உத்தவர்: பாண்டவதூதனே! கண்ணா, நீ பாண்டவர்களின் உற்ற நண்பனாவாய். அவர்கள் அனைவரும் உன்மீது அளவில்லா நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்படியிருக்கையில், இந்த மகாபாரத யுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருந்த சூதாட்டத்தை நீ தடுத்திருக்கலாமே. தருமனிடம் நீ சென்று சூதாட்டத்தின் பின்விளைவுகளை விளக்கியிருந்தால் ,தருமர் உன் கருத்தையேற்றிருப்பார். மதியைக் கெடுக்கும் சூது தவிர்க்கப்பட்டிருக்கும். போரும் தடுக்கப்பட்டிருக்கும். எல்லா தர்மங்களுக்கும் மூலகாரணமாயிருக்கும் நீ ஏன் அதைச் செய்யவில்லை?
பகவான் கிருஷ்ணர்: “உத்தவரே! உங்களுக்கு தெரியாததல்ல. விவேகம் உள்ளவனே எதிலும் ஜெயிக்கவேண்டும் என்பது உலக நியதி. கர்வினையெனும் கருமேகங்கள் புத்தியெனும் ஆதவனைச் சூழ்ந்து, மருள் எனும் இருளைத் தருவதுபோல தருமனின் மனம் மயங்கியது. இந்த போட்டியில் துரியோதனன் விவேகத்தோடு செயல்பட்டான். அதனால் அவன் வென்றான். தன்னுடைய உடமைகளைப் பணயம் வைத்த துரியோதனன், பகடைக்காய்களை சகுனியின்மூலம் உருட்டினான். ஆனால், தருமனோ அப்படி செய்யவில்லை. ஒருவேளை தருமனும் தன் உடமைகளைப் பணயமாக வைத்து, என் மைத்துனன் கண்ணன் பகடைக்காய்களை உருட்டுவானென்று விவேகத்தோடு கூறியிருந்தால், வெற்றி யார் பாக்கம் இருந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
என்னை அவன் சூதில் சேர்த்துக்கொள்ளாததுகூட பரவாயில்லை. அதையும்தாண்டி, தருமன் ஒரு மிகப்பெரிய தவறைச் செய்தான். விதிவசத்தால் சூதாட்டத்தில் சிக்கிய அவன், இந்த விடயம் எனக்கு தெரியக்கூடாது என்றெண்ணினான். ஆகையால், நான் சூதாட்ட மண்டபத்திற்குள் வந்துவிடக்கூடாதென்று மனதிற்குள் என்னையே வேண்டினான். தருமனின் வேண்டுதலுக்கு நான் எப்படி செவிசாய்க்காமல் இருக்கமுடியும்? ஆகையால், அவனே தன் வேண்டுதலால் என்னைக் கட்டிப்போட்டான்.
ஆசைவயப்பட்ட பஞ்சேந்திரியங்களும், மனமும் புத்தியைப் புறக்கணிப்பதுபோல ஐவரில் ஒருவரும் என்னை அழைக்கவில்லை. திரௌபதியும் கடைசிவரை என்னை அழைக்கவில்லை. அவர்கள் அழைக்கமாட்டார்களா என சூதாட்ட மண்டபத்திற்கு வெளியே காத்திருந்தேன். ஆனால், எவருமே என்னை அழைக்கவில்லை. அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும் துரியோதனனைத் திட்டுவதில் தீவிரமாக இருந்தார்களேதவிர, என்னை அழைக்க மறந்தனர். பாஞ்சாலியும் இவர்களைப்போலதான்- என்னை மறந் தாள். தன் அறிவை நம்பி, அகங்காரத்திலிருக்கும்வரை எவருக்கும் என்னைத் தெரிவதில்லை. அருகிலிருந்தாலும் அழைத்தால் மட்டுமே உதவிசெய்வதே தெய்வத்தின் தர்மம். “பகைவர்களுக்கு சுட்டெரிக்கும் சூரியனாய், பக்தர்களுக்கு குளிர்ச்சிதரும் சந்திரனாய் ஒருசேரத் துலங்கி, மறைமதி நாளின் கருமேனி கொண்டவரே, ஒப்பில்லாத திருவே! அவதூதரின் உபதேசக் கீதையைக் கேட்டறிந்தேன். பாலகனின் மனோநிலையில் இருப்பவருக்கு துக்கமில்லை. தெளிந்த ஓடை பிறர் கைப்பட்டு கலங்குதல்போல சத்சங்கத்தையடையாதவன் மனம் மாசடையும். தெளிவற்ற மனநிலை உடையவர்களுக்கு மனமயக்கம், குணதோஷம் உண்டாகிறது என்பதே அவர் கருத்து.
பிறக்கும்போது தெளிவாக இருக்கும் மனிதன் எதனால் கலக்கமுறுகிறான்? அதனால் அவனடையும் கதிதான் என்ன? எதையறிந்தால் எல்லாவித பயங்களிலிருந்தும் மனிதன் விடுபடுவானோ, அப்படிப்பட்ட தர்மத்தை அருளவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்ட உத்தவர் முகுந்தனின் தாள் பணிந்தார்.
பகவான் பொருள்பொதிந்த புன்னகை பூத்தார். பாகவத தர்மத்தை உணராதவர் பகவானின் கருத்தோட்டத்தை அறிய முடியாது என்பது உத்தவருக்குப் புரிந்தது. சர்வலோக சஞ்சாரி யாகிய நாரதரின் பக்தி சூத்திரத்தையும், அவருடன் இருந்த நவயோகிகளும் மிதிலையில் பாகவத தர்மத்தைப் பற்றி கூறிய கருத்துகளையும் நினைவுகூர்ந்தான்.
மிதிலை மன்னர், நிமி மன்னர் மற்றும் ஒன்பது யோகிகளும் வசுதேவர் இல்லத்திற்கு வருகை புரிந்த நாரதரிடம், எதையறிந்தால் எல்லாவித பயங்களிலிருந்தும் மனிதன் விடுபடுவானோ, அப்படிப்பட்ட தர்மத்தை அருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “பாகவத தர்மத்தைக் கேட்டாலும், படித்தாலும், கடைப்பிடிப்பதாலும் அந்த விநாடியிலேயே மனிதன் புனிதமாகிவிடுகிறான்’’ என்று நாரதர் கூறுகிறார். பின்பு ஒன்பது யோகிகள் கூறும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.
கவி என்ற முதல் யோகி, “அடியார்களைக் கைவிடாத பகவானுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டு, பகவானிடம் பூரண சரணாகதி செய்துவிடுவதே பகவானை அடையும் ஒரேவழி’’ என்று அறிவுரை செய்கிறார். இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து, அவனது சரணங்களை மட்டுமே நினைத் துக்கொண்டிருப்பவர்களுக்கு இறைவன் நிச்சயம் நற்கதியைதான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட அந்த இறைவனின் பாதாரவிந்தங்களைக் கெட்டியாகப் பற்றவேண்டியது நம் கடமை; பற்றாமல் போனால் நம் மடமை என்பதே சரணாகதி தத்துவம்.
உலகிலுள்ள ஜீவாத்மாக்கள் ஒருபுறம்; அவற்றைப் படைத்த பரமாத்மா மறுபுறம். ஜீவாத்மாக்களுக்கு முக்தி தந்து அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத் மாவைச் சரண்புக வேண்டும் என்பதுதான் சரணாகதி.
பூரண சரணாகதியையே ‘மோட்சம்’ என்பார்கள். மோட்சத்தை விரும்புகிறவர்களை ‘முமூக்ஷி’ என்பார்கள். அவர் தன்னைப்போன்ற மோட்ச விரும்பிகளுடன் சேர்ந்து இறைவனுக்கு மேலுலகில் கைங்கர்யம் செய்வர். சரணாகதி என்பது தனக்கென்று எதையும் கருதாமல், எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, பலனை எதிர்பாராமல் காரியங்களை நிறைவாகச் செய்வதாகும். நல்லது, கெட்டது எதுவென்று ஆய்ந்து தீய வற்றை விலக்கிக்கொள்ள வேண்டும். உலகாயதமான விஷயங்களில் மனதை ஈடுபடுத்தாமல் ஈஸ்வர தியானத்திலேயே மூழ்கவேண்டும். சுகங்களில் நித்யம், அநித்யம் உண்டென்று உணர்ந்து அவற்றை விலக்கவேண்டும். அமைதியாகவும், சுய கட்டுப்பாட்டுடனும் வாழ வேண்டும். இறைவன் யார்? நாம் யார்? மோட்சம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது? மோட்ச மடைந்தால் ஏற்படும் பலன்கள் அல்ல; மோட்சத்தை அடையவிடாமல் தடுக்கும் காம, குரோத, லோபமான விரோதிகள் யார் என்று அவர்களை அடையாளம் கண்டு அவற்றை விலக்கவேண்டும். இதுவே சரணாகதியின் முதல்படி.
“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம்... உமக்கே நாம் ஆட்செய்வோம். கண்ணா, கண்ணா, இனி நீதான் எனக்கு எல்லாம். சரணம். உன் திருவடி சரணம்’’ என்று தன் நெஞ்சை மறைத்திருந்த இரு கைகளையும் தலைக்கு மேலேதூக்கி, ‘கண்ணா, மணிவண்ணா' என்று காலம், தேசம் மறந்து, தன் உள்ளுயிரில் கலந்துநின்றாள் பாஞ்சாலி. அதுவே பூரண சரணாகதி.
புத்தியைப் படுக்கப்போடுகிறது தான் சரணாகதி. அதற்கு அடையாள மாகதான் பௌதிக காரியமே நமஸ்காரம். ‘"கீழ்ப்படிதல்' என்ற உள்பாவத்திற்கே நமஸ்காரம் வெளியடையாளம். பரிபூரணமான கீழ்ப்படிதலே "சரணாகதி'. நான் என்றும், எனது என்றும், என்னுடையது என்றும், எனக்கானது என்றும் நினைத்துக்கொண்டு வாழும் மடமையில் இருந்தேன்! நீயே அனைத்துமாகி என்னையும் ஒருவன்போல எனக்கென்று ஏதோ இருப்பதுபோல, எனது சொந்தம்போல, எனது உடமைபோல காட்டிக்கொண்டு வாழும்படி, வாழ்வித்துக்கொண்டிருக்கும் மாபெரும் கருணையை உன்னாலே உணர்ந்தபின், நான், எனது என்று நினைக்கக்கூட ஏதுமில்லை என்ற மெய்யை உணர்ந்து, என்னை உன்னில் தொலைக்கிறேன் என்று பற்றற்றிருப்பதே பூரண சரணாகதி.
எது செய்தாலும், நடந்தாலும், நிகழ்ந்தாலும், அனுபவித்தாலும், அனுபவப்பட்டாலும் அந்த நிகழ்வு வழியே பெறும் உணர்வை கொடுத்தவனுக்கே சமர்ப்பித்து விடுவதே பக்தி. இப்படி சமர்ப்பணம் நிகழநிகழ, நிகழ்த்துபவன் அதில் இதில் என்றில்லாது எல்லாவற்றிலும் புலப்படுவான். அவ்வாறு புலப் பட்டால் சரணாகதியிலிருந்து பூரண சரணாகதி நோக்கிய பயணம் தொடங்கும். இனி, என் வாழ்க்கை முழுவதையும் உன்னிடம் விட்டுவிடுகிறேன். நீயே என்னை வழிநடத்து என்பதே சரணாகதி.
“ஆறும் அவனே, பேறும் அவனே’’ என்று சொல்வார்கள். ஆறு என்றால் வழி, பேறு என்றால் இலக்கு. வழி, இலக்கு இரண்டாகவும் அவரே இருக்கிறார். இறைவனையடைய இறைவனேவழி என்றுணர்வதுதான் சரணாகதி. சுக்ரீவன், பகவான் இராமரிடம் வீடனின் சரணாகதியை ஏற்கவேண்டாமென்று சொன்னபோது, ராமர் அளித்த மறுமொழி,“ஒரு வேடன் வனமொன்றில் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வாழ்ந்துவந்தான். ஒருநாள் மழையுடன்கூடிய கடும் புயல் அடித்தது. அப்போது மழையால் மதிமயங்கிக் கிடந்த பெண் புறா ஒன்றைக் கையில் எடுத்துக் கூண்டில் அடைத்துக்கொண்டு, குளிர்காயவும், பசிதீரவும் வழிதெரியாதவனாகி, அருகிலிருந்த ஒரு மரத்தடியை அடைந்தான். அங்கு தன் பெண் துணையைக் காணாமல் வாடும் ஆண் புறாவைக் கண்டான். கூண்டிலிருந்த பெண் புறா தன் துணையான ஆண் புறாவை நோக்கி,“இதோ பார், நான் சத்ரு வசப்பட்டேன். என்னைப் பற்றி வருந்தாதே. சத்ருவாக இருந்தாலும் குளிர்காயவும், உணவை வேண்டியும் நமது மரத்தடிக்கு இவன் அதிதியாக வந்திருக்கிறான். இவனை உபசரித்து நலமடைவாய்’’ என்று கூறியது. அதைக்கேட்ட ஆண் புறாவிற்குச் சுள்ளிகளைச் சேகரித்து தீமூட்டி வேடனைக் குளிர்காயவைத்து, உணவின் பொருட்டுத் தன் உடலையும் தீக்கிரையாக்கியது. பகைவரானா லும் சரணாகதி அடைந்தோருக்கு அபயமளிப்பேன். அனைத்து தர்மங்களையும் துறந்துவிட்டு என் ஒருவனையே சரணாக அடை. நான் உன்னை அனைத்துப் பாவங் களிலிலிருந்தும் விடுவிப்பேன்.’’
ஹரி என்ற இரண்டாவது யோகி, “எவர் அனைத்து சீவராசிகளிடத்தில் பகவானைக் காண்கிறாரோ, அவ்விதமே பகவானிடம் அனைத்து சீவராசிகளையும் எவர் காண்கி றாரோ அவரே முதன்மையான பக்தன் ஆவார்’’ என்று அறிவுரை செய்கிறார்.
எந்த உயிரினத்துக்கும் துன்பம் செய்யாமலிருக்கும் இன்னா செய்யாமையே பகவானின் அருளைப் பெறுவதற்கான முதல் முயற்சியாகும். எல்லா உயிர்களையும் கடவுளின் கோயிலென்று அன்புசெலுத்துவதன்மூலம் எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்பதையறிவதே பக்தி. அந்தப் பேரன்பின்மூலம் ஞானம் வரும். பக்தியின் மிக முக்கிய அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல். எல்லாமே இறைவன் படைப்பு என்பதால், பகவானின் குறிப்பிட்ட சில படைப்புகளை அலட்சியப்படுத்திவிட்டோ, வெறுத்து விட்டோ அவரை யாரும் அடையமுடியாது. எனவே எல்லா உயிரையும் தன்னுயிராக எண்ணுவதே உண்மையான பக்தி. அதுவே பகவானை அடையும் வழி.
அந்தரிட்சர் என்ற மூன்றாவது யோகி, “பகவானால் படைக்கப்பட்ட உலகப்பொருட்களில் நான், என்னுடைய, எனது என்று பற்றுக்கொள்பவர்கள் மாயை எனும் துயரக்கடலிலிருந்து விடுபடுவதில்லை’’ என்று அறிவுரை செய்கிறார்.
பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம். கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. அதைப் பருகி தாகத்தைத் தீர்த்துக்கொள்ளமுடியாது. அதுவே மாயை. ஒரு கயிறை பாம்பென்று நினைப்பதும் மாயையே. மாயையைக் கடந்தால் பொய்யான இந்த உலகம் மறைந்து, மெய்யான பிரம்மத்தின் தரிசனம் கிடைக்கும். நாமும் பிரம்மமும் வேறென்று நினைத்த மாய எண்ணமும் மறைந்துபோகும்.
பிரபு தத்தர் என்ற நான்காவது யோகி, “நல்லடியார்களின் கேடயமாகும் மனத் தூய்மையுடன் இருப்பதும், பிறர் தரும் துன்பத்தை சகித்துக்கொள்ளுவதும், மௌனம், தர்மம், நேர்மை, பிரம்மச்சரியம், அகிம்சை போன்ற நற்குணங்களையும் பக்தியின் நிலைகளாகவே பார்க்கவேண்டும். அனைத்து சீவராசிகளிடமும் அன்புகாட்டுதல் அவசியம். எளிமை, மனவடக்கம், புலனடக்கம், வாய்மை, பொறுமை, தியானம், தானம் மற்றும் தவம் முதலிய நற்பண்புகளை பாகவத தர்மத்தின் பெருமைகளாக விளக்குகிறார்.
பிப்பலாயனர் என்ற ஐந்தாவது யோகி, “இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள உயிர்களனைத் தவனும், அவற்றைக் காப்பவனும், அவற்றை பிரளய காலத்தில் தன்னில் ஒடுக்குபவர் எவரோ அவரே பூஜிக்கத்தக்கவர். எவர் சீவராசிகளின் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் உறக்க நிலைகளுக்கு சாட்சியாக இருந்து, எவரால் உடல்-புலன்கள்-உயிர்-மனம் இயக்கப்படுகி றதோ, அந்த பரம்பொருள்தான் ’பரப்பிரம்மம்’ என அறிந்துகொள்ள வேண்டுமென்று அறிவுரை செய்கிறார்.
ஆவிர்ஹோத்ரர் என்ற ஆறாவது யோகி, “அறநூல் நெறிப்படி ஆற்றவேண்டிய செயல்கள் (கர்மயோகம்; பக்தி யோகம்); செய்யக்கூடாத செயல்கள் (விகர்மம்), மற்றும் செய்யவேண்டிய செயல்களை செய்யாமல் இருப்பது (அகர்மம்) பற்றி விளக்குகிறார்.
பலனில் பற்றில்லாமலும், ஈசுவர அர்ப்பண மாக செய்யப்படும் செயல்களால் சீவமுக்தியை அடைந்து, பின் உடலைத் துறந்தபின் பிறப் பில்லா விதேக முக்தியை அடையலாம் என்றுகூறி முடிக்கிறார்.
(அமுதம் பெருகும்)