மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகி களும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.
துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த வாமன அவதாரத்தை விளக்கியபின் பரசுராம அவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.
தந்தை சொல்லே மந்திரம் (பரசுராம அவதாரம்)
பிறப்பால் ஒரு அந்தணராக இருந்தாலும் கூட, க்ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்குணங்கள் நிறைந்திருந்த பார்கவர், ஒற்றைக் காலில் சிவனைநோக்கி நூறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார். தவப்பயனால் சிவபெருமானிடமிருந்து ஒரு கோடரியைப் பெற்று, பரசு- ராமரானார்.
பரசுராமர் கோடரியை வரமாகப் பெறும்முன் தன்னுடைய தகுதியை, தன்னுடைய ஆன்மிக குருவான சிவனிடம் நிரூபிக்க விரும்பினார். சிவன், பரசுராமரை சோதிக்க எண்ணியதால், பரசுராமரை போருக்கு அழைத்தார். குருவுக்கும் சீடனுக்குமிடையே மிக பயங்கர யுத்தம் இருபத்தோரு நாட்கள் வரை நீடித்தது. முடிவில் பரசுராமரே வென்றார். சிவன் தன் சீடரின் போர்க்கலை யில் மிகவும் மகிழ்ந்துபோனார்.
பரசுராமர் தன் தந்தை ஜமதக்னி முனிவரிட மும், தாயார் ரேணுகாதேவியிடமும் அளவு கடந்த பக்திபூண்டிருந்தார். தந்தை சொல்லை விடவும் சிறந்த மந்திரம் இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துவதற்காக திரேதாயுகத்தில் பெருமாள் எடுத்த அவதாரமே ஸ்ரீபரசு ராம அவதாரம். தனது கணவனாகிய ஜமதக்னி முனிவரின் பூஜைக் காரியங்களுக்கு ரேணுகா தேவி ஆற்றிலிருந்து நீர் கொணர்ந்து தருவது வழக்கம். ரேணுகாதேவி கற்புநெறி தவறாதவள். ஆற்றங்கரைக்குச்சென்று மணல்மூலம் பானைபோல செய்தால், அவளது கற்பின் நெறி காரணமாக அந்தப் பானையில் நீர் நிற்கும்.
அவ்வாறு ஒருநாள் நீர்நிலைக்குச்சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள்.
அப்படி அள்ளும்போது ஓர் தேவபுருஷனின் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யாரென்று சற்றுமேலே உற்றுப்பார்த்தாள். கற்பின் நிறைக்குக் களங்கம் உண்டானது. கூட்டி எடுத்த மண் குடமாகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டதை அறிந்து சினம்கொண்டார். தன் புதல்வர்களை வரவழைத்து களங்கமுற்ற தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார்.
மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற் கேற்ப, பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்து அன்னையின்மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும், தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டுப் பார்த்தார். ""பரசுராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.
""இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழவேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைவை அவர்கள் மறந்து விடவேண்டும்'' என்று வரம்கேட்டார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கிவிழித்தது போன்ற உணர்வுதவிர வேறு முந்தைய நிகழ்ச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை.
கார்த்தவீரியன் என்ற அரசன் ஒரு நாள் தனது படையுடன் வேட்டைக்குச் சென்றான்.
வேட்டையை முடித்துக் களைத்துப்போன கார்த்தவீரியன் தனது அரசவைக்குத் திரும்பும் வழியில் ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான். முனிவரும் கார்த்தவீரியனுக்கு அறுசுவை உணவு மற்றும் பானங்களை அளித்து இளைப்பாற வசதிகளும் செய்து கொடுத்தார். கார்த்தவீரியனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு முனிவரின் ஆசிரமத்தில் இந்த அளவு வசதியும் செல்வமும் எப்படி இருக்கும் என்று, தனது சந்தேகத்தை ஜமதக்னி முனிவரிடம் கேட்டான்.
அதற்கு ஜமதக்னி முனிவர், தான் தேவலோகப் பசு ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன் பெயர் காமதேனு என்றும், அது கேட்டத்தைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது என்றும் கூறினார்.
அதனைத் தனக்குப் பரிசாக அளிக்கும்படி கார்த்தவீரியன் கேட்க, ஜமதக்னி முனிவர் மறுத்துவிட்டார்.
ஆனால் கார்த்த வீரியன் அந்தப் பசுவை அடைந்தே தீர வேண்டும் என நினைத் தான். எனவே முனி வருக்குத் தெரியாமல் ஆசிரமத்தில் யாரு மற்ற நேரத்தில் தனது சேவர்கள்மூலம் அதனைக் கவர்ந்து சென்றுவிட்டான். இதனால் வருத்தமுற்ற ஜமதக்னி முனிவர் தனது மகனாகிய பரசு ராமரிடம் நடந்ததைக் கூறினார்.
இதைக் கேள்விப் பட்ட பரசுராமர் தன் கோடரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்த வீரியன் வாழ்ந்த நகரமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில்லேந்தி, பாணக்கூட்டத்தை அவர்மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்தெறிந்ததோடு அவனுடைய சிரசையும் சீவித்தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டுத் தனது தந்தையிடம் ஒப்படைத்தார்.
ஜமதக்னி முனிவருக்கு, காமதேனுவைத் திரும்பப்பெற்ற மகிழ்ச்சியைவிட, வருத்தமே அதிகமானது. ""பரசுராமா, கோபத்தால் ஓர் அரசனைக் கொன்றுவிட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதை விட கொடிய குற்றம். நீ குலதர்மத்தை மீறிவிட்டாய். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம். செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பதுதான் அந்தண தர்மம். அந்தணர் என்போர் அறவோர். அந்தணர் பொறுமை யைக் கடைப்பிடிப்ப தால் தான் அனை வராலும் பூஜிக்கப் படுகிறார்கள். இத்தகைய பெரிய பாவத்தைச் செய்த தற்கு பிராயச்சித்தமாக தீர்த்தயாத்திரைக்குப் போய் பல புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசனம் செய்து விட்டு வா'' என்றார்.
தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தலயாத்திரை செய்தார்.
கார்த்தவீரியனை பரசுராமர் கொன்ற தால், கார்த்த வீரியனின் புதல்வர்கள், முனிவரையும் பரசுராமரையும் பழி வாங்கத் துடித்தார்கள். ஒருநாள் ஜமதக்னி முனிவரும் ரேணுகா தேவியும் ஆசிரமத்தில் இருந்தபோது, அங்கு கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். முனிவர் தவநிலையில் இருந்தார். அவர் தலையைவெட்ட வீரன் ஒருவன் வாளை ஓங்கினான். ரேணுகாதேவி அவர்களைத் தடுத்தாள். ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு- ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. கொய்த தலையைக் கொடிய வர்கள் கொண்டுபோனார்கள். குடிலுக்கு வந்த பரசுராமர் தாயின்மூலம் நடந்ததை அறிந்துகொண்டார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதமெடுத்தார். பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குருக்ஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்கு பதிலாக ரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டுவந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார்.
தன் தந்தையின் மறைவால் வேதனையுற்ற பரசுராமர், பூமியிலுள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப்போகும்படி இருபத்தோரு திக்விஜயம் செய்து அரச குலத்தை வேரறுத்தார். ராஜவம்சமே இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டதையறிந்த பெண்கள் பலர், மூலகன் எனும் அரசனைச் சூழ்ந்து நின்றுகொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றி னார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு அழிந்தபின்பு அந்த வம்சத்தைத் தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் அடுத்தடுத்து வாரிசுகள் தோன்றி ரகு என்பன் அரசுபுரிந்தான். அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன்தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படிதான் க்ஷத்திரிய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது. இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரியர்களக்கொன்ற பாவம்தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும், அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார்.
பரசுராமர்- பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக்கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம், க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலைவைத்துப் பரசுராமர் தூங்கிக்கொண்டு இருந்தார்.
அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய தொடையைத் துளைத்து கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே வேதனை. அவன் தொடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டிருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே, தூங்கிக்கொண்டிருந்த அவர் எழுந்தார். ""வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக்கொண்டிருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்க முடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு'' என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர்.
கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒப்புக்கொண்டான். பொய்த் சொல்லி தன்னை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்கமுடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். ""கர்ணா! நீ என்னிடம் பொய்சொல்லி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய். குருவுக்கு துரோகம் செய்துவிட்டாய். அதனால் நான் கற்றுக்கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்கதருணத்தில் உதவாமல் போகக்கடவது!'' என்று சபித்தார். அந்த சாபத்தை குருக்ஷேத்திரக் களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்குக் கைகொடுக்கவில்லை. அதுவே, அவன் மறைவுக்கும் காரணமானது.
கொங்கணக் கடற்கரைப் பகுதிகளில் கடல் கொந்தளித்தபோது அதனை அடக்கிக்காத்த பரசுராமர் மரணமில்லா பெருவாழ்வைப்பெற்று, மகேந்திர மலையில் சிரஞ்சீவியாகத் தவம் செய்துகொண்டிருக்கிறார்.
= பரசுராமரின் சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.
=தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரமே, பரசுராம அவதாரம்.
= பரசுராமருக்கென்று தனிக் கோவில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன.
= பரசுராமர் தன் கோடரியைக் கொண்டு மேற்குக் கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம க்ஷேத்திரம் என இன்றும் அது அழைக்கப்படுகிறது.
= கேரள தேசத்தில் திருவல்லத்து ஆலயக் கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் பரசுராமர்.
(அமுதம் பெருகும்)