- "எவன் ஒருவன் அவன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் மனம், உடல், புத்தி நன்றாக இருக்கும் நேரத்தில் ஒரே ஒருமுறை என்னை நினைத்து, நான்தான் எல்லாவற்றிற்கும் காரணமென்று என்னைச் சரணடைகிறானோ, அவன் இறப் பின் விளிம்பில் கல்போல்கிடந்து என்னைச் சரணடைய முடியாவிட்டாலும் நான் அவனைக் காத்து வழித்துணையாக வைகுந்தம் அழைத்துச் செல்வேன்.'
சுத்த ஸ்படிகம்போல் நிர்மலமானவராக, பூரண சந்திரனைப்போல ஒளிபடைத்தவராக, திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவராக, கருணையே வடிவானவராக, ஜீவன்களைக் காப்பவராக, வராக மூர்த்தி ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருள்பாலிக்கிறார்.
(அமுதம் பெருகும்