சுதேவர் இல்லத்துக்கு வருகை தந்த நாரதரிடமும், ஒன்பது யோகிகளிடமும்,""எதை அறிந்தால் எல்லாவித பாவங்களிலிருந்தும், பயங்களிலிருந்தும் மனிதன் விடுபடுவானோ, அப்படிப்பட்ட தர்மத்தை அருள வேண்டும்'' என்று மிதிலை மன்னர் நிமி கேட்டுக்கொண்டார். அதற்கு, ""பாகவத தர்மத்தைக் கேட்டாலும், படித்தாலும், கடைப்பிடித்தாலும், அந்த இமைப்பொழுதிலேயே மனிதன் புனிதமாகிவிடுகிறான்''என்று நாத முனியாகிய நாரதர் கூறினார். பின்பு, ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.

ஆவிர்ஹோத்திரர் என்ற ஆறாவது யோகி, அறநூல் சாற்றும் நெறிப்படி ஆற்றவேண்டிய செயல்களைப் பலனில் பற்றில்லாமலும், கிருஷ்ணார்ப்பணமாகச் செய்யப்படுவதே பாகவத தர்மம் என்று விளக்கினார்.

kk

துருமிளர் என்ற ஏழாவது யோகி, நரநாராயணர்களின் தவத்தையும், பேராற்றலையும் விவரித்தபின், திருமால் எடுத்த மச்ச அவதாரம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்களின்மூலம் அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்து, பின் அம்ச அவதாரங்களான ஹயக்ரீவர் (குதிரைமுகம்-மனித உடல்) எடுத்து மது-கைடபர்கள் என்ற அசுரர் களைக் கொன்று, அவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட வேதங்களை மீட்டும், ஹம்ஸப் (அன்னம்) பறவை வடிவத்தில் ஆத்மயோக உபதேசம் அருளிய பகவானின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம் என்று கூறி முடிக்கிறார் நர-நாராயணர் வாடாமலரில் மது உண்ணும் வண்டுகளின் ரீங்காரமும், வேதியரின் வேதகோஷமும், அரையரின் ஆடலும் பாடலும், அரம்பையர் சிலம்பொலியும் பண்ணிசையும் நாதப் பிரளயத்தைத் தோற்றுவிக்க, கோடி சூரியப் பிரகாசத்தில் ஜாஜ்வல்யமாக ஜொலித்த வைகுண்டத்தில், ஸ்ரீஹரி அறிதுயில் கொண்டிருந்தார். தடாகத்தில் நீந்தும் கயல்போல் விழிகொண்ட மதிமுக மடந்தையர் ஏந்திய பூரண கும்ப உபசாரனைகளை ஏற்ற தவசிரேஷ்டர்கள்செய்த புண்ணியப் பல னால் வைகுந்தம் புகுந்து, அன்னப் பறவையின் தூவியைப்போன்ற பரந்தாமனின் பாதம் தொட்டுத் தொழுது, ""என்னுள்ளே தன்னை வைத்து, தன் உள்ளத்தே என்னையும் ஆட்கொண்ட பெருமாளே! கற்பக விருட்சமாய், காமதேனுவாய் அட்சயப் பாத்திரம்போல், விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய வரம் தரும் தவயோகத்தின் சிறப்பினைப் புவியோருக்கு எடுத்தியம்ப தேவரீர் மண்ணுலகில் அவதரித்து சேவை சாதிக்கவேண்டும் என்பதே எங்கள் விண்ணப்பம்'' என்று வணங்கிநின்றனர். திருமாலடியார் சொன்ன வண்ணமேசெய்யும் பெருமாள், பாற்கடலுள் பையத்துயின்ற துயில் கலைத்து, தன் பைந்நாகப்பாயோடு (ஆதிசேஷன்) மண்ணுலக்கு மனமிரங்கி வந்தார். ஆதிசேˆன் மற்றும் திருமாலின் அவதார இரட்டையர்களான நர-நாராயணர்கள், பூவுலகில் நிலைநிறுத்தத் தோன்றினார்கள். நிலையற்ற ஜீவாத்மாவான நரன் (மனிதன்) நிலையான, தெய்வீக நாராயாணனை அடையவேண்டும் என்ற கருத்துருவமே நர-நாராயணத் தத்துவம். கடவுள் மனிதனா கவும், மனிதன் கடவுளாகவும் ஆகமுடியும் என்ற தத்துவத்தின் விளக்கமேயாகும். தெய்வீக உணர்வோடு இறைவனை அறிந்து பூரண ஞானம்பெற்ற மனிதன்தான் நரர்களில் நாராயணன் தர்மதேவனுக்கு புதல்வர்களாய்ப் பிறந்த நர நாராயணர்கள் முற்றும்துறந்த முனிவர்களாகி, இமயத்தில் அமைந்த பத்ரிகாஸ்ரமத்தில் தவம் மேற்கொண்டனர். அவர்களின் தவ வலிமை எல்லா உலகங்களிலும் பிரதிபலித்தது. தேவர்களின் தலைவனான தேவேந்திரனை இது பாதித்தது. தனது இந்திரப் பதவியை அடைய யாரோ அசுரர்கள் கோரத் தவம் செய்வதாக அவன் எண்ணினான்.

தனது பதவியையும் தேவலோகத்தையும் காப்பாற்ற நினைத்த தேவேந்திரன், நர நாராயணர் களின் தவத்தைக்கலைக்க முயன்றான். முதலில் தேவேந்திரன் காமதேவனை அனுப்பி, நர நாராயணர்கள் மனத்தில் ஆசையை உருவாக்க முயன்றான். காமதேவனுக்குத் துணையாக சில அப்ஸரக் கன்னிகளையும் அனுப்பினான். ஆனால், நர நாராயணர்களை எவ்விதத்திலும் அவர்களால் அணுகமுடியவில்லை. காய்ந்த புல் கனலை அணைக்குமா? ஒரு குறிப்பிட்ட தருணத்தில், தவத்திலிருந்த நாராயணர் தனது தொடையைக் கையால் ஓங்கி அடித்தார். அதிலிருந்து சௌந்தர்யமும் தேஜஸும் மிக்க ஓர் அப்ஸரப் பெண்தேவதை தோன்றினாள். அவளது அழகிய தோற்றத்தைக்கண்டு இந்திரனும் காமனும், மற்ற தேவதேவியர்களும் திகைத்துநின்றனர்.

தொடையிலிருந்து தோன்றிய அந்த தேவதைக்கு 'ஊர்வசி' என்று பெயரிட்டு அழைத்தார் நாராயணர். தங்கள் தவத்தின் நோக்கத்தை நர-நாராயணர்கள் தேவேந்திரனிடம் எடுத்துக்கூற, அவன் தன் தவறுக்கு வருந்தி, அவர்களின் ஆசி பெற்றான்.

டம்போத்பவ என்றொரு அரசன் இருந்தான். மொத்தப் பூலோகமும் அவன் ஆட்சியின்கீழ் இருந்தது. ராஜனிடம் எல்லா நற்குணங்களும் இருந்தாலும், கர்வம் மிக அதிகமாக இருந்தது. தனக்குச் சமமானவர் வேறு யாருமே இல்லை என்றே இறுமாந்திருந்தான்.

அடங்காத குதிரைக்கு கடிவாளம் போடுவதுபோல், அவனை நல்வழிப்படுத்த நினைத்த முனிவர்கள்,""உன்னைவிட வலிமையுடையவர்கள் நர- நாராயணர். அவர்களை ஒரு போதும் உன்னால் வெல்ல முடியாது''என்று ராஜனிடம் சொல்லிவிட்டனர். ரிஷிகளின் பேச்சைக்கேட்ட டம்போத்பவன் மிகவும் கோபமடைந்தான். "யார் இருக்கிறார்கள்? கூட்டி வாருங்கள் அவனை' என்று ஆவேசம் கொண்டான். ரிஷிகள் நரநாராயணர்களின் பெயரைச்சொல்லி, அவர்களின் முன் நீ ஒரு புல்லுக்கட்டுக்குக்கூட சமானமில்லை என்றனர்.

அதைக்கேட்டதும் ராஜன், நரநாராயணர்களின்மேல் போர் புரிவதற்காகத் தன் சேனையுடன் புறப்பட்டுவிட்டான். அவ்வமயம், நர நாராயணர்கள் கந்தமாதன பர்வதத்தில் தவம்புரிந்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு இடையூறு விளைவிக்குமாறு, ராஜன் போரைத் துவக்கிவிட்டான். ""நாங்கள் தபஸ்விகள். எங்கள்மேல் ஏன் போர் தொடுக்கிறாய்? பல துஷ்ட சத்ரியர்கள் பூலோகத்தில் இருக்கி றார்கள். அவர்களிடம்போய் போர்புரிவதுதானே?'' என்று நர நாராயணர்கள் கேட்டனர்.

அதைக்கேட்காத டம்போத்பவ, திரும்பத்திரும்ப அவர்களையே போருக்கு அழைத்தான்.

அப்போது, நாராயணன் நரனுக்கு சைகைசெய்து ராஜனை அழிக்குமாறு கூறினார். தவத்திலிருந்த நரன் ஒரு புல்லினைப் பிய்த்து ராஜன்மேல் எறிந்தார். அதிலிருந்து பற்பல பயங்கரமான ரூபங்களைக்கொண்ட துர்க்கை தோன்றி, ராஜனின் மொத்த சேனையையும் அழித்துவிட்டாள். டம்போத்பவ ராஜன் மட்டுமே மிச்சமிருந்தான். அப்போது அவனது கர்வம் முழுக்க அழிந்தது. நரனின் காலில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்.

சகஸ்ரகவசன் என்ற அரக்கன் பிரும்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்து, தான் சாகாமல் இருக்க, உடலோடு ஒட்டிய ஆயிரம் கவசங்களைத் தருமாறு வரம் கேட்டுப்பெற்றான்..

பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தபின், தன்னிடம் போரிட்டால் மட்டுமே ஒரு கவசத்தை அகற்றமுடியும். ஆயிரம் கவசங்களையும் அறுத்தால் மட்டுமே தன்னைக் கொல்லமுடியும் என்ற வரத்தால், கர்வத்தின் பிடியில் சிக்கினான். தேவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தினான். தேவர் களைக் காப்பாற்றவேண்டி நரநாராயணர்கள் கடுந்தவமியற்றி சகஸ்ரகவசனின் கவசங்களை ஒவ்வொன்றாய் அறுத்தெரிந்தார்கள்.

அவனுடைய கடைசிக்கவசத்தை அழிக்கும் முன் பிரளய காலம் வந்துவிட்டதால், சகஸ்ரகவசன் தப்பிச்சென்று சூரியனிடம் அடைக்கலம் புகுந்தான். மறுபிறவியில் சகஸ்ரகவசன் சூரியனின் கருணையால் கர்ணனாகப் பிறந்தான். நர-நாராயணர்கள் அர்ச்சுனராகவும், கிருஷ்ணராகவும் உருவெடுத்து, அவன் பிறவிக்கு இறுதிவழி காட்டினார்கள்.

தவத்தினைச் செய்வது காமத்தை வெல்வதற்காக மட்டுமல்ல. காமத்தைவிட கோபத்தை வெல்வதற்காகவும்தான். இவையிரண்டையும் வென்று, தவத்தில் வெல்லும் சாதகர்கள் மிகமிகக்குறைவு. காமத்தை வென்று கோபத்தை வெல்ல முடியாதவர்கள் பசுவின் பால் குளம்பில் தேங்கும் சேற்றில் விழுந்து நாசமடைவ தைப்போல், நாசமடைவான்.

தர்ம, ஞான, வைராக்கிய, ஐஸ்வர்ய ஹரியிடம் பக்தி, இந்திரிய நிக்ரஹம், பரமாத்மாவைக் காண்பது ஆகிய தபஸ்வி களின் அனைத்து குணங்களையும், அவை இப்படிதான் இருக்கவேண்டும் என்று காட்டியவாறு, தன் பக்தர்களைத் தொடர்ந்து அருளுவதற்காக கல்ப முடிவுவரைக்கும் பத்ரிகாஸ்ரமத்தில் தவம்புரிகிறார்கள்.

(அமுதம் பெருகும்)